Thursday, 9 August 2012

கோகுலாஷ்டமி


இன்று கோகுலாஷ்டமி  ...

நம் பாரத நாட்டில் பல நூற்றாண்டுகளாக கலாசாரம், பண்பாட்டை பேணிக் காக்கும் வகையில் பல உற்சவங்கள், பண்டிகைகள், விரதங்கள், திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. இதன்மூலம் நம்மை வாழ வைக்கும் இறைவனுக்கும், இயற்கை சக்திகளுக்கும் நன்றியையும் பிரார்த்தனையும் சமர்ப்பிக்கின்றனர். இவ்வாறு நாடு முழுவதும் உற்சாகமாகவும் பக்திப் பெருக்குடனும் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று கிருஷ்ண ஜெயந்தி. இது ஸ்ரீஜெயந்தி, ஜென்மாஷ்டமி, கோகுலாஷ்டமி, ராச லீலா, தகிஅண்டி என பல பெயர்களில், பல வடிவங்களில் அவரவர் வழக்கப்படி இப்பண்டிகையை கொண்டாடி மகிழ்கின்றனர்.

5222 ஆண்டுகளுக்கு முன்பு பகுள அஷ்டமி, தேய்பிறை திதியில் ரிஷப லக்னம், ரிஷப ராசி, ரோகிணி நட்சத்திரத்தில் கிருஷ்ணாவதாரம் நிகழ்ந்ததாக சாஸ்திர அளவியல் கணக்குகள் மூலம் தெரிய வருகிறது. வேத காலத்தில் இருந்து வழிபட்டு வரப்படும் ஒரு வழிமுறைதான் ஸ்ரீநாராயண வழிபாடு. வேதத்தில் நாராயண சூக்தம் என்ற பகுதி உள்ளது. இதன்மூலம் கிருஷ்ண வழிபாடு மிகவும் தொன்மை வாய்ந்தது என்பதை அறியலாம். ஜோதிட சாஸ்திரத்தில் அஷ்டமி, நவமி ஆகிய இரண்டு திதிகள் மிகவும் பிரசித்தம். இந்த திதிகளில் எந்தவிதமான சுபகாரியங்கள், புதிய முயற்சிகளை தொடங்குவதில்லை என்பதை மக்கள் வழக்கமாக வைத்திருக்கின்றனர். இந்த நடைமுறைகூட நமது பழக்க வழக்கங்களில் ஏற்பட்டதுதான்.

மற்ற திதிகள்போல இந்த இரண்டும் நல்ல திதிகளே என்பதை உணர்த்தும் பொருட்டே ராமாவதாரத்தில் மகா விஷ்ணு, நவமி திதியில் புனர்பூச நட்சத்திரத்தில் அவதரித்த தினத்தை ஸ்ரீராமநவமி என்று கொண்டாடுகிறோம். கிருஷ்ணாவதாரத்தில் அஷ்டமி திதியில் ரோகிணி நட்சத்திரத்தில் ஸ்ரீ கண்ணனாக அவதரித்த தினத்தை கோகுலாஷ்டமி என்று கொண்டாடுகிறோம். ‘எல்லாவற்றிலும் நான் உறைகின்றேன்’ என்று பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் நமக்கு உணர்த்தியிருப்பதன் வெளிப்பாடே இது. இப்படி ஒவ்வொரு பண்டிகையிலும் பல சூட்சும கருத்துகள், தத்துவங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.

பகவான் கிருஷ்ணர் குழந்தை அவதாரமாக நம் வீட்டுக்கு வந்து அருள்பாலிப்பதே கோகுலாஷ்டமி பண்டிகையின் முக்கிய அம்சமும், நோக்கமும் ஆகும். அதனால்தான் கிருஷ்ண ஜெயந்தியன்று வீட்டை கழுவி சுத்தம் செய்து, அரிசி மாவால் கோலமிட்டு, மாவிலை தோரணங்களால் அழகுபடுத்துவர். வாசலில் தொடங்கி பூஜை அறை வரை குழந்தையின் கால் தடங்களை அரிசி மாவால் பதிப்பார்கள். ஆலிலை கிருஷ்ணன் தனது பிஞ்சு பாதங்களை அடிமேல் அடி வைத்து வீட்டுக்குள் தத்தித்தத்தி நடந்து வருவதாக ஐதீகம்.

கிருஷ்ணனின் படத்தை அலங்கரித்து, மாலைகளும், மலர்களும் சூடி அவனுக்கு பிடித்தமான வெண்ணெய், இனிப்பு வகைகள், சீடை, முறுக்கு, தேன்குழல், பொங்கல் போன்ற நைவேத்யங்கள் படைத்து அவரவர் குடும்ப வழக்கப்படி விரதம் இருந்து பூஜைகள் செய்து வழிபடுவர். அந்த நீல வண்ண கண்ணன் நம் இல்லம் வந்து அருள்புரிய மனதார வேண்டி பிரார்த்தனை செய்கின்றோம். இதைத்தான், சூடிக் கொடுத்த சுடர்க்கொடியான ஆண்டாள் தனது திருப்பாவையில் இவ்வாறு பாடியருளியுள்ளார்.

‘மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை
தாயை குடல்விளக்கஞ் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூவித்தொழுது
வாயினாற்பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவா னின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய்...’

என்று பாடியருளி, விஷ்ணுவை வழிபட்டால் எல்லா விதமான தடைகளும், பிழைகளும் தீயினில்பட்ட தூசாக அழியும் வேண்டும் என்று கூறியுள்ளார்.
பெரும்பாலும் ஆவணி மாதத்தில்தான் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படும். இந்த ஆண்டு ஆடி மாதத்தில் ஒன்றும் ஆவணி மாதத்தில் ஒன்றும் வருகிறது.

இன்று கோகுலாஷ்டமி கொண்டாடப்படுகிறது. ஒரு மாதம் கழித்து கிருஷ்ண ஜெயந்தி வருகிறது.

குழந்தை பாக்யம் இல்லாதவர்கள், புதுமண தம்பதியர், கருவுற்றிருக்கும் தாய்மார்கள் தங்களுக்கு புக்தி, யுக்தி, அறிவு ஆற்றல், ஆயுள், ஆரோக்யம் மிக்க சற்புத்திர பாக்யத்தை அருள வேண்டும் என்று அந்த ஆலிலைக் கண்ணனிடம் நெஞ்சுருகி பிரார்த்தனை செய்து கொண்டால் ஜாதகத்தில் உள்ள புத்திர தோஷம், புத்திர தடை போன்றவை நிவர்த்தியாகி சற்புத்திர பாக்கியத்தை பகவான் கிருஷ்ணன் அருள்வார்.

‘ஜோதிட முரசு’ மிதுனம் செல்வம்

Sunday, 5 August 2012

சங்கடஹர சதுர்த்தி


ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக்கொழுந்தினைப்
புந்தியில் வைத்து அடிபோற்று கின்றேனே.

விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்கு பல விரத தினங்கள் இருந்தாலும், விரதத்தில் மிகச் சிறந்ததும், பழமையானதும், சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்தால் அளவு கடந்த ஆனந்தத்தை அடையலாம். சகல சௌபாக்கியங்களையும் பெறலாம்.

ஒவ்வொரு மாதமும் வரும் "சங்கடஹர சதுர்த்தி" நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபிட்சமும், தடைகளின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும்.

"ஹர" என்ற சொல்லுக்கு அழித்தல் என்று பொருள். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தி திதியே சங்கடஹர சதுர்த்தி ஆகும். அதாவது கிருஷ்ணபக்ஷத்தில் வரும் சதுர்த்தி ஆகும்.

ஆவணி மாத தேய்பிறையில் வரும் சதுர்த்தி நாளில் இவ்விரதத்தை கடைப்பிடிக்க துவங்க வேண்டும். செவ்வாய் கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இதை "மகா சங்கடஹர சதுர்த்தி" என்று அழைக்கின்றனர்.

விரதத்தின் பலன்கள்:

இவ்விரதத்தை கடைப்பிடிப்பதால் நீண்ட நாட்களாக தீராமல் உள்ள நோய் தீரும். வாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு உள்ளாகிறவர்கள் நிலையான சந்தோஷத்தை அடைய முடியும். மிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்தி கூர்மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம், நன்மக்கட்பேறு என பலவிதமான நன்மைகளை அடைய முடியும். சனி தோஷத்திற்கு உள்ளாகிறவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்தால், சனியின் தாக்கம் பெரும்பகுதி குறையும்.

விரதம் இருப்பது எப்படி?

சங்கடஹர சதுர்த்தியன்று அதிகாலை நீராடி, பால் பழம் அருந்தி, உணவு உட்கொள்ளாமல் மாலை வரை கணநாதன் நினைவோடு உபவாசம் இருக்க வேண்டும்.

மாலை ஆலயத்திற்கு சென்று, விநாயகப் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனையில் கலந்துக் கொள்ள வேண்டும்.

அன்றைய தினம் ஆலயத்தை எட்டு முறை வலம் வருதல் வேண்டும். அனைத்து பூஜைகளும் முடிந்தவுடன் வீட்டிற்கு வந்து உபவாசத்தை முடித்துக் கொள்ள வேண்டும்.

விநாயகப் பெருமானுக்கு வெள்ளை எருக்கு, அருகம்புல் மாலை சாற்ற வேண்டும். சங்கடஹர சதுர்த்தி தினத்தில் விநாயகருக்குரிய,

"ஓம் தத் புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தன்னோ தந்தி : ப்ரசோதயாத்"

எனும் கணேச காயத்ரீ மந்திரத்தையும், தமிழில் விநாயகர் அகவலையும் பாடி தொந்திக் கணபதியை தியானித்தால் கூடுதல் பலன் உண்டு.