Sunday, 20 November 2011

போதி தர்மன் வாழ்க்கை வரலாறு


பல்லவர்கள் காலத்தில், தென் இந்தியாவில் பிற நாடுகளுடனான வர்த்தகம்
சிறப்பாக இருந்தது சீன யாத்ரிகரான யுவாங் சுவான்,பல்லவர்களின் ஆட்சி
காலத்தில் தான் தென் இந்தியாவில் பயணம் மேற்கொண்டார். பல்லவர்கள் காலத்தில்
தான் தென்னிந்தியாவில் புத்த மதமும் தழைத்தொங்கியது.

காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த பல்லவ மன்னனான கந்தவர்மனுக்கு நந்திவர்மன், குமாரவிஷ்ணு

பௌத்தவர்மப் பல்லவன் ஆகிய முன்று மகன்கள் மூன்றாவதாகப் பிறந்த குழந்தைதான் போதிதர்மர். இவரின் இயற்பெயர் புத்த வர்மன்.

அக்காலத்தில் பல்லவ வம்சத்தில் பிறந்த கடைசிக் குழந்தையை புத்த
மதத்திற்கு அர்ப்பணிப்பது மரபு. எனவே பல்லவ மன்னன் கந்தவர்மன் தனது மகன்
போதிதர்மனை குருகுல வாழ்க்கைக்காக, காஞ்சிபுரத்தில் தங்கி பௌத்த
சிந்தனைகளைப் பரப்பி வந்த பிரஜ் என்கிற சமய குருவிடம் சேர்த்திருக்கிறார்.
காலப்போக்கில் போதி தர்மர் காஞ்சிபுரத்திலிருந்தபடியே பல கலைகளைக் கற்றுத்
தேர்கிறார். இதில் களறி, வர்மம் போன்ற அதிரடிக் கலைகளும் உண்டு. போதியின்
அபார ஞானத்தைப் பார்த்து பிரமித்த பிரஜ், தனக்கு அடுத்த வாரிசாக 28வது
குருவாக போதியை நியமிக்கிறார். புத்த மத குருவாக மாறியபிறகு,
போதி,கி.பி.475-550 கால கட்டத்தில் காஞ்சிபுரத்தில் இருந்து நாலந்தா சென்று
அங்கிருந்து தெற்கு சீனாவிற்குச் செல்கிறார்

இந்த காலகட்டத்தில் போதி தருமரின் மூத்த சகோதரரும் அதன் பிறகு அவர்
மகனும் மன்னராக ஆகி இருந்தனர். மன்னனான போதி தருமரின் மூத்த சகோதரனின்
மகன், தன்னுடைய சித்தப்பாவான போதி தர்மர் மீது அதிக பாசம் கொண்டிருந்தான்..
எனவே அவர் சீன மக்களிடம் போதி தருமரை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்
என தூது அனுப்பினார்.

மேலும் அன்றைய சீனப் பேரரசராக இருந்தவர் "லியாங் வு டீ".புத்த மதத்தில்
கொண்ட ஈடுபாட்டால் பௌத்த ஆலயங்களையும் விகாரங்களையும் நிறுவிய சீனப்
பேரரசர். தமிழகத்திலிருந்து வந்த புத்தத் துறவியான போதி தர்மரை
கேள்விப்பட்டு மிகுந்த மரியாதையோடும்,அன்போடும் உபசரித்து சீனாவில்
தங்கிவிட வேண்டுகிறார். SHAOSHI என்ற மலையின் அடிவாரத்தில் உள்ள நிலத்தை
அவருக்கு கொடுத்தார்.

போதி தர்மர் அந்த நிலத்தில் SHAOLIN கோவிலை நிறுவினார். அங்கு சுமார்
32 ஆண்டுகள் தங்கி பௌத்த மதத்தைப் பரப்பிய போதி தர்மர்,தமிழகத்தில் தான்
கற்ற கலைகளையும் சீனர்களுக்குப் பயிற்றுவித்தார். அப்படி போதிதர்மர்
கற்றுக் கொடுத்த கலைகளில் ஒன்றுதான் குங்ஃபூ.

இதற்கான கல்வெட்டு அந்த சீனக் கோயிலில் இன்றும் உள்ளது.

போதி தர்மர் வாழ்ந்த அந்த "ஷாஓலின் கோயிலை இன்றைக்கும் சீனர்கள் வணங்கி
வருகிறார்கள். அந்தக் கோயிலில் உள்ள கல்வெட்டில்‘தென் இந்தியாவிலிருந்து
வந்த போதி தர்மர் கற்றுத் தந்த கலை குங்ஃபூ’ என்று குறிக்கப்பட்டுள்ளது.
அவரை சீன மக்கள் "போ-ட்டி-தாமா" என்றுதான் செல்லமாக அழைக்கின்றனர்.

பின்னர் அந்த இடத்திலிருந்து போதி தர்மர் சீனாவின்
Guangdongவந்தடைந்தார். அங்கு அவர் DA MAO என்று அழைக்கப்பட்டார். DA
SHENGஎன்ற மஹாயான புத்த மதத்தை பரப்புவதற்கு DA MAO சீனா வந்துள்ளார்
என்பதை அறிந்த மக்கள்,அவருடைய சொற்பொழிவை கேட்க ஆசைப்பட்டனர். ஆனால் DA MAO
என்ற போதி தர்மர் பலமணி நேரம் தியானத்தில் இருந்துவிட்டு யாரிடமும்
எதுவும் பேசாமல் சென்றுவிடுவார். ஆனால் அவருடைய செயல்கள் மக்கள் மத்தியில்
ஒருவித அதிர்வை மட்டும் ஏற்ப்படுத்தி இருந்தது.

.

அங்கே மகாயான புத்த வம்சத்தைப் பரப்பியதாகவும், 150 ஆண்டுகள் அங்கே உயிரோடு இருந்ததாகவும் சீன வரலாறு கூறுகிறது.

புத்த மதத்தில் உள்ள 28 குருக்களில் கடைசி குரு போதிதர்மர் என்ற இந்த
தமிழன்தான் என்பதை பல வரலாற்று ஆசிரியர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
செயற்கரிய பல செயல்களைச் செய்து ஆச்சரியத்தில் மூழ்கடித்தவராம் இந்த போதி
தர்மர்.

அதுமட்டுமல்ல, அவர் கால் தடம்பதியாத நாடுகளே இல்லையாம். இதை அவரது
குறிப்பிலிருந்தே தெரிந்து கொள்ள முடிகிறது. கடல்வழியாக இந்தோனேஷியா, ஜாவா,
சுமத்ரா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகள் முழுவதிலும் போதி தர்மன்
மகாயானத்தைப் பரப்பியுள்ளார்.

போதிதர்மர் சீனாவில் இருந்த காலத்தில் புத்தபிக்குகள் பிச்சை
எடுத்துக்கொண்டு பலவீனமானவர்களாகவும் சமுதாயத்திற்கே பாரமாகவும்
இருந்தார்கள். மற்றவர்களால் துன்புறுத்தப்பட்டுக்கொண்டு பயந்தே
வாழ்ந்திருந்தார்கள். ஆனால் போதிதர்மர் தம்முடைய சீடர்களுக்கு
மூச்சுப்பயிற்சியின் சில நுணுக்கங்களைச் சொல்லிக் கொடுத்தார். அந்தப்
பயிற்சிகளின் மூலம் மனதின் இயக்கத்தையும் உடலின் செயல்பாட்டையும்
அடக்கமுடியும். இன்னொரு பயிற்சியின்மூலம் உடலை வலுவாக்கி அசுரபலத்தைப்
பெறமுடியும். மனதை தீட்சண்யமாகச் செயல்படுத்த முடியும். உடற்பயிற்சிகளையும்
சொல்லிக்கொடுத்தார். அத்துடன் அரிய நுட்பக்கலையான வர்ம சாஸ்திரத்தையும்
சொல்லிக்கொடுத்தார்.

அவர்களுக்கு விவசாயம், சிறுதொழில்கள் போன்றவற்றைச் செய்யச் சொல்லிக்
கொடுத்தார். தங்களது கோயில்களைச் சுற்றிலும் தங்களுக்குத் தேவையான உணவை
அவர்களே விளைவித்துக்கொண்டார்கள். சமுதாயத்திடம் பிச்சையெடுப்பதில்லை. உடல்
உறுதி அசுரபலம் ஆகியவற்றைக்கொண்டு சில தற்காப்பு முறைகளையும், தாக்குதல்
முறைகளையும், ஆயுதங்களிலிருந்து பாதுக்காத்துக்கொள்ளும் முறைகளையும்,
உடலில் காயம் ஏற்படா முறைகளையும் கற்றுக்கொடுத்தார். பிற்காலத்தில்
புத்தபிக்குக்கள், சமுதாயத்தின் உழைப்பின் பலன்களையெல்லாம் பிடுங்கித்
தின்றுவிடுகிறார்கள் என்ற ஆத்திரத்தோடு சீனச்சக்கரவர்த்திகள் சிலர்,
பிக்குக்களை அடித்துக் கொல்வித்தபோது போதிதர்மரின் சீடபரம்பரையும்
போதிதர்மர் தோற்றுவித்த ஷாஓலின்(Shaolin) பௌத்தக்கோயில்களும் மட்டும்
தப்பின.

சீனத்தில் மகாயான புத்த வம்சத்தைப் பரப்பியதாகவும், 150 ஆண்டுகள் அங்கே உயிரோடு இருந்ததாகவும் சீன வரலாறு கூறுகிறது.

போதிதர்மன் மரணமடைந்து, அவர் உடல் எரிக்கப்பட்டதாக சீனாவின் ஷோலின் வம்ச
அரசன் நம்பிக்கொண்டிருந்தபோது, போதியோ உயிருடன்‘பாமீர் முடிச்சு’
பிரதேசத்தில் ஒற்றை காலணியை சுமந்தபடி நடந்து சென்றுகொண்டிருந்ததை சீன
அமைச்சர் நேரில் கண்டாராம். அவரிடம் விசாரித்த போது, நான் என் சொந்த
ஊருக்குப் போகிறேன், என்று கூறிவிட்டுச் சென்றாராம் போதி. அவர் மீண்டும்
உயிர்த்து எழுந்துவிட்டதை, ஷோலின் கோயிலின் குருக்களும் உறுதி
செய்தார்களாம்…

 

 போதிதர்மர் கதைகள்

போதிதர்மர் என்பவர் புத்தரின் பிரதான சீடர். ப்ரக்யதாரா என்கிற பெண் துறவியின் உத்தரவுப்படி, இவர் சீன தேசத்துக்குச் சென்றார்.

அவர் சீனத்தை அடைந்ததும், சக்கரவர்த்தி, “வூ’ என்பவர் அவரை வரவேற்று உபசரித்தான்.

போதிதர்மரைக் கண்டு அவன் திகைத்து விட்டான். அவர் ரொம்பவும் கொடூரமானவராகக்
காணப்பட்டார். அவருடைய பெரிய கண்களில் குரூரம் இருப்பதாக அவன் நினைத்தான்.

தன்னைப் பற்றி மிக உயர்வாக எண்ணிக் கொள்பவன் “வூ’ அரசன். அதற்குக் காரணம்
இருந்தது. அவனைச் சுற்றியிருந்தவர்களெல்லாம், “தாங்கள் கடவுளைப் போன்றவர்,
என்று புகழ்ந்து தள்ளிக் கொண்டிருந்ததுதான்.

ஒருநாள் அரசன் “வூ’ போதிதர்மரை பார்த்து, “”நான் மடாலயங்கள் பலவற்றைக்
கட்டியிருக்கிறேன். ஆயிரக்கணக்கான அறிஞர்களுக்கு உணவு அளித்திருக்கிறேன்.
புத்தரின் கருத்துகளை ஆராய்வதற்காக,ஒரு பல்கலைக்கழகத்தை
நிறுவியிருக்கிறேன். புத்தரின் சேவைக்காகவே என்னுடைய அரசும், கருவூலமும்
இருக்கின்றன. இதற்கெல்லாம் வெகுமதியாக எனக்கு என்ன கிடைக்கும்?” என்று
கேட்டான்.

“”எதுவும் கிடைக்காது. நரகத்தைத் தவிர” என்றார் போதிதர்மர்.

“”நான் என்ன தவறு செய்தேன். நல்லது செய்தவனுக்கு நரகமா?புத்தத் துறவிகள்
சொல்கிற புனித காரியங்களை எல்லாம் நான் செய்து கொண்டிருக்கிறேனே!” என்றான்.

“”உன்னுடைய சொந்தக் குரலை நீ கேட்காதவரை யாராலும் உனக்கு உதவ முடியாது.
உனக்குள்ளிருந்து ஒலிக்கும் குரலை நீ கேட்டதில்லை. அதைக் கேட்டிருந்தால்
இப்படியொரு முட்டாள்தனமாக கேள்வியை நீ கேட்டிருக்க மாட்டாய்,” என்றார்
போதிதர்மர்.

“”பேராசை கொண்ட மனதுக்குப் பிரதியாய் புத்தர் எந்தவொரு வெகுமதியும்
தருவதில்லை. புத்தரின் போதனைகள் எல்லாமே ஆசையின்மை பற்றியதுதான்,” என்றார்.

தாங்கள் சொல்கிற உள்ளிருந்து ஒலிக்கும் குரலை நான் கேட்டதில்லை. எனக்குள்
எழுகிற எண்ணங்களால் ஏற்படும் ஓயாத இரைச்சலில், நான் அதைக் கேட்கத்
தவறியிருப்பேன். அந்தவகையில் தாங்கள்தான் எனக்கு உதவ வேண்டும்,” என்று
கேட்டுக் கொண்டான்“வூ’ அரசன்.

“”அப்படியானால் விடியற்காலை நான்கு மணிக்கு நான் தங்கியிருக்கும்
இடத்துக்கு நீ வந்துவிடு. உன்னோடு மெய்க்காப்பாளர்களைக் கூட அழைத்து
வரக்கூடாது,” என்றார் போதிதர்மன்.

அதிகாலை நான்கு மணிக்கு, “வூ’ அரசன் அங்கே சென்றபோது,அவருக்கு முன்பாக
போதிதர்மர் அந்த இடத்துக்கு வந்து விட்டார். அவருடைய கையில் கம்பு ஒன்று
இருந்தது.

“கம்பை வைத்துக் கொண்டு இவர் எப்படி ஒரு மனதை அமைதிப்படுத்தப் போகிறார்’ என்று எண்ணிக் கொண்டான் அரசன்.

“”ம்… இந்தக் கோவில் முற்றத்தில் உட்கார்ந்துகொள்,” அதட்டலாக கூறினார் போதிதர்மர். அவனும் அப்படியே அமர்ந்தான்.

“”உனது கண்களை மூடிக்கொள். உனக்கு முன்பாக எனது கையில் கம்புடன் நான்
அமர்ந்திருக்கிறேன். உனது கண்களை மூடிக் கொண்டாயா? அது எங்கே இருக்கிறது
என்று கண்டுபிடி. மேலும்,மேலும் உள்நோக்கிச் செல். அதை கண்டுபிடித்து, “அது
இங்கே இருக்கு’ என்று எனக்குச் சொல். மற்றதை என் கையில் உள்ள கம்பு
பார்த்துக் கொள்ளும்,” என்றார் போதிதர்மர்.

மெய்ப்பொருளை அல்லது அமைதியைத் தேடுகிற எவரும் அத்தகைய அனுபவத்திற்குள்ளாகியிருக்க மாட்டார்.

அரசன் உள்நோக்கிப் பயணித்தான். தன் மனதைக் காண முயன்றான். ஆனால், அதைக் அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

“இதோ இருக்கிறது’ என்றோ “எதுவுமே இல்லை’ என்றோ சொல்வதற்கு அவன் அஞ்சினான்.

மனித சஞ்சாரமற்ற இந்த இடத்தில், போதிதர்மர் என்கிற இந்த அபாயகரமான மனிதன்
தன்னை எதுவும் செய்யக்கூடும். சுற்று வட்டாரத்தில் யாரும் இல்லை; தன்னிடம்
எந்தவொரு ஆயுதமும் இல்லை. இப்படியான எண்ண ஓட்டம் கலக்கத்தைத் தந்தது,
“வூ’அரசனுக்கு.

நேரம் ஓடியது. நிசப்தமான மலைப்பகுதியில் இளங்காற்று வீசியது. சூரிய ஒளி எங்கும் பரவத் தொடங்கியது.

போதிதர்மர் உறுமினார்.

“”எவ்வளவு நேரம்… இன்னும் மனதைக் கண்டுபிடிக்கவில்லையா?”என்றார்.

“”உமது கையிலுள்ள கம்பைப் பயன்படுத்தாமலே என்னுடைய மனதின் இரைச்சலை அகற்றி விட்டீர்!” என்றான் “வூ’ அரசன்.

அவனுடைய முகத்தில் எல்லையற்ற அமைதி காணப்பட்டது.

போதிதர்மர் எதையும் செய்யாமலே அரசனை முழுமையாக மாற்றிவிட்டார்.

“”தற்போது நான் புரிந்து கொண்டேன். ஒவ்வொரு செயலும் அதற்கான வெகுமதியைத்
தனக்குள்ளேயே கொண்டிருக்கிறது. அதேபோல் ஒவ்வொரு செயலும் தானே தண்டனையாகி
விடவும் கூடும். அவரவர் விதிக்கும் அவரவரே எஜமானர். வெகுமதியோ,தண்டனையோ
நம்மையன்றி வேறு எவராம் நமக்குக் கொடுக்கப் படுவதில்லை,” என்று சொன்னார்,
“வூ’ அரசன்.

இதைக் கேட்ட போதிதர்மர், “”நீ இங்கே வருவாய் என்று எனக்குத் தெரியும்.நாம்
போவதா, வேண்டாமா என்று இரவு முழுக்க உனக்குள் விவாதித்துக் கொண்டிருந்தாய்.

எதுவுமே இல்லாத ஒரு ஏழைக் துறவி நான். என் கைத்தடியைத் தவிர என்னிடம்
வேறு என்ன இருக்கிறது? பேரரசனான நீ என்னைக் கண்டு பயந்தது எவ்வளவு
கோழைத்தனம். பார், இந்தக் கம்பைக் கொண்டு உன்னுடைய மனதை நான்
அமைதிப்படுத்திவிட்டேன்.

ஆனாலும், நீ ஒரு அருமையான சீடன். நான் உன்னை நேசிக்கிறேன். உன்னை
மதிக்கிறேன். ஒரே அமர்வில் இந்த அளவு விழிப்புணர்வை வேறு யாரும்
அடைந்திருக்க முடியாது. உன்னுடைய இருண்ட மனதில் பேரொளி பரவி விட்டிருப்பதை
நான் காண்கிறேன்,” என்றார் போதிதர்மர்.

சீனத்தில் இருபது லட்சம் துறவிகள் இருந்தனர். ஆனால், அவர்களுள் நான்கு பேர்களை மட்டுமே தமது சீடர்களாக ஏற்றுக் கொண்டார் போதிதர்மர்.

தம்முடைய முதல் சீடரைக் கண்டு பிடிக்கவே ஒன்பது ஆண்டுகள் ஆயிற்று அவருக்கு. சீடரின் பெயர் ஹூய்-கோ.

“தகுதியான சீடன் தம்மை வந்தடையும்வரை மக்கள் கூட்டத்தைப் பார்க்க மாட்டேன்’
என்று கூறியிருந்தார் அவர். ஒன்பது ஆண்டுகளுக்கு வெற்றுச் சுவற்றையே
உற்றுக் கவனித்தபடி அமர்ந்திருந்தார் அவர்.

ஹூய்கோ வந்தார். தம்முடைய கையொன்றை வாளால் வெட்டினார். வெட்டுண்ட கையை
போதிதர்மரின் முன்பாக வீசி, “”உங்கள் பார்வையை என் பக்கம்
(சுவற்றிலிருந்து) திருப்பாவிடில், எனது தலை தங்கள் முன்னிலையில் வந்து
விழும். ஆம், என்னுடைய தலையையும் நான் துண்டிக்கப் போகிறேன்,” என்றார்.

“நீ தகுதியானவன்; தலையை இழக்கத் தேவையில்லை, நாம் அதைப் பயன்படுத்திக் கொள்வோம்,” என்றார் போதிதர்மர்.

Thursday, 3 November 2011

கண்கள்


அபிராம பட்டர் அந்த நள்ளிரவில் தூங்காமல் ஒரு மனிதனுக்காகக் காத்திருந்தார். அவர் இதற்கு முன் அவனைப் பார்த்ததில்லை. அவன் யார், எங்கிருந்து வருகிறான், எப்படி இருப்பான் என்று அவருக்குத் தெரியாது. ஆனால் வருவான் என்பதில் மட்டும் அவருக்குத் துளியும் சந்தேகமில்லை. அந்த முதிய கேரள நம்பூதிரி சொன்னது அவருக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. "வரும் பெளர்ணமி இரவில் உக்கிர சொரூபனாய் ஒருவன் வருவான்....".

அபிராம பட்டரின் வீடு ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் இருந்தது. வீட்டுக்கு அருகில் புதிதாகக் கட்டப்பட்டு விக்கிரகம் இன்னும் பிரதிஷ்டையாகாத கோயில் ஒன்று இருந்தது. அந்தப் பகுதியில் தொலை தூரத்திற்கு வேறு எந்த வீடும் கிடையாது. காலையில் பால்காரன் வந்து விட்டுப் போனால் வேறு யாரும் அவர் வீட்டுக்கு வருவது கிடையாது. உறவினர்களோ நண்பர்களோ இல்லாமல் தனிமையாக அவர் அந்த வீட்டில் வசித்து வந்தது செந்திலின் திட்டத்திற்குக் கன கச்சிதமாகப் பொருந்தியது.

ஒரு புராதன அம்மன் கோயிலில் நகைகளைக் கொள்ளை அடிக்க அவன் மூன்று மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டு விட்டான். அதை வாங்குவதற்கு வட நாட்டு மனிதர் ஒருவர் தயாராக இருந்தார். கொள்ளை அடித்தவுடன் அன்றைய தினமே நகைகளை அவர் வந்து வாங்கிக் கொண்டு போவதாக இருந்தது. ஆனால் கொள்ளையடிக்கப் போகும் கோயிலின் அருகே உள்ள பெரிய மைதானத்தில் அவனது திட்ட நாளன்றே முதலமைச்சரின் பொதுக்கூட்டம் நடக்க திடீரென்று ஏற்பாடு ஆனது. போலீஸ் நடமாட்டம் அதிகமாக அந்தப் பகுதியில் ஆரம்பிக்கும் என்பதால் அவன் தனது திட்டத்தை மூன்று நாட்கள் முன்னதாக செயல்படுத்த வேண்டியதாயிற்று. ஆனால் அந்த வட நாட்டு மனிதரோ முன்பு சொன்ன தேதிக்கு முன்னால் வர முடியாது என்று சொல்ல கொள்ளை அடித்த நகைகளுடன் மூன்று நாள் மறைந்திருக்க ஒரு இடத்தைத் தேடித் தேடிக் கடைசியாக அவன் தேர்ந்தெடுத்தது தான் அவர் வீடு. நகைகளை வெற்றிகரமாக அவன் கொள்ளையடித்து விட்டான். லட்சக் கணக்கான ரூபாய் மதிப்புள்ள நகைகளை ஒரு பழந்துணியில் கட்டிக் கொண்டு அவன் அவரது வீட்டை அடைந்த போது இரவு மணி பன்னிரண்டு. அந்த நேரத்தில் வாசற் கதவு திறந்திருந்ததும் உள்ளே விளக்கு எரிந்து கொண்டிருந்ததும் அவனை திடுக்கிட வைத்தன. 'யாராவது வந்திருக்கிறார்களா?' வெளியே சிறிது நேரம் நின்று காதுகளைக் கூர்மையாக்கினான். காற்றும், வண்டுகளும் தான் சத்தமிட்டன. வீட்டுக்குள் இருந்து எந்த ஒரு சத்தமும் இல்லை. தன் கத்தியைக் கையில் எடுத்துக் கொண்டு மெள்ள உள்ளே நுழைந்தான்.

"வாங்கோ..வாங்கோ"

அபிராம பட்டர் மிகுந்த சந்தோஷத்துடன் எழுந்து நின்று அவனை வரவேற்றார். கிட்டத்தட்ட எழுபது வயதைத் தாண்டிய அவர் தன் வயதில் பாதியைக் கூடத் தாண்டாத அவனது திடகாத்திரமான முரட்டு உருவத்தையோ கத்தியையோ பார்த்து பயக்காதது மட்டுமல்ல அவனை எதிர்பார்த்தது போலக் காத்திருந்ததும், வரவேற்றதும் அவனுக்குப் பெரும் ஆச்சரியத்தை ஏற்ப்படுத்தியது. இது வரை இது போன்ற சந்தர்ப்பங்களில் அவன் எதிர்கொண்டதெல்லாம் பயம், அதிர்ச்சி, மயக்கம், உளறல், கூக்குரலிடுதல் வகையறாக்களைத் தான்.

"உட்காருங்கோ" என்று தான் அமர்ந்திருந்த நாற்காலிக்கு எதிர் நாற்காலியைக் கை காட்டினார்.

செந்தில் என்ன செய்வது என்று தீர்மானிக்க முடியாத நிலையில் இருந்தான். இங்கு நடந்து கொண்டிருப்பவை எதையும் அவனால் நம்ப முடியவில்லை. அபிராம பட்டரைக் கூர்ந்து பார்த்தான். அவர் அவிழ்ந்திருந்த தன் குடுமியை நிதானமாக முடிந்து கொண்டு அவனைப் பார்த்துப் புன்னகைத்தார். அது ஒரு சந்தோஷமான, மனம் நிறைந்த புன்னகை.

"பெருசு நீ என்னை வேற யாரோன்னு நினைச்சுட்டே போல இருக்கு" செந்தில் கரகரத்த குரலில் தன் சந்தேகத்தை வெளிப்படுத்தினான்.

அபிராம பட்டருக்கு அந்தக் கேரள நம்பூதிரிகள் சொன்னது நன்றாக நினைவில் இருக்கிறது. "வரும் பெளர்ணமி இரவில் உக்கிர சொரூபனாய் ஒருவன் வருவான்....". அவன் வந்த நேரமும் சரி, கத்தியோடு வந்த விதமும் சரி அவர்கள் சொன்னது போலத் தான் இருக்கிறது.

"அப்படியெல்லாம் இல்லை" என்று அமைதியாக சொன்னார்.

'கிழத்திற்குப் பைத்தியம் முற்றி விட்டது போலிருக்கிறது' என்று எண்ணிய செந்திலுக்குச் சிறிது உதறல் எடுத்தது. போலீஸைக் கூட சமாளிக்க அவன் தயார். ஆனால் பைத்தியம் என்றால் அது அடுத்து என்ன செய்யுமோ என்று அனுமானிக்க முடியாததால் ஏற்ப்படுகிற உதறல் அது. அதை வெளிக் காட்டாமல் யோசித்தான். எதிராளியை என்றுமே பயத்தில் வைத்திருக்க வேண்டும் என்பது அவனது தொழில் சூத்திரம். பயம் மட்டுமே என்றுமே மனிதனை செயல் இழக்க வைக்கிறது என்பதும் அது தனக்குப் பாதுகாப்பு என்பதும் அனுபவம் அவனுக்குக் கற்றுத் தந்த பாடம். கத்தியை அவர் முன்னுக்கு நீட்டினான். "பெருசு இது பொம்மைக் கத்தியில்ல. நான் நினைச்சா ஒரு நிமிஷத்தில உன்னைக் கொன்னுடலாம் தெரியுமா?"

அபிராம பட்டர் அதற்கும் அசரவில்லை. "நான் எப்ப சாகணும்னு பராசக்தி நான் பிறந்தப்பவே நாள் குறிச்சுருக்கா. அதுக்கு முன்னாடி நீங்க நினைச்சு ஒண்ணும் ஆகப் போறதில்லை. அந்தக் கத்தியை உள்ளே வைங்கோ. நான் என்ன உங்க கிட்ட சண்டையா போட்டேன்".

மனிதர் ஒடிசலாக இருந்தாலும் அவர் பேச்சு உறுதியாக இருந்தது. அவரை என்ன செய்வது என்றே அவனால் தீர்மானிக்க முடியவில்லை. "பெருசு உன் கிட்ட நானும் சண்டை போட வரல. நான் இங்க மூணு நாள் தங்கப் போறேன். நான் இங்க இருக்கறது வெளிய ஒருத்தனுக்கும் தெரியக் கூடாது. அது உன்னால வெளிய தெரியப்போகுதுன்னு தெரிஞ்சாலோ, நீ என் கிட்ட எடக்கு முடக்கா நடந்துகிட்டாலோ நான் உனக்கு நாள் குறிச்சுடுவேன். பராசக்தி குறிச்ச நாள் வரை நீ உசிரோட இருக்க முடியாது. புரிஞ்சுதா"

"புரிஞ்சுது. என்னால் உங்களுக்கு எந்தத் தொந்தரவும் வராது. பயப்படாதீங்கோ. எவ்வளவு நாள் வேணும்னாலும் இருங்கோ. உங்களாலும் எனக்கு ஒரு காரியம் ஆக வேண்டி இருக்கு. அதுக்காகத் தான் பெளர்ணமி எப்போ வரும், நீங்க எப்போ வருவீங்கன்னு நான் ஆவலாய் காத்துகிட்டு இருந்தேன்".

அந்தக் கடைசி இரண்டு வாக்கியங்களும் அவனை திடுக்கிட வைத்தன. எரிச்சலோடு சொன்னான். "புதிர் போடாம எனக்கும் பைத்தியம் பிடிக்கறதுக்கு முன்னாடி விவரமா சொல்லுய்யா"

அபிராம பட்டர் சொல்ல ஆரம்பித்தார். பம்பாயில் கோடிக் கணக்கில் சொத்துள்ள வைர வியாபாரம் செய்யும் ஒரு பெரிய பணக்காரக் குடும்பத்தின் பூர்வீக இடமும் அந்த இடத்தில் ஒரு பராசக்தி கோயிலும் இங்கிருந்தன. தங்களது சுபிட்சத்திற்கு அந்தப் பராசக்தியின் அருள் தான் காரணம் என்று பெரிதும் நம்பிய அந்தக் குடும்பம், தடைப்படாமல் பூஜை அந்தக் கோயிலில் நடக்க அபிராம பட்டரை நியமித்திருந்தது. தனது பதினெட்டாம் வயதிலிருந்து அபிராம பட்டர் கோயிலில் பூஜை செய்து கொண்டு அருகில் இருந்த அந்த வீட்டில் வசித்து வந்தார். வருடத்திற்கு ஒரு முறை குடும்பத்தினர் அனைவரும் வந்து பராசக்தியை தொழுது விட்டுப் போவார்கள். ஆறு மாதங்களுக்கு முன்பு கோயிலின் ஒரு பகுதி இடிந்து விழுந்து பராசக்தி சிலை சேதப்பட்டுப் போனது. அதே சமயம் அந்தக் குடும்பத்தின் மூத்த தலைவருக்கு மாரடைப்பும் வரவே உடனடியாக பல லட்சம் செலவு செய்து கோயிலைப் புதிதாகக் கட்டவும் சாஸ்திரப்படி ஒரு பராசக்தி சிலை செய்யவும் ஏற்பாடு செய்தார்கள். கோயில் கட்டப்பட்டு முடிந்த போது பராசக்தி சிலையில் கண்களைத் தவிர சிற்ப வேலை எல்லாமே முடிந்திருந்தது. அந்த நிலையில் சிற்பி ஒரு சாலை விபத்தில் இறந்து போனான். இது ஒரு பெரிய அபசகுனமாகத் தோன்றவே அந்தக் குடும்பத் தலைவர் அபிராம பட்டரையும் அழைத்துக் கொண்டு கேரளா சென்று சில வேத விற்பன்னர்களான நம்பூதிரிகளையும் ஜோதிடர்களையும் கலந்தாலோசித்தார். அவர்கள் அஷ்ட மங்கலப் ப்ரஸ்னம் வைத்து ஆருடம் சொன்னார்கள். பெளர்ணமி இரவு அன்று ஒருவன் தானாகவே அபிராம பட்டரைத் தேடி வருவான் என்றும் அவனைக் கொண்டு அந்தக் கண்களைச் செதுக்கும் படியும் சொன்ன அவர்கள் சிலையைப் பிரதிஷ்டை செய்ய நாளையும் குறித்துக் கொடுத்திருந்தார்கள். அப்படிச் செய்தால் அந்தக் குடும்பத்தார்களுக்கு எல்லா தோஷங்களும் நீங்குவதோடு அந்தக் கோயிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் வந்து தரிசிக்கும் பிரசித்தியும், சக்தியும் வாய்ந்த ஸ்தலமாக மாறும் என்றும் சொன்னார்கள்.

"இந்த வீட்டுக்கு வெளியாட்கள் வந்து பல காலம் ஆயிடுச்சு. ஆனா அவங்க சொன்னது போல இந்த பெளர்ணமி ராத்திரியாப் பார்த்து நீங்க வந்திருக்கீங்கோ. அவங்க சொன்னபடியே நீங்க இங்கே இருந்து அந்தக் கண்களையும் செதுக்கித் தரணும். அந்தக் குடும்பத்துப் பெரியவர் நீங்க எவ்வளவு பணம் கேட்டாலும் தரச் சொல்லி என் கிட்டே அவர் கையெழுத்து போட்ட ப்ளாங்க் செக் கொடுத்துட்டுப் போயிருக்கார். அதில் நீங்க என்ன தொகை வேணும்னாலும் எழுதிப் பணம் எடுத்துக்கலாம். அவங்களுக்குப் பணம் ஒரு பிரச்னையே இல்லை"

கேட்டு விட்டு செந்திலே ஒரு சிலையாகத் தான் நின்றிருந்தான். கடைசியில் அரை மனதோடு சொன்னான். "நான் ஒரு திருடன். சிற்பியல்ல"

"அஷ்ட மங்கல ப்ரஸ்னம் வைத்தவர்கள் மஹா தவசிகள். சாதாரணமானவங்க அல்ல. அவங்க சொன்னது பொய்க்காது. உங்களுக்கு சிற்பக்கலை தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை" அபிராம பட்டர் ஆணித்தரமாகச் சொன்னார்.

அந்த ப்ளாங்க் செக் நிறையவே ஈர்த்தாலும் செந்திலுக்கு அந்த இடமே மாந்திரிகம் நிறைந்ததாகத் தோன்றியது. எல்லாம் முன்னமே தெரிந்து வைத்திருந்த அந்தக் கேரள நம்பூதிரிகளும், அபிராம பட்டரும் அவனை அசத்தினார்கள். இந்த இருபத்தி ஓராம் நூற்றாண்டில் இப்படியும் நடக்குமா என்கிற பிரமிப்பு தீரவில்லை. கூடவே அங்கிருந்து ஓடி விடலாம் என்ற எண்ணமும் வந்தது. ஆனால் அந்தத் திருட்டு நகைகளோடு இனி எங்கே போய் ஒளிவது? இன்னமும் மூன்று நாள் ஒளிந்திருக்க இது தான் பாதுகாப்பான இடம்.

"பெருசு நான் இப்ப எங்கேயிருந்து வர்றேன் தெரியுமா? ஒரு அம்மன் கோயில்ல இருந்து நகைகளைக் கொள்ளை அடிச்சுட்டு வர்றேன். என்னைப் போய் ஒரு அம்மன் சிலைக்குக் கண் வடிக்கச் சொல்றிச்ங்க. இத்தன உசந்த வேலையை எங்கிட்டத் தர்றீங்களே தமாஷா இல்ல"

"உங்களை மாதிரிக் கொள்ளை அடிச்ச ஒருத்தர் தான் ராமாயணம் எழுதினார். எல்லாம் தெய்வ சங்கல்பம். சரி சரி மணி ரெண்டாகப் போகுது. பேசாமத் தூங்குங்கோ. மீதி எல்லாம் நாளைக்குப் பேசிக்கலாம்" என்று அவர் அவனுக்குப் படுக்கையை விரித்துத் தானும் போய் படுத்துக் கொண்டார். சிறிது நேரத்தில் அவரது குறட்டை சத்தம் லேசாகக் கேட்டது.

அவனுக்கு உறக்கம் வரவில்லை. 'இனி இந்த வேலையைச் செய்ய மாட்டேன்' என்று சுமார் இருபது வருடங்களுக்கு முன் அப்பாவின் எதிரில் உளியைத் தூக்கி எறிந்த நாள் அவனுக்கு நினைவுக்கு வந்தது.

அப்பா அன்று சொன்னார் "இது ஒரு நல்ல கலைடா".

"நீங்க கலையைப் பார்க்கிறீங்க. நான் இந்தக் கலை இத்தனை வருஷமா உங்களுக்குக் கொடுத்த பட்டினியைப் பார்க்கறேன்"

அதற்குப் பின் அவன் உளியை எடுத்தது பூட்டுகளை உடைக்கத் தான். இத்தனை வருடம் கழித்து இப்படியொரு சூழ்நிச்லையில் மறுபடி அவனுக்கு ப்ளாங்க் செக்குடன் சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. அபிராம பட்டரின் குறட்டை சத்தம் அதிகமாகியது. ஒரு கொள்ளைக்காரன் வீட்டில் இருக்கும் போது எந்த பயமும் இன்றித் தூங்கும் பட்டரைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. அவனையும் அறியாமல் அவனுக்கு ஏனோ அந்தப் பட்டரை மிகவும் பிடித்துப் போய் விட்டது.

மறு நாள் காலை அவன் சொன்னான் "எனக்கு நேத்துத் தூக்கமே வரல பெருசு"

"கையில கொள்ளையடிச்ச நகை அவ்வளவு இருக்கிறப்ப எப்படித் தூக்கம் வரும்"

"என்ன கிண்டலா. அது சரி. என்னை இங்க வச்சிகிட்டு எப்படிப் பெருசு நீ நிம்மதியாத் தூங்கினே"

"உண்மையைச் சொன்னா நான் ஆறு மாசம் கழிச்சு நேத்து தான் நிம்மதியாத் தூங்கினேன்" அபிராம பட்டரின் கண்களில் நீர் தழும்பியது "அந்தப் பணக்காரங்களைப் பொறுத்த வரை இந்த பராசக்தி அவங்களைச் சுபிட்சமாய் வச்சிருக்கும் ஒரு தெய்வம். ஆனா எனக்கு எல்லாமே அவள் தான். பதினெட்டு வயசுல பூஜை செய்ய ஆரம்பிச்ச எனக்கு அப்புறம் ஒரு குடும்பமோ, பணமோ, வேற சினேகிதர்களோ வேணும்னு தோணலை. தாயாய், சினேகிதியாய், குழந்தையாய்,சொத்தாய்,எல்லாமாய் எனக்கு அவள் இருந்தாள். பூஜை செய்துகிட்டு இருக்கிறப்பவே ஒரு நாள் அவள் காலடியில் உயிர் போயிடணும். அது தான் என் ஒரே ஆசை. விக்கிரகம் சேதப்பட்டப்ப என்னையே ரெண்டாப் பிளந்த மாதிரி துடிச்சேன். நேத்து உங்களைப் பார்த்த பிறகு தான் நிம்மதி.சந்தோஷம்.எல்லாம் சரியாகி நான் பழைய படி பூஜை செய்ய ஆரம்பிச்சுடலாம்னு நம்பிக்கை வந்துடுச்சு"

"ஏன் பெருசு எனக்கே அவங்க இவ்வளவு பணம் தர்றாங்களே. உனக்கு எவ்வளவு தருவாங்க"

"எவ்வளவு வேணுனாலும் தருவாங்க. பசிக்குச் சோறு, உடுக்கத் துணி, தங்க இடம் இதுக்கு மேல என்ன வேணும் சொல்லுங்கோ. அதுக்கு மேல கிடைக்கிறதெல்லாம் அதிகம் தான். அவங்க தந்தாலும் நான் வாங்கறதில்லை"

அந்தக் கிழவரின் கள்ளங்கபடமில்லாத பேச்சும் வெகுளித்தனமும் அவன் தந்தையை அவனுக்கு நினைவுபடுத்தின. அவரும் இப்படித்தான் ஒரு பிழைக்கத் தெரியாத மனிதராகவே கடைசி வரை இருந்தார். ஆனால் பிழைக்கத் தெரியாதவர் என்று தான் நினைக்கும் இந்தக் கிழவரின் நேற்றைய நிம்மதியான உறக்கமும் பிழைக்கத் தெரிந்த தனது உறக்கம் வராத நிலையும் ஒரு கணம் அவனுக்கு உறைத்தது. இது பற்றி நினைக்க அவன் விரும்பவில்லை. பேச்சை மாற்றினான்.

"ஏன் பெருசு இவ்வளவு சின்னவனான என்னைப் போய் எதுக்கு நீங்க, வாங்க, போங்கன்னு சொல்றே"

"என் தெய்வத்திற்கு கண்கள் தரப்போறவர் நீங்க. நீங்க எவ்வளவு சின்னவராக இருந்தாலும், எப்படிப் பட்டவரா இருந்தாலும் சரி எனக்கு கடவுள் மாதிரி தான்"

அவரது வார்த்தைகள் அவனை என்னவோ செய்தன.

"நான் சிற்ப வேலை செஞ்சு இருபது வருஷம் ஆயிடுச்சு. இப்ப எனக்கு எப்படி வரும்னு தெரியல"

"நல்லாவே வரும்.எனக்கு நம்பிக்கை இருக்கு" என்றவர் அருகில் கோயிலில் இருந்த அந்த சிற்பத்தைக் காண்பித்தார். பழைய சிற்பி உபயோகித்த உபகரணங்களும் அங்கிருந்தன. சிலைக் கல்லையும் அந்த உபகரணங்களையும் அவன் நன்றாக ஆராய்ந்தான்.

"பெருசு, நீங்க போங்க. எனக்குக் கொஞ்சம் தனியா இருக்கணும்" அவர் போய் விட்டார்.

அந்த சிலையையே பார்த்தபடி நிறைய நேரம் செந்தில் உட்கார்ந்தான். திருடன் திரும்பவும் கலைஞனாக மாற சிறிது நேரம் தேவைப் பட்டது. தன் குருவான தந்தையை நினைத்துக் கொண்டான்.
"சிலை கல்லில் வர்றதுக்கு முன்னால் மனசில் துல்லியமாய் வரணும். அதுக்கு முன்னால் உளியைத் தொடக்கூடாது" என்று அப்பா என்றும் சொல்வார். சிலையை நிறைய நேரம் பார்த்து கண்ணை மூடினான். மனதில் பல விதமான கண்கள் வந்து வந்துப் பொருத்தமில்லாமல் மறைந்தன. கடைசியில் பேரழகுடன் இரு விழிகள் வந்து மனதில் உள்ள சிலையில் நிலைத்தன. அவனுக்குள் ஏதோ ஒரு சக்தி ஒரு துளியாக ஆரம்பித்து வெள்ளமாகப் பெருக ஆரம்பித்தது. உளியைக் கையில் எடுத்தான். சிலை கண்கள் திறக்க ஆரம்பித்தது.

அவனுக்கே எப்படி செதுக்கி முடித்தான் என்று தெரியவில்லை. ஆனால் முடித்த பின் அவனே சொக்கிப் போனான். பராசக்தியின் கண்கள் மெள்ள மெள்ளப் பெரிதாகிக் கொண்டே போவது போலத் தோன்றியது. கடைசியில் அந்தக் கண்களைத் தவிர வேறெதையும் அவனால் காண முடியவில்லை. அண்ட சராசரங்களையே அவன் அந்தக் கண்களில் கண்டான். அந்தக் கண்களில் இருந்து கவனத்தைத் திருப்ப அவனால் முடியவில்லை. பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் எனத் தோன்றியது. பார்த்தான். பார்த்தான். பார்த்துக் கொண்டே இருந்தான். காலம் அவனைப் பொருத்த வரை நின்று போய் விட்டது.

அபிராம பட்டர் மதியம், மாலை, இரவு என மூன்று நேரங்களில் வந்து பார்த்தது அவனுக்குத் தெரியாது. இரவில் அவர் வந்து பார்க்கும் போது இரண்டு சிலைகளைப் பார்த்தார். அந்தத் தெய்வச் சிலையும் மனிதச் சிலையும் ஒன்றை ஒன்று நேராகப் பார்த்துக் கொண்டிருந்தன. அவன் முகத்தில் பிரமிப்பு தெரிந்தது. அந்த முரட்டு முகம் சிறிது சிறிதாகக் கனிய ஆரம்பித்து பேரமைதியுடன் பளிச்சிட்டது. பட்டர் பராசக்தியைப் பார்த்தார். அவரது பராசக்தி இப்போது முன்பை விட அதிகப் பேரழகுடன் ஜொலித்தாள். எல்லை இல்லாத சந்தோஷத்தில் அவர் கண்கள் அருவியாயின. அவர் சாஷ்டாங்கமாய் அவனது கால்களில் விழுந்தார்.

இந்த உலகிற்கு மறுபடியும் திரும்பிய அவன் தீயை மிதித்தவன் போலப் பின் வாங்கினான். "பெரியவரே, என்ன இது..." அவனது பேச்சும் தோரணையும் முற்றிலும் மாறி இருந்தது.

அபிராம பட்டருக்கு வார்த்தைகள் வரவில்லை. மெளனமாக அந்தச் சிலையைக் காண்பித்துக் கை கூப்பினார். பின்பு அந்தப் ப்ளாங்க் செக்கை நீட்டினார்.

அவன் வாங்கவில்லை. "நான் கண்களைச் செதுக்குனதுக்கு அவள் என் கண்களைத் திறந்துட்டா பெரியவரே. எங்களுக்குள்ள கணக்கு சரியாயிடுச்சு" புன்னகையோடு கரகரத்த குரலில் சொன்னான். "ஒரு விதத்தில் பார்த்தா வாழ்க்கையே நமக்கு அவள் தர்ற ப்ளாங்க் செக் தான், இல்லையா பெரியவரே. என்ன வேணும்னாலும் எழுதி நிரப்பிக்கோன்னு குடுத்துடறா. நாம் தான் எதையோ எழுதி எப்படியோ நிரப்பிக் கெடுத்துடறோம்" அவன் குரலில் அவன் வாழ்ந்த வாழ்க்கைக்கு வருத்தப் படுவது போல் தெரிந்தது. அதற்குப் பின் பேசும் மனநிலையில் இருவருமே இல்லை. மனம் நிறைந்திருக்கையில் வார்த்தைகள் அனாவசியமாகவும், மெளனமே இயல்பாகவும் இருவருக்கும் தோன்றியது. சாப்பிட்டு விட்டுத் தூங்கினார்கள்.

நடு இரவில் அபிராம பட்டர் விழித்துப் பார்க்கையில் செந்திலின் படுக்கை காலியாக இருந்தது. வீடு முழுவதும் தேடி அவன் இல்லாமல் கோயிலுக்குப் போய்ப் பார்த்தார். அவன் அங்கும் இருக்கவில்லை. அவரிடம் சொல்லிக் கொள்ளாமலேயே அவன் போய் விட்டிருந்தான். ஆனால் அவன் நேற்றுக் கொண்டு வந்திருந்த நகைகள் எல்லாமே பராசக்தியை அலங்கரித்துக் கொண்டிருந்தன.

பந்தயக்குதிரை


தூக்க மாத்திரைகளை விழுங்கும் முன் பரத் தாத்தாவிற்கு மட்டும் ஒரு வரியில் கடிதம் எழுதினான். "என்னை மன்னிச்சுடுங்க தாத்தா"

அவர் அவன் மேல் உயிரையே வைத்திருந்தார். அவன் பிரிவை அவர் தாங்க மாட்டார். ஆனாலும் அவனுக்கு வேறு வழி தெரியவில்லை. மாத்திரைகள் உள்ளே போய் மரணம் நெருங்குகிற அந்த கடைசி தருணத்த்¢ல் கூட அவன் அவரை மட்டுமே நன்றியோடு நினைத்துப் பார்த்தான். அவனை அவர் போல யாரும் நேசித்ததில்லை...

அவனுக்கு நினைவுக்கு எட்டிய பிஞ்சுப் பருவத்திலேயே அவன் கூட இருந்தது அவர் தான். அப்பா மாதவன் பெரும்பாலும் வியாபார விஷயமாக வெளியூர்களில் இருந்தார். அம்மா மைதிலி அவன் தூக்கத்திலிருந்து காலையில் எழும் போது வேலைக்குப் போயிருப்பாள். அவள் இரவில் திரும்பி வரும் போது அவன் உறங்கியிருப்பான். அவள் ஒரு வெளிநாட்டுக் கம்பெனியில் உயர்ந்த பதவியில் இருந்ததால் நேரம் காலம் இல்லாமல் உழைக்க வேண்டியிருந்தது. விடுமுறை நாட்களிலோ மகன் உட்பட யாரும் தன்னை தொந்திரவு செய்யாமல் இருப்பது நல்லது என்று அவளுக்குப் பட்டது. இப்படி பெற்றோர் இருவருமே தங்கள் ஒரே பிள்ளையைக் கவனிக்க நேரமில்லாமல் இருப்பது தாத்தா ரங்கநாதனுக்கு சரியாகப் படவில்லை.

ஒரு நாள் அவர் தன் மகன் மாதவனிடமும் மருமகள் மைதிலியிடமும் வெளிப்படையாகச் சொல்லி ஆதங்கப் பட்டார். மாதவனோ "என்னப்பா செய்யறது" என்று கேள்வியையே பதிலாகச் சொல்லி அடுத்த கணம் அதை மறந்து போனார். மைதிலியோ அமெரிக்காவை உதாரணம் காட்டினாள். "அங்கெல்லாம் இங்கத்து மாதிரி எப்பவுமே குழந்தைகள் கூட இருந்து கொஞ்சி செல்லம் கொடுத்துக் கெடுக்கறதில்லை மாமா". அவர் அப்படித்தான் செய்கிறார் என்று அவள் சொல்லாமல் சொல்லிக் காண்பித்தாள். தாத்தா வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு அவனை அணைத்தபடி சொன்னார்: "இவங்களுக்கு எப்படிடா குழந்தை புரிய வைப்பேன்".

தன்னால் முடிந்த வரை தாத்தா அவனுக்கு சர்வமாக இருந்தார். கூட விளையாடினார். கதைகள் சொன்னார். சோறு ஊட்டினார். தாலாட்டு பாடினார். அவன் பள்ளிக்கு செல்ல ஆரம்பித்த பின் வேறு ஒரு பிரச்சினை ஆரம்பித்தது. மகன் படிப்பதைத் தவிர வேறு என்ன செய்தாலும் அது நேரத்தை வீணாக்குவது என்று அம்மா ந்¢னைக்க ஆரம்பித்தாள். தன் மகன் அகில இந்திய அளவில் படிப்பில் சாதனை படைக்க வேண்டும் என்றும் அதற்கு அவனுக்கு மிகச் சிறு வயதிலேயே பயிற்சி அவசியம் என்று எண்ணினாள். ஒவ்வொரு தேர்விலும் அவன் முதல் ரேங்க் வர வேண்டும் என்று எதிர்பார்த்தாள். அவனும் படிப்பில் சுட்டியாக இருந்ததால் முதல் ரேங்க் வந்தான். ஒன்றாம் வகுப்பில் ஒரு முறை அவன் நான்காம் ரேங்க் வந்து விட அது அவளுக்குப் பெரிய அவமானமாக இருந்தது. தன் மாமனாரிடம் அவன் விளையாடுவதும் கதை கேட்பதும் தான் அவன் ரேங்க் குறையக் காரணம் என்று கண்டுபிடித்தாள். அதை மாமனாரிடம் சொல்லியும் காண்பித்தாள்.

"குழந்தை என்ன மெஷினா மைதிலி. அந்தந்த வயசு சந்தோஷங்கள் அதுக்கு வேண்டாமா? ஒன்றாம் கிளாசில் போய் இதை நீ பெரிசு பண்றியே"

"இது அந்தக் காலம் மாதிரி இல்லை மாமா. எவ்வளவு படிச்சாலும் பத்தாது. நாலாம் ரேங்க் வரும் போது முழிச்சுக்காட்டா அப்புறம் அது பெயிலில் வந்து நிற்கும்"

தாத்தா அந்த முறை விடவில்லை. தொடர்ந்து வாதாடினார். அம்மா கடைசியில் அப்பாவிடம் போய் சொன்னாள் "இதப் பாருங்க. உங்க அப்பா இங்க இருக்கிற வரை நம்ம பையன் உருப்பட மாட்டான்"

அப்பா தாத்தாவிடம் சலிப்புடன் கேட்டார். "என்னப்பா இது.."

தாத்தாவின் முகத்தில் தெரிந்த வலி பரத்திற்கு இப்போதும் பசுமையாக நினைவு இருக்கிறது. மருமகளின் வார்த்தைகளா, மகன் அதைக் கேட்டுக் கொண்டு வந்து தன்னிடம் வந்து சலித்துக் கொண்டதா எது அதிகமாக அவரை அதிகமாய் காயப் படுத்தியது என்று தெரியவில்லை. அன்றே தன் கிராமத்து பூர்வீக வீட்டுக்குப் போய் விட தாத்தா முடிவு செய்தார். அன்று அவனைக் கட்டிப் பிடித்துக் கொண்டு நிறைய நேரம் அழுதார். "தாத்தாவோட உடம்பு தான் அங்கே போகுது. மனசையும், உயிரையும் உங்கிட்ட தான் விட்டுட்டுப் போறேன். நீ நல்லாப் படிக்கணும். பெரிய ஆளா வரணும் என்ன"

அவர் போன அந்தக் கணமே அவன் உலகம் சூனியமாகியது. அவன் அன்று அழுதது போல் வாழ்வில் என்றுமே அழுததில்லை. அம்மா அலட்சியமாகச் சொன்னாள். "எல்லாம் நாலு நாளில் சரியாயிடும்" அந்தத் துக்கம் அவள் சொன்னது போல நான்கு நாட்களில் சரியாகவில்லை. சாசுவதமாக அவனுள் தங்கி விட்டது.

அம்மா அவனிடம் எப்போது பேசினாலும் அது அவன் படிப்பைப் பற்றித் தான் இருந்தது. ஆரம்ப நாட்களில் ஞாயிற்றுக் கிழமைகளில் அவன் அம்மாவிடம் வேறு எதைப் பற்றியாவது சொல்லப் போனால், "ப்ளீஸ், பரத். அம்மாவுக்கு இன்று ஒரு நாள் தான் கிடைக்கிறது. தொந்திரவு செய்யாதே" என்று சொல்லி டீவியைப் பார்க்க ஆரம்பித்து விடுவாள். மற்ற விடுமுறை நாட்களிலும் அவள் டீவியில் முழுகி விடுவாள். அவனுக்கு எந்த விலை உயர்ந்த பொருளையும் அவனது பெற்றோர் வாங்கித் தரத் தயாராக இருந்தார்கள். தங்களது நேரத்தை மட்டும் அவனிடம் பங்கிட்டுக் கொள்ள அவர்கள் தயாராக இல்லை. அவனுக்கோ மனிதர்கள் தேவைப்பட்டார்கள். தாத்தா போகும் போது லீவிலாவது அவனை கிராமத்துக்கு அனுப்பச் சொல்லி விட்டுப் போனார். அப்போது தலையாட்டினாலும் அவனை எந்த லீவிலும் அங்கே அனுப்பாமல் அம்மா பார்த்துக் கொண்டாள். முழுப் பரிட்சை லீவுகளில் கூட அவனை ஸ்பெஷல் கிளாஸ்களில் சேர்த்தாள். அவனுக்கு ஏதாவது படிக்க இருந்தது.

தாத்தா அந்த வீட்டு வாசற்படியை மறுபடி மிதிக்கவில்லை. அப்பா மட்டும் அவரை எப்போதாவது ஒரு முறை சென்று பார்த்து விட்டு வருவார். "எப்பப் போனாலும் அப்பா பரத்தை ஏன் அனுப்பலைன்னு கேட்டுப் புலம்பறார். ஒரு லீவிலாவது அனுப்பணும் மைதிலி" என்று பல வருடங்கள் கழித்து ஒரு முறை அப்பா அம்மாவிடம் சொல்வது அவன் காதில் விழுந்தது. "பார்க்கலாம்" என்று அம்மா சொன்னாலும் இது வரை ஒரு முறை கூட அவனை அனுப்பவில்லை. தாத்தாவின் கிராமத்து வீட்டுக்கு போன் வந்த பிறகு எப்போதாவது ஒரு முறை அவனிடம் போனில் பேசுவார். அம்மாவின் கண்காணிப்பில் அதுவும் அதிக நேரமோ, அடிக்கடியோ இருக்கவில்லை. அந்த நாட்களில் அவன் மிக சந்தோஷமாக இருப்பான்.

ப்ளஸ் டூ பரிட்சைக்கு ஒரு மாதத்திற்கு முன் போன் செய்த போது தாத்தா சொன்னார். "பரத் ரிசல்ட் வர்றப்ப உன் போட்டோவை பேப்பரில் பார்க்க சையாய் இருக்குடா". தாத்தாவுக்காக பரிட்சை முடியும் வரை படிப்பைத் தவிர வேறு எதிலும் சிறிதும் கவனம் செலுத்தாமல் படித்தான். மாநிலத்தில் முதல் மாணவனாக வந்தான். போட்டோவைப் பத்திரிக்கைகளில் பார்த்த தாத்தா அவனுக்குப் போன் செய்து நிறைய நேரம் பேச வார்த்தைகள் கிடைக்காமல் தவித்தார். மாநிலத்தில் முதலிடம் கிடைத்ததை விடத் தாத்தாவின் திக்குமுக்காடல் அவனை அதிகமாக சந்தோஷப்பட வைத்தது. ஆனால் அம்மா அப்பாவிடம் பெருமையாக சொன்னாள் "நான் கண்டிப்பாய் இல்லாமல் இருந்திருந்தால் இந்த ரிசல்ட் வந்திருக்குமா? இப்பவாவது உங்கப்பா இதைப் புரிஞ்சிருப்பார்னு நினைக்கறேன்"

கல்லூரியில் சேர்ந்த பிறகு அவன் தனிமையை அதிகமாய் உணர ஆரம்பித்தான். ஆரம்பத்தில் இருந்தே அவன் நண்பர்களுடன் பழக அம்மா விதித்த கடும் கட்டுப்பாடுகளால் பெரியவனான போது அவனுக்கு நெருங்கிய நண்பர்கள் கூட இருக்கவில்லை. அப்படியொரு பலவீனமான சந்தர்ப்பத்தில் தான் அவனது சக மாணவன் ஒருவன் அவனுக்கு போதை மருந்தை அறிமுகப் படுத்தி வைத்தான். தனிமையையும் வெறுமையையும் அது மறக்க வைத்தது. ஒரு செமஸ்டரில் அவனது மதிப்பெண்கள் குறைந்த போது தான் அம்மா ஆராய்ந்து அதைக் கண்டு பிடித்தாள். வீட்டில் ஒரு சூறாவளியையே அவன் சந்திக்க நேர்ந்தது. எல்லாப் பிரச்னைகளும் தீர மரணம் ஒன்று தான் வழியாகத் தெரிந்தது...

நினைவுகள் நின்று போய் எத்தனை நேரம் மயக்கத்திலிருந்தானோ தெரியவில்லை. டாக்டரும் நர்ஸ்களும் பேசும் சத்தம் லேசாகக் கேட்ட போது தான் மரணமும் அவனை ஏமாற்றி விட்டதை உணர்ந்தான்.

அவன் முழுவதும் குணமாகும் வரை அம்மாவும் அப்பாவும் அவனருகிலேயே இருந்தார்கள். அம்மா மிகவும் அதிர்ந்து போயிருந்தாள். எப்போதும் தொடுக்கும் கேள்விக்கணைகளும் இல்லாமல், நீண்ட பிரசங்கங்களும் இல்லாமல் மௌனமாகவே இருந்தாள். அப்பா தான் தேவைப் பட்ட போது பேசினார். வீட்டுக்கு வந்த மறு நாள் அவராகவே அவனிடம் சொன்னார். "சில நாளுக்கு உனக்கு ஒரு இட மாறுதல் நல்லதுன்னு டாக்டர் சொல்றார். தாத்தாவும் உன்னை அனுப்பச் சொல்லி நிறைய நாளாய் சொல்றார். கிராமத்தில் அடுத்த வாரம் திருவிழாவும் இருக்காம். நீ போய் சில நாள் இருந்துட்டு வா". தன் காதுகளை நம்ப முடியாமல் பரத் அம்மாவைப் பார்த்தான். அம்மா முகத்தில் உணர்ச்சியே இல்லை. அப்பாவின் அக்கறையும், அம்மாவின் மௌனமும் அவன் இது வரை கண்டிராதது.

மகனைக் காரில் அனுப்பி விட்டு மாதவன் தந்தைக்குப் போன் செய்து பேசினார். நடந்ததைச் சுருக்கமாகச் சொன்னார். கிழவர் உணர்ச்சி வசப்பட்டு வெடித்தார். "நீங்க ஆரம்பத்திலிருந்தே அவனை ஒரு பந்தயக் குதிரை மாதிரி தான் வளர்த்தீங்க. என்னைக்கும் முதல் இடத்தில் வரணும். அது ஒண்ணு தான் உங்களுக்கு முக்கியம். அந்தக் குழந்தைக்குன்னு ஒரு மனசு இருக்கு. ஆசைகளும் தேவைகளும் இருக்குன்னு நீங்க என்னைக்குமே நினைச்சுப் பார்த்ததில்லை. அந்தப் பிள்ளைக்குன்னு ஒரு சுதந்திரம் உன் வீட்டில் இருந்திருக்கா? படிப்பு விஷயம் தவிர, பணத்தால் உங்களால் செய்ய முடிஞ்சதைத் தவிர, தகப்பனாய், தாயாய் நீங்க இது வரைக்கும் அவனுக்கு எதாவது செய்திருப்பீங்களா, ஒரு விஷயமாவது சொல்லு பார்ப்போம்...."

அவருக்குச் சொல்ல இன்னும் எத்தனையோ இருந்தது. ஆனால் நிராயுதபாணியாக, நொந்து போயிருக்கும் இந்தத் தருணத்தில் மகனிடம் மேற்கொண்டு பேச அவரால் முடியவில்லை. கஷ்டப் பட்டுத் தன்னை அடக்கிக் கொள்ள அவருக்கு சிறிது நேரம் தேவைப்பட்டது. "சரி விடு. குழந்தை பிழைச்சுட்டானில்ல அது போதும். அவனை இப்பவாவது இங்க அனுப்பணும்னு உங்களுக்குத் தோணிச்சே. தேங்க்ஸ்" என்று சொல்லி போனை வைத்தார்.

தாத்தாவின் கிராமத்துப் பெரிய வீட்டை பரத் முதல் முறையாகப் பார்க்கிறான். பழைய காலத்து வீடு. தாத்தா பேரனைக் கண் கலங்க வரவேற்றார். "வாடா குழந்தை". உள்ளே நுழைந்தவுடன் அவனது சிறு வயதுப் போட்டோ பெரிதாக்கபட்டு சுவரில் தொங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்தான். தாத்தாவின் தொடர்ச்சியான உபசரிப்பில் பரத் திக்குமுக்காடிப் போனான். அப்பா போனில் எல்லாவற்றையும் சொல்லியிருக்க வேண்டும் என்று ஊகித்தாலும் தாத்தா எதையும் கேட்காதது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. நிறைய நேரம் கழித்து அவன் கேட்டான். "நடந்ததைப் பற்றி எதுவும் கேட்க மாட்டீங்களா தாத்தா".

"சொல்லாமலேயே எனக்கு உன்னைத் தெரியும்டா குழந்தை. நீ முழுசாய் இத்தனை வருஷம் கழிச்சு என் முன்னாடி இங்கே இருக்காய். எனக்கு இது போதும். வேற எதுவும் எனக்குக் கேட்க வேண்டாம்" என்று சொல்லி விட்டு உடனடியாக பேச்சை மாற்றினார்.

"இது தான் உங்கள் பேரனா?" என்று கேட்டபடி கிராமத்தினர் பலர் அன்று மாலை வந்தார்கள். அன்பாகப் பேசினார்கள். நிறைய கேள்வி கேட்டார்கள். நிறைய சொன்னார்கள். அவன் காதில் திரும்பத் திரும்பக் கேட்டது ஒன்றே ஒன்று தான். "உங்களைப் பத்திப் பெரியவர் பேசாத நாளில்லை தம்பி".

தொடர்ந்த நாட்களில் எல்லோரும் மிகவும் உரிமையுடன் அந்த வீட்டில் வந்து போனதை பரத் கவனித்தான். சில சிறுவர்கள் தாத்தாவின் வீட்டு முன்பிருந்த விசாலமான காலி இடத்தில் கபடி விளையாடினார்கள். சிலர் உள்ளே வந்து டிவி பார்த்தார்கள். கோயில் திருவிழாவுக்கு ஐந்தே நாட்கள் இருப்பதால் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் பற்றி கூட தாத்தாவுடன் வந்து பேசினார்கள். இட வசதி தாராளமாக இருந்ததால் தாத்தா வீட்டில் தான் நாடகத்திற்கும், வில்லுப்பாட்டிற்கும், ஒத்திகைகள் நடந்தன. வீடே கலகலவென இருந்தது. பரத்திற்கு எல்லாமே அதிசயமாக இருந்தது.

"இது என்னோட இன்னொரு குடும்பம்" என்று எல்லாரும் போன பிறகு ஒரு நாளிரவில் தாத்தா புன்னகையோடு சொன்னார்.
"உன்னை விட்டுட்டு வந்தப்ப எனக்கு திடீர்னு தனியாயிட்ட மாதிரி ஒரு தோணல். எனக்கு யாருமே இல்லைன்னு ஒரு விரக்தி. நல்லா யோசிச்சப்போ, நாலே பேர் இருக்கறது தான் உன் உலகம்னு என் மனசு குறுகிட்டது தான் பிரச்னைன்னு புரிஞ்சது. இந்த கள்ளங்கபடமில்லாத கிராமத்து ஜனங்களையும் என்னவங்களா நினைச்சுப் பழக ஆரம்பிச்சேன். நேசிக்க ஆரம்பிச்சேன்.... இப்ப நான் பெரிய குடும்பஸ்தன்"

தாத்தா தன் வாழ்க்கையின் பிரச்னையான கட்டத்தை அணுகிய விதம் அவனை யோசிக்க வைத்தது. "வாழ்க்கையில் எல்லா பிரச்னைகளும் மேலோட்டமாய் தெரிகிற அளவு தாங்க முடியாதது இல்லையோ?"

ஒரு நாள் ஒரு இளைஞன் தயக்கத்துடன் வந்து பரத்திடம் சொன்னான். "சார்..எங்க டிராமால கலெக்டர் வர்ற மாதிரி ஒரு சீன். அந்த வேஷத்துக்குப் பொருத்தமான மூஞ்சி எங்க யாருக்குமில்லை. நீங்க நடிக்கிறிங்களா? ஒரு அஞ்சு நிமிஷ சீன் தான். ஜாஸ்தி வசனமும் இல்லை..."

பரத் மறுக்கும் முன் ரங்கனாதன் உற்சாகமாகச் சொன்னார் "அதெல்லாம் என் பேரன் வெளுத்து வாங்கிடுவான்". அவரைப் பொருத்த வரை அவர் பேரனால் முடியாதது எதுவுமில்லை.

வேறு வழியில்லாமல் பரத்தும் அவர்களுடன் சேர்ந்து கொண்டான். எல்லாமே அவனுக்கு வித்தியாசமாயும் தமாஷாயும் இருந்தன. முன்பெல்லாம் அவனுக்கு சில மணி நேரம் போவதே ஆமை வேகத்திலிருக்கும். ஆனால் இங்கு வந்த பின்பு திருவிழா நாள் வரை நாட்கள் போனதே தெரியவில்லை. அவனும் அவர்களுடன் ஐக்கியமாகி விட்டான். அந்த நாட்களில் போதை மருந்து கூட வந்து ஆசை காட்டவில்லை.

அந்த நாட்களில் தாத்தா கூட ஓய்வெடுக்காமல் எல்லாவற்றிலும் கலந்து கொண்டார். "ஐயா, உங்களுக்கு என்ன சின்ன வயசா? இப்படி துள்ளிக் குதித்து ஓடுறீங்க. உடம்பு என்னத்துக்காகும். கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க" என்று ஒருவர் கிழவருக்குப் 'பிரேக்' போட முயன்றார்.

"என் பேரன் வந்தவுடனேயே எனக்கு வயசு குறைஞ்சிடுச்சு. பயப்படாதீங்க. என் பேரன் ஒரு நாள் பெரிய ஆளாய் வருவான். அதைப் பார்க்கிற வரைக்கும் எனக்கு எதுவும் ஆகாது."

பரத் அன்றிரவு தூங்கவேயில்லை. அந்த வார்த்தைகள் திரும்பத் திரும்ப அவன் காதில் ஒலித்தன. அந்தக் குரலில் தான் எத்தனை நம்பிக்கை, எத்தனை பெருமிதம்...

அதிசயமாக மாதவனும் மைதிலியும் திருவிழாவிற்கு கிராமத்திற்கு வந்தார்கள். மைதிலி திருமணம் முடிந்து ஒரே ஒரு முறை தான் அங்கு வந்திருக்கிறாள். காரை விட்டு அவர்கள் இறங்கிய மறு கணம் வாண்டுப் பயல்கள் கார் ஹாரனை மாற்றி மாற்றி அடிக்க ஆரம்பித்தார்கள். மருமகள் வந்ததே பெரியது என்று மனதில் நினைத்த ரங்கனாதன் பயந்து போய் அந்தச் சிறுவர்களை விரட்டி விட்டு வந்தார். அந்தக் கூட்டம், அந்த சத்தம், அந்த சுத்தமில்லாத சுற்றுப்புறம் எல்லாம் அவளுக்கு என்றுமே ஆகாத விஷயங்கள் என்றாலும் வந்ததில் இருந்து ஒரு வார்த்தை பேசாமல் ஒரு ஓரமாய் கணவனுடன் நாற்காலியில் அமர்ந்து நிகழ்ச்சிகளைப் பார்த்தாள். ஆனாலும் அவள் முழுக் கவனமும் அவள் மகன் மேல் தான் இருந்தது.

நாடகத்தில் மகன் கம்பீரமாக கலெக்டர் வேடத்தில் நடித்து விட்டுப் போன போது கூட்டத்தினரோடு மாதவனும் கூட சேர்ந்து கை தட்டினார். அப்போதும் கூட ஆழ்ந்த சிந்தனையோடு பார்த்தாளே தவிர அந்த உற்சாகத்தில் கலந்து கொள்ளவில்லை. அவன் தனது காட்சி முடிந்த பின் அவர்களோடு வந்து உட்கார்ந்து கொண்டான். ரங்கநாதன் முகத்தில் அவனைப் பார்த்த போது ஆயிரம் வாட்ஸ் பல்பு எரிந்தது
.
"என் பேரனுக்கு வீட்டுக்குப் போனவுடன் மறக்காமல் திருஷ்டி கழிக்கணும்"

நாடகம் முடிந்த பின் வில்லுப் பாட்டு ரம்பித்தது. மாயப் பொன்மானைக் கண்டு மயங்கி சீதா ராமனிடம் எனக்கு வேண்டும் என்று கேட்பதில் ஆரம்பமானது. நள்ளிரவு கி விட்டதால் நான்கு பேரும் வீட்டுக்குத் திரும்பினார்கள். ரங்கநாதனும் பரத்தும் சற்று முன்னால் நடக்க மாதவனும் மைதிலியும் பின்னால் வந்து கொண்டு இருந்தார்கள். பேரனிடம் உணர்ச்சி வசப்பட்டு ரங்கநாதன் சொன்னார். "இப்படி எத்தனையோ பேர் இல்லாத ஒரு மாயப் பொன் மானைத் தேடிப் போய் பெரிய பெரிய பிரச்னைகளில் மாட்டிகக்கிறாங்கடா குழந்தை. இதனால் எல்லாம் சந்தோஷம் வந்துடறதில்லை. இதைத் தொடர்ந்து ஓடற ஓட்டம் என்னைக்கும் முடியறதுமில்லை...." தாத்தா என்ன சொல்ல வருகிறார் என்பது பரத்திற்குப் புரிந்தது. போதையைத்தான் அவர் மாயப் பொன் மான் என்கிறார். அந்த உவமானம் எத்தனை பொருத்தமானது என்று ஒரு கணம் அவன் யோசித்துப் பார்த்தான். எத்தனையோ நாள் அவனும் அதன் பின் ஓடி இருக்கிறான். வாழ்க்கையில் முழு மனதாக உற்சாகமாக ஈடுபடும் போது, சின்னச் சின்ன சந்தோஷங்களை பகிர்ந்து கொண்டு அனுபவிக்கும் போது கிடைக்கும் ஆனந்தத்திற்கு முன் இந்த செயற்கையான சமாச்சாரங்கள் குப்பை என மானசீகமாய் அவனால் உணர முடிகிறது.

"இனி நான் அந்த முட்டாள்தனத்தை என்னைக்குமே செய்ய மாட்டேன் தாத்தா பயப்படாதீங்க. உங்க மனசு வேதனைப் படற மாதிரி நான் இனி எதையும் செய்ய மாட்டேன். நீங்க என் மேல வச்சிருக்கிற பாசத்திற்கு கைம்மாறா என்னால வேற என்ன செய்ய முடியும் தாத்தா" சொல்லும் போது அவன் கண்கள் கலங்கின.

"அது போதும்டா குழந்தை எனக்கு. நீ நல்லா இருந்தா அது ஒண்ணே போதும்"

வீட்டிற்குப் போன பின் மாதவன் தந்தையிடம் சொன்னார். "நாங்க ரெண்டு பேரும் நாளைக்குக் காலைலயே கிளம்பறோம்ப்பா"

ரங்கநாதன் தலையசைத்தார். சிறிது யோசித்து விட்டு பரத்தும் சொன்னான். "நானும் அவங்க கூடயே கிளம்பறேன் தாத்தா. விட்டுப் போன பாடங்களை எல்லாம் பிக்கப் செய்யணும். இப்பப் போகலைன்னா பின்னால் சிரமமாயிடும்"

மகனையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்த மைதிலி முதல் முறையாக வாயைத் திறந்தாள். "தாத்தாவையும் இனிமேல் நம்ம கூடவே வந்துடச் சொல்லுடா. நாலு பேரும் சேர்ந்து போலாம்"

மாதவனும் ரங்கநாதனும் அவளை அதிசயமாகப் பார்த்தார்கள். பரத் சந்தோஷத்தின் எல்லைக்குப் போய் அவள் கன்னத்தில் முத்தமிட்டான். குழந்தையின் அன்பு முத்தம் தாயிற்கு எவ்வளவு இனிமையானது என்பதை மைதிலி இருபது வருடங்கள் கழித்து உணர்கிறாள்.

Sunday, 9 October 2011

வினை விதைத்தவன்


"பிரதமர் ஆபிசிலிருந்து உங்கப்பா உடல்நிலை விசாரிச்சு இது வரை மூன்று தடவை போன் செய்து விட்டார்கள் கதிரேசா" என்று மனோகரன் தன் நண்பனிடம் தெரிவித்தான்.

"உம்"

"உங்கப்பாவைப் பார்க்க நம்ம மந்திரிகளும், எம்.எல்.ஏக்களும் கீழே காத்துகிட்டிருக்காங்க"

"உம்"

"வெளியே பத்திரிக்கைக்காரங்க அதிகமா, தொண்டர்கள் அதிகமான்னு தெரியலை. அவ்வளவு கூட்டம் இருக்கு. கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீஸ்கரங்க திண்டாடறாங்க."

"உம்"

"சாரங்கன் தன் வெளிநாட்டுப் பயணத்தைப் பாதியில் ரத்து செய்து வந்துட்டார்."

"என்னது" கதிரேசன் மின்சாரத்தால் தாக்கப் பட்டவன் போல சுறுசுறுப்பானான்.

"விமான நிலையத்திலிருந்து பத்து நிமிஷத்துக்கு முன்னால் தான் போன் வந்தது. என்ன இருந்தாலும் உங்கப்பா மந்திரிசபையில் அவர் தானே நம்பர் 'டூ'. இந்த மாதிரி நேரத்தில் இங்க இல்லாம இருப்பாரா?"

"அந்த ஆள் வந்ததை நீ ஏன் பத்து நிமிஷம் முன்னாலேயே சொல்லலை, மனோ. எப்பவும் பிரச்சினை தரக் கூடிய தகவல்களை உடனுக்குடன் கேட்டுத் தெரிஞ்சுக்கணும்னு அப்பா அடிக்கடி சொல்வார்" என்ற கதிரேசன் யோசிக்க ஆரம்பித்தான்.

"என்ன யோசிக்கிறாய், கதிரேசா"

"அப்பா இப்படி ஒரு சந்தர்ப்பத்தில் எப்படி நடந்து கொள்வார்னு யோசிக்கிறேன் மனோ"

மரணப் படுக்கையில் இருக்கும் கங்காதரனுக்கு மகனை நினைக்கையில் பெருமையாக இருந்தது. தன்னை ஒரு உதாரண புருஷனாய் மகன் எண்ணிப் பின்பற்றுவது எந்த தந்தைக்குத் தான் பெருமையாக இருக்காது. படுத்த படுக்கையாகி பேசும் சக்தியையும் இழந்து விட்டாலும். கண்களைத் திறந்து பார்க்கவும் சுற்றிலும் நடப்பதைப் புரிந்து கொள்ளவும் இன்னமும் அவரால் முடிகிறது.

பேச மட்டும் முடிந்திருந்தால் அவர் மகனுக்கு அறிவுரை சொல்லியிருப்பார். "குளத்தில் வீசப்பட்ட கல்லைப் போலிரு மகனே. தன் இலக்கான அடிமட்டத்தை அடையும் வரை அது எங்கும் எப்பொழுதும் இளைப்பாறுவதில்லை". இந்த அறிவுரை அவருக்கு மிகவும் பிடித்தமானது. இதை சுமார் முப்பத்திநான்கு வருடங்களுக்கு முன் ஒரு அபூர்வ சித்தர் அவருக்குச் சொன்னார். பக்கத்து கிராமத்திற்கு வந்திருந்த அந்த சித்தருக்கு முக்காலமும் தெரியும் என்று போய் பார்த்து விட்டு வந்த பலரும் சொன்னார்கள். பெரியதாக நம்பிக்கை இல்லா விட்டாலும் போய்த் தான் பார்ப்போமே கங்காதரனும் போனார்.

அந்தக் கிராமத்துக் குளத்தங்கரையில் தான் அவர் அந்த சித்தரை ஒரு மாலைப் பொழுதில் பார்த்தார். தனிமையில் அமர்ந்தபடி ஆகாயத்து சிவப்புச் சூரியனை ஒருவிதக் காதலோடு அந்த சித்தர் பார்த்துக் கொண்டிருந்தார். ஏதோ ஒரு சக்தி காந்தமாய் அவரை அந்த சித்தரிடம் ஈர்த்தது.

ஒடிசல் தேகம், கிழிசல் உடைகள், சீப்பு கண்டிராத தலை முடி, கத்தரிக்கோலைக் காணாத தாடி, இந்த அலங்கோலங்களுக்குச் சம்பந்தம் இல்லாத மிகவும் கூர்மையான காந்தக் கண்கள். அவரது அருகாமையை உணர்ந்து சூரியனிலிருந்து அவர் பக்கம் சித்தர் பார்வையைத் திருப்பினார். கங்காதரன் அப்பார்வையில் சிலையாக நின்றார். அந்தக் கண்களின் அனுமதியில்லாமல் தன் பார்வையை விலக்கிக் கொள்ள முடியாதென்று அவருக்குத் தோன்றியது. அந்தக் கண்கள் அவருக்குள்ளே புகுந்து ஆழ்மனதை ஊடுருவிப் பார்த்தன.

"என்ன வேணும் தம்பி"

"என்ன கேட்டாலும் அதை உங்களால் தர முடியுமா?"

"கொடுக்கிறது நானல்ல தம்பி. கொடுக்கிறவன் மேலே இருக்கான். என்ன வேணும்னு சொல்லு"

"பெரீ...ய ஆளாகணும்"

"கேட்கறப்ப எப்பவுமே தெளிவாய் இருக்கணும் தம்பி. மொட்டையா கேட்டா அவன் சொத்தையா எதாவது தந்துடுவான்"

ஒரு கணம் சிந்தித்து விட்டு கங்காதரன் சொன்னார். "மந்திரியாகணும். முடியுமா?"

"முடியாததுன்னு எதுவுமேயில்லை, தம்பி. மேலே இருக்கிறவன் ஒரு பெரிய வியாபாரி. எப்போதுமே கொடுப்பான்-தகுந்த விலை கொடுக்க நீ தயாராய் இருந்தால். நிஜமாகவே அந்தப் பொருள் தேவை தானா, தரும் விலை சரியானது தானான்னு எல்லாம் நீ தான் தீர்மானிக்கணும்."

"விலை என்ன சாமி?"

அந்த சித்தர் ஒரு சிறு கல்லைத் தூக்கி குளத்தில் எறிந்தார். "இந்தக் கல் எப்படி குளத்தின் அடிமட்டதை அடைகிற வரை ஓரிடத்திலும் நிற்காதோ அப்படி ஒரு வேகத்தையும், ஒரே இலக்கையும் நீ வைத்துக் கொண்டிருந்தால் உனக்கு எதுவுமே முடியாததில்லை தம்பி"

அந்த வார்த்தைகள் கங்காதரன் மனதில் செதுக்கப்பட்டன.

"ஆனால் ஒன்று மட்டும் ஞாபகம் வைத்துக் கொள் தம்பி. நீ விதைப்பதை மட்டும் நீ அறுவடை செய்ய முடியும். நீ விதைப்பதை எல்லாம் அறுவடை செய்ய வேண்டியிருக்கும்" என்று ஓரே வாக்கியத்தை இரண்டு விதங்களில் அழுத்தம் திருத்தமாக சித்தர் புன்னகையோடு சொன்னார்.

ஒரு அக்னி விதை கங்காதரன் மனதில் அன்று விதைக்கப்பட்டது. மீதி சரித்திரமாகியது. அன்று முதல் அதிர்ஷ்ட தேவதை நிரந்தரமாக அவருடன் தங்கி விட்டாள். எம்.எல்.ஏ, மந்திரி, முதல் மந்திரி என இலக்குகள் கங்காதரனால் சூறாவளி வேகத்தில் அடையப்பட்டன. கங்காதரன் என்ற சூறாவளி தன் இலக்கை அடையும் முன் பல உயிர்ச் சேதங்களும், பொருட்சேதங்களும் ஆயின. தான் செய்த சேதங்களுக்கு சூறாவளி எவ்வளவு வருத்தப்படுமோ அவ்வளவு தான் அவரும் வருத்தப்பட்டார். அரசியலில் வெற்றியே தர்மம், அதற்கென என்ன செய்தாலும் அது நியாயமானதே என்று உறுதியாக நினைத்தார். பாவம், புண்ணியம், நியாயம், அநியாயம் முதலிய வார்த்தைகள் ஒருவனை சுதந்திரமாக இயங்க விடாதென அவர் உணர்ந்து தெளிந்திருந்தார். அவர் தொட்டதெல்லாம் பொன்னாகி சர்வ வல்லமை படைத்த மனிதரானார். நான்கு முறை தொடர்ந்து முதலமைச்சர் பதவியை அலங்கரிப்பது இந்த மாநில சரித்திரத்தில் அவர் மட்டுமே.

"சமுதாய விடிவெள்ளி சாரங்கன் வாழ்க! தமிழர் தலைவர் சாரங்கன் வாழ்க! அடுத்த முதல்வர் சாரங்கன் வாழ்க" என்று வெளியே ஒலித்த முழக்கங்கள் கங்காதரனை நிகழ்காலத்திற்கு வரவழைத்தன.

"அந்த ஆள் வந்து விட்டார், கதிரேசா. விமான நிலையத்திலிருந்து வீட்டுக்குக் கூடப் போகவில்லை. நேராய் ஆஸ்பத்திரிக்கே வந்து விட்டார், கில்லாடி மனுஷன்" என்று ஜன்னல் வழியே பார்த்து விட்டு மனோகரன் சொன்னான்.

ஒன்றும் பேசாமல் கதிரேசன் சிந்தனையில் ஆழ்ந்தான்.

"யோசிக்க என்ன இருக்கு கதிரேசா. கீழே நிற்கிற கூட்டத்தோட அந்த ஆளும் நிற்கட்டும். யாரும் தலைவரை தொந்தரவு செய்யக்கூடாது, அவர் இன்னும் அபாயக் கட்டத்தைத் தாண்டலைன்னு டாக்டர் சொன்னதை அந்த ஆள் கிட்டேயும் சொல்லிடுவோம்."

"வேண்டாம் மனோ. அந்த ஆளை மட்டும் இங்கே கூட்டிட்டு வா"

"ஏன் கதிரேசா"

"அந்த ஆள் கிட்டே அப்பாவே ஜாக்கிரதையாய் இருப்பார். அதனால் எல்லாரையும் நடத்துகிற மாதிரி அவனை நடத்தக் கூடாது. எப்பவும் எதிரிக்கு நம் மனதில் என்ன இருக்குன்னு தெரியக் கூடாதுன்னும், அவன் நம்மை நம்பற அளவுக்கு யதார்த்தமாக வெளியே தெரியணும்னும் அப்பா எப்பவும் சொல்வார். நீ போய் அந்த ஆளைக் கூட்டிகிட்டு வா"

மனோகரன் ஐந்து நிமிடங்களில் சாரங்கனோடு வந்தான். சாரங்கன் கண்களில் நீர் நிரம்பியிருந்தது.

"அண்ணனுக்கு என்ன ஆச்சு கதிரேசா?"

கதிரேசன் டாக்டர்கள் சொன்னதை விவரமாக சொன்னான்.

"உண்மையாகச் சொல்றேன் கதிரேசா. செய்தியைக் கேட்டவுடன் துடிச்சுப் போயிட்டேன். அவரை எப்பவுமே நான் சொந்த அண்ணனாய் தான் நினைச்சிருக்கேன். அவர் பிழைச்சுக்குவார்னு நான் நம்பறேன்" என்று சொல்லி சாரங்கன் கண்களைத் துடைத்துக் கொண்டார்.

"உங்கள் நம்பிக்கை உண்மையாகட்டும் சார். டில்லியில் இருந்து ஒரு பெரிய டாக்டர் வரப் போகிறார். அவருடையது தான் கடைசி முயற்சி..."

"நாம் பிரார்த்தனை செய்வோம். கடவுள் கை விட மாட்டார், கதிரேசா. இன்னிக்கு ராத்திரி என் வீட்டில் ஒரு பெரிய ஹோமத்துக்கு ஏற்பாடு செஞ்சிருக்கேன். என் தலைவர், என் அண்ணன் தீர்க்காயுசா இருக்கணும்கிறதுக்காக இந்த ஹோமம். அவரில்லாத நம் கட்சி நிலைமையை என்னால யோசிச்சு கூட பார்க்க முடியலை அதனால தான் அமெரிக்காவில் எல்லா நிகழ்ச்சிகளையும் பாதியில ரத்து செய்துட்டு ஓடி வந்திருக்கேன் ..."

"எனக்கு தெரியும் சார். உங்க மாதிரி தளபதிகள் தம்பிகளாய் பக்கத்தில் இருக்கும் போது அப்பாவை நெருங்க அந்த எமனுக்குக் கூட தைரியம் வராது"

"உன்னை மாதிரி மகன் கிடைக்கவும் அவர் கொடுத்து வச்சிருக்கார் கதிரேசா. இந்த ஆஸ்பத்திரியில் அப்பா பக்கத்தில் மூன்று நாளாய் பிரியாம நிழல் மாதிரி இருந்துகிட்டு பார்த்துக்கற உன்னை மகனாய் கிடைக்க, அவர் பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செஞ்சிருக்கணும்"

கங்காதரனுக்கு உள்ளே பற்றி எரிந்தது. "பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்திருக்கணுமாம். அப்படியானால் இந்த ஜென்மத்தில் புண்ணியம் செய்யவில்லை என்று சொல்லாமல் சொல்கிறான் பார்" என்று மனதிற்குள் வசை பாடினார். சாரங்கன் சோகத்தோடு கண்ணீர் மல்க அவரருகே சிறிது நேரம் நின்றார். அவர் செத்த பிறகு பிணத்தருகே எப்படி நிற்பது என்று சாரங்கன் ஓத்திகை பார்க்கிறாரோ என்று கங்காதரனுக்கு சந்தேகம் வந்தது.

அரசியலில் இது போன்ற பாசாங்குகள் சகஜம். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவதோ சர்வ சகஜம். அதுவும் இது போன்ற முக்கியமான திருப்பு முனையை ஏற்படுத்த இருக்கும் கட்டங்களில் பொய், பாசாங்கு, சதி, வேஷம் எல்லாம் நியதியே தவிர விதிவிலக்கல்ல.
இது போன்ற விஷயங்களில் கங்காதரன் ஒரு பல்கலைகழகம் என்றே சொல்லலாம். அவர் கற்றுத் தந்து தான் சாரங்கன் உட்பட அனைவரும் கற்றிருக்கிறார்கள். ஆனால் அவரிடமே அந்த வித்தையை அவர்கள் காட்டிய போது தான் அது சகிக்கவில்லை.

"அப்ப நான் கிளம்பறேன் கதிரேசா. இன்னைக்கு ஹோமம் முடிஞ்ச பிறகு திருநீறு குடுத்தனுப்பறேன். அப்பாவுக்கு பூசி விடு. நான் வரட்டுமா?"

"மகனே இவன் பழம் பெருச்சாளி. இவன் கிட்ட சர்வ ஜாக்கிரதையாயிரு" என்று மனதினுள் மகனுக்கு கங்காதரன் அறிவுரை சொன்னார்.

சாரங்கனை வராந்தா வரை சென்று விட்டு வந்த மனோகரன் நண்பனிடம் பரபரப்போடு சொன்னான். "கதிரேசா! இன்றைக்கு சாரங்கன் வீட்டில் ஹோமம் எதற்கு தெரியுமா?"

"எதற்கு?"

"அந்த ஆளு முதலமைச்சராக ஏதோ ஒரு கிரகம் குறுக்கே நிற்குதுன்னு ஒரு ஜோசியன் சொன்னானாம். அதற்கு சாந்தி செய்யத் தான் இந்த ஹோமம்னு நம்ம ஆளுங்க தகவல் தந்தானுங்க"

"சரி அந்த ஆளை விடு. மத்தவங்க எப்படி?"

"மந்திரி முனிரத்தினத்துக்குக் கூட முதலமைச்சர் நாற்காலி மேல் ஒரு கண். இருக்கிற மந்திரிகளில் அவர் தான் ஊழல் குற்றச்சாட்டு எதிலும் சிக்காமல் இருக்கார். திருவாளர் பரிசுத்தமாம். அவர் அதை வைத்து முதலாக்கப் பார்க்கிறார். நேற்று ராத்திரி மணிக்கணக்கில் உட்கார்ந்து உங்கப்பாவிற்கு கண்ணீர் அஞ்சலிக் கவிதை எழுதிகிட்டு இருந்ததாய் அவர் டிரைவர் சொன்னான்"

கங்காதரன் உள்ளே எரிமலையாய் வெடித்தார். "அடப்பாவிங்களா, விட்டால் குழி தோண்டி என்னை உயிரோடு புதைத்து விடுவீர்கள் போல இருக்கிறதே".

இத்தனை திமிங்கலங்களுக்கு மத்தியில் தன் மகனை விட்டுப் போவதில் அவருக்கு வருத்தம் இருந்தது. தன் ஒரே மகன் மீது அவர் மித மிஞ்சிய பாசம் இருந்தது. சிறு வயதிலேயே தாயை இழந்த அவனை மிகவும் செல்லமாக வளர்த்தார். அவனுக்கும் அவர் ஒன்று சொன்னால் அது வேத வாக்காக இருந்தது. அவரிடம் சொல்லாமல், அனுமதி பெறாமல் அவனும் எதையும் செய்ததில்லை. ஒரே ஒரு முறை மட்டும் விதிவிலக்கு நிகழ்ந்தது. அதுவும் ஒரு மகன் தன் தந்தையிடம் சொல்லக் கூடிய விஷயம் அல்ல என்பதால் அவன் அதை அவரிடம் சொல்லவில்லை. அவன் கல்லூரியில் படிக்கும் போது தன் சக மாணவியை கற்பழித்துக் கொன்று விட்டான். அவ்வளவு தான். அது சம்பந்தமான தடயம் ஒன்று ஒரு பத்திரிக்கை நிருபர் கையில் கிடைத்து விட நிலைமை பூதாகரமாகியது. அந்த இளம் நிருபருக்கு தொழில் தர்மம், நியாயத்திற்காக போராடுவது போன்ற பைத்தியக்காரக் கொள்கைகள் அழுத்தமாக இருந்தன. எந்த விலைக்கும் அவன் படியாமல் போகவே அவனைத் தீர்த்துக்கட்டுவதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லாமல் போயிற்று. அந்தப் பத்திரிக்கை ஆசிரியருக்கும், உரிமையாளருக்கும் பல கோடிகளையும், சலுகைகளையும் தந்து தடயத்தை அழிக்க வேண்டி வந்தது. அப்போது தான் முதல் முறையாக மகன் மீது அவர் கடுமையாகக் கோபப்பட்டார்.

"உன்னை என் மகன்னு சொல்லிக்கவே எனக்கு வெட்கமாய் இருக்குடா கதிரேசா. ஒரு புத்திசாலி ஆயிரம் அயோக்கியத்தனம் செய்யலாம். ஆனால் அதை முட்டாள்தனமாய் செய்யக் கூடாது. எந்தத் தப்பு செய்தாலும் தடயங்களை விட்டு வைக்கக் கூடாது. அது முடியாத பட்சத்தில் தப்பே செய்யக் கூடாது. இன்னொரு தடவை இப்படி மாட்டிகிட்டு என் கிட்டே வந்து நின்னால் நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது. ஜாக்கிரதை"

அந்த மாணவியைக் கொன்றதாக ஏற்றுக் கொண்டு வேறு ஒரு மாணவன் போலீசில் சரணடைந்தான். பத்திரிக்கை நிருபர் கொலை வழக்கில் வதந்திகள் தவிர வேறு முன்னேற்றம் இல்லாமல் அது கிடப்பில் போடப்பட்டது. அந்த நிருபரின் விதவைத்தாய் மட்டும் ஒரு பேட்டியில் ஆணித்தரமாய் சொன்னாள்: "தெய்வம் நின்று கொல்லும்". படித்து விட்டு கங்காதரன் ஏளனமாகச் சிரித்தார். "கொன்னுட்டு போகட்டுமே, இங்க யார் சாசுவதம்"

கதிரேசன் மற்றொரு முறை அது போன்ற முட்டாள்தனம் எதையும் செய்யவில்லை. திறமை உள்ள மாணவனான அவன் வேகமாக பாடங்களைக் கற்று கொண்டு விட்டான். தடயங்கள் விட்டு வைக்காமல் தவறு செய்வதில் வல்லவன் ஆனான். அவனது புத்திசாலித்தனம் அவரைப் பெருமிதப் படுத்தியது. அவனுக்கு எல்லா அரசியல் நுணுக்கங்களையும் அவர் ஒவ்வொனெறாக சொல்லித் தந்தார். அவனுக்கு எதையும் இரண்டாம் முறை அவர் சொல்லித் தரத் தேவையிருக்கவில்லை.

"கையிலே என்ன லிஸ்ட் கதிரேசா"

"மனோ இதில் நம்ம எம்.எல்.ஏக்கள், சாரங்கனோட எம்.எல்.ஏக்கள், முனிரத்தினத்தின் எம்.எல்.ஏக்கள், சைத்தானோட எம்.எல்.ஏக்கள்னு பிரித்து லிஸ்ட் போட்டிருக்கேன்"

"அதென்ன சைத்தானோட எம்.எல்.ஏக்கள்?"

"யார் பக்கமும் சேராத, ஆனால் எப்பவும் எப்படியும் மாறி விடக் கூடியவர்கள்"

மகனின் பேச்சை கங்காதரன் ரசித்துக் கொண்டிருந்த போது டில்லி டாக்டர் மற்ற டாக்டர்கள் பின் தொடர வந்தார். கதிரேசனிடம் வெளிப்படையாகப் பேசினார். "இப்போதைய நிலைமையில் ஒரே ஒரு ஆபரேசன் தான் நம் கடைசி நம்பிக்கை. அதைச் செய்யாமல் இருந்தால் நாம் அவரை நிச்சயமாக இழந்து விடுவோம். செய்தாலோ காப்பாற்ற ஐம்பது சதவீதம் வாய்ப்பு இருக்கிறது. ஆபரேசன் முடிந்து சுமார் பன்னிரண்டு மணி நேரம் அவர் தாக்குப் பிடித்து விட்டால் அவர் கண்டிப்பாய் குணம் ஆகி விடுவார். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?"

கதிரேசன் குரலடைக்கச் சொன்னான். "நீங்கள் ஆபரேசன் செய்யுங்கள் டாக்டர். இத்தனை வருஷம் பதவியில் தாக்குப் பிடித்த அப்பாவுக்கு ஆபரேசன் முடிந்து பன்னிரண்டு மணி நேரம் தாக்குப் பிடிப்பது ஒன்றும் முடியாத காரியம் இல்லை டாக்டர்"

அவனது துக்கத்தையும் மீறி அவன் வார்த்தைகளில் தொனித்த நம்பிக்கையைப் பார்த்த டாக்டர் மனம் நெகிழ்ந்தார். "எல்லாவற்றுக்கும் மேல் கடவுள் இருக்கிறார்" என்று சொன்னார்.

இதைக் கேட்டதும் கங்காதரனுக்கு ஒரு வயதான தாயின் 'தெய்வம் நின்று கொல்லும்" என்ற நம்பிக்கையும், அந்த சித்தரின் "நீ விதைத்ததை எல்லாம் அறுவடை செய்ய வேண்டியிருக்கும்' என்ற வாக்கியமும் நினைவுக்கு வந்தது. "இந்தாளு டாக்டரா இல்லை சாமியாரா தேவையில்லாமல் கடவுளை ஞாபகப் படுத்தறான் சனியன்..." என்று மனதிற்குள் பொரிந்து தள்ளினார்.

ஒரு மணி நேரத்தில் ஆபரேசன் தியேட்டருக்கு அவரை அழைத்துப் போனார்கள். 'அப்பா தாக்குப் பிடிப்பார்' என்று நம்பிக்கையுடன் மகன் சொன்னதை நினைத்த படியே மயக்க மருந்தால் நினைவிழந்தார். எத்தனையோ நேரம் கழித்து அவர் நினைவு திரும்பிய போது மனோகரனிடம் கதிரேசன் சொல்லிக் கொண்டிருந்தது காதில் விழுந்தது.

"நம்ம ஆளுங்க மூலம் செய்த பேரம் எல்லாம் நமக்கு சாதகமாய் இருக்கு மனோ. இப்போதைய நிலவரப்படி எனக்குத் தேவையான எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருக்கு. அனுதாப அலையும் சேர்ந்துடுச்சுன்னா நான் முதலமைச்சர் ஆக எந்த தடையும் இல்லை"

"ஆனா ஆபரேசனும் சக்சஸ் ஆயிடுச்சு, உங்கப்பாவும் தேறிட்ட மாதிரி தான் தோணுது"

"அவர் பிழைக்க மாட்டார் மனோ"

மனோ குழப்பத்தோடு தன் நண்பனைப் பார்த்தான். "நான் கொஞ்ச நேரத்துக்கு அவரோட ஆக்சிஜன் டியூப்பைக் கழற்றி விடப் போகிறேன் மனோ. அவர் இறந்ததுக்குப் பின்னால் இதைத் திரும்ப மாட்டி விடப் போகிறேன். அப்புறம் நான் அழப்போகிறன். நீ நான் அழுது பார்த்ததில்லையே. கொஞ்ச நேரத்தில் பார்க்கப் போகிறாய். எதற்கும் கதவுப் பக்கம் நின்னு யாராவது வருகிறார்களான்னு பார்" என்று நண்பனை அனுப்பி விட்டு அவன் தன் தந்தையை நெருங்கினான்.

மற்ற எல்லாவற்றிற்கும் தயாராக இருந்த கங்காதரன் இதற்குத் தயாராக இருக்கவில்லை. அவன் வார்த்தைகள் டன் கணக்கில் அக்னித் திராவகத்தை அவர் இதயத்தில் ஊற்ற, சகல பலத்தையும் உபயோகித்து கண்களைத் திறந்து மகனை அதிர்ச்சியுடன் பரிதாபமாகப் பார்த்தார்.

"சாரிப்பா" என்று சொல்லி விட்டு அமைதியாக கதிரேசன் ஆக்சிஜன் டியூப்பைப் பிடுங்கினான். இந்த முறை அவன் எந்தத் தடயத்தையும் விட்டு வைக்கவில்லை.

சன்னிதானத்தில் ஒரு விலைமாது


துறவு என்ற சொல்லுக்கு முழுப் பொருளாக வாழ்ந்து வரும் மஹாஸ்வாமிகள் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். ஊருக்கு வந்திருந்த அந்தப் புனிதர் இன்று ஒரு நாள் மட்டும் தான் அங்கிருப்பார் என்று கேள்விப்பட்ட பக்த கோடிகள் அவரது தரிசனத்திற்காக வெளியே காத்திருந்தார்கள். அந்த சமயத்தில் தான் அவளும் அங்கு வந்தாள். குனிந்த தலை நிமிராமல் வந்தவள் ஒதுக்குப்புறமாய் ஒரு மூலையில் உட்கார்ந்தாள். அது வரை பேரமைதியோடு இருந்த கூட்டத்தில் முணுமுணுப்புகள் ஆரம்பித்தன.

"இவள் எல்லாம் இங்கே வரலாமா?"

"என்ன தைரியம் பாரேன்"

"இந்த இடத்தையாவது சனியன் விட்டு வைக்கக் கூடாதா?"

"கலி முத்திடுச்சு. அதுக்கான அறிகுறி தான் இதெல்லாம்"

கூனிக் குறுகி உட்கார்ந்திருந்த அவள் காதுகளில் இந்த விமரிசனங்கள் விழாமல் இல்லை. தான் இந்த ஏச்சுகளுக்குப் பொருத்தமானவள் என்பதிலும் அவளுக்கு உடன்பாடு உண்டு. ஆனால் அந்த மகானைப் பற்றி நிறையவே கேள்விப்பட்டிருந்ததால் அவரைத் தன் வாழ்நாளில் ஒரு முறையாவது தரிசிக்க வேண்டும் என்ற பேராவலில் வந்திருக்கிறாள். அதுவரை தன்னை யாரும் அங்கிருந்து அப்புறப்படுத்தி விடக் கூடாதென சகல தெய்வங்களையும் வேண்டிக்கொண்டிருந்தாள்.

மஹாஸ்வாமிகளின் நிழல் என்று எல்லோராலும் கருதப்படும் சந்தானம் கூட்டத்தில் எழுந்த சலசலப்பைக் கவனித்தார். இது வரை அமைதி காத்த பக்தர்கள் மத்தியில் திடீரென எழுந்த இந்த சலசலப்பு ஏதோ ஒரு அசம்பாவிதம் நடந்து விட்டதன் அறிகுறியென அவருக்குப் பட்டது. கூட்டத்தினரை அவர் கேள்விக்குறியோடு பார்க்க, ஒருவர் அவரருகே வந்து அவளைக் கை காட்டி விளக்கினார்.

"சிவ சிவா" சந்தானம் தன் காதுகளைப் பொத்திக் கொண்டார். 'மஹாஸ்வாமிகளின் சன்னிதானத்தில் ஒரு விபசாரியா, இது என்ன சோதனை?' அவளை எரித்து விடுவது போல் பார்த்தார். ஆனால் அவளோ குனிந்த தலை நிமிராமல் அமர்ந்திருந்தாள்.

சந்தானத்தைப் பொருத்த வரை தெய்வம் கூட மஹாஸ்வாமிகளுக்கு அடுத்தபடி தான். எத்தனையோ போலிகளுக்கு மத்தியில் எந்த மாசும் தன்னை நெருங்க முடியாத நெருப்பாக வாழ்ந்து வரும் மஹாஸ்வாமிகள் முன் இது போன்ற அசுத்தங்கள் வருவதை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. அவளை எப்படி வெளியே அனுப்புவது என்று அவர் யோசித்து முடிவுக்கு வரும் முன் மஹாஸ்வாமிகள் தியானம் முடிந்து வெளி ஹாலிற்கு வந்து விட்டார். பக்தர்கள் எழுந்து வரிசையானார்கள். அவளும் எழுந்து அந்த வரிசையின் கடைசியில் நின்றாள். சந்தானம் தீயில் நிற்பது போல் துடித்தார். எப்படியாவது அவளை உடனடியாக அனுப்பி விட வேண்டும் என்று தீர்மானித்து அவர் முதலடி எடுத்து வைத்த போது மஹாஸ்வாமிகள் தன் பார்வையாலேயே தடுத்து நிறுத்தினார். சந்தானம் வேறு வழியில்லாமல் தவித்தபடி நின்றார்.

பக்தர்கள் ஒவ்வொருவரும் அந்த மகானிடம் ஓரிரு வார்த்தைகள் பேசி, வணங்கி, பிரசாதம் வாங்கிக் கொண்டு நகர்ந்தார்கள். ஆனாலும் வெளியேறாமல் சிலர் தள்ளி நின்று வேடிக்கை பார்த்தார்கள். எதையும் தன் ஞான திருஷ்டியால் அறியும் சக்தி படைத்த அந்த மகான் அவளிடம் என்ன சொல்லப் போகிறார் என்றறிய அவர்களுக்கு ஆவல்.

கடைசியில் அவளும் மஹாஸ்வாமிகள் முன்பு வந்து நின்றாள். வந்ததில் இருந்து தலையை நிமிர்த்தாதவள் முதல் முறையாக தலையை நிமிர்த்தி அவரைப் பார்த்தாள். அவளைப் பற்றி அறியாதது ஒன்றுமில்லை என்று அவரது கண்கள் சொல்லின. ஆனாலும் அந்தக் கண்களில் கருணை சிறிதும் குறைந்திருக்கவில்லை. மற்றவர்களைப் போல வாய்விட்டுப் பேச அவளிடம் வார்த்தைகள் இருக்கவில்லை. கனத்த மனதுடன் அவர் முன் மண்டியிட்டு அழுதாள். ஓரிரு நிமிடங்கள் கழித்து தன்னை சுதாரித்துக் கொண்டு எழுந்தாள். அவர் கையிலிருந்து பிரசாதம் வாங்கிக் கொண்டு வேகமாய் அங்கிருந்து வெளியேறினாள்.

வேடிக்கை பார்த்தவர்களுக்கு மிகவும் சப்பென்றாகி விட்டது. " அவர் ஞானி. அவருக்கு எந்த வித்தியாசமுமில்லை. ஆனால் இவள் இந்தப் பாவத்தையும் சேர்த்து எந்த கங்கையில் கழுவுவாளோ" என்று தங்களுக்குள் பேசிக்கொண்டு கலைந்தார்கள்.

எல்லோரும் போகும் வரை காத்திருந்த சந்தானம் பின்பு மிகவும் வருத்தத்துடன் ஆரம்பித்தார். "ஸ்வாமி அவள்..."

"தெரியும் சந்தானம்"

"நீங்க மட்டும் தடுக்காமல் இருந்திருந்தால் நான் அவளை அப்போதே அனுப்பியிருப்பேன்"

"அறியாமையால் தவறும் பாவமும் செய்வது, அதன் பலன்களை அனுபவிப்பது, தன் செயல்களுக்காக வருந்துவது, பின்பு திருந்துவது என்று இந்த நான்கு கட்டங்களும் ஒவ்வொரு மனிதன் வாழ்க்கையிலும் உண்டு சந்தானம். இதில் நீயும் நானும் கூட விதிவிலக்கல்ல. தவறுகளின் அளவுகளில் வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் தவறோ பாவமோ செய்யாத அந்தத் தனிப்பெரும் குணம் பரம்பொருள் ஒருவனுக்கே உண்டு. அந்தப் பரம்பொருள் கூட மனித அவதாரம் எடுத்த போது ஒரு சில தவறுகள் செய்து விட்டதாய் இதிகாசங்கள் சொல்கின்றன. அப்படி இருக்கும் போது சாதாரண மனிதர்கள் எம்மாத்திரம், சந்தானம்"

ஆனாலும் சந்தானத்திற்கு சமாதானம் ஆகவில்லை. "அவள் எப்படியோ இருந்து விட்டுப் போகட்டும் ஸ்வாமி. அவள் இங்கே வந்து இந்த இடத்தின் புனிதத்தை ஏன் கெடுக்க வேண்டும்"

மஹாஸ்வாமிகள் புன்னகைத்தார். "உனக்கு இங்கு வந்த மற்றவர்களின் சரித்திரம் தெரியாததால் நீ அவளை மட்டும் ஒருமைப்படுத்துகிறாய். இவளை விட அதிகம் பாவம் செய்தவர்களும் இங்கு வந்திருந்தார்கள். அவர்கள் எப்படியே இருந்தாலும் இங்கு அவர்களை இன்று வரவழைத்த ஆன்மீக சக்தி என்றாவது ஒரு நாள் எல்லாவற்றையும் உணர வைக்கும். திருத்தும். அதற்காக பிரார்த்திப்பதும், ஆசி வழங்குவதும் மட்டுமே நம் கடமை. விமரிசிப்பதும், தீர்ப்பு சொல்லவும் நாம் யார்?"

ஒப்புக்குத் தலையாட்டினாலும் சந்தானத்தின் மனதில் அவள் அங்கு வந்த விஷயம் நெருடலாகவே இருந்தது.

மறுநாள் காலை ஸ்வாமிகளை வழியனுப்ப நிறைய பக்தர்கள் வந்திருந்தனர். காரில் ஏறப் போன மஹாஸ்வாமிகளின் விழிகள் ஒரு கணம் ஓரிடத்தில் நிலைத்து நின்றன. சந்தானம் தன் பார்வையையும் அங்கு திருப்பினார். தலையை மொட்டை அடித்துக் கொண்டு, உடலில் சிறு ஆபரணமும் இல்லாமல், தூய வெள்ளை சேலையால் முக்காடு போட்டுக் கொண்டு ஒருத்தி நின்றிருந்தாள். உற்றுப் பார்த்த பின்பு தான் தெரிந்தது-அவள் நேற்று வந்தவள். இன்று அவள் தலை நிமிர்ந்திருந்தது. முகத்தில் அமைதியும் உறுதியும் தெரிந்தது. கை கூப்பி வணங்கி நின்றாள்.

"நேற்று வந்தவர்களில் யாரும் இவ்வளவு சீக்கிரம் மாறவில்லை, சந்தானம்" என்று புன்னகையுடன் சொல்லிய மஹாஸ்வாமிகள் கையை உயர்த்தி எல்லோருக்கும் ஆசிகள் வழங்கி விட்டு காரில் ஏறினார். கண்கள் கலங்க தன் இரு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி அவளிருந்த திக்கை நோக்கிக் கூப்பி விட்டு காரில் ஏறிய சந்தானம் "என்னை மன்னிச்சுடும்மா" என்று முணுமுணுத்தது மஹாஸ்வாமிகளுக்கு மட்டும் கேட்டது.

மனிதன் மாறவில்லை


"யார் வேணும்?"

"சுசீலாங்கறது...."

"நான் தான். நீங்க...?"

திவாகர் ஒரு கணம் தயங்கி விட்டுச் சொன்னான். "என்னை உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. உங்க கணவர் சோமநாதன் என்னை இங்கே அனுப்பினார்"

கணவரின் பெயரைக் கேட்டவுடன் அந்தம்மாள் முகம் இறுகியது. கண்களில் தீப்பந்தங்கள் எரிந்தன. எல்லாம் ஒரு கணம் தான். மறு கணம் முக இறுக்கம் தளர்ந்து இயல்பான நிலைக்கு வந்தாள். ஆனாலும் வாசற்படியை விட்டு நகர்ந்து அவனை உள்ளே அழைக்கவில்லை. அவனை ஊடுருவிப் பார்த்தபடி கேட்டாள். "உங்களுக்கு அவர் எப்படிப் பழக்கமானார்?"

"கோயமுத்தூரில் ஒரு ஆஸ்பத்திரியில் அவர் இருக்கார். என் சினேகிதன் ஒருவனைப் பார்க்க அங்கே போனப்ப பக்கத்து பெட்டில் இருந்த அவர் பழக்கமானார்."

"சரி சொல்லுங்க, என்ன விஷயம்?"

கண்கள் கலங்க அந்தக் கிழவர் சொல்லியிருந்தார். "எனக்கு டாக்டர் இன்னும் கொங்சம் காலம் தான் கெடு கொடுத்திருக்கார்னு அவளுக்கு நீ தெரிவிக்கணும். நடந்ததுக்கெல்லாம் நான் மன்னிப்பு கேட்டேன்னு சொல்லணும். அவளையும் குழந்தைகளையும் என்னை ஒரு தடவை வந்து பார்க்கச் சொல்லுப்பா. நீ என் மகன் மாதிரி. எனக்காக இந்த ஒரு உபகாரம் செய்யிப்பா"

அவர் சொல்லச் சொன்னதை சொல்லி அதற்காக தான் ஈரோடு வந்ததைத் தெரிவித்தான். சுசீலாம்மாவின் முகத்தில் அதிர்ச்சியோ, துக்கமோ, இரக்கமோ தெரியவில்லை. ஆனால் வாசற்படியில் இருந்து நகர்ந்தாள். "உள்ளே வாங்க"

திவாகர் உள்ளே போனான். வீடு சிறியதாக இருந்தாலும் சுத்தமாக இருந்தது.

"உட்காருங்க"

இருந்த இரண்டு நாற்காலிகளில் ஒன்றில் திவாகர் உட்கார்ந்தான்.

"என்ன சாப்பிடறீங்க?"

"எதுவும் வேண்டாங்க. இப்ப தான் சாப்பிட்டு விட்டு வந்தேன்"

இன்னொரு நாற்காலியில் அவளும் அமர்ந்தாள். அமைதியாக அவனையே பார்த்தபடி இருந்தாள்.

அவனே பேசினான். "இப்ப அவர் ரொம்பவே கஷ்டப்படறாருங்க. மத்தவங்க உதவியில்லாம அவரால் இருக்க முடியாதுங்க. என் சினேகிதனும் நேத்து டிஸ்சார்ஜ் ஆயிட்டான். அதனால ஆஸ்பத்திரியில் அவர் கூட துணைக்கு இப்ப என் மனைவியைத் தான் விட்டுட்டு வந்திருக்கேன். பாவங்க அவர்"

அவள் ஒரு கணம் நிதானித்து அமைதியாக அழுத்தம் திருத்தமாக சொன்னாள். "நீங்க அவர் அறுவடை செய்யறப்ப பார்க்கிறீங்க தம்பி. அதனால் அப்படி சொல்றீங்க. அவர் விதைக்கறப்ப நீங்க பார்த்ததில்லை. அதிருக்கட்டும். நடந்ததுக்கெல்லாம் மன்னிப்பு கேட்டதா சொன்னாரே, நடந்தது என்னன்னு உங்க கிட்ட சொன்னாரா?"

"ரொம்ப நாளுக்கு முன்னால் உங்களையும் உங்க குழந்தைகளையும் விட்டு ஓடிப் போயிட்டதாய் சொன்னார்"

அவள் முகத்தில் ஒரு ஏளனப் புன்னகை தவழ்ந்தது. "இந்த மாதிரி ஆள்களோட புத்திசாலித்தனமே தங்களோட தப்பை ரொம்பவும் பொதுவாய் சொல்றது தான். கேட்கறவங்களுக்கும் என்ன இவ்வளவு தானே, மன்னிச்சு விட்டுடக் கூடாதான்னு தோணும். ஒரு பத்திரிக்கையில் மணமகள் தேவைங்கற விளம்பரம் பார்த்து ஆன கல்யாணம் என்னோடது தம்பி. ஏதோ பெரிய உத்தியோகத்தில் இருப்பதாய் பொய் சொல்லி அந்த ஆள் என்னையும் எங்கப்பாவையும் ஏமாத்தி கல்யாணம் பண்ணிட்டார். பிறகு தான் உண்மை தெரிஞ்சது. எங்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் பிறக்கிற வரை கூட இருந்தார். இருந்த வரைக்கும் சில நாள் வேலைக்குப் போவார். பல நாள் வீட்டில் சும்மா இருந்து பொழுதைப் போக்குவார். ஆனால் எங்கப்பா வேலையில் இருந்ததால் அவர் சம்பளத்தில் எங்கள் குடும்பம் நடந்தது..."

சொல்லும் போது அந்தம்மாள் அந்த நாட்களுக்கே போய் விட்ட மாதிரி திவாகருக்குத் தோன்றியது. அவள் முகத்தில் துக்கம் தேங்கி நின்றது.

"ஒரு நாள் அப்பாவும் ரிடையர் ஆனார். அவருக்கு சொந்த வீடு வாங்கணும்னு ரொம்ப நாளாய் ஒரு கனவு தம்பி. ஒரு வீட்டைப் பார்த்து பேசியும் முடிச்சுட்டார். கிரயம் செய்யறதுக்கு முந்தின நாள் ரிடையர் ஆகிக் கிடைச்ச பணம், இது வரை சேர்த்து வெச்ச பணம் எல்லாத்தையும் பேங்கிலிருந்து எடுத்து வீட்டில் வெச்சிருந்தார். அன்னைக்கு ராத்திரி அந்த ஆள் எனக்கும் எங்கப்பாவுக்கும் பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்துட்டு என் நகைகள், அப்பாவோட பணம் எல்லாத்தையும் எடுத்துட்டு ஓடிட்டார். போறப்ப என் காது, மூக்கு, கழுத்திலிருந்த நகைகளை மட்டுமல்ல என் தங்கத் தாலிக் கொடியைக் கூட விட்டு வைக்கலை"

பரம சாதுவாய் ஆஸ்பத்திரியில் படுத்துக் கொண்டிருக்கும் அந்த முதியவர் இந்தக் காரியம் செய்தார் என்பதை நம்பவே அவனுக்குக் கஷ்டமாய் இருந்தது. "அப்ப உங்களுக்கு எப்படி இருந்திருக்கும்னு எனக்குப் புரியுதும்மா. ஆனாலும் அவர் சாகக் கிடக்கிற இந்த நேரத்தில் நீங்க பெரிய மனசு பண்ணி மறந்து மன்னிக்கணும்மா"

அவள் ஆக்ரோஷத்தோடு சொன்னாள். "அவர் போனதைத் தொடர்ந்து என் வாழ்க்கை சுலபமாய் இருந்திருந்தால் மன்னிக்கலாம். மறக்கலாம். ஆனா அப்படி இருக்கலியே தம்பி. பணமும், மருமகனும் போன அதிர்ச்சியில் என் அப்பா மாரடைப்பால காலமாய்ட்டார். ரெண்டு குழந்தைகளோட நான் நடுத்தெருவில் நின்னேன் தம்பி. அப்பத் தான் நரகம்கிற நாலெழுத்து வார்த்தையோட நிஜ அர்த்தம் எனக்குப் புரிஞ்சது தம்பி. நிராதரவாய் நின்ன என்னைப் பார்த்து, கூடப் படுக்க வர்றியான்னு கூப்பிட்ட அயோக்கியன்களும் இருந்தாங்க. இப்ப அதை நினைச்சாலும் எனக்கு வயிறு பத்தி எரியுது தம்பி. என்னை இப்படியொரு நிலையில் நிக்க வச்சுட்டு எங்க பணத்தில் எங்கேயோ ஜாலியாய் இருந்த ஆளை என்னால் மன்னிக்க முடியும்னு நினைக்கிறீங்களா தம்பி?"

திவாகர் தர்ம சங்கடத்தோடு நெளிந்தான். அவள் அந்த அறையின் மூலையில் இருந்த தையல் மெஷினைக் காண்பித்து தொடர்ந்து சொன்னாள். "எங்களைப் பார்த்து பரிதாபப்பட்டு ஒரு புண்ணியவான் இந்த மெஷினை வாங்கிக் கொடுத்து ஒரு கம்பெனியில் தைக்க ஆர்டரும் வாங்கிக் கொடுத்தார் தம்பி. ஒவ்வொரு நாளும் பன்னிரெண்டு மணி நேரம் இந்த மெஷினில் தைப்பேன். புது வருஷம் தீபாவளின்னா இன்னும் நேரம் கூடும். இப்படி ஒரு வருஷம், ரெண்டு வருஷம் இல்லை தம்பி பதினைந்து வருஷங்கள் உழைச்சேன். அதோட விளைவு இன்னைக்கும் தீராத முதுகு வலியால் அவஸ்தைப் படறேன். பையன் படிச்சு ஒரு சுமாரான வேலையில் இருக்கான். பெண்ணை ஒரு கௌரவமான இடத்தில் கல்யாணம் செய்து கொடுத்திருக்கேன். இப்பவும் அந்த ஆளை ஒரு கிரிமினலாய்த் தான் என் குழந்தைகள் நினைக்கிறாங்க"

திவாகர் ஒரு கணம் அந்தம்மாளின் அன்றைய நிலையை எண்ணிப் பார்த்தான். அந்த நிலையில் மன உறுதி இல்லாத வேறு நபர் இருந்திருந்தால் நிலைமை சீரழிந்து போயிருக்கும் என்பதில் அவனுக்கு சந்தேகம் இருக்கவில்லை.

அவள் தொடர்ந்தாள். "சம்பந்தமே இல்லாத ஒரு வயதான மனிதனின் கடைசி ஆசையை நிறைவேற்றணும்னு நல்ல மனசோட இவ்வளவு தூரம் வந்திருக்கீங்க தம்பி. அதனால தான் உங்களை உள்ளே உட்கார வச்சுப் பேசறேன் உங்களை மாதிரி நல்ல மனசிருக்கிற நாலு பேராலத்தான் இன்னைக்கு நாங்க கௌரவமாக இருக்கோம். யாரோ எக்கேடோ கெட்டுப் போகட்டும்னு இல்லாம இரக்கப்பட்டு எங்களுக்கு உதவி செஞ்ச அந்த சில நல்ல மனுஷங்களுக்கு நாங்க எப்பவுமே கடமைப்பட்டிருக்கோம். ஆனா ஆஸ்பத்திரியில் படுத்துக் கிடக்கிற அந்த ஆலுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமுமே இல்லை."

அவள் குரலில் தெரிந்த உறுதியைக் கண்டு அவன் எழுந்து நின்றான். "நான் அவர் கிட்ட என்ன சொல்லட்டும்?"

"அவரை மன்னிச்சு அவர் செஞ்சதெல்லாம் மன்னிக்கக் கூடிய தப்புன்னு அங்கீகரிக்க நாங்க தயாராயில்லைன்னு சொல்லுங்க. சௌகரியப் படறப்ப தப்பு செய்யறதும், தேவைப் படறப்ப திருந்தறதும் வடிகட்டின சுயநலம்னு சொல்லுங்க. பழைய தமிழ் சினிமா வில்லனாட்டம் கடைசி காட்சியில் திருந்தறதை, இப்ப சினிமாவில் கூட யாரும் ரசிக்கறதில்லைன்னு சொல்லுங்க தம்பி". ஆவேசமாகவும் ஆணித்தரமாகவும் வந்தது பதில்.

கடைசி வரை கணவனை 'அந்த ஆள்' என்றே அவள் அழைத்ததையும் ஒரு முறை கூட அவர் உடம்புக்கு என்ன நோய் என்று கேட்காததையும் அவன் கவனிக்கத் தவறவில்லை. அந்தம்மாள் சொன்ன எல்லாவற்றிலும் நியாயம் இருந்தது, உண்மை இருந்தது. இத்தனையையும் சமாளித்து அவள் தாக்குப் பிடித்து சாதித்து இருக்கும் விதத்தையும் அவன் மனதாரப் பாராட்டினான். ஆனாலும் மரணப் படுக்கையில் இருக்கும் மனிதனின் பழைய கணக்கைப் புரட்டிப் பார்க்காமல் உடனே பார்க்க அவள் கிளம்பி இருந்தால் இன்னும் உயர்வாக இருந்திருக்கும் என்று அவன் மனதுக்குப் பட்டது. அங்கிருந்து அவன் கிளம்பும் போது போன காரியம் தோல்வி என்று அவருக்குத்னைதெரிவிப்பதெப்படி, அவர் அதை எப்படித் தாங்குவார் என்றெல்லாம் யோசிக்க யோசிக்க அவன் மனதில் கனம் கூடியது.

கோயமுத்தூர் போய் சேர்ந்து அவன் ஆஸ்பத்திரியை அடைந்த போது அவன் மனைவி அவருக்கு ஹார்லிக்ஸ் கலந்து கொடுத்துக்கொண்டிருந்தாள். "போன ஜென்மத்தில் நீ எனக்கு மகளாய் இருந்திருப்பாய்னு தோணுதம்மா." என்று சொன்னது அவன் காதில் விழுந்தது.

அவனைப் பார்த்தவுடன் தன் குடும்பத்தினர் யாராவது அவன் பின்னால் இருக்கிறார்களா என்று கிழவர் எட்டிப் பார்த்தார். பின்பு ஆர்வத்துடன் அவனைக் கேட்டார். "சுசீலாவையும் என் மகனையும் பார்த்தாயா? என்ன சொன்னாங்க?"

திவாகர் சுசீலாம்மாள் சொன்னதை விவரிக்கப் போகாமல், அவர்கள் மன்னிக்கவோ, மறக்கவோ தயாரில்லை என்பதை மட்டும் ரத்தினச் சுருக்கமாகச் சொன்னான். அவர் முகம் கறுத்தது.

"அந்த சனியனுக நல்லாயிருக்காதுகப்பா. நான் தப்பே செய்யலைன்னு சொல்லலை. ஆனா அதுக்குத் தான் நான் மன்னிப்பு கேட்கிறேனே. வேறொன்னுமில்லையப்பா. அவளை விட்டுட்டு வர்றப்ப அவள் நகைகளைக் கொஞ்சம் எடுத்துட்டு வந்துட்டேன். அவள் அதை இன்னும் மறக்கத் தயாரில்லை. கட்டின புருஷனை விட அவளுக்கு நகைகள் தான் பெருசாயிடுச்சு."

திவாகர் அதிர்ந்து போனான். அவனுக்குத் தன் காதுகளையே நம்ப முடியவில்ல. இது திருந்தி தன் செய்கைகளுக்காக வருந்தும் ஒரு மனிதனின் பேச்சாக இல்லையே.

"அவள் உன்னை சரியாக நடத்தி இருக்க மாட்டாள். அது உன் முகம் பார்த்தாலே தெரியிது. அவள் சார்பில் நான் உன் கிட்டே மன்னிப்பு கேட்டுக்கறேன். எனக்கு மட்டும் என்னைக் கடைசி காலத்தில் பார்க்க நாதி இருந்திருந்தா அந்த நாயிங்க கிட்டே உன்னை அனுப்பிச்சிருக்க மாட்டேன்." என்றவர் தன் சட்டைப் பையிலிருந்து ஒரு பழுப்பேறிய காகிதத்தை எடுத்தார். "அந்த மூதேவி என்னைக் கை விட்டுட்டா. இந்த விலாசத்தில் இருக்கிற ஸ்ரீதேவியாவது என் மேல் கருணை காட்டறாளான்னு பார்ப்போம். இவள் என் இளைய தாரம். பழசையெல்லாம் மற்ந்துட்டு உடனையாய் என்னை வந்து பார்க்கச் சொல்லு. அந்த மூதேவி கிட்ட போனதைப் பத்தி இவ கிட்டே மூச்சு விட்டுடாதே. நீ என் மகன் மாதிரி. இத்தனை உதவி செஞ்ச நீ இதையும் எனக்காக செய்யப்பா. ஏழேழு ஜென்மத்துக்கும் உன் உதவியை நான் மறக்க மாட்டேன்...." சொல்லும் போது கிழவரின் குரல் தழுதழுத்தது.

திவாகருக்கு அவரைப் பார்க்கவே அருவருப்பாக இருந்தது. அவர் சட்டைப் பையில் இன்னும் எத்தனை தேவியரின் விலாசங்கள் இருக்குமோ, அவனுக்குத் தெரியவில்லை. உண்மையில் அவருக்கு மன்னிப்போ, பாசமுள்ள குடும்பத்தினரோ தேவையில்லை. அவருக்கு வேண்டியதெல்லாம், இந்தக் கடைசி காலத்தில் அவரைப் பார்த்துக் கொள்ள சில ஆட்கள். மன்னிப்பு, திருந்துவது எல்லாம் அதற்கான யுக்திகள் தான். நினைத்தவுடன் வரும் கண்ணீரும், 'மகன் மாதிரி', 'மகள் மாதிரி' என்ற வார்த்தைகளும் அவனைப் போல் இளகிய உள்ளம் படைத்தவர்களுக்கு அவர் போடும் தூண்டில்கள். சாகப் போகிறவர்கள் எல்லாம் நிஜமாய் திருந்தத் துடிப்பவர்கள் என்றும், கஷ்டப்படுகிறவர்கள் எல்லாம் இரக்கப்படத் தகுந்தவர்கள் என்றும் இது நாள் வரை யதார்த்தமாக நம்பி வந்த அவன் சுலபமாய் அந்தத் தூண்டிலில் சிக்கி விட்டான்.

இது போன்ற மனிதர்களும் இருக்கிறார்கள் என்பதை இன்னமும் அவனால் ஜீரணிக்க முடியவில்லை, இந்த மனிதனுக்காக ஆபிசிற்கு இரண்டு நாள் லீவு போட்டு, குழந்தைகளைப் பக்கத்து வீட்டுக்காரர்களின் பாதுகாப்பில் விட்டு, சேவை செய்ய மனைவியை ஆஸ்பத்திரியில் உட்கார வைத்து, வெளியூர் சென்று விலாசம் தேடி அலைந்து கண்டு பிடித்து அங்கும் 'இந்த ஆளி'ற்காகப் பரிந்து பேசிய தன்னைப் போல் ஒரு பைத்தியக்காரன் இந்த உலகில் இருக்க முடியுமா என்று திவாகர் யோசித்தான். கடைசிக் காட்சியில் கூடத் திருந்தாத இந்த வில்லனிடம் பேசக் கூட அவனுக்குப் பிடிக்கவில்லை. மௌனமாக அந்தக் காகிதத்தை வாங்கிக் கொண்டு வெளியே வந்தான்.

"சரோஜா, ஒரு நிமிஷம் வா" என்று மனைவியை வெளியே அழைத்து வந்து "வா வீட்டுக்குப் போகலாம்" என்றான்.

"ஐயோ அந்தப் பெரியவர் தனியாக..." என்று அவள் ஏதோ சொல்லப் போனாள்.

"இனி அந்த ஆளைப் பத்தி ஏதாவது பேசினா நான் கொலைகாரனாய் மாறிடுவேன்" என்று ஒரே வாக்கியத்தில் அவள் வாயை அடைத்தான். தெருவிற்கு வந்ததும் முதல் வேலையாக அந்தப் பழுப்பு நிற விலாசக் காகிதத்தை சுக்கு நூறாகக் கிழித்தான். அந்தக் காகிதத் துகள்களை காற்றில் பறக்க விட்டு விட்டு வேகமாய் வீடு நோக்கி நடக்கும் கணவனைப் புரிந்து கொள்ள முடியாமல் திகைப்புடன் சரோஜா அவனைப் பின் தொடர்ந்தாள்.

Thursday, 6 October 2011

அந்த நாள் நினைவுகள்...


ரூய்கட் ஒரு சிறிய கிராமம்! ஒரு மாறுதலுக்காக மகாராஷ்டிராவிலுள்ள அந்த கிராமத்திற்குச் சென்றிருந்த நான், என் உறவினர் வீட்டில் தங்கிஇருந்தேன். கிராமத்தின் அமைதியான சூழ்நிலையினால் கவரப்பட்ட எனக்கு, கவிதை எழுத வேண்டும் என்று தோன்ற, உடனே நான் காலார நடந்து ஒரு பெரிய மரத்தின் அடியில் அமர்ந்து கவிதைக்கான வாசகங்களைக் கற்பனையில் தேடிக் கொண்டுஇருந்தேன். மனத்தில் தோன்றிய எண்ணங்களை வார்த்தைகளாக வடித்த பிறகு, வீடு திரும்ப நினைத்த போது, பக்கத்து வீட்டுப் பெண்மணியான ஜெயாவும், அவளுடைய பெண்ணும் இடுப்பிலும், தலையிலும் பானைகளைச் சுமந்து கொண்டு ஒற்றையடிப் பாதையில் ஆற்றை நோக்கிச் செல்வதைக் கவனித்தேன். ஆற்றுக்குத்தான் செல்ல வேண்டும். அவர்களைப் பின் தொடர்ந்து செல்ல வேண்டுமென எனக்குத் தோன்ற, உடனே அவ்வாறே செய்தேன்.

தில்லியில், என் வீட்டில் குழாயைத் திறந்தாலே தண்ணீர் வரும்! ஆனால், இங்கோ அதற்காக எத்தனை தூரம் தினமும் செல்ல வேண்டியிருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன். இப்போதெல்லாம் ஆற்று நீர் சுத்தமாக இருப்பதில்லை. அப்படிஇருக்க, அதை எவ்வாறு குடிப்பதற்கும், சமையலுக்கும் பயன்படுத்துகின்றனர் என்ற சந்தேகம் எனக்குத் தோன்றியது. அவ்வாறு சிந்தனைகளில் மூழ்கியபடி நான் நடக்க, ஆறு வந்ததே தெரியவில்லை.

ஜெயாவின் பெண் ஆற்றில் இறங்கி, பானைகளை நிரப்ப, ஜெயா கரையிலேயே அமர்ந்து விட்டாள். இவள் தண்ணீர் பிடிக்கப் போவது இல்லையா என்று நான் நினைத்துக் கொண்டிருக்கும் போது, ஜெயா ஒரு விசித்தரமான காரியம் செய்தாள். கரையில் உட்கார்ந்தபடியே மணலைத் தோண்டத் தொடங்கினாள். சற்று நேரத்தில் ஊற்றுநீர் வர, அதைப் பானைகளில் நிரப்பினாள்.

நான் ஆற்றங்கரையை உற்று நோக்கிய போது அத்தகைய குழிகள் ஏராளமாக இருந்தன. ஆர்வத்தை அடக்க முடியாமல் நான் ஜெயாவிடம் அவள் என்ன செய்கிறாள் என்று கேட்க, அவள் ஆற்றங்கரையில் குழி தோண்டி ஊற்று நீரைப் பானைகளில் நிரப்புகிறேன் என்றாள். காரணம் கேட்க, குடிப்பதற்கும், சமையலுக்கும் உகந்தது ஊற்று நீர்தான் என்றாள்! அப்போதுதான் எனக்கு விஷயம் புரிந்தது. அசுத்தமான ஆற்றுநீர் அடிவழியாக ஊடுருவி அருகிலுள்ள ஆற்றங்கரைக்குப் பாயும்போது, அதிலுள்ள அசுத்தங்களை மணல் வடிகட்டி விடுகிறது. அதனால், ஆற்றுநீரைவிட ஊற்று நீர் ஓரளவு சுத்தமானது.

குடிப்பதற்கும், சமையலுக்கும் கிராமத்தினர் பயன்படுத்துகின்றனர் என்பது புரிந்தது.

வீட்டுக்கு அருகிலேயே கிணறு தோண்டினால், தினமும் நடக்கும் சிரமம் மிச்சமாகுமே என்று தோன்றியது. ஆனால், ஆற்றங்கரையில் கையால் தோண்டினாலே ஊற்று நீர் கிடைக்கும். ஆற்றிலிருந்து தொலைவில் உள்ள கிராமத்து வீடுகளில் மிக ஆழமாகத் தோண்டினால்தான் தண்ணீர் கிடைக்கும். ஒரு காலத்தில் கிணற்றில் தண்ணீர் இருந்திருக்கலாம்! இப்போது, கிணறு தோண்டினால் கூட தண்ணீர் கிடைக்குமா என்று சொல்ல முடியாத அளவிற்கு நிலம் வரண்டு விட்டது. அதன் முக்கியமான காரணம், கிராமத்தைச் சுற்றியிருந்த காடுகளில் இருந்த மரங்கள் வெட்டப்பட்டதுதான்!

மரங்களை அப்படியே விட்டு வைத்திருந்தால் இந்த வறட்சி ஏற்பட்டிருக்காது. மழைத் தண்ணீர் வீணாகப் பாய்ந்து ஓடாமல், அவற்றை மரங்கள் தடுக்க, பூமி அதை உறிஞ்சி வைத்திருக்கும். சமீப காலமாக ரூய்கட்டில் கடும் வறட்சி நிலவுகிறதென்று உறவினர் கூறினார்.

மீண்டும் பழைய இடத்திற்குத் திரும்பி வந்து, அந்த மரத்தடியில் அமர்ந்து எண்ண அலைகளை ஓடவிட்டேன். காடுகளை அழிப்பதின் மூலம், மனிதகுலம் தன் அழிவுப் பாதையை நோக்கி அடிவைத்து நடக்கிறது என்பது தெளிவாகப் புரிந்தது. ஏதாவது மாய, மந்திரத்தினால் ரூய்கட் கிராமத்தின் வெட்டப்பட்ட மரங்கள் மீண்டும் தோன்றாதா என்று ஏங்கினேன்.

அரசாங்க வேலை



பல ஆண்டுகளுக்கு முன், காஷ்மீரின் தலைநகரான ஸ்ரீ நகரில் நித்யானந்த் என்ற பணக்கார வாலிபன் வசித்து வந்தான். அவனுடைய தந்தை ஏராளமான செல்வமும் நிலங்களும் விட்டுச் சென்றிருந்தார். நிலங்களைக் குத்தகைக்கு விட்டு, அதில் கிடைத்த வருமானத்தைக் கொண்டு தன் மனைவி மக்களுடன் நித்யானந்த்  சொகுசான வாழ்க்கை நடத்தி வந்தான். வேறு வேலை எதுவும் செய்ய வேண்டிய தேவையே அவனுக்கு இல்லாமல் இருந்தது.

நித்யானந்தின் பக்கத்து வீட்டில் சோம்நாத் என்பவன் வசித்து வந்தான்.  அரசாங்கத்தில் வருவாய் துறையில் வேலை செய்து கொண்டு இருந்த  அவனுக்கு மற்றபடி விசேஷத்திறமைகள் எதுவும் இல்லை. ஆனாலும் சுற்று வட்டாரத்தில் அவனது அரசுப் பணியை ஒட்டி, அவனுக்கு நல்ல செல்வாக்கு இருந்து வந்தது. இதைப் பற்றியெல்லாம் அவ்வளவாக பொருட்படுத்தாமல் இருந்த நித்யானந்த் ஒரு நாள் தன் எண்ணத்தை மாற்றிக் கொள்ளும் சந்தர்ப்பம் வந்தது.

ஒருநாள் நித்யானந்தின் பிள்ளைக்கும் சோம்நாத்தின் பிள்ளைக்கும் விளையாட்டில் ஏதோ தகராறு ஏற்பட, அது பெரியதாக வளர்ந்து,  பிள்ளைகளின் தாயார்கள் இருவரும் சண்டையிட முற்பட்டனர்.
சோம்நாத்தின் மனைவி காந்தா உரத்த குரலில் நித்யானந்தின் மனைவி ராதாவை நோக்கி "என்னிடமா சண்டை போடுகிறாய்? உன்னையும் உங்கள் குடும்பத்தையும் என்ன செய்கிறேன் பார்! என் கணவர் அரசாங்க வேலையில் இருப்பவர். உன் புருஷனைப் போல் வெட்டிப் பொழுது போக்கும் உதாவாக்கரை இல்லை" என்று கத்தி விட்டுச் சென்றாள்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தன் மனைவி காந்தாவின் தூண்டுதலால் சோம்நாத் நித்யானந்துக்கு பல விதங்களில் இடையூறுகள் செய்யத் தொடங்கினான். அவன் வரிப்பணம் ஒழுங்காக செலுத்தவில்லை என்று போலியாகக் குற்றம் சாட்டி அவனை அலுவலகங்களில் அங்கும் இங்கும் அலையச் செய்தான்.
இப்படி பலவாறு இன்னல்களுக்காளான நித்யானந்தை நோக்கி அவன் மனைவி, "நீங்கள் ஏதும் வேலை செய்யாமல் சும்மாயிருப்பதால்தான் நம்மை இப்படி அவமானப் படுத்துகிறார்கள். நீங்கள் அரசாங்கத்தில் ஏதாவது வேலைத் தேடிக் கொள்ளுங்கள்" என நச்சரிக்கத் தொடங்கினான்.

நித்யானந்தும் ஆளுநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆளுநரைப் பலமுறை சந்தித்து தனக்கு ஏதாவது வேலை தரும்படி கெஞ்சத் தொடங்கினான். ஆனால் ஆளுநர் வேலை எதுவும் காலியில்லை என்று சொல்லிவிட்டார். நித்யானந்த் விடுவதாக இல்லை. "ஐயா, எனக்கு சம்பளம் முக்கியமில்லை. வேலை தான் முக்கியம். சம்பளம் இல்லாவிட்டாலும் சரி. ஏதாவது எனக்கு வேலை கொடுங்கள்" என்று காலில் விழுந்து கெஞ்ச ஆளுநரும் இரக்கப்பட்டு அவனுக்கு வேலை தரத் தீர்மானித்தார்.

ஆனால் அனுபவமில்லாதவனுக்கு என்ன வேலை தருவது? வெகுவாக யோசித்தபின் ஆளுநர் "சரி. நமது ஊரில் பாயும் ஆற்றில் எவ்வளவு அலைகள் உண்டாகின்றன என்று எண்ணுவாய். அதுவே நான் உனக்கு அளிக்கும் வேலை" என்றார்.

அரசாங்க வேலை உத்தரவைப் பெருமையுடனும் மகிழ்ச்சியுடனும் பெற்றுக் கொண்ட நித்யானந்த் தனக்கென ஒரு படகை ஏற்பாடு செய்து கொண்டு, ஆற்றில் படகுகள் ஒரே சமயத்தில் புறப்பட்டு, வந்து சேருமிடத்தில் இருந்து கொண்டு, கையில் நோட்டுப் புத்தகத்துடன் அலைகளை எண்ணத் தொடங்கினான். முதலில் நித்யானந்த் செய்யும் வேலையைப் பார்த்து பலரும் ஆச்சரியம் அடைந்தாலும், அவன் ஏதோ முக்கியமான நோக்கத்திற்காக இந்த அரசுப் பணியை செய்கிறான் என்று நம்பத் தொடங்கினர். இப்போது நித்யானந்தை பார்ப்பவர்கள் அரசாங்க ஊழியன் என்பதற்காக  அவனுக்கு மதிப்பும் மரியாதையும் மக்கள் அளிக்கத் தொடங்கினர்.

 நித்யானந்துக்கும் அவனுடைய குடும்பத்தினருக்கும் மக்கள் மத்தியில் மதிப்பு உண்டாயிற்று. நித்யானந்த் மெதுவாக தன் அதிகாரத்தைப் படகு ஓட்டுபவர்களிடம் காட்டத் தொடங்கினான். ஆற்றில் ஓடும் படகுகளை அதிகாரப் பூர்வமாக நிறுத்தி, தன் அலை எண்ணும் வேலையை செய்து முடித்த பிறகு செல்ல அனுமதித்தான். சில நேரங்களில் படகுகளை மணிக்கணக்கில் இவ்வாறு நிறுத்தியதும் உண்டு. தங்கள் வேலை தடங்கல் இல்லாமல் நடக்க வேண்டுமானால், நித்யானந்தை முறையாக கவனித்தால் நடக்கும் என எண்ணி, படகுக்காரர்கள் அவனுக்கு கையூட்டும் வழங்கத் தொடங்கினர்.

இவ்வாறு நாட்கள் செல்லும்போது, நித்யானந்த் எதிர்பார்த்த அந்த நாளும் வந்தது. சோம்நாத் ஒருநாள் தன் குடும்பத்தினருடன் தடபுடலாக ஆற்றங்கரைக்கு வந்து, படகில் ஏறி பக்கத்து ஊருக்கு ஒரு முக்கியமான திருமணத்திற்கு செல்லத் தொடங்கினான். சோம்நாத் படகு தன் அருகில் வந்தவுடன், நித்யானந்த் அவனது படகை நிறுத்தி விட்டான்.
தனது அரசுப் பணியைச் செய்ய வேண்டும் என்றும், அதுவரையில் படகு நகரக் கூடாது என்றும் கட்டளைப் பிறப்பித்துவிட்டு மிக  மெதுவாக தன் வேலைகளை செய்து வேண்டுமென்றே காலம் கடத்தினான். பல மணி நேரம் சென்றும், நித்யானந்த் படகை செல்லவிடவில்லை. சோம்நாத்துக்கோ முகூர்த்த நேரத்திற்குள் செல்ல வேண்டிய அவசரம் இருந்தது.

 ஆனால் அரசுப் பணி என்ற சாக்கில் மிகவும் தாமதம் செய்யும் நித்யானந்தை அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இறுதியில் சோம்நாத்துக்கு வேறு வழியில்லாமல் தனது கௌரவத்தை விட்டு நித்யானந்தைக் கெஞ்ச வேண்டி இருந்தது. நித்யானந்தும் பழி வாங்கிய மகிழ்ச்சியில் சோம்நாத்தின் படகினைச் செல்ல ஒரு வழியாக அனுமதித்தான்.

அதன்பிறகு சோம்நாத் தன் இறுமாப்பினைத் துறந்து, நித்யானந்துடன் நட்புறவு கொண்டான். அவர்கள் இருவரது குடும்பங்களும் தங்கள் பிணக்குகளை மறந்து நல்லிணக்கத்துடன் பழக ஆரம்பித்தன.

கடவுள் கொடுத்த பயங்கரமான வரம்!


அது ஒரு சிற்றூர். அதை ஒட்டி ஒரு காடு. அந்த சிற்றூரில் முத்து என்பவன் வசித்து வந்தான். அவன் ஒரு நாள் காட்டுக்கு விறகு வெட்டச் செல்லும்போது, அழகான மான்குட்டியைக் கண்டு, அதை தூக்கிக் கொண்டுவந்து வளர்த்தான். அதற்கு வேண்டியதெல்லாம் செய்துகொடுத்து பராமரித்தான்.

ஒருநாள் திடீரென அந்த மான் காணாமல் போனது. பிரியமாக வளர்த்து வந்த மானைக் காணாமல் அங்குமிங்கும் தேடி அலைந்தான். எங்கு தேடியும் கிடைக்காததால், கடும் கோபம் கொண்டான். "மானைக் கடத்தியவன் யாராக இருந்தாலும் அவனை சும்மா விட மாட்டேன்" என சபதம் போட்டான். கடத்தியவனைக் கண்ணில் காட்டும் படி கடவுளிடம் உருகி வேண்டினான்.

அடுத்த நிமிடமே கடவுள் அவனுக்கு காட்சியளித்தார். "பக்தா.. உன் மான் காணாமல் போனதற்கு வருந்துகிறேன். உனக்கு என்ன வேண்டும்?" என்றார்.

"எனது மான் காணாமல் போக யார் காரணமோ, அவர்களை என் கண் முன்னால் காட்டுங்கள். அவனுக்கு என் கையால் தண்டனை அளிக்க வேண்டும்" என ஆவேசமாகக் கூறினான்.

"பாசத்தை விட கோபம் அதிகமாக இருக்கக் கூடாது பக்தா. உன் மானைக் கேள், அல்லது பொன் பொருள் என எது வேண்டுமானாலும் கேள், தருகிறேன். உன் கோபத்தால் சிக்கலில் மாட்டுவாய்" என்றார்.

ஆனால் அவன் கேட்பதாக இல்லை. "என்ன ஆனாலும் சரி, அவனை என் கண்முன்னே நிறுத்துங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன். பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றுவது உங்கள் கடமையல்லவா.." என கத்தினான்.
சிறிது நேரத் தயக்கத்துக்குப் பின், "சரி, இதனால் ஏற்படும் விளைவுகளுக்கு நீ தான் பொறுப்பு" எனக் கூறினார்.
உற்சாகமான அவன் "இது போதும்.. அவனைக் கொண்டுவாருங்கள்" என்றான்.

உடனே கடவுள் கையை நீட்ட, அங்கு நின்றிருந்தது மிகப் பெரிய சிங்கம்!

அதைப் பார்த்த்து உறைந்து போன முத்து, கடவுளே காப்பாற்று என அலறிக் கொண்டே அங்குமிங்கும் ஓடினான். ஆனால் சிங்கத்திடமிருந்து தப்பிக்க முடியுமா என்ன!

இன்றைய மனிதர்கள் பலரும் இப்படித்தான். ஆத்திரத்தால் அறிவிழக்கிறார்கள். பழிவாங்கும் எண்ணம் பாதுகாப்பின்மையை ஏற்படுத்தி விடும் என்பது பலருக்கும் தெரிவதில்லை. ஆத்திரம் வரும் நேரத்தில் ஒரு நிமிடம் அறிவுக்கு வேலை கொடுத்தால் போதும். எந்தப் பிரச்சனையும் நெருங்காது.

கோட்டைத் தாண்டு


முருகய்யன் வீடு அவனது தேவையைவிடச் சற்றுப் பெரியது. அதனால் அவன் தன் வீட்டின் முன் பக்க அறையை சேகர் என்ற இளை ஞனுக்குச் சொற்ப வாடகையில் கொடுத்திருந்தான். சேகர் சாதாரண குடும்பத்தில் பிறந்தவன். ஒரு கடையில் வேலை செய்து மாதச் சம் பளம் பெற்று வருபவன். அவனுக்குக் கிடைத்த சம்பளப் பணம் அவனுக் குப் போதும் போதாததுமாகத்தான் இருந்தது. எப்படியோ ஒரு வேளை, அரை வேளை எனச் சாப்பிட்டு நாட் களைக் கழித்துக் கொண்டிருந்தான்.

முருகய்யனும் அவன் மீது பரி தாபப்பட்டு அவ்வப்போது சேகருக்கு உணவு அளித்தும் சிறு உதவிகளை செய்தும் வரலானான். இதைக் கண்ட முருகய்யனின் மாமா பொன்னய்யன், "இதோ பார் முருகய்யா! நீ இப்படியே சேகருக்கு உதவி செய்து கொண்டே இருந்தால் அவனுக்கு இன்னமும் அதிகமாகச் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணமே தோன்றாது. நாளடைவில் எதற்கும் உன்னையே எதிர்பார்த்து முழுச் சோம்பேறியாக ஆகிவிடுவான். அதனால் நீ அவ னுக்கு இனிமேல் உதவாதே!" என்று கூறினான்.

முருகய்யன் தன் மாமனிடம் மிகவும் மதிப்பு வைத்திருந்தான். ஏனெனில் அவனைப் படிக்க வைத்து வாழ்க்கையில் முன்னேறச் செய்த வனே அவனது மாமா பொன்னய்யன் தான். எனவே அவன் தன் மாமா கூறியதை மௌனமாகக் கேட்டுக் கொண்டான்.

இப்படி இருக்கையில் ஒருநாள் பொன்னய்யன் தன் நண்பனின் வீட் டுத் திருமணத்தில் கலந்து கொள்ள வெளியூர் சென்றான். முருகய்யனும் ஏதோ வேலையாக ஊருக்குள் போய் விட்டு மாலையில் தான் தன் வீட் டிற்கு வந்தான்.

அப்போது சேகரின் அறையில் இருந்து அவன் முனகும் சத்தத்தைக் கேட்டு முருகய்யன் அந்த அறைக்குள் சென்றான்.
அங்கு சேகர் நன்கு போர்த்திக் கொண்டு பாயில் படுத்திருப்பதை அவன் கண்டான். அவன் முக்கி முனகி ‘அம்மா’ ‘அம்மா’ என்று அரற்றுவதைக் கேட்டு முருகய்யன் அவனருகே போய் "சேகர்! என்ன வேண்டும்?" என்று கேட்டான். சேக ரும் "காய்ச்சலாக இருக்கிறது. எது வும் வேண்டாம். ஓரிரு நாட்களில் சரியாகிவிடும்," என்றான்.

முருகய்யன் அப்போதே அவ னுக்குக் கொஞ்சம் பணம் கொடுத்து உதவலாமா என்று எண்ணினான். ஆனால் அடுத்த விநாடியே மாமன் பொன்னய்யன் செய்த எச்சரிக்கை நினைவிற்கு வந்தது. எனவே சேக ரிடம், "சரி. உன் இஷ்டம் போலவே செய்!" என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றான்.

மூன்று நாட்கள் கழிந்தன. அப் போதும் சேகரின் உடல்நிலை திருந்த வில்லை. நான்காவது நாள் சேகர் வேலை செய்யும் கடையின் சொந்தக் காரர் சொக்கலிங்கம் அவனைப் பற்றி விசாரிக்க அவனது அறைக்கு வந்தார். அங்கு சேகர் படுத்திருப்பதைப் பார்த் துப் பதறிப் போய், அவர் அவனது உடலைத் தொட்டுப் பார்த்து முருகய் யனிடம், "நல்ல ஆளய்யா நீர்! ஒரு மனிதன் உயிர் போகும் நிலையில் இருக்கும் போது அவனைக் காப் பாற்ற வேண்டாமா? நான் சேகரை அழைத்துக் கொண்டு போய் வைத் தியரிடம் காட்டுகிறேன்," எனக் கூறி சேகரை எழுப்பி கைத்தாங்கலாக நடத்திக் கூட்டிக் கொண்டு சென்றார்.

அதே சமயம் ஊர் திரும்பிய பொன்னய்யன் சேகரை சொக்க லிங்கம் கூட்டிக் கொண்டு போவ தைப் பார்த்துவிட்டு, முருகய்யனி டம் என்ன விஷயம் என்று கேட் டான். முருகய்யனும் நடந்ததைக் கூறவே, பொன்னய்யனும் "அறி வுரைகளைப் புரிந்து கொண்டு சந் தர்ப்பத்திற்கு ஏற்ப செயல்பட வேண் டும்.

அப்படி நீ நடந்து கொள்ளாதது உன் தவறே. இனியாவது புரிந்து கொண்டு நட!" என்றான். முருகய் யனுக்கும் இனி தான் எவ்வாறு நடக்க வேண்டும் என்பது புரிந்தது!

ஊனம்


மாநாட்டிலிருந்து கடைசி மந்திரி விமான நிலையத்துக்குவந்து சேர்ந்தார்.

காலையிலிருந்து காத்திருப்பும் தொடர் சல்யூட்களுமாய்ஏட்டு வேலுமணியின் உடலை வருத்தியிருந்தன.இன்னும் முக்கால் மணிநேரமாவது ஆகும் அவர் வீடுசெல்ல.

"சார்நல்லா இருக்கியளா?"

குரல்கேட்டுத் திரும்பினார் வேலுமணி.

"டேய் ராசையா எப்டி இருக்க?" வந்தவனைப் பார்த்து சிரித்தார் ஏட்டு தோளில்தட்டியபடியே

"என்னடே இங்கதுபாய்க்கு எதாவது போறியா?"

"என் கடேசி தம்பி அமெரிக்கா போறான்."

"அமெரிக்காவுக்காரெம்ப சந்தோஷம்டேவேலைக்காபோறான்?

"ஆமா."

"ஒங்கப்பன் எப்டி இருக்கான்?"

"அவரு போயி ரெண்டு வருசமாவுது சார்."

"அப்டியாஊருக்கு வந்து வருசக்கணக்காவுதுபரவாயில்லியேடே என்ன நியாபகம்வச்சிருக்கியேதண்ணி பாட்டில் வாங்கவந்தியோ?"

"ஆமாதம்பி அங்க வரிசைல நிக்கான்."

"அப்ப போ தம்பிபாப்போம்."

வந்தவன் திரும்பி நடப்பதை பார்த்துக்கொண்டிருந்தார் ஏட்டுபைக்கின் சப்தம் கேட்டுதிரும்பி தனிச்சையாய் சப் இன்ஸ்பெக்டர் செல்வத்துக்கு சல்யூட்வைத்தார்.
"யார் சார் அது?" சப் இன்ஸ்பெக்டர் கேட்டார்.

"சார்இவன் எங்க ஊரு நாசுவனோடப் பையன் சார்."

"நாசுவன்னா?"

"முடிவெட்றவர்நாவிதர்."

"இங்க என்ன பண்றான்?"

"இவன் தம்பி, கடைசில உள்ளவன் அமெரிக்கா போறானாம்வழியனுப்ப வந்திருக்கான்.நம்ம பையன்கூட படிச்ச பய."

"பரவாயில்லியே."

"காலகாலமா எங்க ஊர்ல இவங்கதான் முடிவெட்றது சாவுக்கு சேதி சொல்றதெல்லாமே.இப்ப எல்லா மாறிப்போச்சு"

"ம்ம்ம்"

"இந்தா போறானே ராசையாஇவன் இப்ப பஸ் ஸ்டாண்ட்ல சலூன் வச்சிருக்கான்."

"இப்படி ஒரு பையன் அமெரிக்கா போறது பெரிய விஷயந்தான்."

"என்ன சார் சொல்ல இவனுங்க ரிசர்வேஷன்ல சர்ர்ருன்னு மேல வந்துற்றானுவநம்மபுள்ளைக கஷ்ட்டப்படுதுங்க."

"காலேஜ்ல சேர்றதுக்குத்தானே இட ஒதுக்கீடு அங்க படிக்கிறது அவனவன் தெறம சார்.இப்ப ஒங்க பையன, ஒங்க சாதி .ஜி கிட்ட சொல்லி ரெக்கமண்டேசனோட காலேஜ்லசேத்தீங்கஇந்தப் பையனுக்கு அரசாங்கமே ரெக்கமெண்டேஷன் தந்திருக்குன்னுசொல்லலாம்லியாஅதுக்கப்புறம் ஒங்க பையனமாதிரி படிப்ப பாதியிலே நிறுத்துறதும்முழுசா முடிச்சு வேலைக்குப் போறதும் அரசாங்கமா வந்து செய்யுது?"

"சரிதான் ஆனாலும் தெறமயில்லாட்டியும் இவங்களுக்கு வேல கெடைக்குதே சார்."

"இந்தப் பையன் அமெரிக்கா போறான் சார்அமெரிக்கா போறதுக்கு ஃப்ளைட்லதான்ரிசர்வேஷன் உண்டு வேலைக்கில்லஇவன்கிட்ட திறமயில்லன்னு எப்டி சொல்வீங்க?"

"..........""நாளைக்கும் ஏர்போர்ட் வந்துருங்க." பைக்கை கிளப்பினார் சப் இன்ஸ்பெக்டர்.

ஏட்டுதறுதலையாய் சுற்றிக்கொண்டிருக்கும் தன் மகனை நினைத்துக்கொண்டே,தூரத்தில் தன் கால் ஊனமுற்ற தம்பியின் சக்கர நாற்காலியை தள்ளிக்கொண்டு ராசையாநுழைவாயிலை கடப்பதை கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தார்.