'சிரிக்கும் புத்தர்' என மக்களால் அழைக்கப் பட்ட 'ஹோட்டீய்' தான் ஒரு ஜென் குருவாக ஆக வேண்டும் என்றோ,சீடர்களைச் சேர்க்க வேண்டுமென்றோ, நினைக்கவே இல்லை.
தானும் சிரித்து, மற்றவர்களையும் சிரிக்க வைத்து, அதையே ஒரு தியானம் போலச்
செய்து வந்தார் அவர்.
எப்போதும் ஒரு பை தோளில் தொங்கிக் கொண்டிருக்கும்.அதில் நிறைய இனிப்பு பண்டங்கள் இருக்கும்.இனிக்க இனிக்கப் பேசித் தம்மிடம் வரும் குழந்தைகளுக்கு இனிப்புகளை வாரி வழங்குவது அவர் வழக்கம்குழந்தைகள் அவருடன் சேர்ந்து கும்மாளமிட்டு கூத்தடிப்பார்கள்.ஆனந்தமாய் சிரித்து மகிழ்வார்கள்.
இன்னொரு பழக்கமும் அவரிடம் இருந்தது.ஜென் தொடர்பானவர் யாரைப் பார்த்தாலும், கை நீட்டி, "ஒரு காசு கொடு!" என்று கேட்பார்.
யாராவது அவரிடம், "ஏன் சுவாமி, கோயிலுக்குப் போய் அமர்ந்து உபதேசம் செய்வது
தானே" என்று கேட்டால், "ஒரு காசு குடு!" என்று தான் சொல்வார்.
ஒருமுறை அவர் தெருக் குழந்தைகளுடன் சிரித்து விளையாடிக் கொண்டிருந்த போது, அந்தப் பக்கமாக வந்த ஜென் குரு ஒருவர், அவரைப் பார்த்து, "ஜென்னின் முக்கியத்துவம் என்ன? " என்று கேட்டார்.
ஹோட்டீய், உடனே தம் தோளிலிருந்த பையைத் தூக்கித் தரையில் போட்டுவிட்டு அமைதியாக நின்றார்.
உடனே அந்த குரு, "ஜென்னின் நடைமுறை என்ன?" என்று கேட்டார்.
ஹோட்டீய், கீழே கிடந்த பையை எடுத்து தோளில் போட்டுக் கொண்டு, திரும்பிப் பார்க்காமல் நடந்து சென்றார்.
அதுதான் அவர் பதில்.
"ஒரு காசு குடு!" என்பது உண்மையில் பிச்சை கேட்பது அல்ல."எனக்கு கொடுக்க நீ என்ன வைத்திருக்கிறாய்?" என்று பொருள்."உன்னிடம் இருப்பதை அனைவரிடமும் பங்கு போட்டுக் கொள்" என்று பொருள்.
தோளில் உள்ள பை தான் "உலகம்". 'நாம் உலகைச் சுமந்தே தீர வேண்டி வருகிறது.ஆனால், எந்த நேரத்திலும் அதைத் தூக்கி எறியத் தயாராக இரு' என்பதை செயலில் காட்டினார் ஹோட்டீய்.
ஓயாமல் சிரிக்கும் புத்தர், தத்துவ விசாரணை வந்த போது 'மெளன குரு' ஆனார்.
"உலகு நின்னொடு ஒன்றிநிற்க வேறுநிற்றி" --திருமழிசை ஆழ்வார்.
No comments:
Post a Comment