Sunday, 2 October 2011

முல்லா பேசிய பேச்சு

முல்லா வசித்து வந்த ஊரில் பெரும்பாலான மக்கள் முல்லாவை ஓர் அறிஞர் என்றும்
உலக அனுபவம் மிக்கவர் என்றும் மதித்து அவரைப் பாராட்டினர்.

அதே ஊரில் முல்லாவுக்கு இருக்கும் மதிப்பு மரியாதையைக் கண்டு எரிச்சலடைந்த சிலரும் இருந்தார்கள்.

"முல்லாவுக்கு அறிவாற்றல் ஏதும் கிடையாது. அவருக்கு மிகச் சாதாரண விஷயங்களில் கூட ஞானம் இல்லை.
அறிவுகெட்ட மக்கள் அவரைப் பாராட்டுகிறார்கள்" என்று அவர்கள் ஊரெல்லாம் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்கள்.

முல்லாவை ஒரு பெருங் கூட்டத்திற்குப் பேச அழைத்து அவரால் பதில் சொல்ல இயலாத கஷ்டமான வினாக்களை எழுப்பி
அவர் பதில் சொல்ல முடியாமல் தடுமாறும்போது கை கொட்டிச் சிரிக்க வேண்டும் என்று அந்தப் பொறாமைக்காரர்கள் திட்டமிட்டார்கள்.

அவர்கள் ஒரு நாள் முல்லாவிடம் சென்று, "முல்லா அவர்களே! தங்களுடைய அரிய உபதேசங்களைக் கேட்டு
இன்புற வேண்டும் என்று எங்கள் பகுதி மக்கள் விரும்புகிறார்கள். ஒரு தடவை தாங்கள் வந்து எங்களுக்கெல்லாம்
அறிவுரை கூற வேண்டும்" என்று கேட்டனர்.

அவர்களுடைய சூழ்ச்சியினை விளங்கிக் கொண்ட முல்லா முதலில் அவர்கள் வேண்டுகோளை ஏற்க மறுத்து
"எனக்கு ஓய்வே இல்லை. ஓய்வு கிடைத்தால் வருகிறேன்" என்றார்.

பொறாமைக்காரர்களோ திரும்பத் திரும்ப வந்து வற்புறுத்தினார்கள்.

அவர்கள் வேண்டுகோளை ஒரேயடியாகப் புறக்கணித்தால், தன்னைப் பற்றிக் கேவலமாகப் பிரச்சாரம் செய்வார்கள்
என்று கருதிய முல்லா ஒரு தடவை அவர்கள் அழைப்பை ஏற்றுக் கொண்டு அவர்கள் குறிப்பிட்ட நாளில் வருவதாக வாக்குறுதி அளித்தார்.

எதிர்ப்பாளர்கள் ஒரு பெருங்கூட்டத்தைக் கூட்டியிருந்தார்கள்.

முல்லாவிடம் தாறுமாறாகக் கேள்விகளைக் கேட்பதற்கென்றே சில குழப்பவாதிகளை அவர்கள் கூட்டத்திற்கு அழைத்து வந்து
உட்கார வைத்திருந்தார்கள்.

முல்லா குறித்த் நேரத்தில் கூட்டத்திற்கு வந்தார்.

கம்பீரமாக மேடை மீது ஏறி, "அன்பார்ந்த தோழர்களே! இன்று இங்கு நான் என்ன பேச இருக்கிறேன் என்பது பற்றி
உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார் முல்லா.

"எங்களுக்குத் தெரியாது" எனக் கூட்டத்திலிருந்தவர்கள் ஒருமித்த குரலில் கூறினார்கள்.

"நான் என்ன பேசப் போகிறேன் என்பதைக் கூடத் தெரிந்து வைத்திராத அப்பாவிகளுக்கு மத்தியிலே நான் என்ன பேசினாலும்
விளங்காது. நான் வருகிறேன்" என்று கூறியவாறு முல்லா மேடையை விட்டு இறங்கிச் சென்று விட்டார்.

முல்லா தந்திரமாகச் சமாளித்துச் சென்று விட்டதைக் கண்டு ஏமாற்றமடைந்த எதிர்ப்பாளர்கள் சும்மா இருந்து விடவில்லை.

திரும்பத் திரும்ப முல்லாவின் வீட்டுக்குச் சென்று கூட்டத்திற்குள் வருமாறு வற்புறுத்தினார்கள்.

அவர்களுடைய நச்சரிப்புத் தாளமாட்டாமல் இரண்டாவது முறையாகக் கூட்டத்திற்குச் சென்றார் முல்லா.

மேடை ஏறியதும், "அன்பார்ந்த நண்பர்களே! இப்போது இங்கே நான் என்ன பேச இருக்கிறேன் என்பது பற்றி
உங்களுக்கு ஏதாவது தெரியுமா?" என்று முல்லா மக்களைப் பார்த்துக் கேட்டார்.

"எங்களுக்குத் தெரியும்" என்று கூட்டத்தினர் பதிலளித்தனர்.

"நான் என்ன பேச இருக்கிறேன் என்பது முன்னதாகவே உங்களுக்குத் தெரிந்திருக்கும்போது,
மறுபடியும் எதற்காக நான் பேச வேண்டும்!" என்று கூறிவிட்டு முல்லா புறப்பட்டுச் சென்று விட்டார்.

இரண்டாவது தடவையும் முல்லா ஏமாற்றிச் சென்று விட்டதைக் கண்ட எதிர்ப்பாளர்கள் மூன்றாவது தடவை
எப்படியாவது முல்லாவை அழைத்து வந்து திட்டமிட்டு அவரை அவமானப்படுத்தி அனுப்பி விடுவது என்று முடிவு கட்டினார்கள்.

மூன்றாவது தடவையும் முல்லாவிடம் சென்று அவரை வற்புறுத்திக் கூட்டத்தில் பேச அவருடைய அனுமதியை வாங்கி விட்டார்கள்.

மூன்றாவது தடவையாக முல்லா மக்கள் முன்னால் மேடையில் ஏறி நின்றார்.

"அன்பார்ந்த மக்களே! இங்கே நான் என்ன பேசப் போகிறேன் என்பது பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா?"
என்று முல்லா வழக்கமான தனது கேள்வியைக் கேட்டார்.

"எங்களில் பாதிப் பேருக்கு நீங்கள் என்ன பேசப் போகிறீர்கள் என்பது பற்றித் தெரியும். பாதிப் பேருக்குத் தெரியாது"
என்று மக்கள் சாமர்த்தியமாகப் பதில் சொன்னார்கள்.

"அப்படியா? மிக்க மகிழ்ச்சி. நான் என்ன பேசப் போகிறேன் என்று தெரிந்து வைத்திருக்கும் மக்கள்
தெரியாதவர்களிடம் அதைப் பற்றிச் சொல்லி விடுங்கள். நான் எதற்காக வீணாகப் பேச வேண்டும்"
என்று கூறிவிட்டுக் கீழே இறங்கிச் சென்று விட்டார்.

மூன்றாவது முறையும் மிகச் சாதுரியமாகப் பேசி முல்லா தங்களை ஏமாற்றி விட்டதைக் கண்ட அந்த மக்கள் வெட்கமடைந்தார்கள்.

அதற்குப் பிறகு முல்லாவின் விஷயத்தில் எதிர்ப்புக் காண்பிப்பதை அவர்கள் அறவே விட்டு விட்டு
மற்ற எல்லோரையும் போலவே முல்லாவைப் புகழத் தொடங்கினார்கள்.

No comments:

Post a Comment