Thursday, 29 September 2011

பாத்திரங்கள் குட்டி போட்ட கதை - Part8


விஜய நகரத்தில் ஒரு சேட் வசித்து வந்தான். அவன் வட்டித் தொழில் நடத்தி வந்தான். மக்களிடம் அநியாயவட்டி வாங்கி வந்தான். அதாவது ரூபாய்க்கு ஐம்பது பைசா வட்டி இதனால் வட்டிக்கு அவனிடம் பணம் வாங்கும் மக்கள் அவதியுற்றனர்.

இதையறிந்த தெனாலிராமன் அந்த சேட்டை நயவஞ்சகமாக திருத்த திட்டம் தீட்டினான்.

அந்த சேட் பாத்திரங்களையும் வாடகைக்கு விடுவதுண்டு. ஒரு நாள் தெனாலிராமன் சேட்டைச் சந்தித்து "தன் மகனுக்குக் காதணி விழா நடைபெறுவதாகவும் அதற்குச் சில பாத்திரங்கள் வாடகைக்கு வேண்டுமென்றும் விழா முடிந்ததும் கொண்டு வந்து தருவதாகவும்" கூறினான்.

அதன்படியே சேட்டும் பாத்திரங்களை தெனாலிராமனுக்குக் கொடுத்தான். சில நாள் கழித்து தெனாலிராமன் அந்தப் பாத்திரங்களோடு சில சிறிய பாத்திரங்களையும் சேர்த்துக் கொடுத்தான்.

இதைப் பார்த்த சேட் "நான் பெரிய பாத்திரங்கள் மட்டும் தானே கொடுத்தேன். சிறிய பாத்திரங்களை நான் கொடுக்கவில்லையே......... அவற்றையும் ஏன் கொடுக்கிறாய்" என்று கேட்டான்.

அதற்குத் தெனாலிராமன் "உமது பாத்திரங்கள் "குட்டி" போட்டன. அவற்றையும் உம்மிடம் கொடுப்பது தானே முறை. ஆகையால் தான் அவற்றையும் சேர்த்து எடுத்து வந்தேன்" என்றான்.

இவன் சரியான வடிகட்டியான முட்டாளாக இருப்பான் போல என்று எண்ணி "ஆமாம் ஆமாம். இவற்றை நான் உன்னிடம் கொடுக்கும் போது சினையாக இருந்தன. ஆகையால் தான் குட்டி போட்டுள்ளன" என்று அனைத்துப் பாத்திரங்களையும் பெற்றுக் கொண்டான். சில மாதங்கள் கழித்து "தன் வீட்டில் விசேடம் நடைபெற இருப்பதாகவும் அதற்கு மன்னரும் அரசுப் பிரதானிகளும் கலந்து கொள்ள இருப்பதாகவும் அதற்கு தங்கப் பாத்திரங்களும் வெள்ளிப்பாத்திரங்களும் வேண்டும்" என்று கேட்டான்.

இவனுடைய நாணயத்தை அறிந்த சேட் பொன் மற்றும் வெள்ளிப் பாத்திரங்களைக் கொடுக்க சம்மதித்தான். கொடுக்கும் போது இவை கர்ப்பமாக இருக்கின்றன. விரைவில் குட்டிபோடும். இவற்றின் குட்டிகளையும் சேர்த்துக் கொண்டு வா என்றான்.

"சரி" என்று ஒப்புக் கொண்டு தங்க வெள்ளிப் பாத்திரங்களைத் தன் வீட்டிற்கு எடுத்துச் சென்றான். சில மாதங்கள் ஆயின. பாத்திரங்கள் திரும்ப வருவதாகக் காணோம்.

ஆகையால் சேட் நேரே தெனாலிராமன் வீட்டுக்குச் சென்றான். தெனாலிராமனைச் சந்தித்து "இவ்வளவு நாட்களாகியும் ஏன் பாத்திரங்களைத் திரும்ப கொண்டு வந்து தரவில்லை" என மிகக் கோபமாக கேட்டான்.

அதற்கு தெனாலிராமன் "சொன்னால் நீங்கள் வருத்தப்படுவீர்கள் என்று தான் தங்களைப் பார்க்க வரவில்லை. பாத்திரங்கள் கர்ப்பமாக இருந்தனவா............... பிரசவம் கஷ்ட்மாக இருந்தது அதனால் அனைத்துப் பாத்திரங்களும இறந்து விட்டன" எனத் தெரிவித்தான்.

இதைக் கேட்ட சேட் "யாரிடம் விளையாடுகிறாய்? பாத்திரங்கள் சாகுமா?" எனக் மிகக் கோபமாகக் கேட்டான். அதற்குத் தெனாலிராமன் "பாத்திரங்கள் குட்டி போடும் போது அவை ஏன் இறக்காது" என்று கேட்டான்.

"என்னுடன் வா மன்னரிடம் முறையிடுவோம் அவரின் தீர்ப்புப்படியே நடந்து கொள்வோம்" என்றதும்

வேக, வேகமாக அவ்விடத்தை விட்டு நகன்றான் சேட்.

இருப்பினும் தெனாலிராமன் அவனை விடாது மன்னரிடம் இழுத்துச் சென்று மக்களிடம் அநியாய வட்டி வாங்குவது பற்றி முறையிட்டான்.

எல்லா விவரங்களையும் கேட்டறிந்த மன்னர் "பாத்திரங்கள் குட்டி போடும் என்றால் அவை பிரசவத்தின் போது ஏன் இறக்கக் கூடாது? உன் பேராசைக்கு இது ஒரு பெரு நஷ்டமே ஆகையால் இனிமேலாவது மக்களிடத்தில் நியாயமான வட்டி வாங்கு" என புத்திமதி கூறி அவனை அனுப்பி வைத்தார் மன்னர்.

தெனாலிராமனின் புத்திசாலித் தனத்தை மன்னர் மனமாரப் பாராட்டி பரிசுகள் வழங்கினார்.

கூன் வண்ணான் - Part 8

ஒரு போலிச்சாமியார் ஒருவன் விஜயநகரத்துக்கு வந்து சேர்ந்தான். அவன் மக்களுக்கு போதை மருந்தை விற்று பணத்தை ஏராளமாக சம்பாதித்துக் கொண்டிருந்தான். போதை மருந்தை உட்கொண்ட மக்கள் பலர் பைத்தியம் ஆனார்கள். பலர் மாண்டார்கள்.

இச்செய்தி தெனாலிராமனுக்கு எட்டியது. ஆகையால் போலிச் சாமியாரைத் தொலைத்துக் கட்ட முடிவு செய்தான். அதன்படியே சாமியாரை சந்தித்து அவனுடன் நட்புக் கொண்டான். தகுந்த சமயம் பார்த்து சாமியாரைக் கொன்று விட்டான்.

இச்செய்தி மன்னனுக்கு எட்டியது. தெனாலிராமனுக்கு ஆள் அனுப்பி அழைத்துவரச் செய்தார். ஏன் சாமியாரைக் கொன்றாய் என்று கேட்டார். அதற்குப் போதை மருந்தால் பலர் பைத்தியம் பிடித்து மாண்டனர். ஆகையால் தான் கொன்றேன் என்றான்.

போலிச்சாமியார் தவறு செய்து இருந்தாலும் அவனைக் கொல்ல உனக்கு ஏது அதிகாரம்? அதை என்னிடமல்லவா தெரிவித்திருக்க வேண்டும். அப்படி தெரிவித்திருந்தால் நானே அந்தப் போலிச் சாமியாருக்குத் தக்க தண்டனை கொடுத்திருப்பேன்.

இவ்விஷயத்தில் நீ தன்னிச்சையாக செயல் பட்டதற்கு உனக்கு மரணதண்டனை விதிக்கிறேன் என மன்னர் தீர்ப்புக் கூறினார்.

உடனே தன் ஆட்களை அழைத்து ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் ஒரு குழியை வெட்டி அதில் தெனாலிராமனை கழுத்தளவு புதைத்து யானையை விட்டு தலையை இடறுமாறு பணித்தார்.

அவ்வாறே தெனாலிராமனும் குழியில் கழுத்தளவு புதைக்கப்பட்டான். பின் யானையைக் கொண்டு வர பணியாளர்கள் சென்று விட்டனர்.

அப்போது சிலகழுதைகளை ஓட்டிக்கொண்டு ஒரு கூன் வண்ணான் வந்து கொண்டிந்தான்.

ஒரு மனிதன் பூமிக்குள் கழுத்தளவு புதையுண்டு இருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டான். பின் தெனாலிராமனிடம் வந்து ஐயா, தாங்கள் ஏன் இவ்வாறு புதையுண்டு இருக்கிறீர்கள் என்று கேட்டான்.

அதற்கு தெனாலிராமன் எனக்கு மிக நீண்ட நாட்களாகவே முதுகு கூன் விழுந்து விட்டது. அதனால் மிகவும் சிரமப்பட்டு நடந்து வந்தேன். நேற்று ஒரு வைத்தியரை ஆலோசனை கேட்டேன். அவர்தான் ஒருநாள் முழுவதும் இவ்வாறு இருந்தால் கூன் நிமிரிந்து விடும் என்று சொன்னார். நான் குழியில் புதையுண்டு ஒருநாள் ஆகப் போகிறது. ஆகையால் மண்ணைத் தோண்டி என்னை மேலே எடு என்றான்.

அதன்படியே கூன் வண்ணானும் மண்ணைத் தோண்டி தெனாலிராமனை மேலே தூக்கி விட்டான். இப்போது தெனாலிராமனைப் பார்த்தான். அவன் முதுகு கூன் இல்லாமல் நேராக நிமிர்ந்து நின்றான். இதை உண்மை என்று நம்பிய கூன் வண்ணான் அதே குழியில் அவனைக் கழுத்தளவு புதைக்கச் சொன்னான். தெனாலிராமனும் கூன் வண்ணானை அவ்வாறே செய்தான்.

உடனே தெனாலிராமன் அவ்விடத்தைவிட்டு ஒரே ஓட்டமாக ஓடி விட்டான். சிறிது நேரத்தில் பணியாட்கள் யானையுடன் அங்கு வந்தனர். யானையை விட்டு குழியில் புதையுண்ட மனிதனின் தலையை இடறச் செய்தனர். கூன் வண்ணான் தலை சின்னா பின்னமாகியது.

அச்சமயத்தில் தன் அரண்மனை அதிகாரிகளும் போலிச் சாமியாரைக் கொன்றது நியாம்தான் அதனால் தெனாலிராமனைக் கொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர்.

அந்நேரத்தில் பணியாட்களும் அங்கு வந்து "தெனாலிராமனின் தலையை யானையை விட்டு இடறிவிட்டோம்" என்று தெரிவித்தனர்.

தெனாலிராமனின் மரணத்துக்கு மன்னர் வருந்திக் கொண்டிருக்கையில் மன¢னர் முன் தெனாலிராமன் தோன்றினான். தெனாலிராமனைக் கண்ட மன்னர் மகிழ்ந்தார். நீ யானையால் இறந்ததாகப் பணியாட்கள் தெரிவித்தார்களே........ பின் எப்படி உயிரோடு வந்தாய் என்று வினவினார்.

அதற்குத் தெனாலிராமன் நடந்தவற்றை விவரமாகக் கூறினான். மன்னரும் அவனுடைய சாமர்த்தியத்துக்கு மனமாரப் பாராட்டி பரிசு வழங்கினார்.

தெனாலிராமனின் மறுபிறவி - Part 7

தெனாலிராமன் கொலை செய்யப்பட்ட செய்தி ஊர் முழுவதும் தீ போல் பரவியது.

அப்போது சில அந்தணர்கள் மன்னரைச் சந்தித்தனர். நியாயமாக ஒரு பார்ப்பனரைக் கொன்றது மிகக்கொடிய பாவமாகும். அவனது ஆவி தங்களுக்கும் நாட்டுக்கும் கேடு விளைவிக்கும் என்றனர். இதைக்கேட்ட மன்னர் கலங்கினார்.

இதற்குப் பரிகாரம் என்னவென்று மன்னர் கேட்டார். அதற்கு அந்தணர்கள் அவன் ஆவி சாந்தி அடைய அமாவாசை அன்று நள்ளிரவு சுடுகாட்டிற்குச் சென்று பூஜை செய்தால் நலம் என்றனர்.

உடனே மன்னர் ராஜகுருவை அழைத்து அமாவாசையன்று நள்ளிரவு சுடுகாட்டில் தெனாலிராமன் ஆவிக்கு பூஜை செய்ய உத்தரவு விட்டார்.

இதைக்கேட்ட ராஜகுரு நடுநடுங்கினார். நடுகாட்டில் நள்ளிரவு நேரத்தில் பூஜை செய்வது என்றால் எனக்குப்பயமாக இருக்கிறது என்றார். அப்படியென்றால் துணைக்கு சில புரோகிதர்களையும் அழைத்துச் செல்லுங்கள் என மிகக் கண்டிப்புடன் மன்னர் கட்டளையிட்டார்.

மன்னர் கட்டளையை மீற முடியாத ராஜகுரு பூஜைக்கு ஒத்துக்கொண்டார்.

அமாவாசை அன்று நள்ளிரவு புரோகிதர்கள் சகிதம் சுடுகாட்டிற்குச் சென்று பூஜை நடத்தினார்கள். ராஜகுரு பூஜையின் இறுதியில் அங்கிருந்த மரத்தை மேல் நோக்கிப் பார்த்து தெனாலிராமனின் ஆவியாகிய பிரம்மராட்சசனே என்று பலத்த குரலில் அழைத்து எங்களுக்கு ஒரு தீங்கும் செய்யாதே.......... உன் ஆன்மா சாந்தியடைய பூஜை செய்துள்ளோம் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே மரத்திலிருந்து ஓர் உருவம் பயங்கர சத்தத்தோடு கீழே குதித்தது.

இதைப்பார்த்த ராஜகுருவும் புரோகிதர்களும் பயத்தால் நடு நடுங்கி அலறி அடித்துக்கொண்டு அரண்மனைக்கு ஓடினார்கள்.

அப்போது நடுநிசி நேரமாதலால் மன்னர் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தார். இருப்பினும் மன்னரை எழுப்பினார். நடந்தவற்றை நடுக்கத்தோடு கூறினார்.

இதைக் கேட்ட மன்னர் இதற்கு பரிகாரம் காண ஆழ்ந்த யோசனை செய்தார். பின் ஒரு முடிவுக்கு வந்தார்.
தெனாலிராமன் ஆவியாகிய பிரம்மராட்சசனை ஒழித்துக்கட்டி நாட்டிற்கு நன்மை உண்டாகச் செய்பவர்களுக்கு ஆயிரம் பொன் பரிசளிக்கப்படும் என்று பறைசாற்றி அறிவிக்கச் செய்தார்.

இதைக் கேட்ட நாட்டு மக்கள் யாரும் பிரம்மராட்சசனை ஒழித்துக்கட்ட முன் வரவில்லை.

சில நாட்களுக்குப்பின் ஒரு துறவி மன்னரைக்காண வந்தார். மன்னரும் அந்தத்துறவியிடம் தெனாலிராமனின் ஆவியாகிய பிரம்ம ராட்சசனை ஒழித்துக் கட்டும்படி வேண்டினார்.

இதைக்கேட்ட துறவியர், மன்னர் பெருமானே, கவலையை விடுங்கள், பிரம்மராட்சசனை என்னல் முடிந்தளவு ஒழித்துக்கட்ட முயற்சிக்கிறேன். இது நிரந்தரமான ஏற்பாடாக இருக்காது. மீண்டும் தெனாலிராமன் உயிர் பெற்று வந்தால் தான் பிரம்மராட்சசனுடைய அட்டகாசம் சுத்தமாக குறையும் என்றார்.

அப்படியானால் தங்களால் மீண்டும் தெனாலிராமனை உயிர்ப்பிக்க முடியுமா? என வினவினார் மன்னர். ஓ.......... தாராளமாக என்னால் முடியும் என்றார் துறவு.

மன்னர் மகிழ்ந்து தாங்கள் தெனாலிராமனை உயிர்ப்பித்துக் காட்டுங்கள். அதுவே எனக்குப் போதும் என்றார்.

உடனே துறவியார் தான் அணிந்திருந்த வேடத்தைக் கலைத்தார். நான்தான் தெனாலிராமன். துறவி வேடத்தில் வந்தேன் என்றார்.

இதையறிந்த மன்னர் மகிழ்ந்து தெனாலிராமனைக் கட்டித் தழுவிக் கொண்டார். பின் ஆயிரம் பொன் பரிசளித்தார்.

ராஜகுருவை பழிக்குப் பழி வாங்குதல் - Part 6

ஒரு நாள் அதிகாலை நேரம் ராஜகுரு குளத்துக்குக் குளிக்கச் சென்றார். அப்போது அவரை அறியாமலேயே தெனாலிராமன் பின் தொடர்ந்தான். குளக்கரையை அடைந்ததும் ராஜகுரு துணிமணிகளை எல்லாம் களைந்து கரையில் வைத்துவிட்டு நிர்வாணமாக குளத்தில் இறங்கி குளித்துக் கொண்டிருந்ததார். மறைந்திருந்த தெனாலிராமன் ராஜகுருவின் துணிமணிகளை எடுத்துக்கொண்டு மறைந்து விட்டான்.

குளித்து முடித்து கரையேறிய ராஜகுரு துணிமணிகளைக் காணாது திடுக்கிட்டார். உடனே தெனாலிராமன் அவர் முன் தோன்றினான்.

தெனாலிராமன் எனது துணிமணிகளைக் கொடு என்று கெஞ்சினார். அதற்குத் தெனாலிராமனோ உன் துணிமணிகளை நான் பார்க்கவில்லை. நானும் குளிக்கவே இங்கு வந்துள்ளேன். என்னிடம் வம்பு செய்யாதீர்கள் என்றான்.

ராமா........ என் துணிமணிகளைக் கொடுத்துவுடு. இன்னும் சிறிது நேரத்தில் நன்கு விடியப்போகிறது. இக்குளத்துக்கு பெண்கள் குளிக்க வந்து விடுவார்கள். உடனே என் துணிமணிகளைக் கொடு என்று மீண்டும் மீண்டும் கெஞ்சினார்.

அவர் கெஞ்சுதலைக் கேட்ட தெனாலிராமன் என் நிபந்தனைக்கு உட்பட்டால் உம் துணிமணிகளைத் தருகிறேன். இல்லையேல் தர முடியாது என்று கூறி விட்டான்.
என்னை அரண்மனை வரை உன் தோளில் சுமந்து செல்ல வேண்டும். அப்படியென்றால் தருகிறேன், இல்லையென்றால் தரமுடியாது என்று கூறி விட்டான்.

தெனாலிராமன் மிகப் பொல்லாதவன் என அறிந்து கொண்ட ராஜகுரு சம்மதித்தார். பின் துணிமணிகளை ராஜகுருவிடம் கொடுத்தான். உடையணிந்து கொண்ட ராஜகுரு தெனாலிராமனை தன் தோள் மீது சுமந்து சென்று கொண்டிருந்தார். இதை ஊர் மக்கள் அனைவரும் வேடிக்ககை பார்த்துக் கொண்டிருந்தனர்.

இதை மன்னர் கிருஷ்ண தேவராயரும் உப்பரிகையிலிருந்து பார்த்து விட்டார். உடனே தனது காவலாளிகட்கு உத்தரவிட்டார். அதாவது தோள் மேல் இருப்பவனை நன்கு உதைத்து என்முன் நிற்பாட்டுங்கள் என்று.

உப்பரிகையிலிருந்து மன்னன் பார்த்து விட்டதை அறிந்த தெனாலிராமன், அவர் தோளிலிருந்து இறங்கி அவர் பாதங்களில் வீழ்ந்து வணங்கினான் ஐயா என்னை மன்னியுங்கள். ராஜகுருவை அவமானப்படுத்திய பாவம் என்னைச் சும்மாவிடாது. ஆகையால் என் தோள் மீது தாங்கள் அமருங்கள். நான் உங்களை சுமந்து செல்கிறேன் என்றான். அவன் பேச்சை உண்மையென்று நம்பிய ராஜகுரு தெனாலிராமன் தோள்மீது உட்கார்ந்து கொண்டான். தெனாலிராமன் ராஜகுருவை சுமந்து சென்று கொண்டிருக்கையில் காவலாட்கள் அருகில் வந்துவிட்டனர். ராஜகுருவை நையப்புடைத்து மன்னர் முன் நிற்பாட்டினார்கள்.

இதைப் பார்த்த மன்னர் ராஜகுருவை ஏன் அடித்தீர்கள் என வினவினார் அதற்கு காவலாட்கள் தெனாலிராமன் தோள் மீது அமர்ந்து இருந்தவர்தான் இந்த ராஜகுரு. தாங்கள் தானே தோள் மீது அமர்ந்திருப்பவரை அடித்து உதைக்கச் சொன்னீர்கள். அதன்படியே செய்துள்ளோம் என்றனர்.

மன்னர் ராஜகுருவை அழைத்து விவரத்தைக் கேட்டார். ராஜகுருவும் தன் தவறை உண்மையென்று ஒத்துக்கொண்டார்.
தெனாலிராமன் செய்கை மன்னருக்கு நகைச்சுவையுண்டு பண்ணினாலும் அவன் செய்த தவறுக்கு தக்க தண்டனை வழங்க விரும்பினார்.

ஆகையால் தெனாலிராமனை அழைத்து வர அரண்மனை காவலாட்களை அனுப்பினார். காவலாட்களும் தெனாலிராமனை சிறிது நேரத்தில் மன்னர் முன் கொண்டு வந்து நிற்பாட்டினார்கள்.

தெனாலிராமன் நீ ராஜகுருவை அவமானப்படுத்திவிட்டாய். மேலும் அவரை உதையும் வாங்க வைத்துவிட்டாய். இது மன்னிக்க முடியாத குற்றமாகும். ஆகவே உன்னை சிரத்தேசம் செய்ய உத்தரவு இடுகிறேன் என்றார் மன்னர்.

இதைக் கேட்ட தெனாலிராமன் தன் உயிருக்கு ஆபத்து வந்ததை எண்ணி வருந்தினார். அவன் தன் இஷ்ட தேவதையான காளி தேவியை தன்னைக் காப்பாற்றும்படி மனதிற்குள் துதித்தான்.

காவலாட்களும் அவனை கொலை செய்ய அழைத்துச் சென்றார்கள். அப்போது அவர்களிடம் தன்னை விட்டுவிடும்படியும் பணமும் தருவதாகவும் வேண்டினான். காவலாட்களும் பணத்தைப் பெற்றுக் கொண்டு அவனது வேண்டுகோளுக்கு இணங்கி கொலை செய்யாமல் விட்டு விட்டனர். இனி இவ்வூரில் இருக்காதே, வேறு எங்காவது போய்விடு என்று சொன்னார்கள். அவர்களிடம் அப்படியே செய்கிறேன் என்று சொல்லிய தெனாலிராமன் தன் வீட்டிலேயே ஒளிந்து கொண்டான்.

காவலாட்களும் ஒரு கோழியை அறுத்து அதன் இரத்தத்தை வாளில் தடவி மன்னரிடம் தெனாலிராமனை கொலைசெய்து விட்டோம் என்று சொல்லி விடடனர். மன்னரும் இதை உண்மை என்று நம்பினார்.

அரசவை விகடகவியாக்குதல் - Part 4

அன்று கிருஷ்ணதேவராயரின் அரண்மனை அமர்களப்பட்டுக் கொண்டிருந்தது. அறிஞர் பெருமக்களும் மற்றவர்களும் மண்டபத்தில் குழுமியிருந்தனர். தெனாலிராமனும் ஓர் ஆசனத்தில் அமர்ந்தான்.

மன்னர் கிருஷ்ண்தேவராயர் வந்தவுடன் சபை கூடியது. வேற்றூரிலிருந்து வந்த தத்துவஞானியை விழாவைத் தொடங்கி வைத்து விவாத மன்றத்தை ஆரம்பிக்கச் சொன்னர்.

தத்துவ ஞானியும் ஏதேதோ சொன்னார். ஒருவருக்கும் ஒன்றும் விளங்கவில்லை. அவர் பேச்சின் இறுதியில் மாய தத்துவம் பற்றி நீண்ட நேரம் பேசினார். அதாவது நாம் கண்ணால் காண்பதும் மாயை, உண்பதும் மாயை என்று சொன்னர்.

இதைக்கேட்ட அறிஞர்கள் முதல் அரசர்வரை எவருமே வாய் திறக்கவில்லை. ராஜகுரு மௌனமாகி விட்டார்.

சுற்றும் முற்றும் பார்த்த தென்னாலிராமன் எழுந்து நின்றான்.

தத்துவஞானியைப் பார்த்து, "ஐயா தத்துவ ஞானியாரே ஏன் பிதற்றுகிறீர் நாம் உண்பதற்கும் உண்பதாக நினைப்பதற்கும் வித்தியாசமே இல்லையா?" எனக் கேட்டான்.

அதற்கு தத்துவஞானி வித்தியாசம் இல்லை என்றான்.

அதை சோரிக்க தெனாலிராமன் அரசரிடம் ஒருவிருந்துக்கு ஏற்பாடு செய்யச் சொன்னார். விருந்து ஏற்பாடு ஆயிற்று.

அனைவரும் பந்தியில் அமர்ந்து சாப்பிடத் தொடங்கினார். தத்துவஞானிக்கு உணவு பரிமாறியும் சாப்பிடக்கூடாது எனக் கட்டடை இட்டுவிட்டனர். அதனால் தத்துவஞானி தன் தவறை உணர்ந்தான். இதைப்பார்த்த அரசர் தெனாலிராமனின் திறமையைப் பாராட்டி பொன் பரிசளித்தது மட்டுமில்லாமல் அன்று முதல் அவரது அரசவை விகடகவியாக்கினார்.

ராஜ குருவை சந்தித்தல் - Part 5

பலவித இடையூறுகளுக்கிடையே தெனாலிராமன் ராஜகுருவை அவரது இல்லத்தில் சந்தித்தான்.

தெனாலிராமனைப் பார்த்ததும் ராஜகுரு அதிர்ச்சி அடைந்தார். யாரப்பா நீ? உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். இதைக் கேட்ட தெனாலிராமன் பதறினார்.

ராஜகுருவே நான்தான் தெனாலிராமன். தாங்கள் மங்களகிரிக்கு வந்த போது நண்பர்கள் ஆனோம். நான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தாங்கள் அரசவையில் என்னைச் சேர்த்து விடுவதாகச் சொன்னீர்கள். ஆள் அனுப்பிய பின் வா என்றீர்கள். பல மாதங்களாக தங்களிடமிருந்து ஆள் வராததால் தான் நான் நேரில் வந்துள்ளேன். தயவு செய்து என்னை பற்றி மன்னரிடம் சொல்லி அரசபையில் சேர்த்து விடுங்கள் என்று வேண்டினான்.

உன்னை யாரென்றே எனக்குத் தெரியாதப்பா...... மரியாதையாக வெளியே போ,,,,,,,,,, இல்லையேல் அவமானப்படுவாய் என்று விரட்டினார்.

வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட தெனாலிராமன் பழிக்குப்பழி வாங்கத் துடித்தான். காளி மகாதேவியைத் துதித்தான்.

ராஜகுருவின் நட்பு ஏற்படுதல் - Part 3

விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவராயர் அரண்மனையில் தாத்தாச்சாரியார் என்பவர் ராஜகுருவாக இருந்தார்.

தெனாலி கிராமத்துக்கு அருகில் உள்ள ஊர் மங்களகிரி அவ்வூருக்கு ராஜகுரு தாத்தாச்சாரியார் வந்திருந்தார்.

அவ்வூர் மக்கள் ராஜகுருவை வணங்கி ஆசி பெற்றுச் சென்றனர். இதையறிந்த தெனாலிராமன் ராஜகுருவை சந்தித்தான். தன்னுடைய விகடத் திறமையாலும் பேச்சாற்றலாலும் ராஜகுருவின் "சிஷ்யன் ஆனான். ராஜகுருவின் நட்பு கிடைத்த பின் தன் குடும்பம் மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பதாகவும் அதனால் மன்னர் கிருஷ்ணதேவராயரிடம் சிபாரிசு செய்து அரண்மனையில் வேலை கிடைக்க ஏற்பாடு செய்யுமாறும் வேண்டிக் கொண்டான். அவன் வேண்டுகோள்படியே ராஜகுருவும் அரண்மனையில் வேலையில் சேர்த்து விடுவதாக வாக்களித்தார்.

நான் போய் ஆள் அனுப்புகிறேன். அதன் பின் நீ வா என்று சொல்லி விஜயநகரத்துக்குச் சென்று விட்டார்.

தெனாலிராமன் மிகக் கெட்டிக்காரனாக இருக்கிறான். இவனை மன்னரிடம் சொல்லி அரண்மனையில் விகடகவியாக
சேர்த்துவிட்டால் நம் வேலை போய்விடும் என்று எண்ணிய ராஜகுரு தெனாலிராமனுக்கு ஆள் அனுப்பவே இல்லை.

தெனாலிராமனும் ராஜகுருவிடமிருந்து ஆள் வரும் வரும் என்று எதிர்பார்த்து பல மாதங்கள் ஓடிவிட்டன. எந்தத் தகவலும் அவனுக்குக்கிட்டவில்லை. ஆகையால் விஜயநகரம் சென்று ராஜகுருவை நேரில் பார்த்து அரண்மனையில் சேர்ந்து விட வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டான்.

அதன்படியே மனைவி, மகனுடன் பல நாட்கள் நடந்து விஜய நகரம் வந்து சேர்ந்தான்.

காளி மகாதேவியின் அருள் கிடைத்தல் - Part 2

அந்த ஆண்டு ஆந்திராவில் மழையே பெய்யவில்லை. அதனால் ஏரி, குளம், குட்டை அனைத்தும் வறண்டு கிடந்தன. அதனால் விவசாயம் நடைபெறவில்லை. அதனால் தண்ணீர்ப் பஞ்சமும் உணவுப் பஞ்சமும் தலை விரித்தாடியது.

அப்போது அக்கிராமத்துக்கு ஒரு சாமியார் வந்து சேர்ந்தார். அவர் வந்து சேர்ந்த அன்றே பலமான மழை பெய்ய தொடங்கியது. ஆறு, ஏரி, குளம், குட்டை எல்லாம் நிரம்பிவிட்டன.

சாமியார் வந்ததன் காரணமாகத்தான் நல்ல மழை பெய்துள்ளது என்று எண்ணிய அவ்வூர் மக்கள் சாமியாரை வாயாரப் புகழ்ந்து அவரை வணங்கி ஆசி பெற்றனர்.

இதை பார்த்துக் கொண்டிருந்த தெனாலி ராமன் கலகலவென நகைத்துக் கொண்டிருந்தான். இதைப் பார்த்த சாமியார், தெனாலிராமனை அருகில் அழைத்து தம்பி நீ ஏன் சிரிக்கிறாய்? என வினவினார்.

அதற்கு தெனாலிராமன் "மழை பெய்வதும் பெய்யாமல் போவதும் இறைவன் செயலே. அப்படியிருக்க தாங்கள் வந்தவுடன் தங்கள் மகிமையால்தான் மழை பெய்துள்ளது என்று மக்கள் எண்ணுவது ஒரு பனை மரத்தில் நன்கு பழுத்துள்ள பனம் பழம் கீழே விழும் நேரத்தில் காக்கை உட்கார்ந்ததாம். காக்கை உட்கார்ந்ததும் பனம் பழம் கீழே விழுந்ததாம். அப்போது அதை பார்த்தவர்கள் காக்கை உட்கார்ந்ததனால் தான் பனம் பழம் விழுந்தது என்று சொன்னார்களாம். அது போலவே இவ்வூர் மக்கள் செயலும் இருந்ததால் தான் சிரித்தேன்" என்றான் தெனாலிராமன்.

இதைக் கேட்ட சாமியார் உண்மையை உணர்ந்து அவன் மேல் கோபப்படவில்லை. தம்பி உன்னிடம் திறமை இருக்கிறது. நீ காளி மகாதேவியின் அருளைப் பெற்றால் பிற்காலத்தில் புகழ் பெற்று விளங்குவாய் என்று நல்லாசி கூறினார்.

இதைக்கேட்ட தெனாலிராமன் காளிமகாதேவியின் சந்நிதியை அடைந்தான். அவளின் திருஉருவத்தைக் காண பலவாறு வேண்டி தவம் இருந்தான். கடைசியில் தெனாலிராமன் முன் தோன்றினாள் காளிதேவி. அவளது உருவத்தைப் பார்த்துப் பயப்படுவதற்குப் பதிலாக பலமாக சிரித்தான். அவன் சிரிப்பதைப் பார்த்த காளிதேவி, என் கோர உருவத்தைப் பார்த்து எல்லோரும் அஞ்சுவார்கள். நீயோ பலமாகச் சிரிக்கிறாய்? ஏன் என்று வினவினாள்.

அதற்கு தெனாலிராமன் எனக்கு சளிபிடித்தால் என்னுடைய ஒரு மூக்கை சிந்துவதற்கு என்னுடைய இரண்டு கைகளே போதவில்லை. அப்படியிருக்க உனக்கு ஆயிரம் தலை உள்ளது. ஆனால் கைகள் இரண்டே பெற்றுள்ளாய். உனக்கு சளிபிடித்தால் ஆயிரம் மூக்கையும் எப்படி இரண்டு கைகளால் சிந்துவாய் என்று எண்ணினேன். அதனால் எனக்கு சிரிப்பு வந்தது என்றான். இதைக் கேட்டதும் காளிமகாதேவியே சிரித்து விட்டாள்.

பின் மகனே உன்னை ஆசீர்வதிக்கிறேன். பெரும் பேரும் புகழும் பெற்றுத்திகழ்வாய். உனக்கு கஷ்டம் நேரும் போதெல்லாம் என்னை நினை. உனக்கு உதவி செய்கிறேன் எனக்கூறி மறைந்தாள் காளிதேவி.

தெனாலிராமன் வரலாறு - Part 1

சுமார் நானூற்று எண்பது ஆண்டுகளுக்கு முன் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு சிற்றூரில் ஓர் ஏழை அந்தணக் குடும்பத்தில் பிறந்தான் தெனாலிராமன். இளமையிலேயே அவன் தன் தந்தையை இழந்தான். அதனால் அவனும் அவனுடைய தாயாரும் தெனாலி என்னும் ஊரில் வசித்து வந்த அவனுடைய தாய் மாமன் ஆதரவில் வாழ்ந்து வந்தனர்.

சிறு வயதிலேயே அவனைப் பள்ளிக்கு அனுப்பியும் பள்ளிப்படிப்பில் அவனுக்கு நாட்டம் செல்லவில்லை.

சிறு வயதிலேயே விகடமாகப் பேசுவரில் வல்லமை பெற்றான். அதனால் அவன் பிற்காலத்தில் "விகடகவி" என்னும் பெயர் பெற்று பெரும் புகழுடன் விளங்கினான்.

காளி மகாதேவியின் அருட்கடாட்சம் பெற்றவன். பின் வரலாற்றுப் புகழ்பெற்ற விஜயநகர சாம்ராஜ்யத்தின் அரசன் கிருஷ்ணதேவராயரின் அரண்மனை "விகடகவி"யாக இருந்து மன்னரையும் மக்களையும் மகிழ்வித்தான்.

அவனுடைய நகைச்சுவைக்காக மன்னர் அவ்வப்போது ஏராளமான பரிசுகளை அளித்து ஊக்குவித்தார்.

அரண்மனை விகடகவியானது எவ்வாறு என்பதும் அவனது நகைச்சுவையையும் இவ்வலை தளத்தில் உள்ள கதைகளால் அறியலாம்.

நீர் இறைத்த திருடர்கள்


ஒரு சமயம் விஜயநகர ராஜ்யத்தில் கடும் வறட்சி ஏற்பட்டது. பருவ மழை தவறி விட்டதால் குளம், குட்டை, ஏரி எல்லாம் வற்றிவிட்டது. தெனாலிராமன் வீட்டுக் கிணற்றிலும் நீர் குறைந்து அதிக ஆழத்திற்குப் போய்விட்டது. இதனால் தினமும் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச மிகவும் சிரமப்பட்டான் தெனாலிராமன். இந்த சமயத்தில் ஒரு நாள் இரவு நான்கு திருடர்கள் தன் தோட்டத்தில் பதுங்கி இருப்பதைக் கண்டான். உடனே வீட்டிற்கு வந்து தன் மனைவியிடம், "அடியே, நம் நாட்டில் பருவ மழை தவறிவிட்டதால், பஞ்சம் ஏற்பட்டு விட்டது. எனவே நிறைய திருட்டு நடக்க ஆரம்பித்து விட்டது. பஞ்ச காலம் முடியும் வரை நாம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். எனவே நாம் ஒரு காரியம் செய்வோம்" என்று வெளியே பதுங்கியிருந்த திருடர்களுக்கு கேட்கும் வண்ணம் உரத்த குரலில் பேசினான். [Image: thenali4.jpg] "அதற்கு என்ன செய்யலாம்?" என்று தெனாலிராமனின் மனைவி கேட்டாள். "வீட்டிலுள்ள நகை, மற்றும் விலையுயர்ந்த பொருட்களை எல்லாம் இந்தப் பெட்டியில் போட்டு பூட்டு. நாம் இந்தப் பெட்டியை யாருக்கும் தெரியாமல் கிணற்றில் போட்டு விடலாம். பஞ்சம் தீர்ந்து திருட்டுப் பயம் ஒழிந்ததும் மீண்டும் கிணற்றிலிருந்து எடுத்துக் கொள்ளலாம்" என்று முன்போலவே உரக்கக் கூறினான் தெனாலிராமன். திருடர்களும் இதைக் கேட்டனர். அதே சமயம் ரகசியமாக தெனாலிராமன் தன் மனைவியிடம் திருடர்கள் ஒளிந்திருப்பதைக் கூறி ஒரு பழைய பெட்டியில் கல், மண், பழைய பொருட்களை எல்லாம் போட்டு மூடினான். அந்தப் பெட்டியைத் தூக்க முடியாமல் தூக்கி வந்து கிணற்றுக்குள் 'தொப்'பென்று போட்டு விட்டு வீட்டுக்கு திரும்பிவிட்டான் தெனாலிராமன். திருடர்களும், "தெனாலிராமன், வீட்டிற்குள் புகுந்து திருடும் நம் வேலையை சுலபமாக்கிவிட்டான். நாம் எளிதாக கிணற்றிலிருந்து பெட்டியை எடுத்துக் கொள்ளலாம்" என்று தங்களுக்குள் பேசிக் கொண்ட்னர். பெட்டியை எடுக்க கிணற்றுக்கு அருகே வந்தனர் திருடர்கள். கிணறு ஆழமாக இருந்ததால் உள்ளே இறங்கப் பயந்த திருடன் ஒருவன், "அண்ணே! தண்ணீர் குறைவாகத்தான் உள்ளது. நாம் நால்வரும் ஏற்றம் மூலம் மாற்றி மாற்றி நீரை இறைத்து விட்டால் சுலபமாகப் பெட்டியை எடுத்துக் கொண்டு போகலாம்" என்று கூறினான். அதைக்கேட்ட மற்றவர்களும் அவன் திட்டத்துக்கு ஒப்புக்கொண்டனர். அதன்படி ஒருவர் மாற்றி ஒருவர் ஏற்றம் மூலம் நீர் இறைக்கத் தொடங்கினர். சற்று நேரம் கழித்து வேறு வழியாக தோட்டத்திற்கு சென்ற தெனாலிராமன், திருடர்கள் இறைத்து ஊற்றிய நீரை தன் தோட்டத்தில் உள்ள செடிகளுக்கும், கொடிகளுக்கும், பயிர்களுக்கும் பாயுமாறு கால்வாயைத் திருப்பி விட்டான். இப்படியே பொழுது விடிந்தது விட்டது. ஆனால் கிணற்றில் தண்ணீர் குறையவில்லை. இதனால் திருடர்களும், "நாளை இரவு மீண்டும் வந்து நீரை இறைத்து விட்டு பெட்டியை எடுத்துக் கொள்ளலாம்" என்று பேசிக் கொண்டு சென்றனர். அப்போது தோட்டத்திலிருந்து வந்த தெனாலிராமன் அவர்களைப் பார்த்து, "நாளைக்கு வரவேண்டாம். நீங்கள் இறைத்த தண்ணீர் இன்னும் மூன்று தினங்களுக்குப் போதும். எனவே மூன்று தினங்கள் கழித்து வந்தால் போதும். உங்கள் உதவிக்கு நன்றி நண்பர்களே!" என்று கூறினான். திருடர்களுக்கு இதைக் கேட்டதும் மிகவும் அவமானமாய் போய்விட்டது. தங்களை ஏமாற்றி நீர் இறைக்கச் செய்த தெனாலிராமனின் அறிவை மனத்திற்குள் எண்ணி வியந்தனர். மேலும் அங்கே இருந்தால் எங்கே மாட்டிக் கொள்வோமோ என்ற அச்சத்தில் திரும்பிப் பார்க்காமல் ஓட்டம் பிடித்தனர் திருடர்கள்.

கணவனை முதுகில் சுமந்து ஆட்சியை மீட்ட அரசி

கெல்ப் என்ற மன்னன் பவேரியா நாட்டின் அரியணையிலிருந்து ஆட்சி செய்தவன். வீரத்தில் சிறந்த அவன். கண்ணை இமை பாதுகாப்பதுபோல மக்களைப் பாதுகாத்து வந்தான். திடீரென ‘காண்ட்ராட்’ என்ற பேரரசன் பவேரியா மீது படையெடுத்தான். கெல்ப் மன்னன் தளராது அவனை எதிர்த்துப் போர் செய்தான். காண்ட்ராட் வெற்றி பெற்றான். வெற்றிபெற்ற வேந்தன், கெல்ப் மன்னனின் நகருக்குத் தீ வைத்தான். ஆனால், அரசகுலப் பெண்கள் மட்டும் தங்களால் தூக்கிச் செல்லும் அளவுக்கு முதுகில் சுமையுடன் வெளியேறிச் செல்ல அனுமதி வழங்கினான். அரசகுலப் பெண்கள் பொன், பொருள் போன்றவற்றை உதறித் தள்ளிவிட்டுத் தங்கள் உயிரினும் மேலான கணவன், குழந்தைகளை முதுகில் சுமந்தபடி வெளியேறிக் கொண்டிருந்தார்கள். கெல்ப் மன்னனின் மனைவியும் அரசனை முதுகில் சுமந்து வெளியேறிக் கொண்டிருந்தாள். இக்காட்சியைக் கண்ட காண்ட்ராட் மன்னன் உள்ளம் உருகியது. தன் கணவன்மீது அரசிக்கு இருந்த பாசத்தையும் பற்றுதலையும் அவன் உணர்ந்தான். உடனே தான் வெற்றி பெற்ற பவேரியா நாட்டை கெல்ப் மன்னனிடம் கொடுத்துவிட்டுத் தன் நாட்டிற்குத் திரும்பிச் சென்றான்

முல்லா கதைகள் 2

முல்லா நசுருதீன் கதைகள்

ஒரு நாள் முல்லா ஒரு துணிக்கடைக்குச் சென்றார்.

அங்கு தலைப்பாகைகளும் விற்க்கப்பட்டன. தமக்கு ஒரு தலைப்பாகை வாங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் முல்லா அங்கு சென்றார். 

அழகான ஒரு தலைப்பாகையைத் தேர்ந்தெடுத்து விலை பேசினார். 

பிறகு தலைப்பாகையை தலையில் அணிந்து கொண்டார். 

அந்த கடையில் அழகான சால்வைகளும் விற்க்கப்படுவதை முல்லா கண்டார். தலைப்பாகைக்கு பதிலாக சால்வையை வாங்கி விடலாம் என்று அவருக்குத் தோன்றியது. 

அதனால் அவர் கடைக்காரரைப் பார்த்து "இந்த தலைப்பாகைக்கு பதிலாக சால்வையை வாங்கிக் கொள்கிறேன். இரண்டின் விலையும் ஒன்றாகத்தானே இருக்கிறது?" என்றார். 

உங்கள் விருப்பம் போல் எதை வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளுங்கள் என்றார் கடைக்காரர். 

முல்லா தலைப்பாகையை கழற்றிக் கொடுத்துவிட்டு சால்வையை எடுத்துக் கொண்டு புறப்பட்டார். 

ஐயா, நீங்கள் வாங்கிய சால்வைக்குப் பணம் கொடுக்கவில்லையே என்று கடைக்காரர் கேட்டார். 

"நான் ஏன் பணம் கொடுக்க வேண்டும். தலைப்பாகைக்குப் பதிலாக தானே சால்வையை வாங்கினேன்" என்றார் முல்லா. 

அப்படியானால் தலைப்பாகைக்கு பணம் கொடுங்கள் என்றார் கடைக்காரர். 

"தலைப்பாகைக்கு ஏன் பணம் கொடுக்க வேண்டும்? அதைத்தான் உங்களிடம் திருப்பிக் கொடுத்துவிட்டேனே" என்று சொல்லி கம்பீரமாக நடையைக்கட்டினார் முல்லா. 

கடைக்காரர் மிகவும் குழம்பிப் போய் விழிக்கத்துவங்கினார்.

முல்லா கதைகள் 1

முல்லா பெரிய அறிவாளி என்றும் எவ்வளவு பெரிய ஆபத்து ஏற்ப்பட்டாலும் தம்முடைய அறிவாற்றலாலேயே அந்த ஆபத்திலிருந்து தப்பிவிடுவார் என்றும் ஊரில் உள்ளவர்கள் பலர் கூறுவது மன்னரின் காதில் விழுந்தது. 

அவரது அறிவாற்றலைப் பரிசோதிப்பதற்க்காக மன்னர் ஒரு நாள் முல்லாவை தமது சபைக்கு வரவழைத்தார். 

முல்லா வந்து வணங்கி நின்றார். 

"முல்லா , உமது அறிவை பரிசோதனை செய்ய நினைக்கிறேன், நீங்கள் ஏதேனும் ஒன்றைக் கூறும், நீர் சொல்வது உண்மையாக இருந்தால் உமது தலை வெட்டப்படும் , நீர் சொல்வது பொய்யாக இருந்தால் நீர் தூக்கிலிடப்படுவீர்" என்றார் மன்னர். 

முல்லா உண்மை சொன்னாலும் பொய்யைச் சொன்னாலும் அவருக்கு ஆபத்து தயாராக இருக்கிறது. முல்லா நிலைமையை எவ்வாறு சமாளிக்கப் போகிறார் என்று அவையோர் அவரையே கவனித்தனர். 

முல்லா மன்னரை நோக்கி, " மன்னர் அவர்களே, தாங்கள் என்னை தூக்கில் போடப்போகிறீர்கள்" என்று பதற்றம் ஏதும் இன்றிக் கூறினார். அதைக் கேட்ட மன்னர் திகைப்படைந்தார். 

முல்லா சொன்னது உண்மையானால் அவருடைய தலை வெட்டப்பட வேண்டும் அவ்வாறு வெட்டப்பட்டால் அவர் கூறியது பொய்யாகிவிடும். முல்லா கூறியது பொய் என்று வைத்துக் கொண்டால் முல்லாவைத் தூக்கில் போட வேண்டும்.

தூக்கில் போட்டால் அவர் கூறியது உண்மை என்று ஆகிவிடும். உண்மை என்று கருதினால் அவரை தூக்கில் போடாமல் கழுத்தை வெட்ட வேண்டும்.

இப்படி ஒரு குழப்பத்தை தமது அறிவாற்றலால் தோற்றுவித்து முல்லா மன்னரை திக்குமுக்காட வைத்துவிட்டார். 
அவரது அறிவாற்றலை கண்ட மன்னர் மிகவும் மகிழ்ச்சி அடைந்து அவருக்கு பொன்னும் பொருளும் பரிசாக கொடுத்து அனுப்பினார்.

Wednesday, 28 September 2011

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

பூபாளம் இசைக்கும் காலை நேரம்....


சத்குரு விஷ்வ தீர்த்தர் தனது நித்திய பூஜையில் ஈடுபட்டிருந்தார். மங்கள வாத்தியம் முழங்க தீபாரதனை செய்தார் மூத்த சிஷ்யன் ஜகதீஷ்.

இறைவனின் சன்னிதானத்திலிருந்து படையல் செய்த பொருட்களை சிஷ்யர்கள் அனைவருக்கும் வழங்கினார்கள். அனைவரும் பக்திச் சுவையாலும் , பிரசாத சுவையாலும் மகிழ்ந்து கலைந்தனர்.

சத்குரு தனது ஆசனத்திலிருந்து எழுந்து தனது அறை நோக்கி நடக்க ஆரம்பித்தார். அவரின் கால்கள் நடந்தாலும் கண்கள் ஜகதீஷை பார்த்த வண்ணம் இருந்தது...

குருவின் தீர்க்கமான பார்வையை உணர்ந்த ஜகதீஷ் அவரின் பின்னால் நடக்க துவங்கினான்.

அறைக்குள் வந்ததும் ஜகதீஷை நோக்கி கேட்டார்... “ எனது பிரிய ஜகதீஷ் சில நாட்களாக உனது செயல்களில் ஓர் வித்தியாசம் இருந்ததை உணர்கிறேன். முன்பு நைவேதியம் செய்யும் பிரசாதத்தை அனைவருக்கும் வழங்குவதில் முனைப்பாக இருப்பாய் , ஆனால் இப்பொழுது ஒதுங்கி இருக்கிறாயே என்ன காரணம்?”

தனது நிலையை குரு இவ்வளவு உன்னிப்பாக கவனிப்பார் என எதிர்பார்க்காத ஜகதீஷ் தனது நிலையை கூற துவங்கினான்.. “ குருவே ஆசிரம வாழ்க்கை துவங்கிய பொழுது பக்தி பூர்வமாக இருந்தேன். நித்திய பூஜை, நைவேதியம் என அனைத்திலும் ஈடுபட்டேன். தற்சமயம் தெளிவு பெற்றேன். நாம் படைக்கும் நைவேதியதை இறைவன் அருந்துகிறார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இறைவன் சாப்பிட்டால் நாம் பிறருக்கு எப்படி பிரசாதமாக வழங்க முடியும்? இது போன்ற தர்க்கம் எனக்குள் தோன்றியதால் என்னால் பிரசாதம் வழங்குவதில் ஈடுபட முடியவில்லை குருவே...”

அவனை ஊடுருவி பார்த்த குரு, “ ஜகதீஷ் உனது விருப்பபடியே செய். நமது வேதாந்த வகுப்புக்கு நேரமாகி விட்டது. வகுப்பறையை தயார் செய். சிறிது நேரத்தில் நானும் வருகிறேன்” என்றார்.


இறைவணக்கத்துடன் வகுப்பு துவங்கியது.. சென்ற வகுப்பில் புதிய பாடம் இன்று போதிக்கபடுவதாக குரு சொன்னதால் அனைவரும் ஆர்வமாக இருந்தனர்..

கால்கள் இரண்டையும் இணைத்து யோக முத்திரையில் அமர்ந்திருந்த சத்குருவை பார்க்க தக்‌ஷிணாமூர்த்தியை தரிசனம் செய்வதை போல இருந்தது.

அனைத்தும் பூர்ணமான வஸ்துவிலிருத்தே தோன்றியது என பொருள் கொண்ட “பூர்ணமிதம்” எனும் ஈஷாவாசிய உபநிஷத்தில் வரும் மந்திரத்தை விளக்கினார் குரு விஷ்வ தீர்த்தர்.

அனைத்து மாணவர்களும் மந்திரத்தை மனதில் உரு போட துவங்கினர். சிறிது நேரத்திற்கு பிறகு ஜகதீஷை சைகையால் அழைத்தார் விஷ்வ தீர்த்தர்.


குருவின் முன் பணிவுடன் வந்து வணங்கி நின்றான்.

“எனதருமை ஜகதீஷ், மந்திரத்தை மனதில் ஏற்றி கொண்டாயா? ,” என்றார்.

“முழுமையாக உள்வாங்கி கொண்டேன் குருவே”.

“எங்கே ஒரு முறை சொல் பார்ப்போம்”

கண்கள் மூடி மனதை ஒருநிலைப்படுத்தி கணீர் குரலில் கூற துவங்கினான்..” பூர்ண மித பூர்ண மிதம் ...” என கூறி முடித்தான் ஜகதீஷ்.

மெல்ல புன்சிரிப்புடன் குரு தொடர்ந்தார்.. “நீ சரியாக மனதில் உள் நிறுத்தியாதாக தெரியவில்லையே.. எங்கே உனது புத்தகத்தை காட்டு”

பதட்டம் அடைந்த ஜகதீஷ், புத்தகத்தை காண்பித்து கூறினான்.. “ குருவே தவறு இருந்தால் மன்னியுங்கள். ஆனால் நான் கூறியது அனைத்தும் இதில் இருப்பதை போலவே கூறினேன்...”

“ஜகதீஷ்.. இந்த புத்தகத்திலிருந்து படித்துதான் மனதில் உள்வாங்கினாயா?”.. என்றால் விஷ்வதீர்த்தர்.


மெல்ல தலையசைத்தான் ஜகதீஷ்..


சத்குரு தொடர்ந்தார்... “ இதிலிருந்து உள்வாங்கினாய் என்றால் மந்திரம் இதில் இருக்கிறதே? நீ உன் மூளையில் மந்திரத்தை ஏற்றி கொண்டால் புத்தகத்தில் இருக்க கூடாதல்லவா?”


குழப்பமடைந்தான் ஜகதீஷ்...


“எனது பிரிய ஜகதீஷ்.. உனது நினைவில் நின்ற மந்திரம் சூட்சம நிலையில் இருக்கிறது. புத்தகத்தில் இருக்கும் மந்திரம் ஸ்தூல வடிவம். இறைவன் சூட்சம நிலையில் இருப்பவன். இறைவனுக்கு படைக்கப்படுவது ஸ்தூல வடிவில் இருந்தாலும் அவன் சூட்சமமாகவே உற்கொள்கிறான்.
நீ உள்வாங்கிய பின் புத்தகத்தில் மந்திரம் அளவில் குறைந்துவிட்டதா? அது போலதான் இறைவன் உற்கொண்ட பிரசாதம் அளவில் குறையாமல் நாம் எல்லோரும் உண்கிறோம். ஸ்தூலமாக இருக்கும் நாம் ஸ்தூலமாகவும், சூட்சுமமாக இருக்கும் இறைவன் சூட்சுமமாகவும் நைவேதியத்தை உற்கொள்கிறோம். ”

வகுப்பில் இருக்கும் அனைவரும் இருவரின் சம்பாஷணை புரியாமல் இருக்க...ஜகதீஷின் முகத்தில் ஒளி தெரிந்தது.

தனது பக்தியற்ற தர்க்கம் செய்த அறியாமையை குருவிற்கு நைவித்தியம் செய்து முழுமையடைந்தான் ஜகதீஷ்.

ஓர் துறவி இப்படி செய்யலாமா?


குருவும் சிஷ்யனும் பயணத்தில் இருந்தார்கள். சன்யாச தர்மத்தை கடைப்பிடிப்பதால் பிச்சை எடுக்க ஒரு பாத்திரம் மற்றும் ஒரு மாற்று உடையுடன் பயணத்தில் இருந்தார்கள்.

வழியில் ஒரு ஓடை குறுகிட்டது. அதை கடக்க இருந்த பாலம் பழுது பட்டிருந்தது. இருவரும் அதை பற்றி யோசித்து கொண்டிருக்கும் பொழுது அழகிய மங்கை ஒருவள் அங்கு வந்தாள்.
பாலம் பழுது பட்டிருப்பதை கண்டு வருத்தம் கொண்டாள். துறவி இருவரையும் பார்த்து, " தெய்வீகமானவர்களே அவசரமாக அக்கரைக்கு செல்ல வேண்டும். எனக்கு உதவி செய்ய முடியுமா?" என கேட்டாள்.

உடனே குரு சிறிதும் தாமதிக்காமல் அவளை தோள்களில் சுமந்து கொண்டு ஓடையில் இறங்கி மறுகரையில் சேர்த்தார். இச்செயல் சிஷ்யனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இருவரும் பயணத்தை தொடர்ந்தனர். சிறிது நேரத்துக்கு பின் குரு சிஷ்யனை கண்டார். பெருத்த யோசனையுடன் வரும் சிஷ்யனிடம் கேட்டார் "மகனே ஏன் இந்த யோசனை? வாழ்க்கையிலும் சரி வழிப்பயணத்திலும் சரி மனதில் கணம் இருந்தால்
பயணம் ருசிக்காது. சொல் என்ன உனக்கு பிரச்சனை?"

"எனது குருவே நாம் துறவி அல்லவா? அந்த பெண்ணை நீங்கள் தோளில் சுமந்து எப்படி சரியான செயலாகும் ?" என்றான் சிஷ்யன்.

சிஷ்யனை ஆழமாக பார்த்த குரு தொடர்ந்தார். ...
"உனது கேள்வியால் மகிழ்தேன். எனது சிஷ்யா , அப்பெண்ணை நான் சில நிமிடம் தான் தோளில் சுமந்தேன் ஆனால் நீயோ அவளை நெடுந்தொலைவு மனதில் சுமந்து கொண்டு வருகிறாயே இது மட்டும் முறையா? சன்யாசம் என்பது பற்றற்று மனதில் தூய்மையை சிறிதும் இழக்காமல் இருப்பதே ஆகும்.."

மனதில் இருந்த மங்கையை இறக்கி வைத்து பூரணத்துவம் அடைந்தான் சிஷ்யன்.

நன்றி: ஸ்வாமி ஓம்கார்

ரசவாதம்

ஜெயசிம்மன் வாழ்க்கையில் அனுபவிக்காத பணமோ அந்தஸ்தோ இல்லை. நீண்ட பரம்பரையாக செல்வந்தராக வாழந்த குடும்பவம் அவனுடையது.

ஆனால் தற்போதய அவனின் நிலை நேர்மாறாக அமைந்து விட்டது. ஒரு வேளை உணவுக்கே பிறரின் கையை எதிர்பார்க்கும் நிலை.வாரி கொடுத்த கையால் வாரி எடுத்து உண்ணும் நிலை ஏற்பட்டதற்கு ஒரே ஒரு காரணம் தான்.

அது - ரசவாதம்

அன்று ஒருநாள் தனது நண்பர்களுடன் உரையாடும் பொழுது ரசவாதம் எனும் விஷ(ய) வாதம் விவாதிக்கப்பட்டது. எந்த பொருளையும் தங்கமாக்கும் ரசவாத வித்தையை கற்றுக்கொள்ளும் ஆவல் அவனுக்கு கிளர்ந்தெழுந்தது. தனது செல்வ நிலையை ரசவாதம் செய்து பெருக்கி தனது பல சந்ததியினர் செல்வ நிலையுடன் வாழவைக்கும் எண்ணம் ஜெயசிம்மனுக்கு ஏற்பட்டது.

பலரை வரவழைத்தான், எத்தனையோ ஆராய்ச்சிகள் நடந்தது. சித்தர் என அழைக்கப்படவர்களுக்கு முன் தலை வணங்கினான்- அவர்களை பூஜித்தான், ஆனால் நடந்தது என்னமோ வேறு. தனது சொத்துக்கள்,குடும்பம் மற்றும் கெளரவம் என அனைத்தையும் இழந்து மண் குடிசையில் வாழும் நிலை ஏற்பட்டது.

இனி வரும் சந்ததிகளுக்கு பொருள் சேர்க்க எண்ணியவனுக்கு தனது அடுத்த வேளை உணவுக்கு அலையும் நிலைக்கு தள்ளப்பட்டான்.

சிரமம்மான நிலையில் வாழும் அவனுக்கு வரண்ட நிலத்தில் சில துளி மழை பொழிவை போல இனிப்பான ஒர் செய்தி கேட்டான். அவனது ஊருக்கு பிரம்ம ஞானி வருகிறார் என கேள்விபட்டதும் அவனது மகிழ்ச்சிக்கு அளவில்லை.

பிரம்ம ஞானி தனது யோகசக்தியாலும் ஞான சக்தியாலும் பலரை வழிகாட்டுபவர். அவரை பற்றிய அற்புத செய்திகளை பல காலங்களாக கேட்டிருக்கிறான். அவர் தனது நிலைக்கு ஓர் மருந்தாக அமைவார் என எண்ணினான். அவரால் தனக்கு ரசவாத வித்தையை கற்றுக்கொடுக்க முடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை வந்தது. அவரிடம் கற்றதும் தனது இழந்த செல்வத்தை மீட்டுகொள்ள முடியும் என நம்பினான் ஜெயசிம்மன்.

பிரம்மஞானியை சந்தித்து வணங்கி நின்றான். மெல்ல கண்களை திறந்த ஞானி அவனை பார்த்து கேட்டார்... ”எனது அன்பு ஜெயா ரசவாதம் பற்றி அறிய ஆவாலா?”

தனது மன நிலையை சொல்லமலே வெளிப்படுத்திய பிரம்ம ஞானியை கண்ணீர்மல்க பார்த்தான் ஜெயசிம்மன்.

ஒர் நீர் நிறைந்த பாத்திரத்தை கொண்டுவர சொன்னார் பிரம்மஞானி. குனிந்து நிலத்திலிருந்து சிறிது மண் எடுத்து அந்த பாத்திரத்தில் மெல்ல போட்டார் பிரம்ம ஞானி.

ஆச்சரியமான மாற்றம் நிகழ்ந்தது. மண் நீரை தொட்டு பாத்திரத்தின் அடியில் செல்லும் பொழுது தங்க துகள்களாக மாறி இருந்தது.

ஜெயசிம்மனுக்கு தனது கண்களை நம்ப முடியவில்லை. இவ்வளவு எளிதாக யாரும் ரசவாதம் செய்து பார்த்ததில்லை.
ஆச்சரியம் விலகாமல் ஆச்சாரியரிடம் கேட்டான்...”குருவே இது எப்படி சாத்தியம்? மண்னை நீரில் இட்டால் பொன்னாகுமா? எதாவது மந்திரம் சொல்ல வேண்டுமா?”

அவனை அர்த்தத்துடன் பார்த்த குரு கூறினார், “ஜெயா மண்ணை பாத்திரத்தில் இடும் பொழுது தங்கத்தின் மேல் பற்று வைக்கக்கூடாது. பற்றில்லாமல் இருந்தால் பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்து பொருளும் உனக்கு தங்கமே. இதுவே ஞான ரசவாதம்”

ஜெயசிம்மனின் உள்நிலை ரசவாதம் அடைந்தது.

நன்றி: ஸ்வாமி ஓம்கார்

யானையின் மேலேறி.

எங்கும் பச்சைப்பசேலென்றிருக்கிற ஒரு புல்வெளியில் அந்த தேவதையின் பக்கத்தில் உட்கார்ந்தபடி ப்ரியா ஊஞ்சலாடிக்கொண்டிருந்தாள். ஊஞ்சலுக்கான கயிறு வானத்தில் எங்கிருந்தோ திடீரென்று துவங்கியிருந்தது, இதமான சிலுசிலு தென்றல் அதைத்தொட்டு இயக்கிக்கொண்டிருக்க, பல வண்ணங்களில் உடையணிந்த அழகிய தேவதை அவளை மெல்ல அணைத்தபடி இருந்தது. வேகமில்லாத வேகத்தில் முன்னும்பின்னும் அசைந்தாடிய ஊஞ்சலின் தாலாட்டில் கண்மயங்கி, தேவதையின் தோளில் சாய்ந்தபடி அவள் தூங்க முயன்றுகொண்டிருந்தபோது, தேவதை அவளை உலுக்கி எழுப்பி, 'ஸ்கூலுக்கு லேட்டாயிடுச்சு' என்றது. சட்டென்று ஊஞ்சலின் இயக்கம் நின்றுவிட்டது.

ப்ரியா படுக்கையில் எழுந்து உட்கார்ந்து கண்களைத் தேய்த்துவிட்டுக்கொண்டாள். தூக்கம் இன்னும் கலைந்திருக்கவில்லை, தினம்தவறாமல் அதிகாலையில் காண்கிற கனவின் ஞாபகங்களும், ஏக்கமும் இன்னும் மிச்சமிருந்தது. மீண்டும் படுத்துக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் ஊஞ்சலும், தேவதையும் திரும்பவந்துவிடுவார்கள்தான். ஆனால் அம்மா திட்டுவாள்.

குழந்தை இடதுபக்கமிருந்த சாமி படங்களைப் பார்த்து அனிச்சையாய் கன்னத்தில் போட்டுக்கொண்டு கட்டிலிலிருந்து இறங்கியது. அதற்காகவே காத்திருந்ததுபோல் கிச்சனிலிருந்து குரல் வந்தது, 'ப்ரியா, எழுந்துட்டியாடி ?'
'யெஸ் மம்மி', சத்தத்தில் புரண்ட அப்பாவைத் தொந்தரவு செய்யாமல் இருட்டில் தத்தித்தத்தி வெளியே வந்தது. வீடெங்கும் இன்னும் இருட்டு, சமையலறையைமட்டும் வெள்ளை வெளிச்சம் நனைத்திருக்க, அதை நோக்கி நேராய் நடந்து சென்று, 'குட்மார்னிங் மம்மி'.
வெளிச்சத்துக்குப் பழகாத கண்களைச் சுருக்கிப் பார்த்தபோது, அம்மா எப்போதும்போல குளித்து, ஈரத்துணியைத் தலையில் கட்டியிருந்தாள். அடுப்பில் கவனமாய், 'குட்மார்னிங்' என்றாள். 'போய் ப்ரஷ் பண்ணிட்டு வந்துடுவியாம், மம்மி உனக்கு ஹார்லிக்ஸ் கலந்துவைப்பேனாம்'.

****

மதன் எழுந்துவந்தபோது ப்ரியா குளித்து யூனி·பார்மில் இருந்தாள். ஒரு காலில் மட்டும் ஷ¤ மாட்டியிருக்க, இடதுகையில் சாக்ஸை கிளவுஸ்போல மாட்டி விளையாடிக்கொண்டிருந்தவள், இவனைப்பார்த்ததும் நிமிர்ந்து, 'குட்மார்னிங் டாடி' என்றாள். தன் கையை ஒருமுறை குறும்பாய்ப் பார்த்துக்கொண்டு களுக்கென்று வெட்கமாய்ச் சிரித்தாள்.
'அப்பா-ன்னு கூப்பிடுன்னு எத்தனை தடவை சொல்றது ?', அவளை அநாயாசமாய்த் தூக்கினான் அவன். எட்டு வயதுக்கு ரொம்பப் பூஞ்சையாய் இருக்கிறாள். எவ்வளவு சொன்னாலும் சரியாய் சாப்பிடுவதே இல்லை.

ப்ரியா வாயின்குறுக்கே ஒற்றைவிரலை வைத்துக்கொண்டு, 'மூச்' என்றாள்., 'உங்களை டாடி-ன்னுதான் கூப்பிடணும்-ன்னு அம்மா சொல்லியிருக்காங்க' என்றுசொல்லிவிட்டு, சட்டென்று தலையில் தட்டிக்கொண்டு, 'மம்மி சொல்லியிருக்காங்க' என்று திருத்தினாள்.

'ஐயோ பொண்ணே, என்னை அப்பா-ன்னு சொல்லலைன்னாலாவது பரவாயில்லை, அவளையாவது ஒழுங்கா அம்மா-ன்னு கூப்பிடு, அதுக்கப்புறம்தான் மம்மி, அம்மி எல்லாம்' என்றான். இடது கையால் ஹிண்டுவைப் பிரித்தபோது குழந்தை முதல் பக்கத்திலிருந்த ஹர்பஜன் சிங்கை சுட்டிக்காட்டி, 'யார் இந்த அங்கிள் ?' என்றது.

அவன் பதில்சொல்வதற்குள் அவள் அம்மா வாசலிலிருந்து வந்தாள், 'என்னடி, இன்னும் ஷ¤கூட மாட்டலையா நீ ?' என்று அவள் கத்த ஆரம்பித்ததும் குழந்தை சாக்ஸ் கையை பின்புறமாய் மறைத்துக்கொண்டது. அவன் பேப்பரை மேஜைமேல் போட்டுவிட்டு, 'ரெண்டு நிமிஷ வேலை. இதுக்கு ஒரு சண்டையா ?' என்றான், 'நீ உள்ளே போ மது, நான் அவளை ரெடி பண்றேன்'.

குழந்தை ஒற்றைக்காலணி சப்திக்க தொப்பென்று தரையில் குதித்தது. அதன் கையிலிருந்த சாக்ஸைக் கழற்றி காலில் அணிவித்தான். ஷ¤ மாட்டியபோது, சத்தமே காட்டாமல் பொம்மைபோல அவனையே பார்த்துக்கொண்டிருந்தது., 'சமத்து' என்றான் அதன் கன்னம்கிள்ளி. 'மறுபடி தூக்கிக்கொள்ளேன்' என்பதுபோலிருந்தது அதன் பார்வை.

நாற்காலியிலிருந்து இறங்கி நின்ற மகளின் பள்ளி உடுப்பை அவன் விநோதமாய்ப் பார்த்துக்கொண்டிருந்தான். என்ன யூனி·பார்ம் இது ? தாத்தா பனியனை பேத்திக்கு மாட்டிவிட்டதுமாதிரி தொளதொளாவென்று முழங்கால்வரை தொடுகிற வெள்ளைவெளேர் உடை ! இப்போது வேடிக்கையாகத் தெரிந்தாலும், கிளம்புவதற்குமுன்னால் பெல்ட்டை எடுத்து இடுப்பில் இறுக்கமாய்க் கட்டிக்கொண்டதும், இதே உடுப்பு, சட்டையும், ஸ்கர்ட்டுமாய் அழகாகப் பிரிந்துபோகும். கழுத்தில் சின்னஞ்சிறியதாய் ஒரு டை, முழங்கால் நீளத்துக்கு இறுக்கமான சாக்ஸ் மாட்டி, பளபளக்கிற ஷ¤. குட்டைக் கூந்தலை இறுக்கிப்பிடிக்கிற க்ளிப்கூட பள்ளி அனுமதித்த வண்ணத்தில்தான். அந்தக் காலத்தில் குழந்தைகளைப் படிக்க அனுப்புவதானால் தலைவாரிப் பூச்சூடினால்போதும், இன்றைக்கு இன்னும் என்னென்னவோ அலங்காரங்கள் செய்யவேண்டியிருக்கிறது.

வயர்கூடையில் டிபன்பாக்ஸை நுழைத்தபடி மது கிச்சனுள்ளிருந்து வந்தாள், 'உன் ஸ்கூல் பேக் எங்கேடி ?', குழந்தை கூடத்தின் மூலையில் கைகாட்டியது. மேஜை மேலிருந்த தண்நீர் பாட்டிலை துண்டில் துடைத்து கூடைக்குள் வைத்துவிட்டு, இன்னொரு கையில் ஸ்கூல்பையை எடுத்துக்கொண்டாள், 'சீக்கிரம் வாடி, பஸ் வந்துடும்' என்றபடி கதவைத் திறந்து படிகளில் விறுவிறுவென்று இறங்கினாள்.
ப்ரியா அவனிடமிருந்து விலகிநகர்ந்து புன்னகையுடன் சின்னக் கைகளில் டாட்டா காட்டிவிட்டு வாசலுக்கு ஓடியபோது மணி ஏழுதான் ஆகியிருந்தது. இப்போதுபோகிற குழந்தையை இனிமேல் ராத்திரிதான் பார்க்கமுடியும். அவன் பெருமூச்சுடன் செய்தித்தாளுக்குத் திரும்பினான்.

இரண்டு பேராவுக்குமேல் மனம் ஓடவே இல்லை. பால்கனியில் சேரை இழுத்துப் போட்டுக்கொண்டான். இதமான காலைக்காற்று. கீழே கேட்டருகில் அம்மாவும், பெண்ணும் பஸ்ஸ¤க்காக காத்திருப்பது தெரிந்தது. இருவரும் அவனைப் பார்க்கவில்லை. மது பையிலிருந்து ஏதோ ஒரு நோட்டை எடுத்து மடக்கி வைத்துக்கொண்டு கேள்விகள் கேட்டுக்கொண்டிருக்க, குழந்தை அவளைச் சுற்றிச்சுற்றிவந்து பதில்சொல்லிக்கொண்டிருந்தது.

****

ஒரு கையைப் பின்னால் கட்டிக்கொண்டு உறுமும் குரலில், 'நைட்' என்றாள் மது.
ப்ரியாவின் நடைவேகம் கொஞ்சம் குறைந்தது, யோசிப்பதுபோல் நெற்றியில் ஒருமுறை தட்டிக்கொண்டு, 'என் - ஐ - டி - ஈ' என்றது தயங்கி. பிறகு நிச்சயமில்லாததுபோல் தலையை வேகமாய் ஆட்டிக்கொண்டது, 'தெரியலை மம்மி'

'இன்னொரு தடவை தெரியலைன்னு சொன்னா உதைபடுவே சொல்லிட்டேன், யோசிச்சு சொல்லுடி' என்று அதட்டினாள் அவள். சற்றுத் தள்ளி ஷட்டில்கார்க் விளையாடிக்கொண்டிருந்த தொப்பை இளைஞர்கள் ஆர்வமில்லாமல் திரும்பிப்பார்த்துவிட்டு ஆட்டத்தில் கவனமானார்கள். தினமும் நடக்கிறதுதானே !

குழந்தை சின்னச்சின்ன அடிகளாய் எடுத்துவைத்து அவளை ஒருமுறை சுற்றிவந்தது, மீண்டும் பழைய இடத்திலேயே வந்து நின்று தலையைச் சொறிந்தபோது பட்டென்று கையில் சின்னதாய் அடிவிழுந்தது, 'அப்படிப் பண்ணாதேன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன் ?', குழந்தையின் முகம் மாறுவதைப்பார்த்ததும், 'தலை கலைஞ்சுடும்டி' என்றாள் சமாதானமாய். குழந்தை அதற்கு எதுவும் பேசாமல், 'என் - ஐ - ஜி - ஹெச் - டி, கரெக்டா ?' என்றது.

'வெரிகுட்', மதுவின் முகம் மலர்ந்ததும் குழந்தைக்கும் சிரிப்பு வந்துவிட்டது, 'நெக்ஸ்ட் வேர்ட், மம்மி' என்றது மிக ஆர்வமாய். மது நோட்டை ஒருமுறை வேகமாய்ப் பார்த்துக்கொண்டு, 'கைட்' என்றாள், 'நீ கைட் பார்த்திருக்கியோ ?', கேள்வி புரியாததுபோல் குழந்தை மறுப்பாய்த் தலையாட்டிவிட்டு, 'கே - ஐ - ஜி - ஹெச் - டி' என்றது.

'தப்பு' என்றாள் அவள் சட்டென்று. முகம் பழையபடி கடுகடுவென்று ஆகிவிட்டது.
'நாட் தப்பு', கையாட்டிச் சொன்னது குழந்தை, 'நைட்-க்கு என் - ஐ - ஜி - ஹெச் - டி-ன்னா, கைட்-க்கு கே - ஐ - ஜி - ஹெச் - டி-தானே வரும் ?', அதனளவுக்கு நியாயமான கேள்வி என்பதால், உடும்புப்பிடிவாதம்.

'வார்த்தைக்கு வார்த்தை பதில்பேசாதடி, கைட்-க்கு கே - ஐ - டி - ஈ-தான் கரெக்ட்'
'அப்போ நைட்-க்கு என் - ஐ - டி - ஈ-தான் கரெக்ட்' என்று குழந்தை அவளைப்போலவே முகத்தை வைத்துக்கொண்டு பேசிக்காட்டியது. அந்த மழலை மிமிக்ரியை ரசிக்கிற மனோநிலையில் மது இல்லை, 'கடங்காரி, அடுத்தவாரம் எக்ஸாம், இப்படி தப்புத்தப்பா உளறிக்கொட்டறியே' என்றாள் சத்தமெழாமல். முகத்தில் எள்ளும், கொள்ளும், இன்னும் நிறையவும் வெடித்துக்கொண்டிருந்தது.
குழந்தை எதைப்பற்றியும் கவலைப்படாமல் கைகளைக் கட்டிக்கொண்டது. மது நோட்டை அதன் கையில் திணித்தாள், 'ஒழுங்காப் படிச்சு பஸ் வரதுக்குள்ள இந்த வேர்ட்ஸ் எல்லாத்துக்கும் என்கிட்டே கரெக்ட்டா ஸ்பெல்லிங் சொல்லணும். இல்லைன்னா லன்ச் பாக்கெட்டைப் பிடுங்கிடுவேன், மத்தியானம் பட்டினிதான்'.

ப்ரியா ஏதோ பேசமுற்பட்டபோது கேட்டைத் திறந்துகொண்டு பேப்பர்காரன் வந்தான். மது விறுவிறுவென்று நேராய் அவனிடம் சென்று, 'போனமாசம் ·பெமினா வரவே இல்லையே' என்றாள். அவன் ஏதோ பதில்சொல்லிக்கொண்டிருக்கையில் இவளைத் திரும்பிப்பார்த்து 'இன்னுமா படிக்க ஆரம்பிக்கலை ?' என்பதுபோல் கண்ணால் ஜாடை. குழந்தை அம்மாவை ஒருமுறை தீர்க்கமாய்ப் பார்த்துவிட்டு நோட்டுக்குள் முகத்தை மறைத்துக்கொண்டது. பேப்பர்காரன் ராட்சஸப் பையில் பெண்கள் பத்திரிக்கை தேட ஆரம்பித்திருந்தான்.

குழந்தை விரோதியைப் பார்ப்பதுபோல் நோட்டிலிருக்கிற எழுத்துக்களை ஆர்வமில்லாமல் வெறித்தது. எல்லாம் நேற்று ராத்திரி படித்ததுதான். எதற்காக மீண்டும் படிக்கவேண்டும் ? நைட், ·பைட், ரைட் எல்லாவற்றுக்கும் ஐ - ஜி - ஹெச் - டி வரும்போது கைட் மட்டும் எப்படி ஐ - டி - ஈ என்று அவசரப்பட்டு முடிந்துபோய்விடுகிறது என்று அவளுக்கு சந்தேகமாகவே இருந்தது. மிஸ் தப்பாய் எழுதிக்கொடுத்ததை அம்மாவும் தப்பாக சொல்லித்தருகிறாள் என்று முடிவுசெய்துகொண்டாள்.
அம்மா இன்னும் பேப்பர்காரனுடன் பேசிக்கொண்டிருக்க, குழந்தை மெல்லமாய் நடந்து விளையாடுகிறவர்களின் பக்கம் போனாள். நெஞ்சுக்குக் குறுக்கே நோட்டைக் கட்டிக்கொண்டு சிறிய வெள்ளைப்பறவைபோன்ற மெல்லிய இறகுபந்து இடமும் வலமும், மேலும் கீழும் பறந்து பறந்து திரிவதை ஆவலோடு பார்த்துக்கொண்டிருந்தாள்.

விளையாடிக்கொண்டிருந்தவர்களில் ஒருவன் வியர்வையை வழித்துப்போட்டுவிட்டு அவளை அருகில் அழைத்தான், 'விளையாடறியா ?' என்று கேட்டபடி கைகுலுக்கக் கைநீட்டுவதுபோல ஸ்நேகமாய் பேட்டை நீட்டினான். அவளுக்கு ஆசையாகத்தான் இருந்தது - ஒருமுறை ஸ்கூலில் அந்தவிளையாட்டு கற்றுத்தந்திருக்கிறார்கள், ஆனாலும் சரியாய் ஞாபகமில்லை, அதுமட்டுமில்லாமல் அடுத்தவாரம் எக்ஸாம்வேறு இருக்கிறது.

அவள் தலையசைத்து மறுத்தாள். விலகிப்போய்விடப் பார்த்தவளின் அருகில்வந்து மண்டியிட்டான் அவன், 'அம்மா திட்டுவாங்களா ?' என்றான் குரலிறக்கி.
அவளுக்கு அந்த அங்கிளை சட்டென்று பிடித்துப்போய்விட்டது. ஒருமுறை தொலைவிலிருந்த அம்மாவை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு, 'ஆமாம்' என்றாள் ரகசியமாய். அதைச் சொல்கையில் அவள் கண்களில் கவலை இல்லை. குறும்புச்சிரிப்பு.

எதிர்பாராமல் கிடைத்த அந்த திடீர் சிநேகிதனிடம் இன்னும் ஏதேதோ பேச நினைத்தாள் ப்ரியா. ஆனால் பேப்பர்காரனின் சைக்கிள்மணி அவர்களுடைய சந்திப்பைக் கலைத்துவிட்டது. அவனிடம் எதுவும் சொல்லிக்கொள்ளாமலே திப்திப்பென்று ஷ¤ சப்திக்க அம்மாவிடம் ஓடினாள், 'படிச்சுட்டேன் மம்மி, கைட்-க்கு கே - ஐ - டி - ஈ-தான் கரெக்ட்' என்றாள் அவளைப் பேசவிடாமல். மதுவின் முகத்தில் நிம்மதி பரவியது. தூரத்தில் பழக்கமான ஹார்ன் ஓசை.

அந்த சத்தத்தைக் கேட்டதும் பிரதேசம் முழுக்க ஒரு பரபரப்பு சேர்ந்துகொண்டது. 'பஸ் வந்தாச்சு, சீக்கிரம் கிளம்பு', அவளை அவசரப்படுத்தியபடி, மது புரட்டிக்கொண்டிருந்த புத்தகத்தைக் கையிடுக்கில் வைத்துக்கொண்டாள். இரண்டு பைகளையும் எடுத்துக்கொண்டு சாலைக்கு ஓடினாள். குழந்தை நிதானமாய் அவள்பின்னே நடந்து பஸ்வருகிற திசையைப் பார்த்தபடி கைகட்டிக்கொண்டு நின்றது.

அதை பஸ் என்று சொல்வது தப்பு. ஒரு பெரிய வேன். அங்கங்கே துருப்பிடித்தும், பெயின்ட் உதிர்ந்தும் குலுங்கியபடி வந்தது. உள்ளே இரண்டு குழந்தைகள் ஆர்வமாய் ஜன்னலுக்குவெளியே எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஒருகுழந்தை மதுவைப்பார்த்து பூப்போல் சிரித்தது. சுமாராய் உடுத்திய உதவிப்பையன் ஒருவன் கதவைத் திறந்துவிட்டு, 'குட்மார்னிங் ப்ரியா' என்றான். 'குட்மார்னிங் மேடம்'
மது இரண்டு பைகளையும் ப்ரியாவிடம் ஒப்படைத்தாள், 'பத்திரம்டி, ஒழுங்காப் படிக்கணும், குறும்பு பண்ணக்கூடாது, சரியா ?' என்றதும் குழந்தை அழகாய்த் தலையாட்டியது. அதன் கன்னத்தில் அழுத்தமாய் முத்தமிட்டு, 'போய் உட்கார்ந்துக்கோ' என்றாள். ஜன்னல்பக்கம் அமர்ந்திருந்த குழந்தை ப்ரியாவிடம் மழலையில் ஏதோ கேட்டது அவளுக்குப் புரியவில்லை. முன்னால் வந்து டிரைவரிடம், 'பார்த்து ஓட்டுங்க' என்றாள் எப்போதும்போல். அவர், 'சரிம்மா' என்று அசட்டுச்சிரித்தார். மெல்லிய உறுமலுடன் வேன் கிளம்பி நெடுஞ்சாலையின் போக்குவரத்தில் கலந்தது.

வேன் கிளப்பிவிட்டுச்சென்ற கறும்புகை அடங்கும்வரை மது அங்கேயே நின்றிருந்தாள். பின்னர் பெருமூச்சுடன் மெல்ல நடந்து படிகளுக்குத் திரும்பினாள். நகருக்கு வெளியே பள்ளிக்கூடம், இன்னும் முக்கால் மணிநேரம் அலுங்கல், குலுங்கலுக்கிடையே குழந்தை பஸ்ஸில் போகவேண்டும். அவளுக்கு மகளை நினைக்க ரொம்பவும் பாவமாய் இருந்தது.

பத்து நிமிடத்தில் அடுத்த குழந்தையை ஏற்றிக்கொள்வதற்காக ஓட்டைவேன் ஒரு சந்தில் புகுந்து நின்றது. அதற்குள் குழந்தைகள் மூன்றும் ஒன்றைஒன்று அணைத்தபடி தூங்கிப்போயிருக்க, அவர்களின் நோட்டுப் புத்தகங்கள் பின் சீட்களில் சிதறிக்கிடந்தன.

****

மேலே வந்தபோது மதன் இன்னும் பால்கனியில் நின்றபடி சாலையில் வேன்போன திசையை வெறித்துக்கொண்டிருந்தான். மதுவைப்பார்த்ததும், 'நான் இன்னும் பல்கூட தேய்க்கலை, அதுக்குள்ள அவ ரெடியாகிக் கிளம்பிட்டா' என்றான் மெல்லமாய் சிரித்து.

மதுவுக்கு அவனுடைய உள்கேள்வி புரிந்தது, 'பாவம், குழந்தைக்கு டெய்லி ரொம்ப சீக்கிரமா எழுந்திருக்க வேண்டியிருக்குல்ல ?' என்றாள்.

'நல்ல பழக்கம்தானே ?' அவன் மீண்டும் ஒருமுறை ரோட்டைப் பார்த்தான். பத்து மாருதிக்களை ஏற்றிக்கொண்டு ஒரு பெரிய லாரி ஊர்ந்துபோனது.

'நல்ல பழக்கம்தான், ஆனா ப்ரியா கஷ்டப்படறா' என்று உள்ளங்கையைப் பார்த்தபடி சொன்னாள்.
அவன் பெருமூச்சுவிட்டான், தொடர்ந்து பேசவேண்டுமா என்பதுபோல் கொஞ்சம் யோசித்துவிட்டு, 'நீ அந்த கஷ்டத்தைப் புரிஞ்சுகிட்டமாதிரி தெரியலையே மது' என்றான் நேரடியாய்.

அவளுக்கு சட்டென்று கோபம் வந்தது, 'என்ன சொல்றீங்க ?' என்றாள். வெய்யிலுக்கு வெடித்திருந்த ஒரு சிறுசதையைக் கையிலிருந்து பிய்த்து எறிந்தாள். லேசாய் வலித்தது.

'தப்பா ஒண்ணும் சொல்லலை மது, பகல்முழுக்க ஸ்கூல்ல கஷ்டப்படறா அவ, வீட்டுக்கு வந்தப்புறமும் அவளுக்குப் பாடம் சொல்லித்தர்றது, ஹோம்வொர்க், அது, இதுன்னு நீ அவளை ரொம்ப சிரமப்படுத்தறியோன்னு தோணுது. இந்த பாடத்தைப் படி, அந்த கணக்கை போட்டுக்காட்டு-ன்னு எப்போ பார்த்தாலும் படிப்புதானா ? எட்டு வயசுக் குழந்தைக்கு இதெல்லாம் ஓவர்லோட் இல்லையா ?' என்றான்.

அவள் பட்டென்று, 'நம்ம குழந்தைமேலே உங்களுக்கு இருக்கிற அக்கறை எனக்கும் இருக்கு' என்றாள். அவன் ஏதோ சமாதானம் சொல்வதற்கு முயன்றான், அவள் அவனைப் பேசவிடாமல், 'எட்டு வயசுதானே-ன்னு நீங்க சாதாரணமா சொல்றீங்க, ஒரு தடவை ப்ரியா ஸ்கூலுக்கு வந்து பாருங்க, ஒண்ணாங்கிளாஸ் குழந்தைகளுக்குக்கூட ஹோம்வொர்க், இம்போசிஷன், க்ளாஸ்டெஸ்ட் எல்லாமே இருக்கு. இவ தேர்ட் ஸ்டான்டர்ட், அந்த க்ளாஸ் பிள்ளைங்க படிக்கிறதையெல்லாம் இவளும் படிச்சாகணும், இன்·பாக்ட் அவங்களைவிட பெட்டரா படிக்கணும்'.

அவள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவன் இடைமறித்து, 'நம்ம ப்ரியா ஒண்ணும் முட்டாள் இல்லை' என்றான்.

'முட்டாளா இல்லாம இருக்கிறது பெரியவிஷயம் இல்லை மதன், ரொம்ப புத்திசாலியா இருக்கணும் - அதுக்குதான் ஸ்கூல் படிப்பு. அவ ஒவ்வொரு பாடத்தில மார்க் குறையும்போதும் நான்தானே அவ டீச்சர்கிட்டபோய் பாட்டு வாங்கவேண்டியிருக்கு ? ரெண்டு மன்த்லி எக்ஸாம்ல தொடர்ந்து ·பெயிலானா ஸ்கூலைவிட்டே அனுப்பிடுவாங்களாம், தெரியுமா ?' என்றாள் மூச்சிறைக்க.

'அதெல்லாம் சரிதான் மது, ஆனா சின்னக் குழந்தையை எக்ஸாம், அது, இதுன்னு பாடுபடுத்தறதே எனக்கு சரியாப் படலை, அவளுக்கு இதுதான் உலகத்தைப் பார்த்துத் தெரிஞ்சுக்கற வயசு' என்றான். அவளுடைய புரியாதபார்வையை கவனித்து, 'நான் உன்னை குத்தம்சொல்லலைம்மா, இந்த சின்ன வயசிலயே, சேணம் கட்டிக்கிட்ட குதிரைமாதிரி மார்க்குக்குப்பின்னால ஓடறதுக்குமட்டும் பிள்ளைகளைத் தயார்படுத்தற இந்தக் கல்விமுறையே தப்பு-ன்னு சொல்றேன்' என்றான், 'ஆறாங்கிளாஸ் வரைக்கும் நான் ஒரு எக்ஸாம்கூட சீரியஸா படிச்சு எழுதினதுகிடையாது தெரியுமா ? இப்போ நான் என்ன குறைஞ்சா போயிட்டேன் ?' என்று கைகள்விரித்தான். வெய்யில்மெல்ல உறைக்க ஆரம்பித்திருந்தது.

அவனுடைய நீளமான வாதங்களுக்கெல்லாம் அவளுடைய பதில் சுருக்கமாய் இருந்தது, 'நீங்க சொல்றதெல்லாம் உங்க காலத்துக்கு சரியா இருக்கலாம் மதன், இன்னிக்கு உலகம் ரொம்ப வேகமா போயிட்டிருக்கு, இந்த காலத்துக் குழந்தைங்க இந்த வயசிலிருந்தே இப்படிப் படிச்சாதான் நாளைக்கு ஒரு நல்ல பொசிஷனுக்கு வரமுடியும்', சற்று யோசித்து, 'ஆறு வயசானாலும், அறுபது வயசானாலும், வாழ்க்கையை யாரும் லேசா எடுத்துக்க முடியாத காலம் இது' என்றாள் ஆங்கிலத்தில்.

அவன் சம்மதமாய்த் தலையாட்டினான், 'உண்மைதான்'. ஒப்புதலும் வருத்தமும் சமவிகிதத்தில் கலந்திருந்தது அவன் குரலில்.

****

மதியம் உணவு இடைவேளையின்போது அலுவலகத் தோழி பரிமளாவிடம் இதைப்பற்றி கொஞ்சநேரம் பேசினான். இவன் சொன்னதையெல்லாம் கேட்டு அவள் பெரிதாய் சிரிக்க ஆரம்பித்துவிட்டாள், 'அப்படியே எங்க வீட்டில நடக்கறதை கண்ணாடியில பார்த்தமாதிரி இருக்கு மதன்'
அவன் தப்பான ஆளிடம் நியாயம்கேட்க வந்துவிட்டோமோ என்று அவளை சந்தேகமாய்ப் பார்த்தான், அவள் மறுபடி சிரித்து, 'உங்க வொய்·ப் மாதிரிதான் என் ஹஸ்பண்ட், என்னேரமும் படிப்பு, படிப்புன்னு பையனைப்போட்டு வாட்டி எடுக்கறார் பாவம்' என்றாள்.

'இது சிரிக்கிற விஷயமில்லை பரிமளா' என்றான் அவன்.
'சிரிக்காம என்ன பண்ணச் சொல்றீங்க மதன் ? நான் எவ்வளவோ சொல்லியும் அவர் கேட்கிறதா இல்லை. இப்பவே நல்லா படிச்சாதான் நாளைக்கு அவரைமாதிரி பெரிய ஆ·பீசரா வரமுடியுமாம். டெய்லி அவர் ராத்திரி ஆ·பீஸ்லயிருந்து வந்ததும் எந்நேரமானாலும் அன்னிக்கு ஸ்கூல்ல நடத்தின பாடத்தையெல்லாம் அவர்கிட்டே சொல்லியாகணும், பாடத்தில எது இருக்கு, எது இல்லைன்னுகூட தெரியாம அவர் கேட்கிற அறிவுஜீவிக் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லணும், இல்லைன்னா திட்டு, அடி. அவன் எழுதற வீட்டுப்பாடத்தையெல்லாம் வாத்தியாருக்கு முன்னால இவர் கரெக்ட் பண்றார், எதுனா தப்பா இருந்தா உடனே திரும்ப எழுதச் சொல்றார்' அவள் இன்னும் சொல்லிக்கொண்டே போனாள். அவனுக்கு ப்ரியாவின்மேல் இருந்த கருணை உலகத்தின் எல்லாக் குழந்தைகளின்மேலும் பரந்துபரவியது.

'சொன்னா நம்பமாட்டீங்க மதன், ஆ·பீஸ் விஷயமா பாம்பே, கல்கத்தான்னு அவர் டூர் போனாக்கூட, ராத்திரியானதும் அங்கயிருந்து எஸ். டி. டி போட்டு இவன் படிச்சானா-ன்னு விசாரிக்கிறார், ·போன்லயே கேள்வி கேட்கிறார், பதில் சொல்லலைன்னா கன்னாபின்னான்னு திட்டு', இப்போது இருவரும் சேர்ந்து சிரித்தார்கள், 'வயலின் கத்துக்கறேன்னு ஆசையாக் கேட்டான் பையன், முடியவே முடியாது-ன்னு சொல்லிட்டார்'
'ஏன் ?'
'டான்ஸ், ம்யூசிக்ன்னு திரிஞ்சா கவனம் சிதறிப்போயிடுமாம், படிப்பு ஏறாதாம்' அவள் விரக்திப்புன்னகையுடன், 'அந்த சரஸ்வதி காதிலவிழுந்தா, கையிலிருக்கிற வீணையாலயே தலையில போடுவா' என்றாள்.

'அந்த விஷயத்தில என் வொய்·ப் எவ்வளவோ பரவாயில்லை, டான்ஸ், கராத்தே, ·ப்ரெஞ்ச், கர்நாடக சங்கீதம்-ன்னு தினமும் நாலு க்ளாசுக்கு ப்ரியாவை மதுதான் கூட்டிட்டுப் போறா' என்று வாட்சைப்பார்த்துவிட்டு, 'ரெண்டு மணி ஆகப்போகுது, இன்னேரம் கிளம்பியிருப்பா' என்றான்.

****

மது கண்விழித்துப் பார்த்தபோது மணி இரண்டேகால். இன்றைக்கும் லேட்டாகிவிட்டது. அவசரமாய் எழுந்து எதிரில் ஓடிக்கொண்டிருந்த டிவியை அணைத்தாள். ஏதோ சீரியல் பார்த்துக்கொண்டிருந்ததாய் தூரத்து ஞாபகம். எப்படியோ தூக்கம்வந்துவிட்டது. பாத்ரூமுக்குப்போய் ஜிலீர் நீரை முகத்தில் அறைந்து தூக்கத்தை விரட்டினாள். கண்கள் லேசாய் சிவந்திருந்தது. உடைமாற்றிக்கொண்டு வட்டப்பொட்டும் நெற்றியில் குங்குமத்தீற்றலுமாய் அவள் படியிறங்கி வந்தபோது டிரைவர் தயாராய்க் காத்திருந்தான். 'போலாமாம்மா' 'சீக்கிரம் கிளம்பு மணி, குழந்தை காத்துட்டிருப்பா' என்று அவனை விரட்டினபடி காரில் ஏறி உட்கார்ந்தாள். இருபது நிமிட பயணத்துக்குப்பிறகு, நகரின் மையப்பகுதிக்கு வந்தார்கள். பரபரப்பான பஸ் ஸ்டாப்பினருகில் வழக்கமாய் சந்திக்கிற இடத்தில் பள்ளிச்சீருடையில் அழுக்கு படிந்திருக்க, கைகளைக் கட்டினபடி எதிரிலிருந்த சினிமா பேனரை பார்த்துக்கொண்டிருந்தது குழந்தை. காரைப்பார்த்ததும் சிநேகமில்லாமல் அருகில்வந்து கதவுதிறந்து, 'ஏம்மா இன்னிக்கும் லேட் ?' என்றது கோபமாய். 'சாரிடா கண்ணா, மம்மிக்கு தூக்கம் வந்துடுச்சு' என்றாள் குற்ற உணர்ச்சியில் தலைகுனிந்து. குழந்தை ஒன்றும் பேசாமல் ஏறி உட்கார்ந்தது. கார்கிளம்பியபிறகு, 'மிஸ் இன்னிக்கும் திட்டப்போறாங்க' என்றாள் கைகளைக் கட்டிக்கொண்டு. புத்தகப்பையையும், டிபன்பாக்ஸையும் பின்பக்கம் வீசி எறிந்தாள். 'டோன்ட் வொர்ரி, நான் அவங்ககிட்டே சொல்றேன்' என்றபடி பையிலிருந்து வேறு உடை எடுத்தாள், 'சீக்கிரம் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிக்கோ, நாளையிலருந்து மம்மி கரெக்ட் டைம்க்கு வந்துடுவேன், சரியா !' என்று அவளை முத்தமிட்டாள். குழந்தை முகம் உம்மென்றிருந்தது இன்னும் மாறவில்லை.

****

ஒவ்வொரு இடத்திலும் முக்கால் மணி நேரம், ஒரு மணிநேரம் என்று கடைசியாய் ம்யூசிக் க்ளாஸ் முடியும்போது ஆறரை மணியாகிவிட்டது. அதற்குள் மது காலையில் வாங்கிய ·பெமினாவை ஒருவரி மீதமில்லாமல் படித்து, காரின் பின் சீட்டில் எத்தனை மடிப்புகளாய் குஷன் படிந்திருக்கிறது என்பதை இருபத்தெட்டுமுறை எண்ணி முடித்திருந்தாள். டிரைவர், கண்ணாடியைத் தட்டி அவளை எழுப்பினபோது ப்ரியாவும், ம்யூசிக் டீச்சரும் படிகளில் இறங்கிவருவது மங்கலாய்த் தெரிந்தது. அவசரமாய் எழுந்து கார் கதவைத் திறந்துகொண்டு வெளியேவந்தாள். குட்டிக் கண்ணாடியில் பொட்டை ஒருமுறை சரிபார்த்துக்கொண்டு ஓட்டமும் நடையுமாய் அவர்களை எதிர்கொண்டாள், 'எப்படி இருக்கீங்க டீச்சர் ?' அந்த அம்மாள் மூக்குக்கண்ணாடியை ஏற்றிவிட்டுக்கொண்டு வெள்ளையாய் புன்னகைத்தார்கள், 'உங்களுக்கும் நான் டீச்சர்தானா ?', அவர் கையைப் பிடித்தபடி நின்றிருந்த ப்ரியாவும் புரிந்ததுபோல் சிரித்தாள். குழந்தைகளின் சிரிப்புக்கும், முதியவர்களின் சிரிப்புக்கும்தான் வித்தியாசமே தெரிவதில்லை. அந்த அம்மாளுக்கு எழுபது வயதாவது இருக்கும் என்பது மதுவின் ஊகம். அந்த காலத்திலேயே தமிழகப் பிரபலம். அபாரமான ஞானம், ஏழு வயதில் மேடையேற ஆரம்பித்து, கொஞ்சம்கொஞ்சமாய் புகழின் உச்சிக்கு வந்தவர். கல்யாணமானபிறகு ஏனோ கச்சேரிகள் பண்ணுவதில்லை. ஆனால், சங்கீதத்துக்கு என்னால் ஆனதை கிள்ளிப்போடுவேன் என்று பிடிவாதமாய் இந்த வயதிலும் சின்னதாய் ஒரு ம்யூசிக் ஸ்கூல் வைத்து நடத்திக்கொண்டிருக்கிறார். மதுவுக்கு அவர்கள்பேரில் ரொம்பவும் மரியாதை. அவரிடம் தன் மகள் படிப்பதைப் பெரிய கௌரவமாய் நினைத்திருந்தாள். 'பிரமாதமா பாடறா உங்க பொண்ணு' மௌனத்தைக் கலைத்துச் சொன்னார் அவர். மது கைகுவித்து, 'எல்லாம் உங்க ஆசிர்வாதம்தான்' என்று மிகஉண்மையாய்ச் சொன்னாள். அவர் சிரித்துக்கொண்டார், 'நல்ல குரல்ங்கறது பகவான் கொடுக்கிறது, அதை ஒழுங்கா உபயோகப்படுத்திப் பாடறதுக்கு நிறைய சிரத்தை வேணும், ரெண்டு விஷயத்திலயும் உங்க பொண்ணு ரொம்ப அதிர்ஷ்டசாலி, எது சொல்லித்தந்தாலும் ரொம்ப வேகமா பிடிச்சுக்கறா !', அவர் ப்ரியாவைத் தன்னோடு சேர்த்து கட்டிக்கொண்டார், 'என்ன தவம் செய்தனை-ன்னு இன்னிக்குப் பாடினா பாருங்க, கண்ணுல தண்ணி வழியறதுகூட தெரியாம அப்படியே உட்கார்ந்துட்டேன்' என்றபடி அனிச்சையாய் மதுவின் கைகளைப் பற்றினார் அவர். மது சொல்வதறியாத சிலிர்ப்புக்கிடையே நின்றிருந்தாள். அவர்தான் மீண்டும் பேசியது. 'லேட்டாயிடுச்சு போலிருக்கே, நீங்க கிளம்புங்க', இன்னும் அவள் கையை விடுவிக்காமல், குழந்தையை முன்னே நகர்த்தி, 'நீ காருக்குப் போ ப்ரியா' என்றார் அவர். ஷ¤ சப்திக்க அவள் திரும்பி ஓடுவதையே சிலவிநாடிகள் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு, 'மார்னிங் குழந்தையை ரொம்ப சீக்கிரமா எழுப்பிடறீங்களோ ?' என்றார் எதிர்பாராத ஒரு விநாடியில். 'என்ன ?' அந்தக் கேள்வியின் திடீர்மை மதுவுக்கு ஒன்றும் புரியாமல் செய்துவிட்டது. அவர் அந்த வாக்கியத்தை திரும்பச்சொல்ல விரும்பாதவர்போல, 'குழந்தை பாடிக்கிட்டே இன்னிக்கு என் மடியில தூங்கிட்டா' என்றார் எங்கோ பார்த்துக்கொண்டு.

****
கார் கிளம்பியவுடன் அவளுடைய செல்·போனில் மதன், 'ஒரு மணி நேரமா வெயிட் பண்ணிட்டிருக்கேன்' 'ஸாரி டியர், கொஞ்சம் லேட்டாயிடுச்சு, இன்னும் பத்து நிமிஷத்தில அங்க இருப்போம்' 'வேண்டாம், நீங்க வீட்டுக்குப்போங்க, நான் ஆட்டோ பிடிச்சு வந்துக்கறேன்' வைத்துவிட்டான். நியாயமான கோபம். அவள் பெருமூச்சுடன் திரும்பிப்பார்த்தபோது வாயில் கட்டைவிரலைப் போட்டுக்கொண்டு ப்ரியா தூங்கிப் போயிருந்தாள், துணைக்கு அம்மாவின் துப்பட்டா. மது அவளுடைய நெற்றியை மெல்லமாய் வருடிக்கொடுத்தாள். விரலை எடுத்துவிட்டபோது, ஒரு சிணுங்கலுடன் திரும்பிப் படுத்துக்கொண்டாள் ப்ரியா. மொய்க்கும் போக்குவரத்தில் நிதானமாய் பயணித்து அவர்கள் வீட்டுக்குப்போனபோது, மதன் முழு அலங்காரத்தில் இருந்தான். 'என்ன ரொம்ப ·ப்ரெஷ்ஷா தெரியறீங்க ?' என்றபடி மது உள்ளேபோனாள். ப்ரியா ஒருமுறை அவளைப் பார்த்துவிட்டு, 'அப்ப்ப்பா' என்று அவன்மேல் தொற்றிக்கொண்டாள். அவன் அவளுடைய மூக்கில் மூக்குவைத்து உரசி, 'ப்ரியாக்குட்டிக்கு இன்னிக்கு ஸ்கூல்ல என்ன சொல்லிக்கொடுத்தாங்க ?' என்று கேட்டதற்கு, அவள், 'எந்த ஸ்கூல்ல ?' என்றாள். அவன் பதில்சொல்லாமல் உள்ளேபார்த்து, 'மது, இன்னிக்கு எங்க மேனேஜர் பொண்ணு கல்யாண ரிசப்ஷன், ஞாபகம் இருக்கா ?' என்றான். உள்ளேயிருந்து பெரிதாய் சிரிப்புச்சத்தம் கேட்டது, 'அதானே பார்த்தேன், என்னடா ஐயா ஆ·பீஸ்லருந்து வந்து புதுமாப்பிள்ளை மாதிரி ரெடியாகி உட்கார்ந்திருக்கார்ன்னு'. 'கிண்டலெல்லாம் அப்புறம் வெச்சுக்கலாம், முதல்ல கிளம்பு' என்றுசொல்லிவிட்டு, 'நீயும் வரியாடா ?' என்றான் குழந்தையிடம். குழந்தை அவன் கன்னத்தில் ஒரு முத்தம்வைத்து, 'வரேம்பா' என்றது. பரிசுப் பார்சலும் பட்டுப்புடவையுமாய் மது வந்தாள், 'நீங்க கோபமா இருப்பீங்க-ன்னு தெரியும், அதான் சொல்லாமலே ரெடியாகிட்டேன்' என்று விளம்பரப்பெண்போல கைகளை விரித்து, 'இந்தப்புடவை எப்படி இருக்கு எனக்கு ?' என்றாள். அவன் பதில்சொல்வதற்குள் ப்ரியா அவன் காதில், 'அப்பா, அம்மாவை எனக்கும் ஸாரி கட்டிவிடச் சொல்லுங்க' என்றுசொல்லிவிட்டு, வெட்கத்தில் முகத்தை மூடிக்கொண்டது. அவன் கலகலவென்று சிரித்தான். 'என் பொண்ணு சேலையில உன்னைவிட அழகாயிருப்பா' என்றான் அவளிடம். 'உங்க அழகியைக் கொஞ்சம் இறக்கிவிடுங்க, டிரெஸ் மாத்தணும்', அவள் சொல்லிமுடிப்பதற்குள் குழந்தை தானாய் இறங்கி பீரோ பக்கத்தில்போய் நின்றுகொண்டது. எந்த உடையைத் தேர்ந்தெடுப்பது என்று அம்மாவும், பெண்ணும் இன்னும் கொஞ்ச நேரத்துக்கு அமர்க்களம்தான்.

****
டிரைவரை வீட்டுக்குப் போகச்சொல்லிவிட்டு மதன் காரை எடுத்தான், 'மெதுவா ஓட்டணும் மதன்' ஒருமுறைக்கு இரண்டுமுறையாய் சொன்னாள் மது. அவள் மடியில் அமர்ந்திருந்த ப்ரியா காரின் முன்னால் தொங்கிக்கொண்டிருந்த கரடியின் தாடையில் தட்டியதும் அது 'க்வீக், க்வீக்' என்று சப்தமிட்டது. கல்யாண வரவேற்பு நடக்கிற ஹோட்டல் பக்கத்தில்தான். காரை நிறுத்திவிட்டு, ப்ரியாவைத் தூக்கிக்கொண்டு படிகளில் ஏறும்போது மது கண்டிப்பாய்ச் சொன்னாள், 'போனோமா, கி·ப்ட் பார்சலைக் கொடுத்தோமா, மரியாதைக்கு நாலு வார்த்தை பேசிட்டு திரும்பி வந்தோமான்னு இருக்கணும், எனக்கு இங்கே யாரையும் தெரியாது, பேந்தப்பேந்த முழிச்சிட்டிருப்பேன்', அவன் ப்ரியாவின் கன்னத்தில் கிள்ளி, 'டோன்ட் வொர்ரி, உனக்காக இல்லைன்னாலும், இவளுக்காக கிளம்பிடுவேன்' என்றான். 'இவளுக்காகவா ?' 'ம், போற வழியில இவளை விளையாட கூட்டிட்டுப்போறதா ப்ராமிஸ் பண்ணியிருக்கேன்' என்றதும், குழந்தை பெருமையாய் நெஞ்சுநிமிர்த்தி, 'ஆம்மாம்' என்றது. எங்கும் ரோஜா வாசனை.

****
மது எதிர்பார்த்ததுபோலவே தாமதமாகிவிட்டது. கல்யாண வீட்டில் சாப்பிட்டுவிட்டுத்தான் போகவேண்டும் என்று கண்டிப்பாய் சொல்லிவிட்டார்கள். ப்ரியாவுக்கு அந்த வடக்கத்தி ப·பே ஒத்துக்கொள்ளவில்லை. ஐஸ்க்ரீம் மட்டும் மூன்று உருண்டைகள் சாப்பிட்டாள். குலோப் ஜாமூன் ஜீராவை புது சட்டையில் கொட்டிக்கொண்டதற்காக மதுவுக்கு அவள்மேல் கோபம். படியிறங்கி வந்தபோது ப்ரியாவை மதன் தூக்கிக்கொண்டான்.
இருட்டில் காரைத் தேடிப்பிடித்து கார்சாவியைப் பொருத்துவதற்குள், 'விளையாடப் போகணும் டாடி' என்றாள் ப்ரியா.
'லேட்டாயிடுச்சுடி, எல்லாம் க்ளோஸ் பண்ணியிருப்பாங்க' என்றாள் மது. குழந்தை அவளை நம்பாமல் அவனைக் கேள்வியாய்ப் பார்த்தது. அதன் எதிர்பார்ப்பைக் கலைக்க மனமில்லாமல், 'எதுக்கும் போய்ப் பார்க்கலாம் மது' என்றபடி காரைக் கிளப்பினான்.
அவர்கள் வீட்டிலிருந்து நான்கைந்து கிலோமீட்டர் பக்கத்தில் ஒரு பெரிய ஷாப்பிங் காம்ப்ளக்ஸ். சுற்றிலும் பளபள கடைகள் காசுஇழப்பதற்கு அழைக்க, மையத்தை குழந்தைகளுக்கான விளையாட்டுப் பிரதேசமாய் செய்திருந்தார்கள். குதிரைபோலும், ரயில்போலும், பஸ்கள்போலும் முன்னும் பின்னும் நகர்ந்து, ஓடுவதுபோல் சத்தமிட்டு பாவ்லா காட்டுகிற பெரிய பொம்மைகள், வீடியோ கேம்கள், சறுக்குமரம், அப்புறம் ஒரு சின்ன அறை முழுக்க பலவண்ணத்தில் குழந்தைகள் வீசி எறிந்து, மேலே படுத்துக் குதூகலிக்கிற மெத்மெத் பந்துகள், இன்னும் நிறைய விளையாட்டு சமாச்சாரங்கள் அங்கே இருந்தன. ஒரு விளையாட்டுக்கு ஐந்துரூபாய்.
அவர்கள் அங்கே வந்தபோது அநேகமாய் எல்லாக் கடைகளிலும் ஷட்டர் இறக்கிக்கொண்டிருந்தார்கள். நம்பிக்கையே இல்லாமல்தான் மதன் காரை நிறுத்தினான். எஞ்சினின் இயக்கம் நின்ற மறுவிநாடி கதவைத் திறந்துகொண்டு வெளியே ஓடினாள் ப்ரியா. காரைப் பூட்டிக்கொண்டு, பிரதட்சணம்போல அதனை ஒரு சுற்று சுற்றிவந்து எல்லாக் கதவுகளையும் சோதித்துவிட்டு அவர்கள் படியேறியபோது, உள்ளே வெளிச்சத்தை இருட்டு மெல்லமாய் தின்னப்பார்த்துக்கொண்டிருந்தது. குழந்தை ஏமாற்றத்துடன் கட்டிடத்தின் ஒவ்வொரு மூலையாய் ஓடித் தேடிக்கொண்டிருந்தது. எல்லா பொம்மைகளையும் ஊமையாக்கி சங்கிலிபோட்டுக் கட்டிவைத்திருக்க, அவைகளும் ப்ரியாவை வருத்தத்துடன் பார்த்ததுபோல் தோன்றியது.
குழந்தை முகத்தில் ஏமாற்றம் வெளிப்படையாய்த் தெரிந்தது படபடவென்று ஓடிவந்து அவன் கால்களைக் கட்டிக்கொண்டது. ஒரு கூர்க்கா எட்டிப்பார்த்து, 'எட்டரைக்கு க்ளோஸ் சார்' என்றான். அழாமல் அழுகிற குழந்தையைக் கண்டதும் அவனிடத்தில் கருணை தெரிந்தது. ஆனால் சங்கிலியில் கட்டிப்போட்ட பொம்மைகளை இயக்கும் மந்திரம் அவனுக்கு நிச்சயமாய்த் தெரிந்திருக்காது.
மதன், 'ஸாரிடா கண்ணா' என்றான் தூக்கிக்கொண்ட குழந்தையிடம், 'என்னாலதான் லேட்டாயிடுச்சு !', அவனுக்கு ரொம்ப உறுத்தலாய் இருந்தது. மதுவைப் பார்ப்பதைத் தவிர்த்தான். குழந்தை யாரையும் குற்றம்சாட்டாததுபோல், 'போலாம்பா' என்றது கம்மிய குரலில்.
'உனக்கு வேறென்ன வேணும் சொல்லு, பலூன் வாங்கலாமா ?' என்று பழக்கமான இடதுபுறம் திரும்பினால், அந்தக் கடையும் பூட்டியிருந்தது, குழந்தை வரிவரியான ஷட்டர்களை வெறித்துப்பார்த்துவிட்டு, 'எதுவும் வேண்டாம்பா, வீட்டுக்குப் போலாம்' என்று அவன் தோளில் தலைபுதைத்துக்கொண்டது. மௌனமாய்த் திரும்பிநடந்தார்கள். ப்ரியாவின் முதுகு லேசாய் குலுங்கி அடங்கிக்கொண்டிருந்தது.
அவர்கள் காரை நெருங்குமுன்னால், எதிர்திசையில் ஒரு யானை அசைந்து அசைந்து நடந்துவந்தது. மதனுக்கு ஆச்சரியம் தாளமுடியவில்லை. நகர வீதிகளில் எப்படி யானை ? கோயில் யானையாய் இருக்குமோ ? பத்தடிக்கு ஆறடி என்று சுருங்கிவிட்ட இந்நாள் கோயில்களில் பூனை வளர்ப்பதுகூட சாத்தியமில்லை.
யோசனையை அவசரமாய்க் கலைத்து ப்ரியாவின் முதுகில் தட்டினான், 'ப்ரியா, இங்க பாரேன்'
குழந்தை அஸ்வாரஸ்யமாய் வாயில் எச்சில் ஒழுக திரும்பிப்பார்த்ததும், அதன் கண்கள் பெரிதாய் விரிந்தது, 'ஐ, யானை'. டிஸ்கவரி சேனலிலும், சில கார்ட்டூன்களிலும், பள்ளிப் புத்தகத்தில் ஒருமுறையும் யானையைப் பார்த்திருக்கிறாள் அவள். 'எவ்ளோஓஓ பெரிசா இருக்கு ?', பொருளில்லாத ஒரு குதூகல ஒலி அவளிடமிருந்தது வெளிப்பட்டது.
யானைப்பாகன் அதன் பக்கத்தில் மெல்லமாய் நடந்துவந்துகொண்டிருந்தான். கையில் ஜவுளிக்கடை மஞ்சள் பை. இவர்களைப் பார்த்ததும் விளக்குக் கம்பத்தினருகில் யானையை நிப்பாட்டினான். யானையின்மேல் மஞ்சள் வெளிச்சம் போதாமல் படர, அது சின்னக் கண்களால் மேலே ஒளிர்கிற மெர்க்குரி விளக்கை சந்தேகமாய்ப் பார்த்துவிட்டு துதிக்கையை மெல்ல உயர்த்தியது.
அவன் சாலையைக் கடந்து யானையின் பக்கமாய்ப் போனான். குழந்தை பயத்தில் அவனோடு இன்னும் ஒட்டிக்கொண்டுவிட்டது. ஆனால் தலையை மட்டும் யானையின்பக்கம் திருப்பியபடி, அதன் பாறை உடம்பை, கனத்த கால்களை, லேசாய்ச் சிதைந்த தந்தங்களை, துதிக்கையை, நெற்றி நாமத்தை, இன்னும் அந்த அரையிருட்டில் கண்ணில்பட்ட எல்லாவற்றையும் அதிசயமாய்ப் பார்த்துக்கொண்டிருந்தது. புத்தகத்தில் படித்த, பார்த்த யானைகளெல்லாம் அதற்கு மறந்து போயிருந்தது. இதுதான் நிஜ யானை, அதற்காக இவ்வளவு பெரிதாகவா இருக்கும் ?
ரொம்ப பக்கத்தில் போனபிறகு குழந்தைக்கு தைரியம் சேர்ந்திருக்க வேண்டும். அவன் தோள்களைவிட்டு லேசாய் நகர்ந்து, பிஞ்சுக்கைகளை நீட்டி யானையைக் கண்ணுக்கருகில் லேசாய் தொட்டுப்பார்த்துவிட்டு சட்டென்று கையை விலக்கிக்கொண்டாள். பாசாங்கில்லாத சிரிப்பு ஒன்று அவளிடத்தில் மலர்ந்தது. யானையும் லேசாய் சிரித்ததுபோல் இருந்தது அவனுக்கு.
கையில் வைத்திருந்த ஐந்து ரூபாய் நாணயத்தை யானைக்குத் தரவேண்டும் என்று ப்ரியாவுக்கு ஆசையாய் இருந்தது. ஆனால், யானையின் கைகளை அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை. மதன் அவள் தேடுவதைப் புரிந்துகொண்டு, யானையின் துதிக்கையைச் சுட்டிக்காட்டினான், 'யானைக்கு இதுதான் கை' என்றான்.
'ஒரு கைதானா டாடி ?' என்றாள் ப்ரியா சந்தேகமாய்.
கொஞ்சம் தள்ளி நின்றிருந்த மது, 'தெரியாததுமாதிரி கேட்கிறா, ஏண்டி போனவாரம்தானே படம் காட்டி சொல்லித்தந்தேன், ட்ரங்க் - ஸ்பெல்லிங் சொல்லு' என்றாள். அவன் அவளைத் திரும்பி முறைத்தான்.
குழந்தை மெல்லமாய்க் குனிந்து துதிக்கையின் நுனியைத் தொட முயன்றது. அவனும், யானையும் ஒரேநேரத்தில் முன்னால் நகர்ந்து அவள் காசுபோட உதவினார்கள். காசை வாங்கிக்கொண்ட யானை ஆசிர்வதிப்பதற்காக துதிக்கையைத் தூக்கியபோது ப்ரியா பயத்தில் கண்ணை மூடிக்கொண்டுவிட்டாள். இலவம்பஞ்சுத் தலையணையால் ஒற்றினதுபோல யானை இருவரையும் தலைதொட்டு வாழ்த்தியது. குண்டான பாகனிடம் காசு போய்ச்சேர்ந்ததும் அவனும் ஒரு சலாம் போட்டுவிட்டு யானையின் சங்கிலியைப் பிடித்து சொடுக்கினான். இருவரும் ஆடி அசைந்து நடக்க ஆரம்பித்தார்கள். யானையின் குட்டைவால் அதன் பின்புறத்தில் நாட்டியமாட, இருட்டுப் பின்னணியில் அவர்கள் நடப்பது ஏதோ சினிமாவின் கடைசிக் காட்சிபோலத் தோன்றியது அவனுக்கு.
குழந்தையைப் பின்சீட்டில்விட்டு, இருவரும் முன்னால் உட்கார்ந்தார்கள். காரைக் கிளப்புமுன் மது மெல்லமாய் சிரித்துக்கொண்டாள், அவன் தோள்களில் லேசாய் சரிந்து, 'யானைமேல சவாரி போகணும்ன்னு இவ கேட்டுடுவாளோன்னு பயந்துட்டே இருந்தேன், நல்லவேளை' என்றாள் சத்தமெழாமல். அவன் பெரிதாய்ச் சிரித்துவிட்டு, 'யானைச்சவாரி பண்ற ஆசை குழந்தைக்கா, அம்மாவுக்கா ?' என்று கண்ணடித்தான். அவர்கள் பேசுவதில் கவனமில்லாத குழந்தை பின் கண்ணாடிவழியே தூரத்தில்போகிற யானையையே இன்னும் பார்த்துக்கொண்டிருந்தது. அதன் ஒவ்வொரு பார்வைத்துணுக்கிலும் அளவில்லாத உற்சாகமும், சந்தோஷமும், முன்னெப்போதும் அவர்கள் பார்த்திராத ஆனந்தமும்.
இன்றிரவும் அவள் கனவில் தேவதை வருவாள். யானையின் மேலேறி.

****
நன்றி: 'கல்கி' தீபாவளி மலர்

நகைச்சுவை 3

மனை‌வி - ஏ‌ங்க உ‌ங்க ‌பிர‌ண்டு‌க்கு பா‌ர்‌திரு‌க்குற பொ‌ண்ணு ந‌ல்லாவே‌யி‌ல்லையே... ‌நீ‌ங்களாவது சொ‌ல்ல‌க் கூடாதா?

கணவ‌ன் - நா‌ன் ஏ‌ன் சொ‌ல்லணு‌ம்.

மனை‌வி - ‌நீ‌ங்க‌ அவர் ‌‌பிர‌ண்டுதானே

கணவ‌ன் - அவ‌ன் ம‌ட்டு‌ம் என‌க்கு சொ‌ன்னானா எ‌ன்ன?

நகைச்சுவை 2

பஸ்ஸில் போகும் போது என் பையில் ஒருத்தன் பிளேடு போட்டுட்டான்.

அப்புறம் என்னாச்சி

பிளேடை தூக்கி வெளியில் போட்டு விட்டேன்.

நகைச்சுவை 1

இந்தப் படத்துல நன்றியுள்ள ஒரு நாய் காணாமப் போயிடுது சார். கடைசியில,
அதுவாவே சில நாய்ங்ககிட்ட விசாரிச்சு வழி கண்டுபிடிச்சு வீட்டுக்குத்
திரும்பிடுது!"

"படத்தோட பேரு?"

"ஜிம்மி ரிடர்ன்ஸ்!"

வாழ்க்கைப் பாடம்

அந்த ஆசிரியரை எல்லா மாணவர்களும் நேசித்தார்கள். காரணம் கஷ்டமான பாடத்தையும் எளிமையான உதாரணங்களைக் கொண்டு புரிய வைப்பதில் அவர் வல்லவராக இருந்தார். அவரிடம் படித்த மாணவர்கள் பெரிய பெரிய பதவிகளை வகித்தார்கள். பலரும் பல நாடுகளுக்குச் சென்று பிரகாசித்தார்கள். பெரிய தொழிலதிபர்களாகத் திகழ்ந்தார்கள். அவர்களுக்கு எத்தனையோ ஆசிரியர்கள் இருந்திருந்த போதிலும் அவர் மேல் காட்டிய அன்பையும் மரியாதையையும் அவர்கள் மற்றவர்களிடம் காட்டவில்லை. அந்த ஆசிரியரிடம் மட்டும் பெரும்பாலான மாணவர்கள் இன்னும் கடிதம் மூலமும், ஈ மெயில் மூலமும் தொடர்பு வைத்திருந்தார்கள்.

அவரும் தன் மாணவர்களை மிகவும் நேசித்தார். அவர்களுடைய வெற்றியை தன் சொந்தப் பிள்ளைகளின் வெற்றியென அவர் மகிழ்ந்தார். ஆனால் ஒரே ஒரு உண்மை மட்டும் அவர் மனதில் நெருடலாக இருந்தது. பதவி, பணம், கௌரவம் ஆகியவற்றில் உயர்ந்து விளங்கிய அவருடைய மாணவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக அவருக்குத் தெரியவில்லை. அவர்கள் அனுப்பிய கடிதங்களும், ஈ மெயில்களும் அதைக் கோடிட்டுக் காண்பித்தன. மன உளைச்சல்கள், பிரச்சனைகள் நிறைந்த வாழ்க்கை முறையில் அவர்கள் வாழ்ந்து வந்தார்கள் என்பதை அவர் உணர்ந்தார். பெரிய பெரிய சாதனைகள் புரிய ஓடிக் கொண்டிருந்த ஓட்டத்தில் மகிழ்ச்சியை அவருடைய மாணவர்கள் தொலைத்திருந்தார்கள்.

அவருடைய மாணவர்கள் எல்லோரும் அவருடைய எழுபதாவது பிறந்த நாளுக்கு ஒன்று சேர்ந்து அவரைக் கௌரவிக்க முடிவு செய்தார்கள். அவருக்கு அது போன்ற பிறந்த நாள் விழாக்களில் பெரிய ஈடுபாடு இல்லை என்றாலும் அவர்கள் அன்பை மறுக்க முடியாததால் அதற்கு சம்மதித்தார். பெரியதொரு அரங்கத்தில் அவர்கள் அவருடைய பிறந்த நாளன்று ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அவர் அதற்கு முந்திய நாள் தன் வீட்டில் தேனீர் அருந்த அவர்கள் அனைவரையும் வரச் சொன்னார்.

உள்நாட்டிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் பல மாணவர்கள் அவருடைய பிறந்த நாளுக்கு முந்தைய நாளே அவர் வீட்டில் கூடினார்கள். அவரைக் கண்டதில் அவர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அவரும் அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்று உரையாடினார். பின் தன் சமையலறைக்குச் சென்ற அவர் பெரிய பாத்திரம் ஒன்றில் தயாரித்து வைத்திருந்த சூடான தேனீரைக் கொண்டு வந்தார். மேசை மீது வைத்திருந்த வித விதமான தம்ளர்களைக் காண்பித்து அவர்களை தாங்களே ஊற்றிக் கொண்டு குடிக்கச் சொன்னார்.

மிக அழகான வேலைப்பாடுடைய பீங்கான் தம்ளர்கள், வெள்ளி தம்ளர்கள், சாதாரண தோற்றமுள்ள எவர்சில்வர் தம்ளர்கள் அழகில்லாத அலுமினியத் தம்ளர்கள், ப்ளாஸ்டிக் தம்ளர்கள் என்று பல வகைப்பட்ட தம்ளர்கள் மேசை மீது இருந்தன. விலையுயர்ந்த தம்ளரிலிருந்து மிக மலிவான தம்ளர் வரை இருந்ததைக் கவனித்த மாணவர்கள் இயல்பாகவே விலையுயர்ந்த, அழகான தம்ளர்களையே தேர்ந்தெடுத்துக் கொள்வதில் முண்டியடித்துக் கொண்டு போனார்கள். அந்தத் தம்ளர்களில் தேனீரை ஊற்றிக் குடித்த அவர்கள் தேனீரின் சுவை பற்றி ஆசிரியரிடம் புகழ்ந்தார்கள். அந்த ஆசிரியர் ஒரு தேயிலைத் தோட்டத்தில் பிரத்தியேகமாகச் சொல்லித் தருவித்த உயர்தரத் தேயிலை உபயோகித்து அந்தத் தேனீரைத் தயாரித்ததை அவர்களிடம் தெரிவித்தார்.

பின் கேட்டார். ”எத்தனையோ பாடங்கள் உங்களுக்கு சொல்லித் தந்திருக்கிறேன். இப்போது ஒரு வாழ்க்கைப் பாடத்தையும் உங்களுக்கு சொல்லட்டுமா?”

அவர்கள் ஏகோபித்த குரலில் உற்சாகமாகச் சொன்னார்கள். “தயவு செய்து சொல்லுங்கள்”

”எத்தனையோ தம்ளர்கள் இருந்த போதிலும் நீங்கள் அழகான விலையுயர்ந்த தம்ளர்களை எடுக்கப் போட்டி போட்டுக் கொண்டு போனீர்கள். அது இயற்கை தான். ஆனால் எடுத்தது எந்த தம்ளராக இருந்தாலும் உண்மையில் உங்களுக்கு முக்கியமானது நீங்கள் குடித்த தேனீர் தான். அதன் சுவையும் தரமும் மட்டுமே நீங்கள் ருசிக்கப் பயன்படுகிறது. உங்கள் வேலை, பணம், பதவி, அந்தஸ்து எல்லாம் அந்தத் தம்ளர்களைப் போல. வாழ்க்கை தேனீர் போல. தம்ளர்களின் தரம் தேனீரின் தரத்தை எப்படித் தீர்மானிப்பதில்லையோ அது போல உங்கள் வேலை, பணம், பதவி, அந்தஸ்து ஆகியவை உங்கள் வாழ்க்கையின் தரத்தைத் தீர்மானிப்பதில்லை.”

“அதை மறந்து இப்போது அழகான விலையுயர்ந்த தம்ளர்களை எடுக்கப் போட்டி போட்டதைப் போல வாழ்க்கையிலும் மிக உயர்ந்த வேலை, மிக அதிகமான பணம், மிக உயர்ந்த பதவி, பலர் மெச்சும் அந்தஸ்து ஆகியவற்றைப் பெற போட்டி போட்டுக் கொண்டு வாழ்வதால் தான் நீங்கள் மன உளைச்சலாலும், பிரச்சனைகளாலும் அவதிப் படுகிறார்கள். வாழ்க்கை என்ற தேனீரின் தரத்தை இந்தத் தம்ளர்கள் தீர்மானிக்கிறது என்று தப்பர்த்தம் செய்து கொள்வதாலேயே போட்டி, பொறாமை, அவசரம், பேராசை என்ற வலைகளில் சிக்கிக் கொள்கிறீர்கள்”

“தோற்றங்களில் அதிகக் கவனத்தைத் தரும் போது உண்மையான வாழ்க்கையை நாம் கோட்டை விட்டு விடுகிறோம். வாழ்க்கையை ருசிக்கத் தவறி விடுகிறோம். எத்தனை தான் பெற்றாலும் உள் மனம் அந்த உண்மையை உணர்ந்திருப்பதால் அது என்றும் அதிருப்தியாகவே இருக்கிறது.”

அவர் சொல்லி முடித்த போது அந்த மாணவர்களிடையே பேரமைதி நிலவியது. சிலர் பிரமித்துப் போய் அவரைப் பார்த்தார்கள். சிலர் கண்களில் நீர் தேங்கி நின்றது. இருட்டில் இருந்ததால் தெரியாமல் போன பலதையும் வெளிச்சம் வந்தவுடன் தெளிவாகப் பார்க்க முடிந்தது போல அனைவரும் உணர்ந்தார்கள். இத்தனை நாள்கள் அவர் சொல்லித் தந்த பாடங்களை விட இப்போது சொல்லித் தந்த வாழ்க்கைப் பாடத்தை இவ்வளவு எளிமையாக மனதில் பதியும் படி வேறு யாரும் சொல்லித் தர முடியாது என்று நினைத்த அவர்கள் மனதில் அவர் இமயமாக உயர்ந்து போனார்.

ஒருவன் கண்ணீருடன் கை தட்ட ஆரம்பிக்க அவர் வீடு அடுத்த நிமிடத்தில் கை தட்டல்களால் அதிர்ந்தது.

நன்றி: என்.கணேசன்

Sunday, 25 September 2011

மரணத்தின் விளிம்பில்....

மரணத்தின் விளிம்பில் யாருமே அதிக நேரம் தங்கி விடக் கூடாது என்று அருணாச்சலத்திற்குத் தோன்றுகிறது. ஏனென்றால் வாழ்ந்த விதத்தையும், நடந்து முடிந்தவைகளையும் இந்த நேரத்தில் அசை போட மட்டுமே மனிதனால் முடிகிறது. ஆனால் எதையும் சரி செய்யவோ மாற்றவோ அவகாசம் இல்லை.

"ஆஸ்பத்திரியில் வைத்துப் பயன் இல்லை. வீட்டுக்குக் கொண்டு போய் விடுங்கள்" என்று மருத்துவர்கள் ஆலோசனை சொன்னதால் அவரை வீட்டுக்குக் கொண்டு வந்து விட்டார்கள். அதிக பட்சம் மூன்று நாட்கள் இருப்பார் என்று டாக்டர் சொல்லியிருந்தார். ஆனால் கண்களை மட்டும் திறந்து பார்க்கவும், சுற்றிலும் மற்றவர்கள் பேசவும் கேட்கவும் மட்டுமே முடிந்த ஒருவருக்கு ஒவ்வொரு கணமும் யுகமாகக் கழியும் அந்தக் கொடுமையை அருணாச்சலம் மட்டுமே அறிவார்.

மனைவி, மகன், மகள் மூவருக்கும் அவர் மரணத்தில் துக்கம் இல்லை என்று சொல்ல முடியாது. ஆனாலும் அதையும் மீறி உயிலில் என்ன எழுதியிருக்கிறார் என்கிற கவலை மேலோங்கி இருந்தது. ஏகப்பட்ட சொத்தை சுயமாக சம்பாதித்திருந்த அவர் உயிலை அடிக்கடி மாற்றும் பழக்கம் உடையவரானதால் கடைசி உயிலில் தங்கள் நிலை என்ன என்கிற கவலையை அவரருகில் உட்கார்ந்து தாழ்ந்த குரலில் தங்களுக்குள் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்கள். அது காதில் விழ விழ மனம் ரணமாகிக் கொண்டே இருந்தது. மனிதனை விட பணம் பிரதானமாகும் போது பாசமென்ன, பந்தமென்ன?

"அந்த நாசமாப் போன வக்கீல் இந்த நேரமாய் பார்த்து சிங்கப்பூர் டூர் போயிட்டார். அவர் திங்கள் கிழமை தான் வருவாராம்" -இது மகன். இன்று வியாழக் கிழமை. திங்கட்கிழமை வரை காக்க அவனுக்குப் பொறுமையில்லை.

"அப்பா எனக்கு கண்டிப்பா ஒரு வீடு எழுதி வைப்பார்னு நாங்க ஹவுசிங் லோன் கூட போடாமல் இருக்கோம். உயில்ல என்ன எழுதி இருக்கார்னு உங்கிட்ட ஏதாவது சொல்லியிருக்காராம்மா?" இது மகள்.

"உயிலைப் பத்திக் கேட்கறப்ப எல்லாம் இப்ப எப்படியிருக்காரோ அப்படியே தான் இருப்பார். எந்த முக்கியமான விஷயத்தை என் கிட்ட வாய் விட்டுச் சொல்லியிருக்கார்" - இது மனைவியின் புலம்பல்.

குடும்பம் தான் இப்படி என்றால் வந்து விட்டுப் போன அக்கம் பக்கத்தினர், உறவினர், நண்பர்கள், அவர் கம்பெனி ஊழியர்கள் என எல்லோருமே ஒரு சம்பிரதாயத்திற்கு வந்தது போலத் தான் அவருக்குப் பட்டது. உறவினர்கள் மெல்லிய குரலிலும், சுற்றி வளைத்தும் உயில் பற்றித் தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தார்கள். நண்பர்கள் அனைவரும் தொழில் சம்பந்தப்பட்டவர்கள். ஆகவே அவர்களும், ஊழியர்களும் அவர் கம்பெனி வாரிசான மகனிடம் நல்ல பெயரெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

பக்கத்து கோயில் பூசாரி பார்க்க வந்தவர் "விஷ்ணு சஹஸ்ரநாமம் காதில் விழுந்துண்டிருந்தா நேரா வைகுண்டத்துக்கே போவான்னு ஐதீகம். அதனால தெரிஞ்சவா சொல்லுங்கோ, இல்லைன்னா கேசட்டாவது போடுங்கோ" என்று சொல்லி விட்டுப் போனார்.

"ஏண்டா கேசட் இருக்கா?" என்று அவர் மனைவி மகனிடம் கேட்க அவன் இல்லை என்றான். அதோடு அந்த விஷயம் மறக்கப் பட்டது. இல்லாவிட்டால் ஒன்று வாங்கிக் கொண்டாவது வா என்று அவளும் சொல்லவில்லை. வாங்கிக்கொண்டு வர அவனும் முயற்சிக்கவில்லை.

குடும்பத்திற்காக ஏகப்பட்ட சொத்தை சேர்த்து விட்டு விடை பெறப் போகும் இந்தத் தருணத்தில் தன் குடும்பத்திடம் இருந்து அவர் இதை எதிர்பார்க்கவில்லை. பணத்தையும், சொத்துக்களையும் சம்பாதித்தவர் மனிதர்களை சம்பாதித்து வைக்கவில்லை என்பதை உணர்கிறார். சொர்க்கம் நரகம் என்று சொல்லப்படுவதெல்லாம் செத்த பிறகு போகும் இடங்கள் அல்ல, இந்தக் கடைசி கணங்களில் ஒவ்வொருவனும் எல்லாவற்றையும் சீர் தூக்கிப் பார்க்கும் மன நிலையே என்று அவருக்குத் தோன்றுகிறது.

"சார் எப்படியிருக்கார்" என்று அவரது டிரைவரின் குரல் கேட்க கண்களைத் திறந்தார். அவரது டிரைவரின் மகனும் கூட நின்றிருந்தான். நான்கு வருடங்களுக்கு முன்பு ப்ளஸ் டூவில் மாவட்ட முதலிடம் வந்த மாணவன் அவன். அப்போது என்ன படிக்க வைக்கப் போகிறாய் என்று டிரைவரைக் கேட்ட போது "அவன் இன்ஜீனியர் படிக்க ஆசைப் படறான். அதெல்லாம் நமக்கு முடியுமா எசமான். ஏதோ டிகிரி படிக்கட்டும்னு இருக்கேன்" என்று டிரைவர் சொன்னார். அத்தனை நல்ல மார்க் வாங்கிய பையன் ஒரு சாதாரண பட்டப் படிப்பு படிக்கப் போவது பொறுக்காமல் "இன்ஜீனியருக்கே படிக்க வையுப்பா. படிக்கறதுக்கு ஆகற செலவை நான் பார்த்துக்கறேன். அக்கௌண்டண்ட் கிட்டே சொல்லி வைக்கறேன். தேவையானதை சொல்லி வாங்கிக்கோ" என்று சொன்னார். எத்தனையோ செலவாகிறது இது பெரிய விஷயமல்ல என்று அவர் அன்று நினைத்தார்.....

அவர் மனைவி சொன்னாள். "டாக்டர் கையை விரிச்சுட்டார். வீட்டுக்கு எடுத்துகிட்டு போக சொல்லிட்டார்.." அதைக் கேட்ட டிரைவரும், டிரைவரின் மகனும் லேசாகக் கண்கலங்கினார்கள்.

"என் மகனுக்குக் காலேஜ் கேம்பஸ் இண்டர்வ்யூல டாட்டா கம்பெனியில வேலை கிடைச்சுடுச்சும்மா. மாசம் ஆரம்பத்திலயே 25000 சம்பளம். எல்லாம் சார் போட்ட பிச்சை. அதான் சாரு கிட்ட சொல்லி ஆசிர்வாதம் வாங்கிட்டு போக கூட்டிகிட்டு வந்தேன்"

அந்த இளைஞன் அவர் காலைத் தொட்டு வணங்கினான். அவன் முகத்தில் நன்றியுணர்வு நிறைந்திருந்தது. டிரைவரும் கண்கலங்க அவர் காலைத் தொட்டுக் கும்பிட்டார்.

அருணாச்சலம் அவர்கள் இருவரையும் ஒரு கணம் நிறைந்த மனதுடன் பார்த்தார். அந்த இளைஞனின் வெற்றியும், அவன் நன்றியுணர்வும் அந்தக் கடைசி தருணத்தில் மனதுக்கு இதமாக இருந்தது. அவரும் ஓரிரண்டு மனிதர்களை சம்பாதித்திருக்கிறார். அடிமட்டத்தில் இருந்து ஆரம்பித்த வாழ்க்கையில் செய்த சாதனைகள், சேர்த்த சொத்துக்கள் எல்லாவற்றையும் விட அந்த மாணவன் படிக்க அவர் செய்த சிறிய உதவி மட்டுமே அர்த்தமுள்ள செயலாக அவருக்கு அப்போது தோன்றியது. வாழும் போது பெரிதாகப் பட்ட எல்லா விஷயங்களும் மரணத்தின் விளிம்பில் நின்று பார்க்கையில் அற்பமாகத் தெரிந்தது

அந்த இளைஞனைப் பார்த்து அவர் புன்னகைத்தார். அந்தக் கணத்தில் மரணம் அவரை நெருங்க ஆரம்பித்தது. வாழ்க்கையைத் திரும்பவும் வாழ முடிந்திருந்தால் இது போல் மேலும் பல நல்ல காரியங்கள் செய்திருக்கலாம் என்பது தான் அவரது கடைசி நினைவாக இருந்தது.

நன்றி: என்.கணேசன்

கண்நிறைந்த அழகு!

ஒரு வியாபாரிக்கு ஐந்து பிள்ளைகள் இருந்தனர். ஐவரும் பெண் பிள்ளைகள். வியாபாரியும் நன்கு சம்பாதிப்பவர். ஆகையால், தன் பிள்ளைகளுக்கு எந்தக் குறையும் இல்லாமல் வளர்த்து வந்தார்.

அவர்கள் விரும்பிக் கேட்பதைத் தட்டாமல் வாங்கிக் கொடுப்பர் பெற்றோர். சகோதரிகளில் இளையவள் மட்டும் சற்று நிறம் மங்கி, கருப்பாக, அழகில்லாதவள் போல் தோன்றுவாள். மற்ற மூத்த நான்கு சகோதரிகளும் நல்ல சிவப்புடன் அழகாக இருப்பர்.

இது இவர்களுக்கு மனதில் கர்வத்தை வளர்த்தது. இவர்கள் எப்போதும் தங்களை சிங்காரித்துக் கொண்டு, கண்ணாடி முன் நிற்பதே வழக்கமாகி விட்டது. தப்பித் தவறி தன்னை அழகுப்படுத்திக் கொள்ள இளையவள் கண்ணாடி முன் நின்று விட்டால், மூத்த சகோதரிகள் ரசனையில்லாத வார்த்தைகளால் விமர்சனம் செய்ய ஆரம்பித்து விடுவர்.

இதனால் இளையவள் தனக்குள் அழுது வேதனைப்படுவாள். இளையவள், மூத்தவர்களைக் காட்டிலும் இரக்க சிந்தனையும், உதவும் மனப்பான்மையும் கொண்டவள். மூத்த பெண்களின் குணம், இளையவளுக்கு நேர் எதிரானது. தங்கள் அழகில் கர்வம் கொண்டு, வேறு எவரையும் மதிக்கவும் மாட்டர். எனவே, மற்றவர்களிடமும் அவர்களுக்கு நல்ல பெயரே இல்லை.
ஏழைக்கு அன்பு காட்டும் இளையவளை தர்மதேவதை என்று தான் போற்றுவர் மக்கள். இவ்வளவு ஈகைக் குணம், சிறந்த பண்புகள் இருந்தும் புற அழகு போதவில்லையே... அதனால் தானே சகோதரிகள் தம்மை வெறுக்கின்றனர் என நினைத்து வேதனைப்படுவாள்.

இளையவனின் வேதனையைப் பெற்றோர் நன்கு புரிந்து கொண்டனர்.
ஒருநாள் இளையவளை அவர்கள் அழைத்து, ""நிலா இப்படி உட்கார்!'' என்றனர்.
அவளும் பெற்றோரிடம் ஆசையுடன் அமர்ந்தாள். ""உன் மூத்த சகோதரிகள் உன்னை மதிக்கவில்லை என்பது எங்களுக்கு தெரியும்; அதற்காகக் கவலைப்படாதே. புற அழகைக் காட்டிலும், உன் மன அழகுதான் மிகவும் அற்புதமானது.

""அதுதான் அனைவரையும் கவரும் காந்தம் போன்றது. எக்காலமும் உன் அழகுதான் வளரும், நிரந்தரமாயும் இருக்கும். இவர்களின் வெளித்தோற்ற அழகு, காலப்போக்கில் மாறிவிடும். அதை உணர்ந்து கொள் போதும்!'' என ஆறுதல் கூறினர். மன நிம்மதி அடைந்தாள் நிலா

நன்றி: சிறுவர் மலர்

எங்கிருந்தோ ஒரு ஏலியன்

ஸ்ரீவத்ஸன் மெடிக்கல் ரிப்போர்ட்டில் இருந்த, உச்சரிக்கக் கஷ்டமான அந்த வார்த்தையை வெறித்துப் பார்த்தான். "Lymphangioleiomyomatosis". சிவப்பு எழுத்துக்களில் இருந்த அந்த வார்த்தையில் எமன் தெரிந்தான். அவன் மனைவி வைஷ்ணவியை அந்த வார்த்தை மூலமாக எமன் நெருங்கிக் கொண்டிருந்தான்.
டாக்டர் அவனுக்கு அந்த வியாதியைப் பற்றி விளக்க முயன்றது அரையும் குறையுமாகத் தான் அவன் மூளைக்கு எட்டியது. "...இதை LAMன்னு சுருக்கமா சொல்வாங்க. இதுக்கு இது வரைக்கும் சரியான மருந்து கண்டுபிடிக்கலை. இது ஒரு அபூர்வமான வியாதி. இது வரைக்கும் சுமார் 500 கேஸ்களை அமெரிக்காலயும், ஐரோப்பாலயும் பதிவு செஞ்சுருக்காங்க. இப்ப சின்சினாட்டி யூனிவர்சிட்டியில் இதைப் பத்தி ஆராய்ச்சி செஞ்சுகிட்டிருக்காங்க. இந்தியால இது முதல் கேஸ் போல தான் தெரியுது..... ஆரம்பத்துல நுரையீரலைத் தாக்குகிற இந்த வியாதி பெரும்பாலும் பெண்களுக்குத் தான் வருதுங்கறாங்க. கிட்டத்தட்ட கேன்சர் செல்கள் மாதிரி இந்த வியாதி செல்களும் செயல்படுது.....பெரிய அளவுல உற்பத்தி ஆயிட்டே போய் மத்த செல்களுக்கு கிடைக்க வேண்டிய ஆக்சிஜனைக் கிடைக்க விடாமத் தடுத்துடுது.... முதல்ல நுரையீரலைத் தாக்கற இந்த நோய் போகப் போக மற்ற உடல் பாகங்களையும் தாக்க ஆரம்பிக்குது..... இது ரொம்பவே முத்துனதுக்கப்புறம் நமக்குத் தெரிஞ்சதால எதுவும் செய்யறதுக்கில்லை.....சாரி...."

ரிப்போர்ட்டைக் கையில் கொடுத்து விட்டு டாக்டர் சூசகமாக நாளை காலையிலேயே டிஸ்சார்ஜ் செய்து கூட்டிக் கொண்டு போவது நல்லது என்று சொன்னார். அவனுக்கு கொஞ்ச நஞ்சமிருந்த நம்பிக்கையும் போய் மனதில் சூனியமே மிஞ்சியது. தலையை ஆட்டி விட்டு மௌனமாக வெளியே வந்தான். ஐ சி யூவிற்கு வெளியே இருந்த நாற்காலியில் ஒரு ஜடமாய் சிறிது நேரம் உட்கார்ந்தான்.

சென்ற மாதம் வரை அவன் வாழ்க்கை மிக ஆனந்தமாகவே போய்க் கொண்டிருந்தது. இளம் விஞ்ஞானியான அவனுக்கு அழகான மனைவி, படு புத்திசாலியான ஆறு வயது மகள், கை நிறைய பணம் என்று எல்லா வகைகளிலும் நிறைவாகவே வாழ்க்கை இருந்தது. ஆனால் திடீரென்று வைஷ்ணவி மூச்சுத் திணறலால் அவதிப்பட ஆரம்பித்த போது ஆஸ்துமாவாக இருக்கலாம் என்று தான் அவன் ஆரம்பத்தில் சந்தேகப்பட்டான். ஆனால் எந்த மருந்திலும் முன்னேற்றம் இல்லாமல் போகவே இந்த புகழ்பெற்ற ஆஸ்பத்திரியில் முழுமையாக பரிசோதனை செய்ய அழைத்து வந்தான். எல்லாப் பரிசோதனையும் முடிந்து தான் வாயில் நுழையாத பெயருடைய அந்த அபூர்வ வியாதி என்று கண்டு பிடித்திருக்கிறார்கள்....

போன் செய்து தன் வீட்டாருக்கும் அவள் வீட்டாருக்கும் தெரிவிப்பதற்கு முன்னால் அவனுக்கு யாருமில்லாத இடத்திற்குப் போய் தனியாக வாய் விட்டு அழத் தோன்றியது. கடிகாரத்தைப் பார்த்தான். இரவு மணி பத்தரை. எழுந்து வெளியே வந்து கால் போன போக்கில் நடக்க ஆரம்பித்தான். மனம் மனைவியுடன் வாழ்ந்த இனிமையான நாட்களை நினைவுபடுத்திக் கொண்டு கனக்க ஆரம்பித்தது. அரை மணி நேரம் நடந்து ஒரு விளையாட்டு மைதானத்தை எட்டிய பின் அங்கு ஓரத்தில் இருந்த சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்தான். சுற்றும் முற்றும் பார்த்தான். நிலவொளியில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாரும் தென்படவில்லை. வாய் விட்டு அழ ஆரம்பித்தான்....
சில துக்கங்கள் அழுதும் குறைவதில்லை. பாட்டி வீட்டிற்கு விடுமுறையைக் கழிக்கச் சென்றிருக்கும் மகளை எண்ணுகையில் துக்கம் மேலும் கூடியது. 'நான் மனமறிந்து யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்ததில்லையே. கடவுளே, ஏன் என்னை இப்படி சோதிக்கிறாய்?'

துக்கம் குறையா விட்டாலும் அழுகை ஓய்ந்தது. கண்களைத் துடைத்துக் கொண்டு ஆகாயத்தைப் பார்த்தான். எண்ணிலடங்கா நட்சத்திரங்கள் வைரங்களாய் வானத்தில் சிதறிக் கிடந்தன. மையிருட்டு வேளைகளில் மொட்டை மாடியில் ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டே அவனும் வைஷ்ணவியும் மணிக்கணக்கில் பேசுவார்கள். இரவு நேர ஆகாயம் மிக ரம்யமானது. கூர்ந்து பார்ப்பவர்களுக்கு ஆகாயம் எத்தனையோ அழகு ஜாலம் காட்டுவதுண்டு. எப்போதாவது அபூர்வமாய் ஒளிக்கற்றைகளும் தோன்றி மறைவதுண்டு. அதில் சிலதை UFO ஆக இருக்கலாம், அதில் ஏலியன்ஸ் பயணம் செய்து கொண்டிருக்கலாம் என்று கற்பனை வளமுடைய வைஷ்ணவி சொல்வதுண்டு. எந்த நேரத்தில் அப்படி பார்த்தோம் என்று அவள் அப்போதே கடிகாரத்தைப் பார்த்து பிறகு தவறாமல் டைரியில் குறித்துக் கொள்வாள். அவன் வாய் விட்டுச் சிரிப்பான். விஞ்ஞானியான அவன் ஆதாரபூர்வமாக இல்லாத எதையும் நம்புவதில்லை. பேசிப் பேசி அப்படியே அங்கேயே அவர்கள் உறங்கிப் போவதும் உண்டு.... இனி என்றும் அவன் தனியனே.
அடுத்த தவணையாக கண்ணீர் கண்களில் நிரம்புவதற்குள் ஆகாயத்தில் அபூர்வமான ஒரு ஒளிக் கற்றையை ஸ்ரீவத்ஸன் பார்த்தான். அது எப்போதையும் விடப் பிரகாசமாகவும் பெரியதாகவும் இருந்தது. வைஷ்ணவிஅவனுடன் இருந்திருந்தால் இதில் கண்டிப்பாக ஏலியன்ஸ் இருப்பதாக அடித்துச் சொல்லியிருப்பாள். அவனையும் அறியாமல் கடிகாரத்தைப் பார்த்தான். மணி பதினொன்று பத்து. வைஷ்ணவியின் பழக்கம் அவனிடமும் தொற்றிக் கொண்டு விட்டது என்று நினைத்தான். அந்த ஒளிக்கற்றை அவனை நோக்கி மின்னல் வேகத்தில் வர அவனையும் அறியாமல் ஸ்ரீவத்ஸன் தாவிக்குதித்தான்.

ஒளிக்கற்றை மறைந்து ஒரு மனிதன் அங்கே நின்றான். "சாரி நான் பயமுறுத்த நினைக்கவில்லை" என்று சொல்லி அவனைப் பார்த்துப் புன்னகைத்தான்.
தோற்றத்தில் அவன் இளமையாகவும், உயரமாகவும் இருந்தான். மற்றபடி உருவத்தில் சாமானியனாகத் தெரிந்தான். ஸ்ரீவத்ஸன் முதலில் பார்த்தது அவன் கால்களைத் தான். கால்கள் நிலத்தில் பட்டன. அவன் நிம்மதிப் பெருமூச்சு விட்ட போது வந்தவன் வாய் விட்டுச் சிரித்தான்.
"ஒரு விஞ்ஞானி பேய் இருக்கிறதாய் நம்பலாமா?"

ஒரு கணம் மறுக்க நினைத்த ஸ்ரீவத்ஸன் பின் மறுக்க முடியாமல் தானும் சிரித்தான். "லாஜிக், பகுத்தறிவு எல்லாம் வேலை செய்யறதுக்கு முன்னால் பயம் வேலை செய்துடுது".

தான் ஒரு விஞ்ஞானி என்பது இவனுக்கு எப்படித் தெரியும் என்கிற கேள்வி பிறகு தான் ஸ்ரீவத்ஸனைத் தாக்கியது. 'உண்மையில் இவன் யார்? அந்த ஒளியிலிருந்து தான் வந்தானா, இல்லை இதெல்லாம் என் பிரமையா? பேய் அல்ல என்றால் ஏலியனா? மனிதனுடைய தோற்றம் இருப்பதால் ஏலியனாக இருக்க முடியாதே. அதுவும் நம்முடைய மொழியை இவ்வளவு நன்றாகப் பேசுகிறானே'.

"நீங்க யாரு?"

"நான் பக்கத்துல இருந்து தான் வர்றேன்" என்று அவன் ஆகாயத்தைக் கை காட்டினான்.

வந்தவன் ஏதோ மேஜிக் கலைஞன் என்று ஸ்ரீவத்ஸன் முடிவு செய்தான். 'கொஞ்சம் சூட்சுமமாக கவனித்திருந்தால் அவன் எப்படி அந்த எ·பக்டைக் கொண்டு வந்தான் என்று கண்டுபிடித்திருக்கலாம்.'

"என்ன ஆகாயத்தைக் காண்பிக்கிறீங்க. விட்டா ஏலியன்னு சொல்லிக்குவீங்க போல இருக்கே"

அவன் புன்னகையோடு சொன்னான். "உம்... உங்க பாஷையில அப்படியும் சொல்லிக்கலாம்"

"ஆனால் மனுஷ ரூபத்தில் அல்லவா எழுந்தருளியிருக்கீங்க?"

"ஏலியன்ஸ்ன்னு நீங்க சினிமாக்களில் காண்பிக்கற மாதிரி வரணுமாக்கும். அதென்ன கற்பனையில் கூட கண், வாய் இதெல்லாம் இல்லாத ஒன்றை உங்களால் கற்பனை செய்ய முடியாதா? மனிதன், விலங்கு ரெண்டையும் கூட்டி சில மாற்றங்கள் செய்து ஒரு உருவத்தைக் காண்பிக்கற அளவு தான் உங்க கற்பனை விரியுமா?" அவன் கிண்டலடித்தான்.

"நாங்க ஏலியன்ஸை மனுஷ ரூபத்திலிருந்து கொஞ்சமாவது வித்தியாசப்படுத்திக் காண்பிக்க முயற்சி செய்திருக்கோம். அவ்வளவு தான். ஆனால் ஏலியன்னு சொல்லிக்கிற நீங்க அச்சா எங்க மாதிரியே இருக்கீங்களே அது எப்படின்னு கேட்டேன்"

"வேற ரூபத்தில் வந்திருந்தா நீங்க என்னைப் பார்த்தவுடன் ஓடியிருப்பீங்க"

"நல்லா பேசறீங்க. உங்க சுய உருவம் என்னவோ?"

"நிலையான உருவம் இல்லை. உண்மையில் நாங்கள் சக்தி. தேவைப்படும் போது வடிவுகள் எடுப்போம். மீதி நேரங்களில் சக்தியாகவே வடிவமில்லாமல் இருப்போம். அணுவைப் பிளந்து பார்த்த உங்கள் விஞ்ஞானிகள் கண்டுபிடிச்ச பல சங்கதிகள் எங்களுக்கும் பொருந்தும்"

அணுவைப் பிளந்து பார்த்த போது பெரும்பாலும் வெட்டவெளியாக இருந்ததையும், அதனுள் இருந்த துகள்கள் சில சமயங்களில் அலைகளாக மாறிக் காணாமல் போவதையும், ஆனால் அணுவில் இருந்து பலவிதமான சக்தி வெளிப்பாடுகள் எப்போதும் இருந்ததையும் இன்றைய விஞ்ஞானம் சொல்வதைப் படித்து விட்டு வந்து இவன் தன்னைக் குழப்புகிறான் என்று ஸ்ரீவத்ஸன் நினைத்தான்.

"பூமிக்கு எதுக்கு வந்தீங்க?"

"பூமியில் சில ஆராய்ச்சிகள் செய்ய வந்திருக்கேன். ஜோடியா நீங்க ரெண்டு பேரும் ஆகாயத்தைப் பார்த்துட்டு பேசறதைப் பல தடவை கவனிச்சிருக்கேன். இப்ப தனியா அழுதுகிட்டு இருந்ததைப் பார்த்தப்ப பேசிகிட்டு போகலாம்னு தோணிச்சு."

ஸ்ரீவத்ஸனுக்கு தூக்கிவாரிப் போட்டது. 'ஜோடியாக ஆகாயத்தைப் பார்த்து பேசறது இவனுக்கு எப்படித் தெரிஞ்சுது. சிலரால் மனசுல நினைக்கிறதைப் படிக்க முடியும். இவனும் அப்படி ஏதோ வித்தை தெரிந்தவன் போல தெரியுது. அதனால தான் கொஞ்ச நேரத்துக்கு முன்னால் நான் நினைச்சு வருத்தப்பட்டுகிட்டு இருந்ததைப் படிச்சுட்டு சொல்றான்'

"அதுசரி எப்படி எங்க மொழியில் பேசறீங்க?"

"நான் எங்கே உங்க மொழியில் பேசறேன். நாம உண்மையில் நம்ம எண்ணங்களை வார்த்தைகள் இல்லாமல் பரிமாறிகிட்டிருக்கிறோம். Direct Thought Transference. அவ்வளவு தான்"

ஸ்ரீவத்ஸனுக்குக் கோபம் வந்தது. "தமாஷ் செய்யறதுக்கும் ஒரு லிமிட் இருக்கு. சில மேஜிக் கத்துகிட்டு வந்துட்டு, சில குழப்பல் வார்த்தைகளைச் சொல்லிகிட்டு என் கிட்ட விளையாடாதீங்க. ப்ளீஸ். நான் ரசிக்கிற மூட்ல இல்லை. என் மனைவி மரணத்தை நெருங்கிகிட்டுருக்கா. தனியா வாய் விட்டு அழ இங்கே வந்திருக்கேன்....... அது சரி இத்தனை பேச்சு பேசறீங்களே உங்களுக்கு Lymphangioleiomyomatosis ன்னா என்னன்னு தெரியுமா?"

"பேர் வைக்கிறதுல தான் மனுஷங்க கெட்டிக்காரங்களாச்சே. என்ன அது வியாதி தானே"

அவன் யூகித்து தான் சொல்கிறான் என்பதில் ஸ்ரீவத்ஸனுக்கு சந்தேகமேயில்லை. "ஆமாம். என் மனைவிக்கு வந்திருக்கிற அபூர்வமான வியாதியின் பெயர். குணப்படுத்த முடியலை. காலம் கடந்து போயிடுச்சுன்னு டாக்டர் சொல்றார்"

"காலம்னு ஒண்ணு இருக்கிறதை உங்க ஐன்ஸ்டீனே சந்தேகப்பட்டு எழுதினார் தெரியுமா?"

மறுபடி அவன் வார்த்தை ஜாலங்களில் ஈடுபடுகிறான் என்று தோன்ற சலிப்புடன் ஸ்ரீவத்ஸன் அவனைப் பார்த்தான்.

"அப்படிப் பார்க்க வேண்டாம். சிம்பிளா சொல்றேன். ஒரு நாளைக்கு ஒரு மனிதன் கனவு காண்கிற நேரம் ஒருசில நிமிஷங்கள் தான்னு உங்க ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிச்சிருக்காங்க தெரியுமா?. ஆனா அந்த ஒருசில நிமிஷங்கள்ல எத்தனையோ நாள் நடக்கிற மாதிரி நிகழ்ச்சிகளைக் கனவு காண முடியுது. கனவு கலைஞ்சா தானே அது கனவுன்னு தெரியுது. ஒரு வேளை கனவே கலையலைன்னா அத்தனை நாள் நிகழ்ச்சிகள் நடந்து முடிஞ்சதாத் தானே நினைக்கத் தோணும். ஆனா உங்க ஆராய்ச்சிப்படி அது ஒருசில நிமிஷங்கள் தான். கனவு கண்டுகிட்டு இருக்கிறவனோட நாள் கணக்கு சரியா, ஆராய்கிறவன் நிமிஷக் கணக்கு சரியா?"

ஸ்ரீவத்ஸனுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. ஆனால் அவன் சொன்ன லாஜிக்கில் தவறில்லை என்று தோன்றியது. "சரி அதை விடுங்க. அந்த வியாதிக்கு மருந்து இன்னும் கண்டுபிடிக்கலையாம். சின்சினாட்டி யூனிவர்சிட்டியில் இன்னும் ஆராய்ச்சி செஞ்சுகிட்டிருக்காங்கலாம். உங்களுக்கு ஏதாவது மருந்து தெரியுமா?"

"ரொம்ப சிம்பிள். அந்த பிரச்சினைக்குரிய செல்களை அழிச்சிடணும். அவ்வளவு தான்"

"அது தான் எப்படி? உங்களால முடியுமா?"

"ஏன் முடியாம, என்னோட ஒரிஜினல் சக்தி அலைகளாய் மாறி உங்க மனைவி உடலுக்குள்ளே நுழைஞ்சு அதை சுலபமா செஞ்சுடலாம்"
இதுவரை விளையாட்டாகவே பேசிக் கொண்டு வந்த ஸ்ரீவத்ஸனுக்கு உண்மையில் இதை நம்ப முடியவில்லை என்றாலும் மனைவியைக் குணப்படுத்த முடியும் என்கிற கற்பனையே இனித்தது.

"சார், ஏதோ தமாஷாய் பேசிகிட்டு தேவையில்லாம என் மனசுல நம்பிக்கையை வரவழைச்சுடாதீங்க. நான் இப்ப தான் அழுது முடிஞ்சு யதார்த்த உண்மையை ஜீரணிக்க முயற்சி செய்துகிட்டிருக்கேன். நம்பி ஏமாந்து இன்னொரு தடவை உடைஞ்சு போக எனக்குத் திராணியில்லை"

"நான் தமாஷ் செய்யலை. இந்த சிகிச்சையில் நாங்க எப்பவோ முன்னேறி விட்டிருக்கிறோம். உங்க முன்னோர்களில் யோகிகள் கூட இந்த வித்தையைத் தெரிஞ்சு வச்சுகிட்டிருந்தாங்க. உங்க முனிவர்கள் அப்படி குணப்படுத்தினாங்க, ஜீசஸ் குணப்படுத்தினாருன்னு எல்லாம் படிக்கிறீங்களே அது எல்லாமே கற்பனைன்னு சொல்லிட முடியாது"

"சார் அப்படி மட்டும் நடந்துட்டா உலகத்துல என்னை விட அதிகமா யாராலும் சந்தோஷப்பட முடியாது. ஏன்னா... நான் அவளை அந்த அளவுக்கு நேசிக்கிறேன்". அவன் கண்கள் சொல்லச் சொல்ல நிறைந்தன. "ஆனா அதை வாய் விட்டு அவள் கிட்ட இது வரை நான் சொன்னது கூட இல்லை. இனிமே சொல்ல முடியுமான்னும் தெரியலை...." அதற்கு மேல் அவனுக்குப் பேச முடியவில்லை. அவன் உடைந்து போனான்.

"தாராளமா சொல்லலாம். சேர்ந்து ஆகாயத்தைப் பார்த்துட்டே பேசலாம். அப்படிப் பார்க்கிறப்ப கிடைக்கிற ஏதாவது நகர்கிற ஒளியில் நான் கூட இருக்கலாம்...குட்பை"

அடுத்த கணம் அவன் அங்கு இருக்கவில்லை. ஸ்ரீவத்ஸனுக்கு ஒரு கணம் ஒன்றுமே புரியவில்லை. கடிகாரத்தைப் பார்த்தான். மணி பதினொன்று பத்து. அந்த ஒளிக்கற்றையைப் பார்க்கும் போதும் இதே நேரம் தானே இருந்தது. கடிகாரம் நின்று விட்டதா என்று பார்த்தான். இல்லை, ஓடிக் கொண்டு தான் இருந்தது. இத்தனை நேரம் பேசியதற்கு நேரமே ஆகவில்லையா? எல்லாம் பிரமையா? நடக்காத ஒன்றைக் கற்பனை செய்து விட்டோமா? அவன் Thought Transference பற்றி சொன்னதும் கனவைப் பற்றிச் சொல்லி காலத்தை சந்தேகித்ததும் நினைவுக்கு வர ஸ்ரீவத்ஸனுக்கு தலை சுற்றியது.
மீண்டும் யதார்த்த உலகிற்கு வந்தவன் எழுந்து ஆஸ்பத்திரியை நோக்கி நடக்க ஆரம்பித்தான். ஆனால் மனம் அந்தக் கற்பனை மனிதனுடன் நடந்த கற்பனைப் பேச்சுக்களையே சுற்றி வந்தன. ஐந்து நிமிடத்தில் அவன் செல் போன் அடித்தது. ஆஸ்பத்திரியில் இருந்து தான் அழைத்தார்கள். "சார் எங்கே இருக்கீங்க. சீக்கிரம் வாங்க".

எல்லாம் முடிந்து விட்டது போலிருக்கிறது. கடைசியில் அவளிடம் சொல்லாமல் விட்டது எத்தனையோ இருக்கிறது. அழுது கொண்டே ஓடி ஆஸ்பத்திரியை அடைந்தான்.

ஆஸ்பத்திரியில் ஐசியூவில் இருந்து டாக்டர் அவசரமாக வெளியே வந்து கொண்டிருந்தார். அவனைப் பார்த்தவுடன் பரபரப்புடன் சொன்னார். "என்னாலே நம்பவே முடியவில்லை. மெடிக்கல் ஹிஸ்ட்ரியில் இதை மிரகில்னு தான் சொல்லணும். உங்க மனைவி உடம்பில் அந்த நோயோட அறிகுறிகள் மாயமா மறைஞ்சு போயிடுச்சு....எழுந்து உட்கார்ந்து உங்களைப் பார்க்கணும்னு சொல்றாங்க. நான் தான் கொஞ்ச நேரம் அப்சர்வேஷன்ல வச்சுருக்கச் சொல்லி இருக்கேன்.... எதுக்கும் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க"

நர்ஸ் ஒருத்தி டாக்டரிடம் ஓடி வந்தாள். "டாக்டர் சின்சினாட்டி யூனிவர்சிட்டியில் இருந்து உங்களுக்கு போன்"

"பேஷண்டுக்கு நாம கடைசியா குடுத்த மருந்து லிஸ்ட்டை அவங்க கேட்டுருக்காங்க. அதுல ஏதோ ஒரு காம்பினேஷன் மிரகுலஸா வேலை செய்திருக்குன்னு அவங்க நம்பறாங்க......" டாக்டர் சொல்லிக் கொண்டே வேகமாக தனதறைக்குப் போனார்.

ஸ்ரீவத்ஸனுக்கு தன் காதுகளை நம்ப முடியவில்லை. தன்னைக் கிள்ளிப் பார்த்துக் கொண்டான். கனவல்ல நிஜம் தான். கண்களில் அருவியாய் நீர் வடிய வெளியே ஓடினான். ஆகாயத்தைப் பார்த்து அழுது கொண்டே"தேங்க்ஸ்" சொன்னவனை ஆஸ்பத்திரி வாட்ச்மேன் ஒரு மாதிரியாகப் பார்த்தான்.

நன்றி: வல்லமை, என்.கணேசன்