Thursday, 6 October 2011

அந்த நாள் நினைவுகள்...


ரூய்கட் ஒரு சிறிய கிராமம்! ஒரு மாறுதலுக்காக மகாராஷ்டிராவிலுள்ள அந்த கிராமத்திற்குச் சென்றிருந்த நான், என் உறவினர் வீட்டில் தங்கிஇருந்தேன். கிராமத்தின் அமைதியான சூழ்நிலையினால் கவரப்பட்ட எனக்கு, கவிதை எழுத வேண்டும் என்று தோன்ற, உடனே நான் காலார நடந்து ஒரு பெரிய மரத்தின் அடியில் அமர்ந்து கவிதைக்கான வாசகங்களைக் கற்பனையில் தேடிக் கொண்டுஇருந்தேன். மனத்தில் தோன்றிய எண்ணங்களை வார்த்தைகளாக வடித்த பிறகு, வீடு திரும்ப நினைத்த போது, பக்கத்து வீட்டுப் பெண்மணியான ஜெயாவும், அவளுடைய பெண்ணும் இடுப்பிலும், தலையிலும் பானைகளைச் சுமந்து கொண்டு ஒற்றையடிப் பாதையில் ஆற்றை நோக்கிச் செல்வதைக் கவனித்தேன். ஆற்றுக்குத்தான் செல்ல வேண்டும். அவர்களைப் பின் தொடர்ந்து செல்ல வேண்டுமென எனக்குத் தோன்ற, உடனே அவ்வாறே செய்தேன்.

தில்லியில், என் வீட்டில் குழாயைத் திறந்தாலே தண்ணீர் வரும்! ஆனால், இங்கோ அதற்காக எத்தனை தூரம் தினமும் செல்ல வேண்டியிருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன். இப்போதெல்லாம் ஆற்று நீர் சுத்தமாக இருப்பதில்லை. அப்படிஇருக்க, அதை எவ்வாறு குடிப்பதற்கும், சமையலுக்கும் பயன்படுத்துகின்றனர் என்ற சந்தேகம் எனக்குத் தோன்றியது. அவ்வாறு சிந்தனைகளில் மூழ்கியபடி நான் நடக்க, ஆறு வந்ததே தெரியவில்லை.

ஜெயாவின் பெண் ஆற்றில் இறங்கி, பானைகளை நிரப்ப, ஜெயா கரையிலேயே அமர்ந்து விட்டாள். இவள் தண்ணீர் பிடிக்கப் போவது இல்லையா என்று நான் நினைத்துக் கொண்டிருக்கும் போது, ஜெயா ஒரு விசித்தரமான காரியம் செய்தாள். கரையில் உட்கார்ந்தபடியே மணலைத் தோண்டத் தொடங்கினாள். சற்று நேரத்தில் ஊற்றுநீர் வர, அதைப் பானைகளில் நிரப்பினாள்.

நான் ஆற்றங்கரையை உற்று நோக்கிய போது அத்தகைய குழிகள் ஏராளமாக இருந்தன. ஆர்வத்தை அடக்க முடியாமல் நான் ஜெயாவிடம் அவள் என்ன செய்கிறாள் என்று கேட்க, அவள் ஆற்றங்கரையில் குழி தோண்டி ஊற்று நீரைப் பானைகளில் நிரப்புகிறேன் என்றாள். காரணம் கேட்க, குடிப்பதற்கும், சமையலுக்கும் உகந்தது ஊற்று நீர்தான் என்றாள்! அப்போதுதான் எனக்கு விஷயம் புரிந்தது. அசுத்தமான ஆற்றுநீர் அடிவழியாக ஊடுருவி அருகிலுள்ள ஆற்றங்கரைக்குப் பாயும்போது, அதிலுள்ள அசுத்தங்களை மணல் வடிகட்டி விடுகிறது. அதனால், ஆற்றுநீரைவிட ஊற்று நீர் ஓரளவு சுத்தமானது.

குடிப்பதற்கும், சமையலுக்கும் கிராமத்தினர் பயன்படுத்துகின்றனர் என்பது புரிந்தது.

வீட்டுக்கு அருகிலேயே கிணறு தோண்டினால், தினமும் நடக்கும் சிரமம் மிச்சமாகுமே என்று தோன்றியது. ஆனால், ஆற்றங்கரையில் கையால் தோண்டினாலே ஊற்று நீர் கிடைக்கும். ஆற்றிலிருந்து தொலைவில் உள்ள கிராமத்து வீடுகளில் மிக ஆழமாகத் தோண்டினால்தான் தண்ணீர் கிடைக்கும். ஒரு காலத்தில் கிணற்றில் தண்ணீர் இருந்திருக்கலாம்! இப்போது, கிணறு தோண்டினால் கூட தண்ணீர் கிடைக்குமா என்று சொல்ல முடியாத அளவிற்கு நிலம் வரண்டு விட்டது. அதன் முக்கியமான காரணம், கிராமத்தைச் சுற்றியிருந்த காடுகளில் இருந்த மரங்கள் வெட்டப்பட்டதுதான்!

மரங்களை அப்படியே விட்டு வைத்திருந்தால் இந்த வறட்சி ஏற்பட்டிருக்காது. மழைத் தண்ணீர் வீணாகப் பாய்ந்து ஓடாமல், அவற்றை மரங்கள் தடுக்க, பூமி அதை உறிஞ்சி வைத்திருக்கும். சமீப காலமாக ரூய்கட்டில் கடும் வறட்சி நிலவுகிறதென்று உறவினர் கூறினார்.

மீண்டும் பழைய இடத்திற்குத் திரும்பி வந்து, அந்த மரத்தடியில் அமர்ந்து எண்ண அலைகளை ஓடவிட்டேன். காடுகளை அழிப்பதின் மூலம், மனிதகுலம் தன் அழிவுப் பாதையை நோக்கி அடிவைத்து நடக்கிறது என்பது தெளிவாகப் புரிந்தது. ஏதாவது மாய, மந்திரத்தினால் ரூய்கட் கிராமத்தின் வெட்டப்பட்ட மரங்கள் மீண்டும் தோன்றாதா என்று ஏங்கினேன்.

அரசாங்க வேலை



பல ஆண்டுகளுக்கு முன், காஷ்மீரின் தலைநகரான ஸ்ரீ நகரில் நித்யானந்த் என்ற பணக்கார வாலிபன் வசித்து வந்தான். அவனுடைய தந்தை ஏராளமான செல்வமும் நிலங்களும் விட்டுச் சென்றிருந்தார். நிலங்களைக் குத்தகைக்கு விட்டு, அதில் கிடைத்த வருமானத்தைக் கொண்டு தன் மனைவி மக்களுடன் நித்யானந்த்  சொகுசான வாழ்க்கை நடத்தி வந்தான். வேறு வேலை எதுவும் செய்ய வேண்டிய தேவையே அவனுக்கு இல்லாமல் இருந்தது.

நித்யானந்தின் பக்கத்து வீட்டில் சோம்நாத் என்பவன் வசித்து வந்தான்.  அரசாங்கத்தில் வருவாய் துறையில் வேலை செய்து கொண்டு இருந்த  அவனுக்கு மற்றபடி விசேஷத்திறமைகள் எதுவும் இல்லை. ஆனாலும் சுற்று வட்டாரத்தில் அவனது அரசுப் பணியை ஒட்டி, அவனுக்கு நல்ல செல்வாக்கு இருந்து வந்தது. இதைப் பற்றியெல்லாம் அவ்வளவாக பொருட்படுத்தாமல் இருந்த நித்யானந்த் ஒரு நாள் தன் எண்ணத்தை மாற்றிக் கொள்ளும் சந்தர்ப்பம் வந்தது.

ஒருநாள் நித்யானந்தின் பிள்ளைக்கும் சோம்நாத்தின் பிள்ளைக்கும் விளையாட்டில் ஏதோ தகராறு ஏற்பட, அது பெரியதாக வளர்ந்து,  பிள்ளைகளின் தாயார்கள் இருவரும் சண்டையிட முற்பட்டனர்.
சோம்நாத்தின் மனைவி காந்தா உரத்த குரலில் நித்யானந்தின் மனைவி ராதாவை நோக்கி "என்னிடமா சண்டை போடுகிறாய்? உன்னையும் உங்கள் குடும்பத்தையும் என்ன செய்கிறேன் பார்! என் கணவர் அரசாங்க வேலையில் இருப்பவர். உன் புருஷனைப் போல் வெட்டிப் பொழுது போக்கும் உதாவாக்கரை இல்லை" என்று கத்தி விட்டுச் சென்றாள்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தன் மனைவி காந்தாவின் தூண்டுதலால் சோம்நாத் நித்யானந்துக்கு பல விதங்களில் இடையூறுகள் செய்யத் தொடங்கினான். அவன் வரிப்பணம் ஒழுங்காக செலுத்தவில்லை என்று போலியாகக் குற்றம் சாட்டி அவனை அலுவலகங்களில் அங்கும் இங்கும் அலையச் செய்தான்.
இப்படி பலவாறு இன்னல்களுக்காளான நித்யானந்தை நோக்கி அவன் மனைவி, "நீங்கள் ஏதும் வேலை செய்யாமல் சும்மாயிருப்பதால்தான் நம்மை இப்படி அவமானப் படுத்துகிறார்கள். நீங்கள் அரசாங்கத்தில் ஏதாவது வேலைத் தேடிக் கொள்ளுங்கள்" என நச்சரிக்கத் தொடங்கினான்.

நித்யானந்தும் ஆளுநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆளுநரைப் பலமுறை சந்தித்து தனக்கு ஏதாவது வேலை தரும்படி கெஞ்சத் தொடங்கினான். ஆனால் ஆளுநர் வேலை எதுவும் காலியில்லை என்று சொல்லிவிட்டார். நித்யானந்த் விடுவதாக இல்லை. "ஐயா, எனக்கு சம்பளம் முக்கியமில்லை. வேலை தான் முக்கியம். சம்பளம் இல்லாவிட்டாலும் சரி. ஏதாவது எனக்கு வேலை கொடுங்கள்" என்று காலில் விழுந்து கெஞ்ச ஆளுநரும் இரக்கப்பட்டு அவனுக்கு வேலை தரத் தீர்மானித்தார்.

ஆனால் அனுபவமில்லாதவனுக்கு என்ன வேலை தருவது? வெகுவாக யோசித்தபின் ஆளுநர் "சரி. நமது ஊரில் பாயும் ஆற்றில் எவ்வளவு அலைகள் உண்டாகின்றன என்று எண்ணுவாய். அதுவே நான் உனக்கு அளிக்கும் வேலை" என்றார்.

அரசாங்க வேலை உத்தரவைப் பெருமையுடனும் மகிழ்ச்சியுடனும் பெற்றுக் கொண்ட நித்யானந்த் தனக்கென ஒரு படகை ஏற்பாடு செய்து கொண்டு, ஆற்றில் படகுகள் ஒரே சமயத்தில் புறப்பட்டு, வந்து சேருமிடத்தில் இருந்து கொண்டு, கையில் நோட்டுப் புத்தகத்துடன் அலைகளை எண்ணத் தொடங்கினான். முதலில் நித்யானந்த் செய்யும் வேலையைப் பார்த்து பலரும் ஆச்சரியம் அடைந்தாலும், அவன் ஏதோ முக்கியமான நோக்கத்திற்காக இந்த அரசுப் பணியை செய்கிறான் என்று நம்பத் தொடங்கினர். இப்போது நித்யானந்தை பார்ப்பவர்கள் அரசாங்க ஊழியன் என்பதற்காக  அவனுக்கு மதிப்பும் மரியாதையும் மக்கள் அளிக்கத் தொடங்கினர்.

 நித்யானந்துக்கும் அவனுடைய குடும்பத்தினருக்கும் மக்கள் மத்தியில் மதிப்பு உண்டாயிற்று. நித்யானந்த் மெதுவாக தன் அதிகாரத்தைப் படகு ஓட்டுபவர்களிடம் காட்டத் தொடங்கினான். ஆற்றில் ஓடும் படகுகளை அதிகாரப் பூர்வமாக நிறுத்தி, தன் அலை எண்ணும் வேலையை செய்து முடித்த பிறகு செல்ல அனுமதித்தான். சில நேரங்களில் படகுகளை மணிக்கணக்கில் இவ்வாறு நிறுத்தியதும் உண்டு. தங்கள் வேலை தடங்கல் இல்லாமல் நடக்க வேண்டுமானால், நித்யானந்தை முறையாக கவனித்தால் நடக்கும் என எண்ணி, படகுக்காரர்கள் அவனுக்கு கையூட்டும் வழங்கத் தொடங்கினர்.

இவ்வாறு நாட்கள் செல்லும்போது, நித்யானந்த் எதிர்பார்த்த அந்த நாளும் வந்தது. சோம்நாத் ஒருநாள் தன் குடும்பத்தினருடன் தடபுடலாக ஆற்றங்கரைக்கு வந்து, படகில் ஏறி பக்கத்து ஊருக்கு ஒரு முக்கியமான திருமணத்திற்கு செல்லத் தொடங்கினான். சோம்நாத் படகு தன் அருகில் வந்தவுடன், நித்யானந்த் அவனது படகை நிறுத்தி விட்டான்.
தனது அரசுப் பணியைச் செய்ய வேண்டும் என்றும், அதுவரையில் படகு நகரக் கூடாது என்றும் கட்டளைப் பிறப்பித்துவிட்டு மிக  மெதுவாக தன் வேலைகளை செய்து வேண்டுமென்றே காலம் கடத்தினான். பல மணி நேரம் சென்றும், நித்யானந்த் படகை செல்லவிடவில்லை. சோம்நாத்துக்கோ முகூர்த்த நேரத்திற்குள் செல்ல வேண்டிய அவசரம் இருந்தது.

 ஆனால் அரசுப் பணி என்ற சாக்கில் மிகவும் தாமதம் செய்யும் நித்யானந்தை அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இறுதியில் சோம்நாத்துக்கு வேறு வழியில்லாமல் தனது கௌரவத்தை விட்டு நித்யானந்தைக் கெஞ்ச வேண்டி இருந்தது. நித்யானந்தும் பழி வாங்கிய மகிழ்ச்சியில் சோம்நாத்தின் படகினைச் செல்ல ஒரு வழியாக அனுமதித்தான்.

அதன்பிறகு சோம்நாத் தன் இறுமாப்பினைத் துறந்து, நித்யானந்துடன் நட்புறவு கொண்டான். அவர்கள் இருவரது குடும்பங்களும் தங்கள் பிணக்குகளை மறந்து நல்லிணக்கத்துடன் பழக ஆரம்பித்தன.

கடவுள் கொடுத்த பயங்கரமான வரம்!


அது ஒரு சிற்றூர். அதை ஒட்டி ஒரு காடு. அந்த சிற்றூரில் முத்து என்பவன் வசித்து வந்தான். அவன் ஒரு நாள் காட்டுக்கு விறகு வெட்டச் செல்லும்போது, அழகான மான்குட்டியைக் கண்டு, அதை தூக்கிக் கொண்டுவந்து வளர்த்தான். அதற்கு வேண்டியதெல்லாம் செய்துகொடுத்து பராமரித்தான்.

ஒருநாள் திடீரென அந்த மான் காணாமல் போனது. பிரியமாக வளர்த்து வந்த மானைக் காணாமல் அங்குமிங்கும் தேடி அலைந்தான். எங்கு தேடியும் கிடைக்காததால், கடும் கோபம் கொண்டான். "மானைக் கடத்தியவன் யாராக இருந்தாலும் அவனை சும்மா விட மாட்டேன்" என சபதம் போட்டான். கடத்தியவனைக் கண்ணில் காட்டும் படி கடவுளிடம் உருகி வேண்டினான்.

அடுத்த நிமிடமே கடவுள் அவனுக்கு காட்சியளித்தார். "பக்தா.. உன் மான் காணாமல் போனதற்கு வருந்துகிறேன். உனக்கு என்ன வேண்டும்?" என்றார்.

"எனது மான் காணாமல் போக யார் காரணமோ, அவர்களை என் கண் முன்னால் காட்டுங்கள். அவனுக்கு என் கையால் தண்டனை அளிக்க வேண்டும்" என ஆவேசமாகக் கூறினான்.

"பாசத்தை விட கோபம் அதிகமாக இருக்கக் கூடாது பக்தா. உன் மானைக் கேள், அல்லது பொன் பொருள் என எது வேண்டுமானாலும் கேள், தருகிறேன். உன் கோபத்தால் சிக்கலில் மாட்டுவாய்" என்றார்.

ஆனால் அவன் கேட்பதாக இல்லை. "என்ன ஆனாலும் சரி, அவனை என் கண்முன்னே நிறுத்துங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன். பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றுவது உங்கள் கடமையல்லவா.." என கத்தினான்.
சிறிது நேரத் தயக்கத்துக்குப் பின், "சரி, இதனால் ஏற்படும் விளைவுகளுக்கு நீ தான் பொறுப்பு" எனக் கூறினார்.
உற்சாகமான அவன் "இது போதும்.. அவனைக் கொண்டுவாருங்கள்" என்றான்.

உடனே கடவுள் கையை நீட்ட, அங்கு நின்றிருந்தது மிகப் பெரிய சிங்கம்!

அதைப் பார்த்த்து உறைந்து போன முத்து, கடவுளே காப்பாற்று என அலறிக் கொண்டே அங்குமிங்கும் ஓடினான். ஆனால் சிங்கத்திடமிருந்து தப்பிக்க முடியுமா என்ன!

இன்றைய மனிதர்கள் பலரும் இப்படித்தான். ஆத்திரத்தால் அறிவிழக்கிறார்கள். பழிவாங்கும் எண்ணம் பாதுகாப்பின்மையை ஏற்படுத்தி விடும் என்பது பலருக்கும் தெரிவதில்லை. ஆத்திரம் வரும் நேரத்தில் ஒரு நிமிடம் அறிவுக்கு வேலை கொடுத்தால் போதும். எந்தப் பிரச்சனையும் நெருங்காது.

கோட்டைத் தாண்டு


முருகய்யன் வீடு அவனது தேவையைவிடச் சற்றுப் பெரியது. அதனால் அவன் தன் வீட்டின் முன் பக்க அறையை சேகர் என்ற இளை ஞனுக்குச் சொற்ப வாடகையில் கொடுத்திருந்தான். சேகர் சாதாரண குடும்பத்தில் பிறந்தவன். ஒரு கடையில் வேலை செய்து மாதச் சம் பளம் பெற்று வருபவன். அவனுக்குக் கிடைத்த சம்பளப் பணம் அவனுக் குப் போதும் போதாததுமாகத்தான் இருந்தது. எப்படியோ ஒரு வேளை, அரை வேளை எனச் சாப்பிட்டு நாட் களைக் கழித்துக் கொண்டிருந்தான்.

முருகய்யனும் அவன் மீது பரி தாபப்பட்டு அவ்வப்போது சேகருக்கு உணவு அளித்தும் சிறு உதவிகளை செய்தும் வரலானான். இதைக் கண்ட முருகய்யனின் மாமா பொன்னய்யன், "இதோ பார் முருகய்யா! நீ இப்படியே சேகருக்கு உதவி செய்து கொண்டே இருந்தால் அவனுக்கு இன்னமும் அதிகமாகச் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணமே தோன்றாது. நாளடைவில் எதற்கும் உன்னையே எதிர்பார்த்து முழுச் சோம்பேறியாக ஆகிவிடுவான். அதனால் நீ அவ னுக்கு இனிமேல் உதவாதே!" என்று கூறினான்.

முருகய்யன் தன் மாமனிடம் மிகவும் மதிப்பு வைத்திருந்தான். ஏனெனில் அவனைப் படிக்க வைத்து வாழ்க்கையில் முன்னேறச் செய்த வனே அவனது மாமா பொன்னய்யன் தான். எனவே அவன் தன் மாமா கூறியதை மௌனமாகக் கேட்டுக் கொண்டான்.

இப்படி இருக்கையில் ஒருநாள் பொன்னய்யன் தன் நண்பனின் வீட் டுத் திருமணத்தில் கலந்து கொள்ள வெளியூர் சென்றான். முருகய்யனும் ஏதோ வேலையாக ஊருக்குள் போய் விட்டு மாலையில் தான் தன் வீட் டிற்கு வந்தான்.

அப்போது சேகரின் அறையில் இருந்து அவன் முனகும் சத்தத்தைக் கேட்டு முருகய்யன் அந்த அறைக்குள் சென்றான்.
அங்கு சேகர் நன்கு போர்த்திக் கொண்டு பாயில் படுத்திருப்பதை அவன் கண்டான். அவன் முக்கி முனகி ‘அம்மா’ ‘அம்மா’ என்று அரற்றுவதைக் கேட்டு முருகய்யன் அவனருகே போய் "சேகர்! என்ன வேண்டும்?" என்று கேட்டான். சேக ரும் "காய்ச்சலாக இருக்கிறது. எது வும் வேண்டாம். ஓரிரு நாட்களில் சரியாகிவிடும்," என்றான்.

முருகய்யன் அப்போதே அவ னுக்குக் கொஞ்சம் பணம் கொடுத்து உதவலாமா என்று எண்ணினான். ஆனால் அடுத்த விநாடியே மாமன் பொன்னய்யன் செய்த எச்சரிக்கை நினைவிற்கு வந்தது. எனவே சேக ரிடம், "சரி. உன் இஷ்டம் போலவே செய்!" என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றான்.

மூன்று நாட்கள் கழிந்தன. அப் போதும் சேகரின் உடல்நிலை திருந்த வில்லை. நான்காவது நாள் சேகர் வேலை செய்யும் கடையின் சொந்தக் காரர் சொக்கலிங்கம் அவனைப் பற்றி விசாரிக்க அவனது அறைக்கு வந்தார். அங்கு சேகர் படுத்திருப்பதைப் பார்த் துப் பதறிப் போய், அவர் அவனது உடலைத் தொட்டுப் பார்த்து முருகய் யனிடம், "நல்ல ஆளய்யா நீர்! ஒரு மனிதன் உயிர் போகும் நிலையில் இருக்கும் போது அவனைக் காப் பாற்ற வேண்டாமா? நான் சேகரை அழைத்துக் கொண்டு போய் வைத் தியரிடம் காட்டுகிறேன்," எனக் கூறி சேகரை எழுப்பி கைத்தாங்கலாக நடத்திக் கூட்டிக் கொண்டு சென்றார்.

அதே சமயம் ஊர் திரும்பிய பொன்னய்யன் சேகரை சொக்க லிங்கம் கூட்டிக் கொண்டு போவ தைப் பார்த்துவிட்டு, முருகய்யனி டம் என்ன விஷயம் என்று கேட் டான். முருகய்யனும் நடந்ததைக் கூறவே, பொன்னய்யனும் "அறி வுரைகளைப் புரிந்து கொண்டு சந் தர்ப்பத்திற்கு ஏற்ப செயல்பட வேண் டும்.

அப்படி நீ நடந்து கொள்ளாதது உன் தவறே. இனியாவது புரிந்து கொண்டு நட!" என்றான். முருகய் யனுக்கும் இனி தான் எவ்வாறு நடக்க வேண்டும் என்பது புரிந்தது!

ஊனம்


மாநாட்டிலிருந்து கடைசி மந்திரி விமான நிலையத்துக்குவந்து சேர்ந்தார்.

காலையிலிருந்து காத்திருப்பும் தொடர் சல்யூட்களுமாய்ஏட்டு வேலுமணியின் உடலை வருத்தியிருந்தன.இன்னும் முக்கால் மணிநேரமாவது ஆகும் அவர் வீடுசெல்ல.

"சார்நல்லா இருக்கியளா?"

குரல்கேட்டுத் திரும்பினார் வேலுமணி.

"டேய் ராசையா எப்டி இருக்க?" வந்தவனைப் பார்த்து சிரித்தார் ஏட்டு தோளில்தட்டியபடியே

"என்னடே இங்கதுபாய்க்கு எதாவது போறியா?"

"என் கடேசி தம்பி அமெரிக்கா போறான்."

"அமெரிக்காவுக்காரெம்ப சந்தோஷம்டேவேலைக்காபோறான்?

"ஆமா."

"ஒங்கப்பன் எப்டி இருக்கான்?"

"அவரு போயி ரெண்டு வருசமாவுது சார்."

"அப்டியாஊருக்கு வந்து வருசக்கணக்காவுதுபரவாயில்லியேடே என்ன நியாபகம்வச்சிருக்கியேதண்ணி பாட்டில் வாங்கவந்தியோ?"

"ஆமாதம்பி அங்க வரிசைல நிக்கான்."

"அப்ப போ தம்பிபாப்போம்."

வந்தவன் திரும்பி நடப்பதை பார்த்துக்கொண்டிருந்தார் ஏட்டுபைக்கின் சப்தம் கேட்டுதிரும்பி தனிச்சையாய் சப் இன்ஸ்பெக்டர் செல்வத்துக்கு சல்யூட்வைத்தார்.
"யார் சார் அது?" சப் இன்ஸ்பெக்டர் கேட்டார்.

"சார்இவன் எங்க ஊரு நாசுவனோடப் பையன் சார்."

"நாசுவன்னா?"

"முடிவெட்றவர்நாவிதர்."

"இங்க என்ன பண்றான்?"

"இவன் தம்பி, கடைசில உள்ளவன் அமெரிக்கா போறானாம்வழியனுப்ப வந்திருக்கான்.நம்ம பையன்கூட படிச்ச பய."

"பரவாயில்லியே."

"காலகாலமா எங்க ஊர்ல இவங்கதான் முடிவெட்றது சாவுக்கு சேதி சொல்றதெல்லாமே.இப்ப எல்லா மாறிப்போச்சு"

"ம்ம்ம்"

"இந்தா போறானே ராசையாஇவன் இப்ப பஸ் ஸ்டாண்ட்ல சலூன் வச்சிருக்கான்."

"இப்படி ஒரு பையன் அமெரிக்கா போறது பெரிய விஷயந்தான்."

"என்ன சார் சொல்ல இவனுங்க ரிசர்வேஷன்ல சர்ர்ருன்னு மேல வந்துற்றானுவநம்மபுள்ளைக கஷ்ட்டப்படுதுங்க."

"காலேஜ்ல சேர்றதுக்குத்தானே இட ஒதுக்கீடு அங்க படிக்கிறது அவனவன் தெறம சார்.இப்ப ஒங்க பையன, ஒங்க சாதி .ஜி கிட்ட சொல்லி ரெக்கமண்டேசனோட காலேஜ்லசேத்தீங்கஇந்தப் பையனுக்கு அரசாங்கமே ரெக்கமெண்டேஷன் தந்திருக்குன்னுசொல்லலாம்லியாஅதுக்கப்புறம் ஒங்க பையனமாதிரி படிப்ப பாதியிலே நிறுத்துறதும்முழுசா முடிச்சு வேலைக்குப் போறதும் அரசாங்கமா வந்து செய்யுது?"

"சரிதான் ஆனாலும் தெறமயில்லாட்டியும் இவங்களுக்கு வேல கெடைக்குதே சார்."

"இந்தப் பையன் அமெரிக்கா போறான் சார்அமெரிக்கா போறதுக்கு ஃப்ளைட்லதான்ரிசர்வேஷன் உண்டு வேலைக்கில்லஇவன்கிட்ட திறமயில்லன்னு எப்டி சொல்வீங்க?"

"..........""நாளைக்கும் ஏர்போர்ட் வந்துருங்க." பைக்கை கிளப்பினார் சப் இன்ஸ்பெக்டர்.

ஏட்டுதறுதலையாய் சுற்றிக்கொண்டிருக்கும் தன் மகனை நினைத்துக்கொண்டே,தூரத்தில் தன் கால் ஊனமுற்ற தம்பியின் சக்கர நாற்காலியை தள்ளிக்கொண்டு ராசையாநுழைவாயிலை கடப்பதை கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தார்.

பேர்ப் பலகை


அவன் வேக வேகமாக வந்தான்..சைக்கிளை விட்டு இறங்கினான்...அந்த போஸ்டரை எடுத்து கவனமாகப் பசை தடவி ஒட்டினான்..போய்க் கொண்டே இருந்தான்.

அந்தப் பெரியவர் மெதுவாக நிதானமாக அதைக் கிழித்தெறிந்துவிட்டு அந்த பேர்ப்பலகை அருகில் படுத்துக் கொண்டார்.அவன் சாயங்காலமாக அதே வழியில் போகும்போது அந்தப் போஸ்டர் கிழிபட்டிருப்பதைப் பார்த்தான்..மறுபடியும் ஒரு போஸ்டரை உருவி மறுபடியும் கவனமாகப் பசை தடவி ஒட்டினான்.அந்தப் பெரியவர் அவன் போனதும் மறுபடியும் மெதுவாக நிதானமாக அதைக் கிழித்தெறிந்துவிட்டு அந்த பேர்ப்பலகை அருகில் படுத்துக் கொண்டார்.

காலையில் அந்தப் பேர்ப்பலகையப் பார்த்த அவனுக்கு வெறி தலைக்கேறியது...""யார்டா அது தலைவன் போஸ்டரக் கிழிக்கிறது?"" எதிர்க் கட்சிக்காரங்க வேலையாத்தான் இருக்கும்.......இருடா இன்னிக்கு ரெண்டுலே ஒண்ணு பார்த்துரலாம்னு மனசுலெ கறுவிக் கொண்டு போய் ஆளுங்களைக் கூட்டிக் கொண்டு வந்து மறுபடியும் போஸ்டரை ஒட்டிவிட்டு மறைவில் காத்திருந்தார்கள்..

அந்தப் பெரியவர் மறுபடியும் மெதுவாக நிதானமாக அதைக் கிழித்தெறிந்துவிட்டு அந்த பேர்ப்பலகை அருகில் படுத்துக் கொண்டார்.

டேய் என்று அலறியவாறு கூட்டம் ஓடிவந்து பெரியவரைப் போட்டு அடித்து நொறுக்கியது...."ஏண்டா எங்க தலைவன் போஸ்டரக் கிழிச்சே? எவண்டா அனுப்புனது உன்னைய ?" என்று காட்டுக் கத்தல் கத்தியது.அடித்துத் துவைத்தது...

பெரியவர் அசையாமல் இருப்பதைப் பார்த்ததும் "விடுங்கடா செத்துடப் போறான்....ஒட்டுடா மறுபடியும்...இனி எவன் வருவான் கிழிக்கன்னு பார்த்துரலாம்" என்றபடி மறுபடி ஒட்டிவிட்டுப் போனார்கள்....

பெரியவர் மீண்டும் மெல்ல எழுந்து அவர்கள் போனவுடன் மறுபடியும் கிழிக்க ஆரம்பித்தார்.....அங்கிருந்த பெட்டிக் கடைக்காரன் கூவினான் "ஏன் பெரிசு உசுரோட இருக்கவேண்டாமா ? எதுக்குய்யா அதைக் கிழித்து வம்பை விலைக்கு வாங்குறே??.......பெரியவர் அதைக் கிழித்து முடித்துவிட்டு அந்தப் பேர்ப்பலகையில் எழுதியிருந்த பெயரை வாஞ்சையுடன் தடவினார்....கார்கில் போரில் உயிரிழந்த தியாகிகளுக்காகக் கட்டப் பட்டது.........என எழுதியிருந்ததை கடைக்காரன் சத்தமாக வாசித்தான்......

அதில் ஆனந்த் என்ற பெயரைத் தடவி.. ம்ம்ம் என் பையன்... என்று முனகினார் பெரியவர் உதட்டில் வழிந்திருந்த ரத்தத்தைத் துடைத்துக் கொண்டே.

வரையப்படாத கடவுள்


"என்னால முடியும்னு நிஜமாவே நினைக்கிறீங்களா"- நூறாவது முறையாக சின்னசாமி கேட்டான்.

"கண்டிப்பா முடியும்" அஸ்வின் பழைய பதிலையே சிறிதும் பொறுமை இழக்காது சொன்னான். இந்த சாருக்கு உண்மையில் பைத்தியம் தான் பிடித்து விட்டதோ என்ற சின்னசாமியின் சந்தேகம் மேலும் வலுத்தது.

"சாப்பாட்டை டைனிங் டேபிளில் வெச்சிருக்கேன். நேத்து மாதிரி மறந்துடாதீங்க. வரட்டுமா"

அவன் போய் விட்டான். சின்னசாமிக்கு நடப்பதெல்லாம் கனவு போலவே இன்னமும் தோன்றியது. அந்த பிளாட்பார ஏழை ஓவியன் இந்த சொகுசு பங்களாவுக்கு வந்து ராஜ வாழ்க்கை வாழ ஆரம்பித்து சரியாக பதினான்கு நாட்கள் ஆகி விட்டது. நாளை மாலை அவன் திரும்பத் தனது சேரிக்கே போய் விடுவான். பழையபடி தரித்திரம், குடிசை, பிளாட்பாரம் என்று வாழ்க்கை சுழல ஆரம்பித்து விடும். இந்தப் பதினைந்து நாட்களையும், அஸ்வினையும் ஒரு பொக்கிஷமாக தனது மனதின் ஒரு மூலையில் வைத்து என்றுமே பாதுகாப்பான். எல்லாமே ஒரு வெள்ளிக் கிழமை அஸ்வின் அவனைப் பார்த்ததில் இருந்து ஆரம்பித்தது...

அன்று துர்க்கை பேரழகுடன் அந்தப் பிளாட்பாரத்தில் பிரத்தியட்சமாகிக் கொண்டிருந்தாள். இந்த உலகையே மறந்து தன் படைப்பிலேயே லயித்துப் போயிருந்த அந்தத் தெருவோர ஓவியனை அஸ்வின் பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான். அவனது கால்களை ஊனமாக்கிய கடவுள் அத்ற்குப் பிராயச்சித்தமாக கைகளுக்கு ஓவியக்கலையைத் தாரை வார்த்துக் கொடுத்து விட்டானோ என்று அஸ்வினுக்குத் தோன்றியது. அனாயாசமாக வரைந்து முடித்த பின்பு தான் அமர்ந்திருந்த சக்கரங்கள் பொருத்திய பலகையை ஓரமாக நகர்த்தி சுவரில் சாய்ந்து கொண்டான் அந்தப் படைப்பாளி. பலரும் நாணயங்களை வீசி விட்டுச் சென்றார்கள். அஸ்வின் மட்டும் உன்னிப்பாக துர்க்கையையே பார்த்துக் கொண்டிருந்தான். பல நிமிடங்கள் கழிந்த பின்பு பாராட்டினான். "நல்லா வரைஞ்சிருக்கீங்க".

நிறைய நேரம் நின்று கவனிப்பதும், அவனையும் ஒரு பொருட்டாக நினைத்துப் பாராட்டுவதும் அந்தக் கலைஞனுக்குப் புதிய அனுபவம். அவனுக்குத் தெரிந்து மேல் மட்ட மனிதர்கள் காசிலாவது தாராளமாக இருப்பதுண்டு. ஆனால் அவனைப் போன்ற ஒரு பரம தரித்திரனை ஒருவன் கவனித்து, மதித்து மனதாரப் பாராட்டுவது அதிசயமாயிருந்ததது.

"என் பெயர் அஸ்வின். உங்க பெயர்..."

"சின்னசாமிங்க"

அஸ்வின் நிறைய நேரம் நின்று சின்னசாமியுடன் பேசினான். அவனைப்பற்றிய தகவல்கள் எல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டான். சின்னசாமிக்கு உறவு என்று தற்போது யாருமில்லை என்பதையும், சிறு வயதில் போலியோவால் இப்படி ஆகி விட்டது என்பதையும் கேட்டு இரக்கம் காண்பித்து அவனைப் புண்படுத்தவில்லை. சேரியில் வசிக்கும் அவனிடம் சரிசமமாகப் பேசி விட்டு நாளை அவன் எங்கு வரைவான் என்பதையும் தெரிந்து கொண்டு போனான்.

மறு நாள் மாலையும் அஸ்வின் சின்னசாமியைத் தேடி வந்தான். காரைத் தெருவின் எதிர்புறம் நிறுத்தி விட்டு வந்து அவன் வரைந்திருந்த சிவனை நிறைய ரசித்தான். "சிலர் வரையறதில் அழகு இருக்கும், உயிர் இருக்காது. நீங்க வரையறதில் ரெண்டும் இருக்கு."

"அதெல்லாம் எனக்குத் தெரியாதுங்க, சார். ஏதோ வரைவேன். அவ்வளவு தான்"

அஸ்வின் புன்னகைத்தான். "நீங்க கேன்வாசில் எல்லாம் வரைவீங்களா?"

"அப்படீன்னா..."

"துணியில், பெரிய வெள்ளைப் பேப்பரில் எல்லாம் வரைவீங்களா"

"பெரிய பெரிய வார்த்தைகள் எல்லாம் சொல்றீங்க. அதெல்லாம் பெரிய இடத்து சமாச்சாரம். நானே வயத்துப் பொழப்புக்கு வரையறவன். அதெல்லாம் எனக்கு வராதுங்க"

அவனது வார்த்தைகளில் இருந்த யதார்த்த உண்மை அஸ்வினுக்கு உறைத்தது. ஓவியங்களைப் பற்றி சிறிது பேசிக்கொண்டிருந்து விட்டுக் கிளம்பும் முன் மறு நாள் எங்கு வரைவான் என்று கேட்டுத் தெரிந்து கொண்டு கிளம்பினான். தான் வரைவதைப் பார்ப்பதற்காகவே அவன் வருவது சின்னசாமிக்கு பெருமையாக இருந்தது. 'நான் நிஜமாவே அவ்வளவு நல்லா வறையறேனா".

மறுநாள் அஸ்வின் வருவான் என்றே வழக்கத்தை விட அதிக சிரத்தை எடுத்துக் கொண்டு வரைந்தான். மனதில் இதுவரை இல்லாத உற்சாகம் இருந்தது. அதைக் கெடுக்கும் விதமாக சில இளைஞர்கள் குடித்து விட்டு தள்ளாடியபடி வந்தார்கள்.

"மாம்ஸ். இது ராமர் படமா, க்ரிஷ்ணர் படமா"

"எவனாயிருந்தா எனக்கென்னடா"

"எனக்கும் ஒண்ணும் இல்லை. சும்மா கேட்டேன். ஏம்ப்பா, உன் பேரென்ன?"

"சின்னசாமிங்க"

"ஓ. ஸ்மால் காட்"

"என்ன சொன்னீங்க"

"உன் பேரை இங்கிலீஷில் சொன்னேன். வரையற படம் மட்டுமல்ல வரையற ஆளும் சாமிதாம்ப்போய்"

"இனி எத்தனை காலத்துக்கு இந்த சாமி படமே வரைவீங்கப்பா. ஒரு அழகான பொண்ணு படம் வரையேன்"

"அதுவும் நிர்வாணமா வரைஞ்சா நோட்டு மழையா கொட்ட நாங்க ரெடி. நீ ரெடியா"

"நீங்க எல்லாம் படிச்சவங்க தானா. இவ்வளவு மட்டமா பேசறீங்களே"

"உன் உயரத்துக்குத் தகுந்த மாதிரி தான் பேசினோம்." என்ற ஒருவன் அவனது கலர் சாக்பீசுகளைத் தள்ளி விட்டான்.

"நீயே பிச்சைக்காரன். பெரிய மனுசன் மாதிரி ஏண்டா பேசறே" என்று இன்னொருவன் சாயங்கள் இருந்த கிண்ணங்களைத் தட்டி விட்டான்.

சின்னசாமிக்கு இரத்தம் கொதித்தது. ".....ப்பசங்களா" என்று கத்த மாணவர்கள் மூர்க்கமாய் தாக்க ஆரம்பித்தார்கள். தெருவில் ஆள் நடமாட்டமே இல்லாதிருந்தது அவர்களுக்கு வசதியாகப் போய் விட்டது. அவன் மயங்கி விழுந்தவுடன் ஓடி விட்டார்கள். இந்த சமயம் அந்தப் பக்கம் வந்த ஒருவன் அசுர வேகத்தில் ஓவியத்தின் மேல் இருந்த காசுகளைப் பொறுக்கி எடுத்துக் கொண்டு மின்னல் வேகத்தில் மறைந்தான்.
எதிர்பாராது கிடைத்த திடீர் சந்தர்ப்பங்களை உடனடியாக முதலாக்கிக் கொள்ளும் மனிதர்கள் என்றுமே இருக்கிறார்கள்.

அஸ்வின் அங்கு வந்த போது சின்னசாமியை ஒரு நாய் மட்டும் விசாரித்துக் கொண்டிருந்தது. பதைத்துப் போய் "சின்னசாமி...... சின்னசாமி" என்று அழைத்தான். சின்னசாமி அசையவில்லை. தூரத்தில் நின்றிருந்த ஆட்டோவில் உறங்கிக் கொண்டிருந்த ஆட்டோக்காரனை உதவிக்கு அழைத்து சின்னசாமியைத் தூக்கித் தன் காரில் போட்டுக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு விரைந்தான்.

சின்னசாமி கண் விழித்த போது அஸ்வின் அருகில் இருந்தான். "எப்படி இருக்கு சின்னசாமி"

"பரவாயில்லைங்க"

"என்ன ஆச்சு"

சின்னசாமி சொன்னான்.

"கொஞ்சமும் மனிதாபிமானமில்லாமல் சிலர் இப்படிக் காட்டுமிராண்டித்தனமாய் நடந்துக்கறாங்களே" அஸ்வின் அங்கலாய்த்தான்.

"சில பசங்களுக்கு ஜாலியாய் இருக்கிறதுக்கும் அடுத்தவங்களுக்கு தொந்தரவு கொடுக்கிறதுக்கும் வித்தியாசம் தெரியாதுங்க. இதெல்லாம் எனக்குப் பழக்கமானது தான். பொதுவா கோபப்பட மாட்டேங்க. ஆனா சில சமயம் என்னையும் மீறி கோபம் வந்துடுதுங்க. நானும் மனுசன் தானே"

அவன் வார்த்தைகள் அஸ்வினின் மனதைத் தொட்டன. "போலிசுக்குப் புகார் தரணும் சின்னசாமி"

"ஐயோ அதெல்லாம் வேண்டாம் சார். அவங்க உபத்திரவம் இன்னும் அதிகமாகும். வந்து வரைஞ்சது மேலே தண்ணி கொட்டுவான். போலிசுக்குக் காசு கொடுத்து ட்ராபிக்குக்கு இடைஞ்சல்னு விரட்ட வைப்பான். இப்படி ஏழைக்குத் தொந்தரவு தர அவங்களுக்கு எத்தனையோ வழி இருக்குங்க. எதிர்த்து நின்னா என் பொழப்பு நடக்காது. மழைக்காலம் வரதுக்கு முன்னாடி நான் கொஞ்சம் சம்பாதிச்சா தான் அப்புறம் ரெண்டு மூணு மாசம் என் வயத்தை நிரப்ப முடியும்".

"சரி விடுங்க. டாக்டர் பெரிசா எதுவுமில்லை, இன்னைக்கே வீட்டுக்குப் போகலாம்னு சொல்லிட்டார். இங்கிருந்து போகறதுக்கு முன்னாடி உங்க கிட்ட முக்கியமா ஒரு விஷயம் பேசணும்"

"சொல்லுங்க சார்"

" உங்க கிட்ட பிரமாதமான திறமை இருக்கு. அது பிளாட்பாரத்தோட நின்னுடக்கூடாது. இன்னும் பதினைந்து நாளில் இந்த ஊரில் ஒரு பெரிய ஓவியப் போட்டி நடக்கப் போகுது. இது ஒரு அகில இந்தியப் போட்டி. இதுல நீங்க கலந்துக்கப் போறீங்க. என்ன சொல்றீங்க"

"சார். நீங்க நல்லவங்க. ஆனா நீங்க நினைக்கிற அளவு திறமை எல்லாம் எனக்கு கிடையாது. இந்தப் போட்டி ஒரு ப்ளாட்பாரத்தில் நடக்கிற சாக்பீசுல வரையற போட்டியில்ல. எனக்கு பிரஷ் பிடிக்கக் கூடத் தெரியாது".

"அதையும் வேற சில நுணுக்கங்களையும் நான் சொல்லித்தர்றேன். பதினைந்து நாளில் நீங்க எல்லாமே கத்துக்க முடியும்"

"சார் நீங்க தப்பா நினைக்கக்கூடாது. உங்களுக்குப் பைத்தியம் இல்லையே"

அஸ்வின் வாய் விட்டுச் சிரித்தான். "பைத்தியம் தான். கலைப் பைத்தியம். திறமை எங்க வீணாப் போனாலும் தாங்க முடியாத பைத்தியம். சரின்னு சொல்லுங்க சின்னசாமி. என் கூட என் வீட்டுக்கு வந்துடுங்க. எண்ணி பதினைந்து நாள் இருங்க. இந்தப் பதினைந்து நாளில் நீங்க எவ்வளவு சம்பாதிப்பீங்களோ அதை நான் தர்றேன். சரியா"

"என்ன மனிதனிவன் " என்று சின்னசாமி வியந்தான். ஏளனம், அவமானம், சில சமயங்களில் இரக்கம் இதை மட்டுமே மற்றவர்கள் அவனுக்குத் தந்திருக்கிறார்கள். இப்படி ஒரு முக்கியத்துவமும், அன்பும் இது வரை யாருமே அவனுக்குத் தந்ததில்லை. என்னென்னவோ சொல்லிப் பார்த்தான். அஸ்வின் அதற்கெல்லாம் மசியவில்லை. அவனுக்கு எல்லாமே கனவில் நடப்பது போல இருந்தது. கடைசியில் சரியென்றான்.

அஸ்வின் ஒரு பெரிய கம்பெனியில் கம்ப்யூட்டர் இஞ்சீனியர் என்றும் திருமணமாகவில்லை என்றும் பெற்றோர் இருவரும் உயர்ந்த அரசாங்கப் பதவிகளில் பெங்களூரில் இருக்கிறார்கள் என்றும் சின்னசாமி தெரிந்து கொண்டான். அவன் வீட்டுக்குள் நுழையவே சின்னசாமி சங்கடப்பட்டான். சேரிக்கே பொருத்தமான தன் உருவம் இந்தப் பணக்கார வீட்டில் சிறிதும் பொருத்தமில்லாமல் இருப்பதாக அவனுக்குப் பட்டது. தயக்கத்துடன் நுழைந்தான்.

அன்றே அஸ்வின் ஏகப்பட்ட உபகரணங்களை அவனுக்கு அறிமுகப்படுத்தினான். உபயோகப்படுத்தும் முறைகளை மிகவும் பொறுமையோடு சொல்லிக் கொடுத்தான். சிறிது நேரத்தில் சின்னசாமி ஒரு குழந்தையின் உற்சாகதோடும் பிரமிப்போடும் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள ஆரம்பித்தான்.

"சார் நீங்களும் வரைவீங்களா"

"ம்.வரைவேன்" என்று சுருக்கமாகச் சொல்லி அஸ்வின் பேச்சை மாற்றினான்.

மூன்று நாட்கள் லீவு போட்டு அவனுடனேயே இருந்து எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்தான். அவனுக்கு உணவு, உடை எல்லாம் கொடுத்தான். தொடர்ந்த நாட்களில் சின்னசாமி நேரம், காலம் எல்லாவற்றையும் மறந்தான். வரையும் போது எத்தனையோ முறை அஸ்வின் வந்து நின்று பார்ப்பான். பல சமயங்களில் அவன் வந்தது, நின்றது, போனது எதுவுமே சின்னசாமிக்குத் தெரிந்ததில்லை. பல சமயம் வைத்த காபி, சாப்பாடு எல்லாம் வைத்த இடத்திலேயே இருக்கும். அஸ்வின் பல முறை நினைவு படுத்த வேண்டி இருக்கும். லீவு முடிந்து கம்பெனிக்குப் போக ஆரம்பித்த பின்னும் சின்னசாமிக்கு மதியம் சாப்பிடத் தேவையானவற்றைத் தயார் செய்து வைத்து விட்டுப் போவான். ஆரம்பத்தில் சின்னசாமிக்கு அது மிகவும் தர்மசங்கடமாக இருந்தது. "சார் இதெல்லாம் வேண்டாங்க" என்று சொல்லிப் பார்த்தான். "இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை. வரையறதைத் தவிர வேற எல்லாத்தையும் நீங்க மறந்துடுங்க சின்னசாமி" என்று வாயடைத்தான். அவன் சொன்னது போலவே சின்னசாமி எல்லாவற்றையும் மறந்து தான் வரைந்து கொண்டிருந்தான். போட்டிக்கு முந்தைய நாளான இன்று தான் மனம் ஏனோ பழையதை அசை போடுகிறது.

அன்று மாலை அஸ்வின் வந்தவுடன் சின்னசாமி கேட்டான். "இப்ப இதில் நான் நல்லா வரையறேனா சார்"

"ஜமாய்க்கிறீங்க. முதல் பரிசு எவ்வளவு தெரியுமா? ஒரு லட்சமும் ஒரு கப்பும். போட்டியில் ஒரே ஒரு முக்கியமான விஷயம். அதில் மட்டும் நீங்க தேர்ந்தெடுக்கிறது சிறப்பாய் இருந்தால் பரிசு நிச்சயம்."

"என்ன சார் அது"

"ஒரு தலைப்பு தருவாங்க. அதற்குப் பொருத்தமான ஓவியத்தை நீங்க உங்க கற்பனையில் தேர்ந்தெடுக்கணும். அதுக்கு மட்டும் நான் உங்களைத் தயார் செய்ய முடியாது".

சின்னசாமியின் உற்சாகமெல்லாம் வடிந்து போனது. "சார் அதெல்லாம் என் தலைக்கு எட்டுங்களா"

"எல்லாம் எட்டும். எத்தனை அனுபவங்கள் எத்தனை காட்சிகள் நீங்கள் பார்த்திருப்பீங்க. அதில் எதாவது அந்தத் தலைப்புக்குப் பொருந்தும். அதை வரைஞ்சிடுங்க" என்று சின்னசாமிக்கு தைரியம் சொன்னாலும் அந்த விஷயத்தில் அஸ்வினுக்கே சந்தேகம் இருந்தது. இதை வரை என்றால் சின்னசாமி சிறப்பாய் வரைவது நிச்சயம். ஆனால் பெரும்பாலும் வித்தியாசமான தலைப்புகளே தரப்படும். சென்ற வருடம் டில்லியில் போட்டி நடந்த போது "சாரி ஜஹாங் சே அச்சா" என்ற தலைப்பு தந்து எல்லா இந்திய மொழிகளிலும் தலைப்பை மொழிபெயர்த்தும் கொடுத்தார்கள். இப்படி கவிதைத் தலைப்பாய் தந்தால் அதற்குப் பொருத்தமாய் சின்னசாமிக்கு வரைவதைத் தேர்ந்தெடுக்க முடியுமா என்று தான் யோசனையாய் இருந்தது.

போட்டி நாள் அன்று இரண்டு செட் உபகரணங்களை எடுத்து வைப்பதைக் கண்ட சின்னசாமி "எதுக்குங்க ரெண்டு செட்"

"எனக்கும் உங்களுக்கும்" என்று அஸ்வின் புன்னகையோடு சொன்னான்.

தனக்குச் சொல்லிக்கொடுக்கும் அளவு ஞானம் உள்ளவன், இந்தக் கலையில் இவ்வளவு ஆர்வம் உள்ளவன் போட்டியில் கலந்து கொள்வான் என்று தனக்கு உறைக்காதது ஏன் என்று சின்னசாமி தன்னையே கேட்டுக் கொண்டான். ஆனால் தனக்குப் போட்டியாக தானே ஒருவனை வலுக்கட்டாயமாக உருவாக்குவானா என்பது தான் ஆச்சரியமாக இருந்தது.

போட்டி நடக்கும் இடத்தில் காரிலிருந்து அவர்கள் இறங்கிய போது பல பத்திரிக்கை மற்றும் டிவி நிருபர்கள் அவர்களைச் சூழ்ந்து கொண்டார்கள். "தொடர்ந்து மூன்று வருடங்கள் முதல் பரிசு வாங்கியிருக்கிறீர்கள். இந்த தடவையும் வாங்கிடுவீங்களா" என்று ஒரு நிருபர் அஸ்வினைக் கேட்ட போது, "இந்த தடவை போட்டி கடுமையாக இருக்கும்னு எதிர்பார்க்கிறேன்" என்று அவன் சொல்லி சின்னசாமியைப் பார்த்து லேசாகக் கண்ணடித்தான்.

சின்னசாமிக்கு நாக்கு வரண்டது. அஸ்வின் இவ்வளவு பிரபலமான ஓவியன் என்று இப்போது தான் தெரிகிறது. அங்கு கிட்டத்தட்ட நூறு போட்டியாளர்கள் வந்திருந்தார்கள். ஓவியர்கள் தங்களது ஓவியங்களை முன்பே அனுப்பி அவற்றின் தரத்தை ஒரு குழு ஆராய்ந்து பார்த்து தான் போட்டியில் கலந்து கொள்ளவே அனுமதி கிடைக்கும் என்றும் அஸ்வின் மிகவும் சிபாரிசு செய்து தான் தனக்கு மட்டும் விதிவிலக்கு அளித்திருக்கிறார்கள் என்றும் அவர்களில் சிலர் பேசும் போது சின்னசாமிக்குத் தெரிந்தது. பெரும்பாலோரின் நாகரிக உடையும் நுனி நாக்கு ஆங்கிலமும் பத்திரிக்கை டிவி கேமராக்களும் கண்டு சின்னசாமி பயந்து போனான். எல்லாமே அன்னியமாகவும் தன் தரத்திற்கு எட்டாத தூரத்தில் இருப்பதாகவும் அவனுக்குப் பட்டதால் அங்கிருந்து தப்பித்தால் போதும் என்று தோன்றியது. அஸ்வின் அவனருகே வந்த போது "என்னங்க என்னை இப்படி மாட்ட விட்டுட்டீங்களே. எனக்கு இதெல்லாம் வேண்டாங்க. நான் போயிடறேன்" என்றான்.

"போட்டி முடிஞ்சாப் போயிட வேண்டியது தான். அது வரைக்கும் எந்தப்பேச்சும் கூடாது. சொல்றதை கவனமாய் கேளுங்க. அவங்க ஒரு தலைப்பு தருவாங்க. அதைத் தமிழிலேயும் சொல்வாங்க. நல்லா யோசிச்சு அதை வைத்து உங்களுக்கு என்ன வரையணும்னு தோணுதோ அதை வரையிங்க.சரியா. எத்தனை கடவுள்களை வரைஞ்சிருப்பீங்க. அத்தனை கடவுள்களும் உங்களுக்குக் கண்டிப்பாய் உதவி செய்வாங்க". பதிலுக்குக் காத்திராமல் தனது இடத்திற்குப் போய் விட்டான்.

சின்னசாமிக்கு வரைய செளகரியமாக எல்லா ஏற்பாடுகளும் தனியாக செய்திருந்தார்கள். அவன் மனதில் மட்டும் நம்பிக்கையோ உற்சாகமோ இல்லை. தனக்கு எதாவது பரிசு கிடைக்கும் என்று அவன் சிறிதும் நம்பவில்லை. "கடவுளே அந்த சாரின் நல்ல மனசுக்கு இந்த தடவையும் அவருக்கே முதல் பரிசு கிடைக்கணும்" என்று வேண்டிக்கொண்டான்.

தலைப்பை அறிவித்தார்கள். "நெஞ்சு பொறுக்குதிலையே". இந்த முறை பாரதியின் கவிதை வரி.

சின்னசாமி யோசித்தான். எல்லாரும் தலைப்பைக் கேட்டவுடன் வரைய ஆரம்பித்து விட்டார்கள். "எத்தனை அனுபவங்கள், காட்சிகள் உங்கள் வாழ்க்கையில் பார்த்திருப்பீங்க. அதில் ஏதாவது தலைப்புக்குப் பொருந்தும். அதை வரையுங்க" என்று அஸ்வின் சொல்லி இருந்தது நினைவில் வந்தது. அவனுக்கு நெஞ்சு பொறுக்காத அனுபவம் சமிபத்தில் அடி பட்டது தான். அஸ்வின் தன்னை எந்த நிலையில் கண்டான் என்று சொல்லி இருந்தான். "பார்க்க மனசுக்குப் பொறுக்கலே" என்ற அவனது வார்த்தையும் நினைவுக்கு வர அந்தக்காட்சியையே வரைய தீர்மானம் செய்தான். எதாவது ஒன்றை வரைந்து அங்கிருந்து போனால் போதும் என்று தோன்றவே அத்ற்கு மேல் யோசிக்கவில்லை.

வரைய ஆரம்பித்த பின் வழக்கம் போல் எல்லாவற்றையும் மறந்தான். அவன் மனக்கண்ணில் அந்தக் காட்சி விரிய திரைச்சீலையில் அந்தக் காட்சி உயிர் பெற ஆரம்பித்தது. மற்றவர்களை விட முன்பாகவே வரைந்து முடித்தும் விட்டான். எல்லோருடைய ஓவியங்களையும் ஒருவர் வந்து வாங்கிக் கொண்டு போனார். பரிசை சிறிது நேரத்தில் அங்கேயே அறிவிப்பார்களாம்.

அஸ்வின் ஆர்வத்துடன் வந்து கேட்டான். "என்ன வரைஞ்சீங்க?". சின்னசாமி சொன்னான்.

"நான் ஒரு குழந்தைத் தொழிலாளியை வரைஞ்சேன்" என்ற அஸ்வின் ஒரு கணம் யோசித்து விட்டுச் சொன்னான் "நான் மட்டுமல்ல எல்லாரும் மத்தவங்களையோ வேற காட்சிகளையோ வரைஞ்சிருப்பாங்க. அதில் எங்க திறமை மட்டும் இருக்கும். உங்க ஓவியத்தில் நீங்களே இருக்கீங்க, உங்க சொந்த அனுபவமே இருக்கு. உங்க திறமையைப் பத்தி சொல்ல வேண்டியதில்லை. பரிசு கண்டிப்பாய் கிடைக்கும். வாழ்த்துக்கள்"

"சார், எனக்காக இவ்வளவு செய்யறீங்க. இதுக்கு நான் எத்தனை ஜென்மம் எடுத்து கடன் தீர்க்கப் போறேன்னு தெரியல"

"பெரிய வார்த்தையெல்லாம் சொல்லாதீங்க சின்னசாமி. உங்க திறமை உங்களுக்குத் தெரியாது. அது ஒரு பிளாட்பாரத்தில் ஆரம்பிச்சு அங்கேயே முடிஞ்சுடக் கூடாது. அது மேடை ஏறணும். நீங்க நிறைய வரையணும். நான் ரசிச்ச மாதிரி உலகமே ரசிக்கணும்..."

பரிசை அறிவிக்கப் போகிறார்கள் என்று அறிவித்தார்கள். அரங்கில் பேரமைதி நிலவியது.

"முதல் பரிசு சின்னசாமிக்கு....."

சின்னசாமி அதிர்ச்சியில் பிரமை பிடித்தவன் போல் இருந்தான். இது கனவா நனவா என்று ஒன்றும் புரியவில்லை. அவனைக் கேமராக்கள் படம் பிடிக்க ஆரம்பித்தன. அஸ்வின் முகத்தில் மகிழ்ச்சி எல்லையில்லாமல் விரிந்தது. சின்னசாமிக்கு ஒரு வேளை தன் தாய் உயிரோடு இருந்திருந்தால் இப்படி சந்தோஷப் பட்டிருக்கலாம் என்று தோன்றியது.

முதல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட காரணத்தை தேர்வுக் குழுவின் தலைவர் ஆங்கிலத்தில் சொல்லிக் கொண்டிருந்தார் "...ஒரு உடல் ஊனமுற்ற கலைஞன் யாரும் கேட்பாரற்று நிராதரவாய் தன் ஓவியத்தின் மீதே விழுந்து கிடக்கும் இந்த நிலை நிஜமாகவே தலைப்புக்குப் பொருத்தமாக இருந்ததாலும், ஓவியம் உயிரோட்டத்துடன் தத்ரூபத்துடன் இருந்ததாலும் ..." சின்னசாமிக்கு அவர் பேசியது என்ன என்றே தெரியவில்லை.

இரண்டாம் பரிசு அஸ்வினுக்கும் மூன்றாம் பரிசு ஒரு பஞ்சாபிக்கும் கிடைத்தது.

நிருபர்களுடன் கேமராக்களும் மைக்குகளும் சின்னசாமியை நெருங்கின. "உங்களைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்"

"என்னப் பத்தி சொல்ல ஒண்ணும் இல்லைங்க. நான் பிளாட்பாரத்தில் சாக்பீசையும், சாயத்தையும் வெச்சு வரைஞ்சிட்டிருந்த ஒரு சாதாரணமான ஆளுங்க".

"சமூக ஓவியங்கள் எல்லாம் முன்பு வரைந்ததுண்டா"

"இல்லைங்க. கடவுள் படம் தான் வரைஞ்சிருக்கேன். அதுக்கு தான் காசு விழும். ஒரு கடவுள் படம் தவிர எல்லாக் கடவுள் படமும் வரைஞ்சிருக்கேங்க."

"எந்தக் கடவுளை படம் வரைந்ததில்லை" ஒரு நிருபர் ஆர்வத்துடன் கேட்டார்.

"அந்தக் கடவுளைத் தாங்க" என்று அஸ்வினைக் காட்டிக் கண் கலங்கிய சின்னசாமிக்கு மேற்கொண்டு பேச முடியவில்லை.

Wednesday, 5 October 2011

இதுவல்ல உன் கனவு


வாசலுக்குப் போய் கையெழுத்து போட்டேன். நியுயார்க்கில் இருந்து என் மகன் எனக்கு இரண்டு ஷர்ட்டுகள் அனுப்பியிருந்தான். அடுத்த வாரம் என் பிறந்தநாள் வருவதை ஞாபகம் வைத்திருக்கிறானே என்று சந்தோஷமாக இருந்தது. உள்ளே போனபோது பெல் அடித்தது. மறுபடி வாசலுக்கு வந்தேன்.

யாருப்பா? என்றேன்.

ஒரு இளைஞன் நின்றிருந்தான். நல்ல சிவப்பாக நல்ல உயரத்தில் இருந்தான். தலைமயிரின் கறுப்பும் அடர்த்தியும் மிக வசீகரமாக இருந்தன. திருத்தமான முகத்தில் வியர்வையும் டென்ஷனும் இருக்க, உடையில் நவீனத்துவம் பளிச்சிட்டது.

சார்…. அயாம் கணேஷ்……… கணேஷ் விஸ்வநாதன். ஆப்பிள்ல சிஸ்டம் அனலிஸ்ட். மாடில ஓரு போர்ஷன் காலியா இருக்குன்னு கேள்விப்பட்டேன்…….. கரெக்டா? என்றான்.

கரெக்ட்…..ஆனா பாச்சிலர்க்கு விடற ஐடியா இல்லேப்பா…. என்றேன்.

இல்லே சார். அயாம் கோயிங் டு பி மாரீட் சூன் என்றான். கர்ச்சீப் எடுத்து முகம் துடைத்து மாடியை பார்த்தான்.

சரி வா…. என்று தாழ்ப்பாள் நீக்கினேன்.

தாங்க்யூ சார். உள்ளே வந்தான். தாழ்வாரத்தில் ஷ§க்களை கழற்றிவிட்டு குழாயடியில் கைகளைக் கழுவிக் கொண்டு உட்கார்ந்தான்.

யூ நீட் வாட்டர்?

யெஸ் சார்…..

சில்லென்று நீட்டினேன். ஒரே மடக்கில் குடித்து விட்டு. தாங்க்யூ……….. என்று

புன்னகைத்தான். சொல்லுப்பா…. எப்ப கல்யாணம்? வெஜிடேரியனா இல்லையா? ஆபிஸ் எங்கே?என்றேன்.

வந்து சார்….. என்று மறுபடி முகம் துடைத்தான். உங்ககிட்ட எதையும் மறைக்கப் போறதில்லை. லவ் மேரேஜ், ஐ மீன் போட்டோஜிஸ்டர் மேரேஜ் செஞ்சுக்கப் போறேன். ஒரு மாசம் டயமிருக்கு….. அவ பேரு ஷகீலா……. அவ அப்பா ஹஜ் கமிட்டில இருக்கிற தீவிரமான முஸ்லீம்…. எங்கப்பா விஸ்வநாதன் சிவன் கோவில் ட்ரஸ்டி……. எப்படி சம்மதம் கிடைக்கும்? செங்கல்பட்டு காலேஜ்ல படிக்கும்போது அவளை மீட் பண்ணி இப்ப கல்யாணம் வரைக்கும் வந்தாச்சு…. ரெண்டு பேரும் மேஜர்……… எனக்கு பதினெட்டாயிரம் கெடைக்கறது….. சமாளிக்க முடியும் என்கிற நம்பிக்கை இருக்கு…. உங்களுக்கும் என் வார்த்தைகள்ல நம்பிக்கை இருந்தா வீடு கொடுங்க சார்…. ஐ லைக் திஸ் பிளேஸ் வெரி மச்.

அவனையே உற்று பார்த்தேன். கண்களில் கள்ளத்தனம் எதுவுமில்லை. இளங்கன்று ரகம். இன்னும் விளையாட்டுத்தனம் போகாத உச்சக்கட்ட சிறுவன் போலிருந்தான். எதிர்பார்ப்புடன் என்னையே பார்த்தான்.

இது என் ஐடி கார்ட்…… இது எங்க வீ;ட்டோட ஐ மீன் எங்க ரேஷன் கார்ட் ஜெராக்ஸ் காப்பி…. இது ஸாலரி பில்……. இதெல்லாம் யுனிவர்ஸிட்டில நான் வாங்கின சர்டிபிகேட்ஸ் என்று ஃபைல் திறந்து அக்கறையாக சுட்டிக்காட்டினான். என்னை ஆர்வமாக பார்த்தான்.

சரி கணேஷ்….. எப்ப வேணா வா….. டோக்கன் அட்வான்ஸா நூறு ரூபா கொடு. வாடகை ஆயிரம் ரூபாய் என்றேன்.

தாங்க்ஸ் சார்…. தாங்க் யு வெரி மச் என்றான் மலர்ச்சியுடன்.

கணேஷ் குடித்தனம் வந்து ஒரு வாரம் ஓடி விட்டது. பொறுப்பான பையனாக இருக்க வேண்டும் என்கிற என் யூகத்தை நிஜமாக்கினான். ஒரு பர்னர் கொண்ட காஸ் ஸ்டவ். சின்ன குக்கர். பச்சை காய்கறிகள், ரொட்டி செஃப் மாஸ்டர். உடற்பயிற்சி கருவிகள். ஹரிஹரனின் பாடல்கள். விவேகானந்தர் படம். பில்கேட்சின் ப்ரொஃபைல் எல்லாமே கச்சிதமான இடம் பார்த்து வைத்திருந்தான். காலையில் பிரட், மதியத்துக்கு தயிர் சாதம், ராத்திரி ரெடிமேட் ரொட்டி,

கிரீன் ஸாலட் என்று அசத்தலாக தயாரித்தான். தினம் என்னுடன் அரைமணி நேரமாவது பேசினான். மாடி ஏறிப் போனேன். டெலிவிஷனில் க்விஸ் பார்த்துக் கொண்டிருந்தவன் உடனே வால்யூமை குறைத்தான். வரவேற்றான்.

உட்காருங்க சார்….. கார்ன் சூப் செய்யப்போறேன்சாப்பிடறீங்களா?

கார்னா? காளானான்னு சிரித்தேன். நா சுத்த சைவம்பா கணேஷ்.

நான் மட்டும் என்ன சார்? என்று அவனும் சிரித்தான். கேக் கூட சாப்பிட மாட்டேன்… முட்டை வாசனை கொமட்டும். எங்க வீட்டுல பூண்டு ஒரு நாள் கூட வாங்கினது கிடையாது.

நீ பழகிக்கணும்பா…. ஷகிலா பிரியாணி சாப்பிட்டு வளர்ந்த பொண்ணில்லையா?

வேணும்னா அவ சாப்பிடட்டும் சார்.

ரெண்டு பேருக்கும் ரெண்டு சமையலா. வெரிகுட் என்று சிரித்தேன்.

இந்தா….. லெட்டர் வந்தது மத்தியானம்.

அப்படியா என்று வேகமாக வந்து வாங்கினான். இப்படி அப்படி திருப்பி பார்த்தான். டேபிளில் போட்டான். முகம் மாறிவிட்டது.

ஏம்ப்பா கணேஷ் யாரு லெட்டர்? ஷகிலாவா?

இல்லே….. எங்கம்மா.

பிரிச்சு படிக்கலையா?

அவசியம் இல்ல சார் என்றான் தரையை பார்த்து. ஒண்ணு அழுதிருப்பா…….. வேண்டாண்டா இந்தக் கல்யாணம், கெஞ்சிக் கேக்கறேன் வந்துடுப்பான்னு ஒப்பாரி வெச்சிருப்பா….. மூட் ஸ்பாயில் ஆயிடும்.

ரிமோட்டை கையில் வைத்துக் கொண்டு சானல்களை மாற்றினான். மெக்கா மெதினா வந்ததை மாற்றி, யாஸர் அராஃபட்டை மாற்றி, அரசியல் கட்சி ஊர்வலம் மாற்றி, டாப் டென் மாற்றி, டாக்ஷோ மாற்றி கடைசியில் சிதம்பரம் கோவில் வந்து…….. நிறுத்தினான். என்னதான் யாதும் ஊரே யாவரும் கேளிர்னு சொன்னாலும் நம்ப பாணி கோவில்களோட அழகே தனிதான்…… இல்லையா சார்? அந்த அமைதி, அந்த ஸ்கல்ப்ச்சர், அந்த கற்பூர வாசனை,

அந்த கண்டாமணி…. ஸம்திங் வொண்டர்ஃபுல். புன்னகைத்தேன், கிளம்பினேன்.

முழுதாக ஒரு நாள் மாடியிலிருந்து சப்தமே இல்லை. கணேஷ் செங்கல்பட்டு போய்விட்டானா என்று சந்தேகமாக இருந்தது. மாடிக்குப் போனேன். திகைத்தேன். கட்டிலில் கிடந்தான். ஒரே நாளில் ஐந்து கிலோ குறைந்த மாதிரி இருந்தான். முகத்தில் அபார சோர்வு.

என்னப்பா கணேஷ். என்ன ஆச்சு? என்று உட்கார்ந்தேன்.

வயிறு கட்பட் ஆயிடுத்து சார்… என்று அடிக்குரலில் சொன்னான். நீங்க சொன்னீங்களே பழகிக்கணும்னு….. போட்டோ ஹோட்டல் போய் பிரியாணி சாப்பிட்டேன் சார்…. வாயும் ஒத்துக்கலே, வயிரும் ஒத்துக்கலே, பயங்கர அப்செட்… மாத்திரை சாப்பிட்டும் இன்னும் சரியாகலே.

கஞ்சி தரட்டுமா?

இல்லே சார்…. லங்கணம் பரம ஒளஷதம்னு எங்க பாட்டி சொல்லுவா…. ஷி இஸ் ரைட்.

எல்லா விஷயங்களும் எல்லாருக்கும் ஜீரணமாகாது கணேஷ்.

சார்….. பழக்கங்களுக்கு நாம அடிமை…. வழக்கங்கள் நம்மோட எஜமான்கள். அதனாலதான் சுத்தம், சுகாதாரம், ஒழுக்கம்னு எல்லாமே சின்ன வயசுல இருந்தே ஊட்டப்பட்டு வருது நமக்கு. தொட்டில் பழக்கம்னு சொல்றோமே அதான். பிறந்த சூழல், வளர்ந்த வீடு, பழகிட்ட வாழ்க்கை முறை, ஏற்படுத்திண்ட வழக்கம் எதையும் மாத்திக்க முடியாது. ரொம்ப கஷ்டம். மாத்திக்க நினைக்க நினைக்க கஷ்டம். எதுக்கு மாத்திக்கனும்? எதுக்கு அவஸ்தைப்படனும்? உன்னைப் போலவே பிறந்து வளர்ந்த சூழல்ல இருந்து ஒரு வாழ்க்கைத் துணை உனக்கு கெடைக்கும்போது அடிப்படை பிரச்சனைகள் எதுவுமே வரப்போறதில்லையே….. பேஸிகலா எல்லாமே நெறைவா இருக்கும்போது உன் வேலைல நீ மேலே மேலே கான்ஸன்ட்ரேட் பண்ணின்டு போகலாமே? சாதாரண அனலிஸ்ட்டா இருக்கிற நீ, வைஸ் பிரஸிடென்ட் ஆஃப் ஆப்பிள்னு ஆகலாமே? அதைவிட்டு தெனம் தெனம் சாப்பாட்டையும் ஸ்வாமியையும் பழக்கத்தையும் பிரச்சனைகள் ஆக்கிண்டு….. சகதிக்குள்ளேயே சுழண்டுண்டு…..

சார்……

பெரியவாளுக்கு சரியா சொல்ல தெரியல கணேஷ்…. அதுதான் பிரச்சனை. மேலோட்டமா பாத்தா ஜாதி, மதம்னு உணர்ச்சிகரமான காரணங்கள்தான் சொல்லப்படறது. ஆழமா பாரு கணேஷ் சிக்கலான வாழ்க்கை முறையை இன்வைட் பண்ணிக்கிறதுதான் காதலா? டோட்டலா மாறுபட்டு இருக்கிற துருவங்கள் ரொம்ப சிரமப்பட்டு பின்னி பிணைஞ்சு மூச்சு திணர்றதுதான் காதலா? பெத்தவங்களோட கனவை சிதைச்சுட்டு சுயநலமா சந்தோஷபடறதுதான் நியாயம்னு நினைக்கிற காட்டு தர்பார்தான் காதலா?

இல்லேப்பா… எது வாழ்க்கையை சுலபமாக்குதோ அது காதல்! எது வாழ்க்கைக்கு இன்னும் இனிப்பு சேக்குதோ அது காதல்….புரியறதா?

புரிஞ்சுது சார்….. என்ற கணேஷ். எழுந்து உட்கார்ந்தான். பரவாயில்லையா சார்?

எதுப்பா?

நாளைக்கே வீட்டை காலி பண்றேன் சார்…. அம்மாகிட்டயே போயிடறேன்.

வெரிகுட் கணேஷ் என்று தட்டிக் கொடுத்துவிட்டு திருப்தியுடன் கீழே வந்தேன். வெரோனிகா செலஸ் என்கிற பெண்ணை திருமணம் செய்து கொண்டதாய் என் மகன் ஈ- மெயிலில் கொடுத்த தகவல் எனக்காக காத்திருந்தது.

நன்றி:வி.உஷா

மந்திரக் குவலை


முன்னொரு காலத்தில் ஓர் அரசன் இருந்தான். அவன் மிகவும் முன் கோபக்காரன். தன் கெட்ட குணம் தெரிந்தும் அவனால் அதை மாற்றிக் கொள்ள முடியவில்லை.

ஒரு நாள் தேவதை ஒன்று அவன் முன் தோன்றியது. பொன்னால் செய்த ஒரு குவலையை அவனிடம் கொடுத்தது. "உனக்குச் சினம் வரும்போதெல்லாம் இதில் மூன்று முறை தண்ணீர்

நிரப்பிக்குடி; பிறகு சினமே வராது" என்று கூறி மறைந்தது தேவதை. அப்போதிருந்தே அரசன் அப்படிச் செய்யத் தொடங்கினான். சில நாட்களில் அவன் சினம் அவனை விட்டு விலகியது.

பல நாட்கள் சென்றன.

மீண்டும் ஒரு நாள் தேவதை அவன்முன் தோன்றியது. மந்திரக் குவலை கொடுத்ததற்காக பலமுறை அதற்கு நன்றி கூறித் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தான் மன்னன். "மன்னனே உன்னை ஏமாற்ற நான் விரும்பவில்லை. அது மந்திரக்குவலை அல்ல. சாதாரணமானதுதான். சினம் வரும்போது சிந்திக்க நேரம் இருக்காது. சிந்தனை வந்தால் சினம் தானே குறையும்.

தண்ணீரை மூன்று முறை ஊற்றிக் குடிக்கும் போது நேரம் கிடைக்கிறது. அப்போது சிந்திக்க முடிவதால் புலன்கள் அமைதி பெறுகின்றன. ஆத்திரம் நியாயத்திற்குத் தன் இடத்தைக் கொடுக்கிறது" என்று கூறி மறைந்தது தேவதை.

இராமகிருஷ்ணரின் ஆன்மிக சிந்தனைகள்


* மனிதனின் மனம் கடுகுப்பொட்டலம் போன்றது. அந்தப் பொட்டலம் கிழிந்து கடுகு நாலாபுறங்களிலும் ஓடிவிட்டால் அதை ஒன்றுசேர்ப்பது சிரமம். அதுபோல, மனம் உலகவிஷயங்களில் சிதறத் தொடங்கினால் அதைக் குவித்து ஒருமுகப்படுத்துவது சுலபமானதல்ல.

*சூரிய உதயத்திற்கு முன்னரே பணிகளைத் தொடங்கினால், அன்றைய பணிகள் யாவும் நன்றாக நடைபெறும். அதுபோல, சிறுவயதிலேயே ஆன்மிக விஷயங்களைத் தெரிந்து கொண்டால் அது முதுமை வரை துணைநிற்கும்.

* கடவுளைத் தேடுபவன் கடவுளை அடைகிறான். செல்வத்தையும், செல்வந்தர்களையும் நாடுபவன் அவற்றையே அடைகிறான். வாழ்வில் எதை விரும்பி நாடுகிறார்களோ அதையே அடைவார்கள்.

* ஒளியை உணர்பவன் இருளையும் உணர்கிறான். பாவத்தைப் பற்றித் தெரிந்தவனுக்குப் புண்ணியமும் இன்னதென்று தெரிந்திருக்கும். குணத்தைப் பற்றி அறிந்தவன், குற்றத்தைப் பற்றியும் அறிந்திருப்பான்.

* பழங்கள் நிறைந்த மரம் எப்போதும் கனத்தினால் தாழ்ந்து வளையும். அதுபோல நீங்கள் பெருமை மிக்கவராக வாழவேண்டுமானால் அடக்கமும் பொறுமையும் தேவை.

வள்ளலாரின் கொள்கைகள்


1) கடவுள் ஒருவரே அவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.

2) புலால் உணவு உண்ணக்கூடாது.

3) எந்த உயிரையும் கொலை செய்யகூடாது.

4) சாதி,மதம்,சமயம்,இனம்,மொழி முதலிய வேறுபாடு கூடாது.

5) இறந்தவர்களை எறிக்க கூடாது,சமாதி வைத்தல் வேண்டும்.

6) எதிலும் பொது நோக்கம் வேண்டும்.

7) பசித்தவர்களுக்கு சாதி,மதம்,சமயம்,இனம்,மொழி முதலிய வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும்.

8) கருமகாரியம்,திதி முதலியவை செய்யக்கூடாது.

9) சிறு தெய்வ வழிபாடு செய்யகூடாது.அவற்றின் பெயரால் பலி இடுதலும் கூடாது.

10) எல்லாஉயிர்களும் நமக்கு சகோதரர்களே,அவைகளுக்கு நாம் துன்பம் செய்யகூடாது.

விவேகானந்தரின் பொன்மொழிகள்


தீண்டாமையை தீவிர கொள்கையாகவும் உணவு உண்பதையே தெய்வமாக கருதும் வரை நீங்கள் ஆன்மிகத்தில் முன்னேறமுடியாது.

பெரிய புத்தகங்களை படிப்பதாலும் அவ்வாறு படித்து பேரறிஞர் ஆவதாலும் ஆன்மிக உணர்வைப் பெற முடியாது என்பது நிச்சயம்.

சங்கங்கள் ஏற்படித்தி கூட்டங்கள் சேர்த்து எவரும் ஆன்மிக உணர்வை பெற முடியாது. அன்பின் மூலமாகத் தான் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு ஆன்மிக உணர்வை செலுத்த முடியும். ஆன்ம ஞானத்தைப் பெற விரும்பும் ஒருவன் தொடக்கத்தில் புற உதவிகளைப் பெற்று சுயபலத்தில் நிற்க வேண்டும். ஆன்ம ஞானம் கிட்டிய பின் பிற உதவிகள் தேவையில்லை.

கல்வி மூலம் தன்னம்பிக்கை ஏற்படுகிறது. தன்னம்பிக்கை மூலம் தன்னுள் உறங்கிக் கிடக்கும் ஆன்மா விழித்துக் கொள்கிறது. கைக்கோ, வாளுக்கோ ஆற்றல் ஏது? ஆற்றல் முழுவதும் ஆன்மாவிலிருந்தே வெளிப்படுகிறது.

எல்லாப் பெருமையையும், எல்லா ஆற்றலையும், எல்லாத் தூய்மையையும் ஆன்மா தூண்டுகிறதே தவிர, ஆன்மாவைத் தூண்டுவது எதுவும் இல்லை.

ஆன்மிக உணர்வை பெறாதவரை நமது நாடு மறுமலர்ச்சி அடையாது. ஆன்மிக வாழ்க்கையில் பேரின்பம் பெறாமல் போனால், புலனின்ப வாழ்க்கையில் திருப்தியடைய முடியாது. அமுதம் கிடைக்காமல் போனால் அதற்க்காகக் சாக்கடை நீரை நாடிச் செல்லமுடியாது.

ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடிய போதிலும் சரி, அல்லது ஆயிரம் ஆண்டுகள் காய்கறி உணவையே உண்டு வந்தாலும் சரி, உன்னுள்ளே இருக்கும் ஆன்மிகம் விழிப்படையாவிட்டால், அதனால் ஒரு பயனும் இல்லை.

-சுவாமி விவேகானந்தர்

இறை வணக்கத்துக்கே உடல்


பருந்து ஆகாயத்தில் ஏழெட்டு மைல் உயரத்தில் பறக்கிறது. அதற்கு கூர்மையான கண்கள் உண்டு. அதனால், வெகு துரத்தில் இருந்து இறந்த உடல்களைக் காண முடியும். கீழே கிடக்கும் ஒரு மாமிசத் துண்டை கண்டுபிடித்து உண்பதற்காக இந்த தகுதி அதற்கு வழங்கப்பட்டிருக் கிறது.

அதுபோலவே நமக்கு உயர்ந்த கல்வித்தகுதிகள் இருக்கலாம். அதன் நோக்கம் என்ன? வேலைக்கு போக வேண் டும். சம்பாதிக்க வேண்டும் போன்ற புலன் இன்பத்திற்காக மட்டுமே. விண்வெளிக்கலன்களின் உதவியால் நாம் மிக உயரத்தில் பறக்கலாம். அதன் நோக்கம் என்ன? மனம் உள்ளிட்ட புலன்களின் திருப்திக்காக, சுயநலத்திற்காக.

ஆகவே, இந்த துயரமிக்க ஜடநிலைக்கு காரணமாயிருப்பது இந்த உடல் என்பதை நாம் முதலில் உணர வேண்டும். அதே சமயத்தில் இந்த உடல் நிலையானதல்ல என்பதையும் அறிய வேண்டும். "நான், என் உடல், குடும்பம், சமூகம், நாடு' மற்றும் பலவற்றோடு நம்மை நாம் இனங்கண்டாலும் எவ்வளவு காலத்துக்கு இவையெல்லாம் நிலைத்து நிற்கும். அவை சாஸ்வதமானவை அல்ல.

இந்த உடல் பயனற்றது என்றாலும், அதைப் புறக்கணித்தும் விடக்கூடாது. இறையுணர்வை செயல்படுத்த நம் ஜடஉடலைப் பயன்படுத்த வேண்டும். அதற்கு தேவையான வகையில் நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும்.

ஆனால், அதனிடம் பற்றுக்கொள்ளக்கூடாது. இதற்கு யுத்த வைராக்கியம் என்று பெயர். உடலை உதாசீனம் செய்யக்கூடாது. நாம் ஒழுங்காக குளித்து உணவுண்டு உறங்க வேண்டும்.

—சுவாமி பிரபுபாதா

Tuesday, 4 October 2011

சிரிக்கும் புத்தர் - ஜென் கதை


'சிரிக்கும் புத்தர்' என மக்களால் அழைக்கப் பட்ட 'ஹோட்டீய்' தான் ஒரு ஜென் குருவாக ஆக வேண்டும் என்றோ,சீடர்களைச் சேர்க்க வேண்டுமென்றோ, நினைக்கவே இல்லை.
தானும் சிரித்து, மற்றவர்களையும் சிரிக்க வைத்து, அதையே ஒரு தியானம் போலச்
செய்து வந்தார் அவர்.

எப்போதும் ஒரு பை தோளில் தொங்கிக் கொண்டிருக்கும்.அதில் நிறைய இனிப்பு பண்டங்கள் இருக்கும்.இனிக்க இனிக்கப் பேசித் தம்மிடம் வரும் குழந்தைகளுக்கு இனிப்புகளை வாரி வழங்குவது அவர் வழக்கம்குழ‌ந்தைக‌ள் அவ‌ருட‌ன் சேர்ந்து கும்மாள‌மிட்டு கூத்த‌டிப்பார்க‌ள்.ஆன‌ந்த‌மாய் சிரித்து ம‌கிழ்வார்க‌ள்.

இன்னொரு ப‌ழ‌க்க‌மும் அவ‌ரிட‌ம் இருந்த‌து.ஜென் தொட‌ர்பான‌வ‌ர் யாரைப் பார்த்தாலும், கை நீட்டி, "ஒரு காசு கொடு!" என்று கேட்பார்.

யாராவது அவரிடம், "ஏன் சுவாமி, கோயிலுக்குப் போய் அமர்ந்து உபதேசம் செய்வது
தானே" என்று கேட்டால், "ஒரு காசு குடு!" என்று தான் சொல்வார்.
ஒருமுறை அவ‌ர் தெருக் குழ‌ந்தைக‌ளுட‌ன் சிரித்து விளையாடிக் கொண்டிருந்த‌ போது, அந்த‌ப் ப‌க்க‌மாக‌ வ‌ந்த ஜென் குரு ஒருவ‌ர், அவ‌ரைப் பார்த்து, "ஜென்னின் முக்கிய‌த்துவ‌ம் என்ன‌? " என்று கேட்டார்.

ஹோட்டீய், உட‌னே த‌ம் தோளிலிருந்த‌ பையைத் தூக்கித் த‌ரையில் போட்டுவிட்டு அமைதியாக‌ நின்றார்.

உட‌னே அந்த‌ குரு, "ஜென்னின் ந‌டைமுறை என்ன‌?" என்று கேட்டார்.

ஹோட்டீய், கீழே கிட‌ந்த‌ பையை எடுத்து தோளில் போட்டுக் கொண்டு, திரும்பிப் பார்க்காம‌ல் ந‌ட‌ந்து சென்றார்.

அதுதான் அவ‌ர் ப‌தில்.

"ஒரு காசு குடு!" என்ப‌து உண்மையில் பிச்சை கேட்ப‌து அல்ல."என‌க்கு கொடுக்க‌ நீ என்ன‌ வைத்திருக்கிறாய்?" என்று பொருள்."உன்னிட‌ம் இருப்ப‌தை அனைவ‌ரிட‌மும் ப‌ங்கு போட்டுக் கொள்" என்று பொருள்.

தோளில் உள்ள பை தான் "உல‌க‌ம்". 'நாம் உல‌கைச் சும‌ந்தே தீர வேண்டி வ‌ருகிற‌து.ஆனால், எந்த நேர‌த்திலும் அதைத் தூக்கி எறிய‌த் தயாராக‌ இரு' என்ப‌தை செய‌லில் காட்டினார் ஹோட்டீய்.

ஓயாம‌ல் சிரிக்கும் புத்த‌ர், த‌த்துவ விசார‌ணை வ‌ந்த‌ போது 'மெள‌ன‌ குரு' ஆனார்.

"உலகு நின்னொடு ஒன்றிநிற்க வேறுநிற்றி" --திருமழிசை ஆழ்வார்.

குவளையைக் காலி ஆக்கு - ஜென் கதை


ஜென் என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொள்வதற்காக நான்-இன் என்ற ஜப்பானிய ஜென் குருவைப் பார்க்க பல்கலைக் கழகப் பேராசிரியர் ஒருவர் வந்தார். நான்-இன் அவருக்குத் தேநீர் கொடுத்து உபசரிக்க ஆரம்பித்தார்.

விருந்தினரின் குவளை முழுவதும் தேநீர் நிரம்பியது. ஆனால் இன்னும் அவர் தேநீரை ஊற்றிக் கொண்டே இருந்தார்.

தேநீர் ததும்பி வழிவதைப் பார்த்த பேராசிரியரால் பொறுக்க முடியவில்லை.

"இது நிரம்பி விட்டது. இதற்கு மேல் இந்தக் குவளையில் இடம் இல்லை"என்றார்.

நான்-இன் கூறினார், "இந்தக் குவளை போலவே நீங்களும் உங்கள் ஊகங்களினாலும் அபிப்ராயங்களினாலும் நிரம்பி இருக்கிறீர்கள். அதைக் காலி செய்யாதவரை உங்களுக்கு ஜென் என்றால் என்ன என்பதை நான் எப்படிப் புரிய வைக்க முடியும்?"

கௌரவம்


"பார்த்தா பிச்சைக்காரி மாதிரித் தெரியுது. ஆனா நீங்க தான் வரச் சொன்னதா அந்தப் பொண்ணு சொல்லுது. பேரு காவேரியாம். வாட்ச்மேன் என்ன செய்யறதுன்னு கேட்கறான்"

வேலைக்காரி சொன்னவுடன் அமிர்தம் எதுவும் புரியாமல் விழித்தாள். "நான் ஏன் பிச்சைக்காரியை வரச் சொல்றேன்.." என்றபடி யோசித்தவளுக்கு எதுவும் நினைவுக்கு வரவில்லை.

"நீங்க எழுதினதா ஒரு லெட்டரையும் கையில் வச்சிருக்காளாம்"

லெட்டர் என்றதும் அமிர்தத்தின் மூளையில் ஒரு பொறி தட்டியது. வீடு முழுவதும் ஏ.சி.யாக இருந்தாலும் அமிர்தத்திற்கு திடீரென வியர்த்தது. இதயம் படபடவென அடித்துக் கொண்டது. "வரச்சொல்லு" என்றாள்.

வேலைக்காரி திகைத்துப் போனாள். இப்படிப் பட்ட மனிதர்கள் அவளுக்குத் தெரிந்த வரை இந்த பங்களாவின் மெயின் கேட்டைத் தாண்டி இது வரை உள்ளே நுழைந்ததில்லை. தன் திகைப்பை மறைத்துக் கொண்டு அந்தப் பெண்ணை அழைத்து வரப் போனாள்.

அவள் அழைத்து வரும் வரை அமிர்தத்திற்கு இருப்பு கொள்ளவில்லை. மேற்கொண்டு சாப்பிடவும் பிடிக்கவில்லை. அந்தப் பெண் சிறு குழந்தையாக இருந்த போது பார்த்திருக்கிறாள். இப்போது அவள் எப்படி இருப்பாள் என்று பல உருவங்களை மனதில் ஏற்ப்படுத்திப் பார்த்தவளுக்கு நிஜமாகவே பார்க்கப் போகிறோம் என்ற போது பரபரப்பாய் இருந்தது.

அந்தப் பெண் தயக்கத்துடன் வந்தாள். ஏழ்மை தனது முத்திரையை அவள் மீது குத்தியிருந்தது. அமிர்தம் அவளைக் கூர்ந்து பார்த்தாள். கலைந்த தலைமுடி, ஆங்காங்கே கிழிசல் தைக்கப்பட்ட வெளிறிப் போன சேலை, முகத்தில் லேசாய் கலவரம், கையில் ஒரு பெரிய பழைய துணிப்பை...

காவேரி மௌனமாகக் கை கூப்பினாள்.

அமிர்தத்தின் வயிற்றை என்னவோ செய்தது. சமாளித்துக் கொண்டு வரவேற்றாள். "வாம்மா உட்கார்"

அந்தப் பெண் உட்காராமல் அவளையே பார்த்துக் கொண்டு சிறிது நேரம் நின்றாள். இருவருக்கும் என்ன பேசுவது, எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை.

சுமார் இருபத்தைந்து வருடங்களுக்கு முன் இந்தப் பெண்ணின் தாயார் இவளை வயிற்றில் சுமந்து கொண்டு இதே பங்களாவிற்கு வந்தது இன்னமும் அமிர்தத்திற்கு நன்றாக நினைவிருக்கிறது. அவர்களது கம்பெனியின் வெளியூர் கிளையில் அப்போது அவள் வேலை செய்து கொண்டிருந்தாள். மிகவும் அழகாக இருந்தாள். அன்று அமிர்தத்தின் மாமனார் தான் அவளிடம் கறாராகப் பேசினார். "அவன் பலாத்காரம் செஞ்சான், கல்யாணம் செஞ்சுக்கறேன்னு சொன்னான்னு சொல்லிப் பிரயோஜனம் இல்லை. இதோ இங்க நிக்கறாளே இவ தான் அவன் சம்சாரம். பேர் அமிர்தம். ஒரு ஆளுக்கு உசிரோட ஒரு சம்சாரம் தான் இருக்க முடியும். அதுக்கு மேல இருக்கிறவங்களுக்கு இந்த சமூகத்தில் பேர் வேற. என்கிட்ட சொன்னதை ஊரெல்லாம் சொல்லிகிட்டு திரிஞ்சேன்னு தெரிஞ்சா என் கம்பெனில பணம் கையாடல் பண்ணிட்டேன்னு உள்ளே தள்ளிடுவேன். இனி இந்தப் பக்கமோ என் கம்பெனிப் பக்கமோ வராம என் கண்ணில் படாம தப்பிச்சுக்கோ".

போவதற்கு முன்னால் அவள் முகத்தில் தெரிந்த வலி அமிர்தத்தை பல நாள் தூங்க விடவில்லை. விசாரித்ததில் அந்தப் பெண் ஒரு அனாதை ஆசிரமத்தில் வளர்ந்தவள் என்றும் அவர்கள் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்து ஒரு வருடம் தான் ஆகிறதென்றும் ந்¢ஜமாகவே ஒரு அப்பாவி என்றும் தெரிந்தது. கணவனுடன் இரண்டு நாள் பேசாதிருந்தாள். அந்தப் பெண்ணின் அப்பாவித்தனத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு சிறு குற்றவுணர்வு கூட இல்லாமல் இருந்த தன் கணவனுடன் வாழப் பிடிக்காமல் மூன்றாவது நாள் தாய் வீட்டுக்குப் போய் விட்டாள். தாய்வீட்டாரோ அவளது இரு குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்துப் பார்க்கச் சொல்லித் திருப்பி அனுப்பினார்கள். அந்தக் காலச் சமூக நிர்ப்பந்தங்கள் அவளைக் கட்டிப் போடவே, இயலாமையுடன் கூனிக்குறுகிப் புகுந்த வீட்டுக்குத் திரும்பி வந்தாள். கனவில் எல்லாம் அந்தப் பெண் வந்து அவள் குடும்பத்தார்களையும் அவள் குழந்தைகளையும் சபித்தாள். சில நாட்கள் கழித்து அந்தப் பெண் ஒரு பெண் குழந்தையைப் பிரசவித்ததும் அவள் சுமார் நூறு மைல் தள்ளி ஒரு ஊரில் இருப்பதும் அமிர்தத்திற்குத் தெரிய வந்தது. வீட்டார் யாருக்கும் தெரியாமல் அவளை ஒரு முறை பார்த்து விட்டு வந்தாள். கையோடு சிறிது பணத்தையும் கொண்டு போயிருந்தாள். முதலில் அந்தப் பெண் அதை வாங்க மறுத்தாள்.

"உனக்காக இல்லம்மா. இந்தக் குழந்தைக்காக இதை வாங்கிக்கோ. இது என்ன பாவம் செய்தது சொல்லு. என்னால வேறெந்த உதவியும் செய்ய முடியாது. நான் மாசா மாசம் என்னால் முடிஞ்சதை அனுப்பறேன். இந்தக் குழந்தையை நல்லாப் படிக்க வை. இது என் புருசன் செஞ்சதுக்குப் பரிகாரம் காட்டியும் அவள் படிப்புக்கும் அடிப்படை வசதிக்கும் உபயோகமாயிருக்கும். எனக்கும் ரெண்டு குழந்தைகள் இருக்கு. அதுக நல்லா வரணும்னு பிரார்த்தனை இருக்கு. அது பலிக்கணும்னா உன் குழந்தைக்கு நான் ஏதாவது செய்யணும்னு என் மனசாட்சி சொல்லுது. வாங்கிக்கம்மா"

கடைசியில் அவள் அந்தப் பணத்தை வாங்கிக்கொண்டாள். அன்று முதல் எந்த மாதமும் பணம் அனுப்ப அமிர்தம் தவறியதேயில்லை. வருடா வருடம் அனுப்பும் தொகையையும் அதிகப்படுத்தி வந்தாள். ஆரம்பத்தில் விஷயம் தெரிய வந்த போது கணவனும் வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் இந்த விஷயத்தில் மட்டும் அமிர்தம் மிக உறுதியாக இருந்ததால் மறுபடி அந்தப் பெண்ணையும் குழந்தையையும் போய் சந்திக்கக் கூடாது என்ற ஒரு கட்டுப்பாடோடு நிறுத்திக் கொண்டார்கள். அப்படி அவள் போனாள் என்று தெரிந்தால் பணம் அனுப்பக் கூட விட மாட்டோம் என்று பயமுறுத்தினார்கள். ஆனால் அந்தப் பெண்ணைப் பற்றி அமிர்தத்துக்குத் தகவல் தரும் நபர் உடனடியாக வேலையிலிருந்து நிறுத்தப் பட்டார். கிட்டத் தட்ட இருபது வருடங்கள் கழித்து இந்த மாத மணியார்டர் மட்டும் விலாசதாரர் இறந்து விட்டார் என்ற தகவலுடன் திரும்ப வந்தது. கணவனிடம் தகவலைத் தெரிவித்தாள்.

வேண்டா வெறுப்பாக அவர் கேட்டார். "இதை என்கிட்ட ஏன் சொல்றே"

""அம்மாவும் செத்துட்டா. ஒரு வயசுப் பொண்ணு அனாதரவா தனியா எப்படி இருக்க முடியும்"

"அதுக்கு என்ன செய்யணும்னு சொல்றே"

"அந்தப் பொண்ணுக்கு இனியாவது நாம ஆதரவு தரணும். நான் வரச் சொல்லப் போறேன்"

கணவர் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன. "நீ என்னை நாலு பேர் முன்னாடி அவமானப் படுத்தாம விடமாட்டே"

"அவமானம் நம்ம கீழ்த்தரமான நடத்தையில் இருக்கு. அது வெளிய தெரிகிற போது புதிதாய் வர்றதல்ல. இது உங்கள மாதிரி ஆளுகளுக்குப் புரியாது"

தொடர்ந்த வாக்குவாதத்தின் முடிவில் அந்தப் பெண் வந்த பின் ஓரிரு வாரங்களில் ஒரு லேடீஸ் ஹாஸ்டலில் சேர்த்து விடுவது என்றும் பிறகு ஒரு நல்ல வாழ்க்கை அமைய ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் முடிவாகியது.

"ந்¢யாயமா நாம போய் கூட்டிட்டு வரணும்"

அவர் பார்வையாலேயே அவளைச் சுட்டெரித்தார். "பெரிய நியாய தேவதை. லெட்டர் போடு போதும்"

இனி அதிகம் பேசினால் வேதாளம் பழையபடி முருங்கை மரம் ஏறினால் என்ன செய்வது என்று அவளுக்குப் பயம் வந்தது. இவ்வளவு தூரம் இறங்கி வந்ததே அதிகம் என்று நினைத்தவளாய் அமிர்தம் உடனடியாக அந்தப் பெண்ணிற்குக் கடிதம் எழுதினாள். எழுதி ஒரு வாரம் கழித்து அந்தப் பெண் வந்திருக்கிறாள்.

"ஏம்மா நிற்கிறாய். உட்கார்"

அவள் மிகுந்த தயக்கத்தோடு சோபாவில் உட்கார்ந்தாள். அந்தப் பங்களாவும், அங்கு தெரிந்த செல்வச் செழிப்பும் அவளுக்கு பிரமிப்பை உண்டாக்கியிருந்ததாய்த் தோன்றியது. தோற்றத்தில் தன் தாயைப் போலவே இருந்தாலும், தாயிடம் காணப் படாத ஒரு உறுதி மகளிடம் தென்படுவதாக அமிர்தத்திற்குத் தோன்றியது. மெள்ள அமிர்தம் பேச்சுக் கொடுத்தாள்.


"காவேரி நீ என்னம்மா படிச்சிருக்கே"

"ஒன்பதாவது வரைக்கும் படிச்சிருக்கேன். அம்மா பக்கவாதம் வந்து படுத்தப்புறம் மேல படிக்கலைங்க"

அவள் தாய் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டது உண்மையில் அமிர்தத்திற்குத் தெரிந்திருக்கவில்லை. "எனக்கு ஒரு கடிதம் போட்டிருக்கலாமே. என்னால முடிஞ்ச உதவியைச் செஞ்சிருப்பேனே. படிப்பை நிறுத்தியிருக்க வேண்டாமே" அமிர்தத்தின் முகத்திலும் பேச்சிலும் நிஜமாகவே ஆதங்கம் தெரிந்தது. தனது மகனும் மகளும் நன்றாகப் படித்து பெரிய நிலையில் மேலை நாடுகளில் இருக்க, இந்தப் பெண் படிக்க முடியாமல் நின்றது அவளுக்கு மிக வருத்தமாக இருந்தது.

காவேரி பதில் சொல்லாமல் அமிர்தத்தையே ஆச்சரியத்தோடு பார்த்தாள்.

"என்னம்மா என்னை அப்படிப் பார்க்கறே"

உடனடியாகத் தன் பார்வையை விலக்கிக் கொண்டவள் தானும் பதிலுக்குக் கேட்டாள். "உங்க குழந்தைக என்ன படிச்சிருக்காங்க"

தயக்கத்துடன் அமிர்தம் சொன்னாள் "ரெண்டு பேரும் இஞ்சீனியரா அமெரிக்கால இருக்காங்க"

கேட்டு காவேரி சந்தோஷப் பட்ட மாதிரி தெரிந்தது. "எப்பவாவது வருவாங்களா?"

"வருஷத்துக்கு ஒரு தடவை வருவாங்க. போன மாசம் தான் வந்துட்டுப் போனாங்க" என்ற அமிர்தம் அப்போது தான் அவள் ஒரு பையைத் தவிர வேறு எதுவும் கொண்டு வராததைக் கவனித்து கேட்டாள். "வெறும் இந்தப் பையோட வந்திருக்கியே. உன்னோட பாக்கி சாமான் எல்லாம் எங்கே?"

ஒரு கணம் தயங்கி விட்டுச் சொன்னாள். "கொண்டு வரலைங்க".

"ஏம்மா, நான் விவரமா எழுதியிருந்தேனே"

"இல்லைங்க எனக்குத் திரும்பப் போகணும்"

அமிர்தம் திகைத்துப் போய்க் கேட்டாள். "எங்கே போறே?"

"எங்க ஊருக்குத்தான். எனக்கு அங்க ஒரு ஸ்கூல்ல ஆயா வேலை கிடைச்சிருக்கு. இப்பப் போனா ராத்திரிக்குள்ள போய் சேர்ந்து நாளைக்கு வேலைக்குப் போயிக்கலாம். லீவு எடுக்க முடியாது."

அமிர்தம் மறுப்பு சொல்ல வாயைத் திறந்தாள். அவளைப் பேச விடாமல், "ஒரு நிமிஷம்..." என்று சொல்லி விட்டு ஒரு ஓரமாக வைத்திருந்த துணிப்பையை எடுத்தாள்.

"நீங்க கண்டிப்பா தப்பா நினைக்கக் கூடாது. இதைத் திரும்பத் தரலைன்னா எனக்கு சமாதானம் கிடைக்காது. நீங்க மறுப்புச் சொல்லாம வாங்கிக்கணும்"

"என்ன இது..." என்ற படி பையைத் திறந்த அமிர்தம் திகைத்துப் போனாள். உள்ளே கட்டு கட்டாகப் பணம். "எனக்கு ஓண்ணும் புரியலை"

"இது நீங்க இது வரை எங்களுக்கு அனுப்பிச்ச பணம். இதிலிருந்து ஒரு பைசா கூட நாங்க எடுக்கலை. காரணம் அனுப்பினது நீங்கன்னாலும் இது உங்க கணவரோட பணம். அந்த ளோட பணத்தை எடுத்துக்க மனசு ஒத்துக்கல. எங்கள வேண்டாத ஆளை எங்களுக்கும் வேண்டாம். அவரோட காசு வேண்டாம். எத்தனையோ நாள் பட்டினி கிடந்துருக்கோம். மருந்துக்குக் காசு இல்லாம கஷ்டப் பட்டிருக்கோம். ஆனாலும் இதிலிருந்து பணம் எடுத்து உசிரோட இருக்க மனசு பிரியப்படல"

காவேரியின் வார்த்தைகளில் ஒரு பெருமிதம் இருந்தது. வந்த போதிருந்த பலவீனமான குரல் போய் இப்போது குரல் கணீரென்றிருந்தது.

"ந்£ங்க கேக்கலாம் ஏன் இந்தக் காசை அன்னைக்கே திருப்பி அனுப்பிச்சிருக்க வேண்டியது தானேன்னு. பணம் திருப்பி அனுப்புனா உங்க மனசு சங்கடப்படும்னு அம்மா நினைச்சாங்க. அவங்களத் தேடி வந்து பணத்தக் குடுத்து ஒரு பச்சக் குழந்தை கஷ்டப் படாம வளரணும்னு நினைச்ச உங்க மனசு வருத்தப்படக் கூடாதுன்னு அம்மா என்னைக்கும் சொல்லுவாங்க..." சொல்லச் சொல்ல அவளுக்குத் தொண்டையை அடைத்தது.

சுதாரித்துக் கொண்டு தொடர்ந்தாள். "இதை சேத்து வச்சு ஏதாவது அனாதை இல்லத்துக்குக் குடுத்துறலாம்னு அம்மா நினைச்சாங்க. பெருசான பெறகு நான் ஒத்துக்கல. யாரு பணத்த யாரு தர்மம் செய்யறது? செய்ய என்ன உரிமையிருக்குன்னு எனக்குத் தோணிச்சு. அதனால இதைத் திரும்பத் தரணும்னு நான் பிடிவாதமாய் இருந்தேன். அம்மா இதை திரும்ப உங்களுக்குத் தர்றது உங்கள அவமானப்படுத்தற மாதிரின்னு சொல்லி அப்ப தடுத்துட்டாங்க. ஆனா எனக்கு அப்படித் தோணல. அதான் அவங்க செத்துப் போனவுடனே இதைக் கொண்டாந்துட்டேன். நீங்க என்னப் புரிஞ்சுக்குவீங்கன்னு நினைக்கிறேன்"

"இந்தப் பணத்தில் உனக்கு உரிமை இருக்கும்மா. இது இனாம் அல்ல. இந்தப் பணத்துல மட்டுமல்ல. இந்த வீட்டுலயும் என் குழந்தைகளுக்கு இருக்கும் உரிமை உனக்கும் இருக்கு"

" நீங்க என்ன இன்னும் சரியாப் புரிஞ்சுக்கலன்னு தோணுது. நான் பொறக்கக் காரணமா இருந்ததால மட்டும் அந்த ஆள் எனக்கு அப்பான்னு ஆயிடாது. எடுத்துப் பாராட்டி சீராட்டாத ஒரு மனுசனை, ஒரு தடவை வந்து பார்க்கணும்னு கூடத் தோணாத அந்த ஆளை அப்பாங்கறதோ, அவர் காசுக்கு உரிமை கொண்டாடறதோ எனக்கு அருவருப்பா இருக்கு"

அமிர்தம் மிகுந்த வருத்தத்துடன் சொன்னாள் "நீ சொல்றது எனக்குப் புரியுதும்மா. ஆனா இத்தனை நாள் நான் கொஞ்சமாவது நிம்மதியா இருந்திருந்தேன்னா அதுக்குக் காரணம் உங்க வாழ்க்கையை நான் கொஞ்சமாவது பண ரீதியிலாவது சுலபமாக்கி இருக்கிறேன்னு நினைச்சுத் தான். ஆனா இத்தனை நாள் இப்படிக் கஷ்டப்பட்டுட்டீங்களேம்மா"

"அந்தக் கஷ்டத்துலேயும் இந்தக் காசைத் தொடாம வச்சிருக்கோம்கிற பெருமை இருந்துச்சும்மா" என்ற காவேரி லேசான மனத்துடன் தொடர்ந்தாள் " உங்கள ஒரு தடவை பார்க்கணும்னு எனக்குப் பல தடவை தோணியிருக்கு. ஒவ்வொரு மாசமும் மறக்காம பணம் அனுப்புன உங்க நல்ல மனசுக்கு நானும் அம்மாவும் ரொம்பவே கடன் பட்டிருக்கோம். பொதுவா இந்த இரக்கம் எல்லாம் நாளாக நாளாக கம்மியாய் கடைசில காணாமப் போயிடும். ஆனா உங்க மனசுல மட்டும் இன்னைக்கு வரைக்கும் இந்த மனிதாபிமானம் குறையல. உங்கள என்னைக்கும் மறக்க மாட்டேன்."

அமிர்தம் வாயடைத்துப் போய் நின்றாள். இந்தப் பெண்ணிற்கு இது வரை உதவவில்லை, இனியும் உதவ இவள் அனுமதிக்க மாட்டாள் என்ற உண்மை உறைத்ததால் அவள் மனம் கனத்தது.

அவளது களங்கமில்லாத மனதில் தோன்றியது அவள் முகத்திலும் பிரதிபலித்திருக்க வேண்டும். அவளது எண்ணத்தைப் புரிந்து கொண்டவளாய் காவேரி மனம் நெகிழ்ந்து போய் சொன்னாள். "நீங்க என்னைப் பத்திக் கவலைப்படாதீங்கம்மா. இவ்வளவு நாள் அம்மா மருந்துக்கே நான் சம்பாதிச்சதெல்லாம் செலவானதால தான் கொஞ்சம் சிரமப் பட்டுட்டேன். இனி அந்த செலவில்லாததால் என் சம்பாத்தியம் எனக்குத் தாராளமாப் போதும். நான் கிளம்பறேம்மா"

பணப் பையை டைனிங் டேபிள் மீது வைத்து விட்டு காவேரி திரும்பும் போது அறை வாயிலருகே முகம் சிறுத்து சிலையாக ஒரு மனிதர் நின்றிருந்தார். அவர் அவர்களிருவரையும் ஏதோ வேற்றுக் கிரக மனிதர்களைப் போலப் பார்த்துக் கொண்டிருந்தார். பிறந்ததிலிருந்து ஒரு முறை கூட அவள் பார்த்திராத தந்தையை ஒரு முறை பார்க்க வேண்டும் என்ற ஆசை எள்ளளவும் அவள் மனதில் இருந்ததில்லை. எனவே கதவு ஓரமாக நின்றிருந்த அந்த மனிதர் தன் தந்தையாகத் தான் இருக்க வேண்டும் என்று தெரிந்தும் ஏறெடுத்தும் பார்க்காது கதவை நேராகப் பார்த்த படி காவேரி கம்பீரமாக வெளியேறினாள்.

நன்றி: என்.கணேசன்

சிறை வாசம்



அந்த முகம் தீனதயாளனுக்கு மிகவும் பரிச்சயம் உள்ள முகமாகத் தோன்றியது. ஆனால் சட்டென்று நினைவுக்குக் கொண்டு வர அவரால் முடியவில்லை. அந்த நபர் திருமண மண்டபத்திற்குள் நுழைந்த போது பலர் எழுந்து நின்று வணக்கம் சொன்னார்கள். அவர் சுமார் ஐந்து நிமிடம் தான் மண்டபத்தில் இருந்திருப்பார். அந்த ஐந்து நிமிடமும் தீனதயாளனின் அண்ணாவின் சம்பந்தி, மணப்பெண்ணின் தந்தை, கைகளைக் கட்டிக் கொண்டு பவ்யமாக அவர் அருகிலேயே நின்றிருந்தார். அந்த நபர் மணமக்களை வாழ்த்தி விட்டு காரேறுகையில் தற்செயலாக தீனதயாளனைப் பார்த்தார். உடனே அந்த நபரின் முகத்தில் தீனதயாளன் யாரென்று அறிந்து கொண்டதன் அறிகுறி ஒரு கணம் தோன்றியது. ஆனால் மறு கணமே அதை மறைத்துக் கொண்டு காரினுள் மறைந்தார். கார் சென்ற பின்பு தான் சம்பந்தியின் கைகள் பிரிந்தன.

"கூப்பிட்டிருந்தேன். ஆனா இவ்வளவு பெரிய மனுசன் நம்மளையும் மதிச்சு வருவார்னு உறுதியாய் நினைக்கலை. அவர் வந்து ஆசிர்வாதம் செய்ய என் பொண்ணு குடுத்து வச்சிருக்காள்னு தான் சொல்லணும்" என்று பலரிடமும் அவர் பெருமிதத்துடன் சொல்லிக் கொண்டிருந்தது தீனதயாளன் காதில் விழுந்தது.

"இப்ப வந்துட்டு போன ஆளை எனக்கு நல்லாவே தெரியும், சாவித்திரி. ஆனா சட்டுன்னு யாருன்னு சொல்ல வரலை" என்று தீனதயாளன் தன் மனைவியிடம் சொன்னார்.

ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரியான தன் கணவனை, சாவித்திரி சந்தேகக் கண்ணோடு பார்த்தாள். அவளது அனுபவத்தில் அவர் நினைவில் தங்கும் நபர்கள் பெரும்பாலும் குற்றவாளிகள் மட்டுமே. பல ஆண்டுகள் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் நபரைப் பார்த்து அவளிடம் "யாரிது" என்று கேட்பார். ஆனால் அவர் விசாரணை செய்த சிறு குற்றவாளிகளைக் கூட பல ஆண்டுகள் கழித்தும் அவர் மறந்ததாய் சரித்திரம் இல்லை. சம்பந்தி வீட்டவர்கள் இவ்வளவு மரியாதையைக் காட்டிய ஒருவரைப் பற்றி என்ன இவர் சொல்லப் போகிறாரோ என்று பயந்தாள்.

"கொஞ்சம் வாயை மூடிட்டு சும்மா இருங்கோ" என்று பல்லைக் கடித்துக் கொண்டு சொன்னாள்.

அவருக்கு மனைவி ஏன் பல்லைக் கடித்துக் கொண்டு எச்சரிக்கிறாள் என்று புரியவில்லை. அவளைப் பொருட்படுத்தாமல் தானே நேரடியாக அண்ணாவின் புது சம்பந்தியிடம் சென்று, வந்து விட்டுப் போன நபர் யாரென்று விசாரித்தார்.

"அவர் ஒரு மகாத்மா, சம்பந்தி. கோடிக் கணக்கில் சொத்திருந்தாலும் கொஞ்சம் கூட அகம்பாவம் இல்லாத மனுஷன். இப்ப நீங்களே பார்த்தீங்கள்ள... மனுஷன் ரொம்பவும் சிம்பிள். அவரோட சங்கரா குரூப்ஸ் கம்பெனிகள், இண்டஸ்ட்ரீஸ் எல்லாமாய் சேர்த்து கிட்டத்தட்ட எட்டாயிரம் பேர் வேலை பார்க்கிறாங்க. எல்லாருக்கும் நல்ல சம்பளம். ஆனா அவரோட வீட்டைப் பார்த்தா நீங்க நம்ப மாட்டீங்க.அவரோட பியூன்கள் கூட அதை விடப் பெரிய வீட்டில் இருக்கிறாங்க. அவ்வளவு சின்ன விட்டில் வேலைக்காரங்க கூட இல்லாம ஒரு சன்னியாசி மாதிரி வாழ்றார்."

"அவர் பேர் என்ன சம்பந்தி"

"மாணிக்கம்"

சொல்லி விட்டு சம்பந்தி நகர்ந்தார். அந்தப் பெயரைக் கேட்டவுடன் எல்லாம் தெளிவாக நினைவுக்கு வர தீனதயாளன் அதிர்ந்து போய் நின்றார்.

மாணிக்கம் ஒரு காலத்தில் கோயமுத்தூரில் போலீஸ் துறையையே திணறடித்த ஒரு தீவிரவாதி. தீனதயாளன் அப்போது அங்கு டி.எஸ்.பியாக சில காலம் இருந்தார். வெடிகுண்டு தயாரிப்பதில் மாணிக்கம் நிபுணன். ஒரு தீவிரவாதக் கும்பலின் மூளையாக அவனை போலீஸ் கணித்து வைத்திருந்தது. அவனைக் கைது செய்து சிறைக்கு அனுப்ப தீனதயாளனும், அவரது சகாக்களும் நிறையவே முயற்சிகள் எடுத்தார்கள். அவன் சிக்காமலேயே தப்பித்து வந்தான். ஒரு வெடிகுண்டு வெடித்த கேசில் சதாசிவம் என்ற ஒரு போலீஸ் அதிகாரி சாமர்த்தியமாக அவனை தகுந்த ஆதாரங்களுடன் கைது செய்தார். தீனதயாளன் உட்பட உயர் அதிகாரிகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள். ஆனால் கோர்ட்டில் சதாசிவம் வேண்டுமென்றே கேசை பலவீனப்படுத்தி அவனைத் தப்ப வைத்தார். மாணிக்கம் விடுதலையாகி புன்னகையுடன் வெளியே வந்த காட்சி இன்னமும் தீனதயாளனுக்குப் பசுமையாக நினைவிருக்கிறது.

சதாசிவத்தை அழைத்து தீனதயாளன் விசாரித்தார். அவரது எல்லாக் கேள்விகளுக்கும் சேர்த்து சதாசிவம் ஒரே பதில் தான் சொன்னார். "எனக்கு என் குடும்பம் முக்கியம் சார்"

சதாசிவத்தின் வயதுக்கு வந்த மகளைக் கடத்திச் சென்று அவரை அந்தக் கும்பல் மிரட்டிய விஷயம் மெள்ள வெளியே வந்தது. அவன் விடுதலையான பின்பு அந்தப் பெண்ணைப் பத்திரமாக அனுப்பி விட்டார்களாம். கொதித்துப் போனார் தீனதயாளன். அப்பீல் செய்யலாம் என்றும் அவர் குடும்பத்திற்கு போலீஸ் பாதுகாப்பு தரும் என்றும் தீனதயாளன் சொல்லிப் பார்த்தார்.

"எவ்வளவு நாள் பாதுகாப்பு தர முடியும் சார்?"

கடைசியில் வேறு வழியில்லாமல் அந்தக் கேசைக் கை கழுவ வேண்டி வந்தது. அந்த சமயம் தீனதயாளனுக்கும் வட இந்தியாவிற்கு மாற்றலாகியது. அவர் அங்கு போன பின்பும் ஒரு முறை இங்கு ஒரு வெடிகுண்டு வெடித்து ஒரு ரயில் தடம் புரண்ட செய்தியைக் கேள்விப் பட்டார். அதில் மாணிக்கத்தின் பெயரும் அடிபட்டது. ஆனால் அந்த வழக்கிலும் ஓரிரு சின்னத் தீவிரவாதிகள் கைதாகி தண்டனை பெற்றார்களே தவிர மாணிக்கம் சட்டத்தின் பிடிக்கு வரவில்லை. அதற்குப் பின் மாணிக்கத்தைப் பற்றி ஒரு தகவலும் அவருக்குக் கிடைக்கவில்லை. இருபத்தைந்து வருடங்கள் கழித்து இப்போது தான் ஒரு கோடீசுவரத் தொழிலதிபராகவும், மகாத்மாவாகவும் அவனைப் பற்றி கேள்விப்படுகிறார்.

தீனதயாளனுக்கு இதை ஜீரணிக்கவே முடியவில்லை. சட்டத்தின் விசேஷ வலையில் சின்ன மீன்கள் மாட்டிக் கொள்வதும் பெரிய மீன்கள் அனாயாசமாக தப்பித்துக் கொள்வதும் அவரால் இன்னமும் சகிக்க முடியாததாகவே இருந்தது. மாணிக்கத்திடம் பேசிய ஒருசிலரிடம் பேச்சுக் கொடுத்தார். எல்லாரும் அவனைப் பற்றி நல்ல விதமாகவே சொன்னார்கள். அவன் சின்னதாய் அங்கு தொழில் ஆரம்பித்து படிப்படியாக முன்னேறியதாகவும் கோடிக்கணக்கில் தர்ம காரியங்களுக்கு அவன் செலவிடுவதாகவும் தெரிவித்தார்கள். அவர்கள் சொன்னதில் ஒரு விஷயம் நெருடியது. மாணிக்கம் வசிக்கும் அந்த சிறிய வீட்டிற்கு அவனது ஓரிரு பழைய சினேகிதர்கள் தவிர யாரும் போனதில்லை. உள்ளே அவன் யாரையும் அனுமதிப்பதும் இல்லை.

மனைவியிடம் போய் சொன்னார்.

"நான் அப்பவே நினைச்சேன். உங்களுக்கு ஞாபகம் இருக்குன்னா அது நல்ல ஆளாய் இருக்க முடியாதுன்னு. சரி இன்னும் போய் யார் கிட்டேயும் சொல்லாதீங்க. நமக்கு எதுக்கு வம்பு"

அவரால் சும்மா இருக்க முடியவில்லை. ஒரு தீவிரவாதி தண்டனைக்குத் தப்பி விட்டு சுதந்திரமாகக் கோடிக் கணக்கில் சொத்து சேர்ப்பதும் மகாத்மாவாக சித்தரிக்கப் படுவதும் அவருக்கு பொறுக்க முடியாத விஷயமாகவே இருந்தது. பழைய கதை தெரிந்த ஒருவன் இருக்கிறான் என்று தெரிவிக்க ஆசைப்பட்டார். மனைவியிடம் சொன்னால் அவள் அனுமதிக்க மாட்டாள் என்று அவளிடம் சொல்லாமல் வெளியே போய் ஒரு போன் செய்தார்.

மாணிக்கத்தின் செகரட்டரியிடம் பேசினார். "நான் மாணிக்கதோட பழைய சினேகிதன். இங்கே ஒரு கல்யாணத்துக்கு வந்தேன். அவரை சந்திக்க முடியுமா? நான் நாளைக்கு மத்தியானம் கல்யாண பார்ட்டியோட ஊர் திரும்பணும். அதுக்கு முன்னாடி அவரைப் பார்த்துட்டுப் போலாம்னு பார்க்கறேன்"

"அப்பாயின்மென்ட் இல்லாம பார்க்க முடியாதுங்களே"

"அவர் கிட்டே எனக்காக கொஞ்சம் கேட்டுப் பாருங்களேன்"

"உங்க பெயர்?"

"தீனதயாளன். முன்பு கோயமுத்தூரில் டி.எஸ்.பி ஆக இருந்திருக்கிறேன்னு சொன்னா அவருக்குத் தெரியும்" சொல்லி விட்டு உள்ளுக்குள் சிரித்துக் கொண்டார். மாணிக்கம் தன்னைச் சந்திக்க ஒப்புக் கொள்வான் என்ற நம்பிக்கை அவருக்கு இல்லை. ஆனாலும் மாணிக்கம் என்ன சொல்வான் என்று அறிய அவருக்கு ஆவலாக இருந்தது.

"சரி லைனிலேயே இருங்கள்"

டெலிபோன் சில நிமிடங்கள் மௌனம் சாதித்தது.

"எம்.டி உங்களை ஏழு மணிக்கு அவர் வீட்டில் வந்து பார்க்கச் சொன்னார். வீட்டு அட்ரஸ் நோட் பண்ணிக்கிறீங்களா?...."

தீனதயாளன் இதை எதிர்பார்க்கவில்லை. ஏதாவது ஒரு காரணம் சொல்லி தன்னைச் சந்திப்பதைத் தவிர்ப்பான் என்று நினைத்திருக்கையில், யாரையும் அதிகம் அனுமதிக்காத தனது வீட்டுக்கே வந்து சந்திக்குமாறு மாணிக்கம் சொன்னது இரட்டிப்பு திகைப்பாக இருந்தது. எத்தனை நெஞ்சழுத்தம் இருந்தால் சந்திக்க ஒப்புக் கொள்வான் என்று யோசித்தார். அந்த வீட்டில் ஏதோ மர்மம் இருப்பதாக முன்பே அவர் நினைத்திருந்ததால் வீட்டில் அவனை சந்திப்பதில் அபாயம் இருக்கிறது என்று போலீஸ் புத்தி எச்சரித்தது. ஆனாலும் முன் வைத்த காலைப் பின் வைக்க அவர் மனம் ஒப்பவில்லை.

மாலையில் எல்லாரும் சுமார் நாற்பது மைல் தூரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சனேயர் கோயிலுக்குப் போகப் புறப்பட்டனர். ஏதோ ஒரு காரணம் சொல்லி சாவித்திரியை மட்டும் அவர்களுடன் அனுப்பி வைத்து விட்டு மாணிக்கத்தின் வீட்டுக்குக் கிளம்பினார்.

மாணிக்கத்தின் வீடு ஊரின் ஒதுக்குப் புறத்தில் இருந்தது. அருகில் வீடுகள் இல்லை. சுற்றும் முற்றும் இருந்த இடத்தையெல்லாம் மாணிக்கம் வாங்கி இருப்பதாக கல்யாண மண்டபத்தில் சொல்லியிருந்தார்கள். காலிங் பெல்லை அழுத்தினார். மாணிக்கமே கதவைத் திறந்தான்.

கிட்டத் தட்ட ஐம்பது வயதைக் கடந்திருந்தாலும் மாணிக்கம் திடகாத்திரமாக இருந்தான். ஒரு கதர் சட்டையும் கதர் வேட்டியும் அணிந்திருந்தான். அடுத்தது அரசியல் பிரவேசம் போலிருக்கிறது என்று மனதில் நினைத்துக் கொண்டார்.

"வாங்க டி.எஸ்.பி சார். உட்காருங்க"

முதல் அறையில் இரண்டு பிரம்பு நாற்காலிகள் தவிர வேறு எந்தப் பொருளும் இல்லை. ஒரு நாற்காலியில் தீனதயாளன் அமர மற்றதில் மாணிக்கம் அமர்ந்தான். அவன் முகத்தில் தெரிந்த அமைதி அவரை ஆச்சரியப் படுத்தியது. எப்படி தான் முடிகிறதோ?

"உன்னை இந்த ஒரு நிலையில் நான் எதிர்பார்க்கலை மாணிக்கம்" என்று பொதுவாகச் சொன்னார்.

"இருபத்தி நாலு வருஷத்துக்கு முன்னால் நான் இப்படியாவேன்னு யாராவது சொல்லியிருந்தால் நானே நம்பியிருக்க மாட்டேன் சார்"

"என்ன செஞ்சே மாணிக்கம், கள்ள நோட்டு அடிச்சியா?" அவர் ஏளனமாகக் கேட்டார்.

சற்றும் கோபப்படாமல் மாணிக்கம் சொன்னான். "ஒரு ரயிலைக் கவிழ்த்தேன். ஒரு ஆளைப் பார்த்தேன். எல்லாமே என் வாழ்க்கையில் மாறிடுச்சு சார் ...."

வெடிகுண்டு வைத்து ரயிலைக் கவிழ்க்கும் அந்தத் திட்டத்தில் சிறிய தவறு கூட இல்லாமல் மாணிக்கம் அன்று பார்த்துக் கொண்டான். அவனது திட்டங்களிலேயே இது தான் மிகப் பெரியது. தூரத்தில் ரயில் கவிழ்வதைப் பார்த்து விட்டுத் திரும்பிய போது தான் அந்த ஆளைப் பார்த்தான். பரட்டை முடி, கந்தல் உடை, தோளில் ஒரு சாயம் போன ஜோல்னாப் பை, இதற்கெல்லாம் எதிர்மாறாக தீட்சணியமான கண்களுடன் அவன் பின்னால் அந்த வயதான ஆள் நின்றிருந்தார். அவரது கண்கள் அவனது உள் மனதை ஊடுருவிப் பார்த்தன. ஓட யத்தனித்த மாணிக்கத்தை அவரது அமானுஷ்யக் குரல் தடுத்து நிறுத்தியது.

"நீ முழுசும் பார்க்கலை. முழுசையும் பார்த்துட்டே போ.எதையும் நீயா நேரில் சரியா பார்த்தால் தான் புரியும்" என்று சொன்னவர் விபத்து நடந்த இடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தார். அவனையும் அறியாமல் மந்திரத்தால் கட்டுண்டது போல மாணிக்கம் அவரைப் பின் தொடர்ந்தான். எங்கும் பிணங்கள், துண்டிக்கப் பட்ட உறுப்புகள், அழுகுரல்கள், வலி தாளாத ஓலங்கள் இவற்றினூடே இருவரும் நடந்தார்கள். ஒவ்வொரு அடி எடுத்து வைக்கையிலும் ஒவ்வொரு மனிதனின் சோகத்தை மாணிக்கம் பார்த்தான். ஆட்கள் பல திசைகளிலிருந்தும் விரைந்து வந்து படி இருந்தார்கள்.

"இது உன் வெற்றியோட ஆரம்பம் தான். இதில் எத்தனையோ பேர் அனாதையாகலாம், பிச்சைக்காரங்களாகலாம், பைத்தியம் புடிச்சு அலையலாம், சில குழந்தைகள் பெத்தவங்க இல்லாம கஷ்டப்பட்டு தீவிரவாதியாகவோ, விபசாரியாகவோ கூட ஆகலாம். இத்தனைக்கும் நீ பிள்ளையார் சுழி போட்டிருக்கிறாய். இத்தனை பேரும் உனக்கு என்ன கெடுதல் செய்தாங்கன்னு நீ இப்படி இவங்களை தண்டிச்சிருக்காய்னு நான் தெரிஞ்சுக்கலாமா?"

மாணிக்கம் அங்கிருந்து ஓடி விட நினைத்தான். ஆனால் அவரது பார்வை அவனைக் கட்டிப் போட்டிருந்தது. அவனுக்கும் அவனது இயக்கத்துக்கும் பதவியில் இருந்தவர்கள் மீது தான் கோபம், அவர்களுக்குப் பாடம் கற்பிப்பது தான் குறிக்கோள். அதற்காகத் தான் இது போன்ற தீவிரவாதச் செயல்கள். ஆனால் அதைச் சொல்வது அவர் கேள்விக்குப் பதிலாகாது என்பது புரிந்தது. எத்தனையோ காலமாக கொடூரமாகவே வாழ்ந்து விட்ட அவனது மரத்துப் போன மனதில் ஏதோ ஒன்று ஊடுருவி அவனை அசைத்தது. அந்தக் கோரக் காட்சிகளும், பாதிக்கப் பட்டவர்களின் தாங்க முடியாத துயரங்களும் அவனை மிகவும் ஆழமாகப் பாதித்தன. அவர் கேள்வியில் இருந்த நியாயமும், கண்டு கொண்டிருக்கும் காட்சிகளும் சேர்ந்து அவன் மனதை என்னவோ செய்தன. மனசாட்சி உறுத்தியது. நேரம் ஆக ஆக அந்த இடம் அவனைப் பைத்தியமாக்கி விடும் போலத் தோன்றியது.

தாள முடியாமல், ஆபத்திற்கென்று அவன் வைத்திருந்த சயனைடு கேப்ஸ்யூலை எடுத்தான்.

"சாகடிக்கிறதும், சாகிறதும் ரெண்டுமே சுலபம் தான். கோழைகள் செய்கிற காரியம்."

முதல் முறையாக மாணிக்கம் வாயைத் திறந்தான். "என்னைப் போலீசில் சரணடையச் சொல்றிங்களா?" அந்த ஆள் முன்னால் இருப்பதை விடப் போலீஸ் தேவலை என்று தோன்றியது. அவர் முன்னிலையில் அவனையும் அறியாமல் புதியவனாக மாறிக் கொண்டிருந்தான்.

"அதனால் யாருக்கு என்ன பிரயோஜனம்?"

"என்னை என்ன தான் செய்யச் சொல்றீங்க"

"இனியாவது பிரயோஜனப்படு"

அந்த வார்த்தையை சொன்னது அவரானாலும், அதை தன் அந்தராத்மாவில் இருந்து கேட்பது போல் மாணிக்கம் உணர்ந்தான். அவர் அவனை யோசிக்க வைத்து விட்டு அடுத்த கணம் அந்த ஜனக்கூட்டத்தில் மறைந்து போனார்.

மாணிக்கம் தீனதயாளனிடம் உணர்ச்சி பூர்வமாகச் சொன்னான். "அவர் யாரு என்னன்னு எனக்குத் தெரியலை. அப்புறமா நான் அவரைப் பார்க்கவுமில்லை. எங்க ஆளுக சிலரைப் போலீஸ் கைது செஞ்சாங்க. கைதானவங்களே முழுப் பொறுப்பு ஏத்துகிட்டதாலே நான் தப்பிச்சுட்டேன். ஆனா மனசாட்சியிலிருந்து தப்ப முடியலை. அவர் கடைசியா சொன்ன 'இனியாவது பிரயோஜனப்படு'ங்கற வார்த்தை எனக்கு வேத மந்திரமாச்சு..."

அவன் பேசிக்கொண்டே போனான். புதிய வாழ்க்கை ஆரம்பித்த விதத்தைச் சொன்னான். சின்னதாகத் தொடங்கிய வியாபாரம் பெருகிப் பெருகி இன்றைய நிலைக்கு வந்த கதையைச் சொன்னான். இலாபத்தில் இருபது சதம் தொழிலாளிகளுக்கும், மீதி அத்தனையும் தர்ம காரியங்களுக்கும் போகிற விதத்தை விவரித்தான். தீனதயாளன் மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்தார்.

"நான் நிறையவே தப்பு செஞ்சிருக்கேன். அதுக்கு கடவுளோட கோர்ட்டில் எனக்கு என்ன தண்டனை இருக்கும்னு தெரியலை டி.எஸ்.பி சார். ஆனா ஒவ்வொரு ராத்திரியும் அந்த ரயில் கவிழ்ப்பு கனவில் வருது. அவர் சொன்ன படி ஒவ்வொருத்தர் வாழ்க்கையும் திசை மாறி அவங்க எப்படியெல்லாம் கஷ்டப்படறாங்களோங்கற வேதனையோட பிறகு நிறைய நேரம் முழிச்சுட்டு இருப்பேன். அந்த உறுத்தல் ஓரு தினசரி தண்டனை சார். என்னைப் பொருத்த வரை இப்போதைய வாழ்க்கை ஒரு சிறை வாசம் தான். எனக்கு நானே விதிச்சுகிட்ட சிறைவாசம். அப்படித்தான் வாழ்றேன்..." என்ற மாணிக்கம் எழுந்து போய் இன்னொரு அறையையும் திறந்து காண்பித்தான்.

உள்ளே ஒரு பழைய பாய், அலுமினிய டம்ளர், அலுமினியத் தட்டு என்று எல்லாமே சிறையில் கைதிகளுக்கு வழங்கும் பொருட்கள் தவிர வேறு ஒன்றும் இருக்கவில்லை. அவன் யாரையும் அங்கு அனுமதிக்காத காரணம் மெள்ள தீனதயாளனுக்கு விளங்கியது.

"சார், நீங்க ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியாய் இருந்தவர், நல்லவர்னு நிறையவே கேள்விப்பட்டிருக்கேன். எனக்கும் தெரியும். அதனால உங்களைக் கேட்கிறேன். எனக்கு இப்ப நீங்க தான் நீதிபதி. எனக்கு இன்னும் செஞ்சதெல்லாம் உறுத்துது. எத்தனை தர்மம் செஞ்சாலும் என்னோட பாவத்தோட கனம் குறையவே மாட்டேங்குது. இன்னும் என்ன செஞ்சு என் பாவத்தைக் கழுவணும். நீங்க சொல்லுங்க. என்ன சொன்னாலும் கேட்கறேன்" கைகளைக் கூப்பி கண்கள் கலங்கக் கேட்டான்.

அவர் கண்களும் கலங்கின. "உன்னால் எட்டாயிரம் தொழிலாளர் குடும்பம் பிழைக்குது. உன் தர்மத்தால் ஆயிரக்கணக்கானவங்க பலன் அடையறாங்க. இன்னும் ஏன் மாணிக்கம் உனக்கு இப்படித் தோணுது. நடந்து முடிந்ததை மாத்தற சக்தி அந்தக் கடவுளுக்குக் கூட இல்லை. நீ எப்படியிருந்தேங்கிறதை விட நீ இப்ப எப்படியிருக்கிறாய்ங்கிறது தான் முக்கியம். தப்பு எத்தனையோ பேர் செய்யறாங்க. ஆனா உன்னை மாதிரி யாரும் பிராயச்சித்தம் செய்யறதை நான் பார்க்கலை. அந்த விதத்தில் எத்தனையோ பேருக்கு ஒரு பாடம் மாதிரி தான் நீ வாழ்ந்துட்டிருக்கே மாணிக்கம். இனியும் உன்னை அனாவசியமாகத் தண்டிச்சுக்காதே. நேரமாச்சு. நான் வரட்டுமா?"

தீனதயாளன் இரு கைகளையும் கூப்பி தலை வணங்கி விட்டு வெளியே வந்தார். அவர் இவ்வளவு மதித்து ஒரு மனிதனுக்குத் தலை வணங்குவது இதுவே முதல் முறை.