யாரேனும், ஒரு விஷயத்தை முழுமையாக சொல்லாமல் மறைக்க முயன்றால், அதில் அப்படியென்ன சிதம்பர ரகசியம்? இருக்கிறது என்று கேட்கும் வழக்கம் இன்றும் உள்ளது. சரி... உண்மையில் சிதம்பர ரகசியம் என்பது என்ன?
பூலோக கைலாசம் என்று சொல்லப்படுகிற சிதம்பரத்தில் வியாக்ரபாத மகரிஷியும், பதஞ்சலி மகரிஷியும் இறைவன் சிவபெருமானின் ஆனந்த தாண்டவத்தை தரிசிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டனர். அவர்களது விருப்பத்தை நிறைவேற்ற இறைவனும் இசைந்தார்.
ஒரு நல்ல நாளில் சிதம்பரத்தில் தனது ஆனந்த தாண்டவத்தை அவர்களுக்கு காண்பித்து அருளினார். அதோடு, அந்த மகரிஷிகளின் விருப்பப்படி ஈசன் அங்கேயே கோவில் கொண்டு விட்டார். இந்த கோவிலில் நடராசப் பெருமானின் விமானக் கூரையில் 21,600 பொன் ஏடுகளை 72 ஆயிரம் ஆணிகளால் அடித்துப் பொருத்தி இருப்பதாகச் சொல்கிறார்கள்.
மனிதன் நாள்தோறும் 21 ஆயிரம் முறை மூச்சுவிடுவதையும், அவன் உடலில் 72 ஆயிரம் நரம்புகள் உள்ளதையும் குறிக்கவே அப்படிச் செய்திருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. மனித உடலும் கோவில்தான் என்பதை உணர்த்துவதே இந்த சிதம்பர ரகசியம்! புராணங்கள் சிதம்பர ரகசியத்தை தஹ்ரம் என்று குறிப்பிடுகின்றன.
உருவமின்றி இருப்பதால் `அரூபம்' என்றும் அதை சொல்வார்கள். இந்த ரகசிய ஸ்தானம் சிதம்பரம் கோவிலின் பொன்னம்பலத்தின் மத்தியப் பிரதேசத்திலும், ஸ்ரீ நடராஜ மூர்த்திக்கு பின்புறத்திலும் உள்ளது. இது எப்பொழுதும் திரஸ்க்ரிணீ என்கிற நீல வஸ்திரத்தால் மூடப்பட்டு இருக்கும்.
நவரத்தினங்கள் பதித்த சொர்ண வில்வ மாலைகளால் இது சதா சர்வ காலமும் பிரகாசித்துக்கொண்டு இருக்கும். இந்த ரகசிய ஸ்தானத்தை எந்தப் பலனைக் குறித்தும் ஒருவன் தரிசித்தால், நினைத்தபடி அந்தப் பலன் கிடைக்கும். எந்தப் பலனையும் சிந்திக்காமல் நிஷ்சங்கல்பமாகத் தரிசித்தால் ஜென்ம விமோசனம் சித்திக்கும் என்கிறார்கள்.
எளிதில் புரியும்படி சொல்ல வேண்டும் என்றால், `சிதம்பர ரகசியம் என்பது, எல்லாம் மனக் கண்ணால் பார்க்க வேண்டியதாகும். அதாவது, திரை ரகசியம். திரை விலகினால் ஒளி தெரியும். அதேபோல், நம் மனதில் உள்ள மாயை விலகினால் ஞானம் பிறக்கும்' என்று விளக்கம் தருகிறார்கள் ஆன்மிகப் பெரியவர்கள்.
- மாலை மலர்
No comments:
Post a Comment