விபாசனா - இது கௌதம புத்தர் உலகிற்கு தந்த பிரதான தியான முறையாக இன்று பிரபலமாகியுள்ளது. விபாசனா என்பதனை "அகத்தியானம்" எனலாம். புத்தர் தனது தியான சாதனையின் மூலம் உணர்ந்த பெருண்மை, மனிதன் தனது உண்மையான சொருபத்தினை அறிவதன் மூலம் தனது துன்பங்களை இல்லாதாக்கலாம் என்பது. அதாவது தன்னையறிதல்.அதாவது உண்மையான இன்பம் புற உலக தாக்குலால் பாதிக்கப்படாதது என்பதாகும்.
இதன் சிறப்புத்தன்மை என்னவென்றால் ஒருவர் தனது மனக்காரணிகளையும், மனதினையும் ஆறிவார்ந்த முறையில் சுத்திகரித்துக் கொள்வதே. இந்த நுட்பத்தில் எந்தவித சார்பு மனப்பான்மையும் இல்லை, அதாவது கடவுளை பணிதல், தேவதைகளை வணங்கள், குருவை நாடல் என்பதெல்லாம் இல்லை. ஒருவர் தனது சொந்த முயற்சியால், பயிற்சியால் அனுபவத்தினால் சுயத்தினை அடையும் முறையே "விபாசனா" ஆகும்.
விபாசனாவின் அடிப்படை மனம் என்பது 'நிலையற்றது' 'திருப்தியடையாதது''எதனையும் குறிப்பாக எடுத்துக்காட்டாதது(சார்ந்ததன் வண்ணமானது), இந்த அகத்தியானமானது மனதை புறப்பற்றுக்களில் இருந்து மெதுவாக மீட்டெடுத்து, பாசங்கள், அறியாமையை நீக்கி மனதை தூய்மைப்படுத்துகிறது.
புத்தரின் கருத்துப்படி துன்பத்திற்கான காரணங்கள் இரண்டு ஆசையும் அறியாமையும், இவையிரண்டையும் மனதிலிருந்து நீக்கும் போது மனம் இன்த மாறுகின்ற உலகத்தால் பெறும் மாற்றமுடைய இன்ப துன்பங்களிலிருன்து நீங்கி நிலையான ஒன்றில் நிலைக்கிறது. அந்த நிலை பேரானந்தமுடையதாகிறது, பாலி மொழியில் இதனை "நிப்பானா" என்பார்கள்.
இந்த அகத்தியானத்தின் அடிப்படை நிகழ்காலத்தில் இருப்பது, நிகழ்காலத்தில் இருப்பது ஒன்றே அதிக இன்பமாய் இருப்பதற்கும், ஆசைகளை குறைப்பதற்கும் உரிய ஒரே வழி. இதன் நுட்பங்கள் உடலினையும் மனதினையும் விழிப்புணர்வுடன் அவதானிப்பதாகும்.
விபாசனா என்பதனை "வி" "பாசனா" என இரண்டு சொற்களாக பிரிக்கலாம். பாசனா என்றால் "காணுதல்" எனப்பொருள் படும். வி எனபது ஆழமாக, விழிப்புணர்வு எனப் பொருள்படும். விபாசனா எனும் இந்த தியான முறை "மனதினை ஆழமாக பார்க்கும்" ஒரு செய்முறையாகும்.
இந்த தியானமுறையின் முழுப்பெயர் "விபாசனா பாவனா" என்பதாகும். பாவனா என்பதனை ஞானத்தினை அடைவதற்கான மன உருவகித்தல் என பொருள் கொள்ளலாம்.
பொதுவாக எந்த தியான முறைகளையும் இருவகையாக பிரிக்கலாம், அகத்தியானம், புறத்தியானம் என, இவற்றை பாலி மொழியில் "விபாசனா பாவனா", "சமத்த பாவனா" என்பர்.
புறத்தியானம் எனப்படும் சமத்த பாவனா அமைதியாக புறப்பொருள் ஒன்றில் மனதினை ஒருமுகப்படுத்துதலாகும். இவ்வாறு மனதினை புறப்பொருளில் ஒருமுகப்படுத்தும் போது மனம் ஒருமை நிலை அடையும் (இதனை யோகசாதனையில் தாரணை என்பர், மனம் இவ்வாறு ஒரு நிலையடையும் போது மனதில் அழுக்குகளான கோபம், பொறாமை என்பன அழுத்தி அடக்கப்படுகின்றன, நீண்டகாலப்பயிற்சிகளால் இவை மெது மெதுவாக மனதில் செயல் நிலைக்கு வராமல் தடுக்கப்பட்டு இல்லாதாக்கப்படுகிறது.
அகத்தியானம் எனப்படும் விபாசனா பாவனாவில் மனதினை உள் நோக்கி செலுத்தி விழிப்புணர்வுடன் மனதினை படிப்படியாக மனதின் துன்பத்திற்கு காரணமான 'நிலையற்றது' 'திருப்தியடையாதது''எதனையும் குறிப்பாக எடுத்துக்காட்டாதது (சார்ந்ததன் வண்ணமான) தன்மைகளை விழிப்புணர்வுடன் அறிந்து கொள்ளும் செயல் முறையாகும். அதாவது இந்த முறையில் மனதின் எந்தவொரு செயலையும் அடக்காமல் விழிப்புணர்வுடன் அவதானித்தலால் மனதின் குறைகளில் இருந்து வெளிவரும் பொறிமுறையாகும்.
இந்த விழிப்புணர்வுடன் கூடிய தியானமுறையில் மனம் ஒரு விழிப்புணர்வுடன் கூடிய ஒரு பார்வையாளனாக செயற்படும். அதாவது புறத்தியானத்தில் ஏற்படும் மனஒருமை அளவை விட விபாசனாவில் மனதை ஒருமைப்படுத்தும் அளவு குறைவானதாகும்.
புறத்தியானத்தில் மனதினை ஒருமைப்படுத்துவதன் மூலம் குறுகிய கால இன்பம், ஆனந்தம், மனம் சார்ந்த சித்திகள் கிடைக்கும். அகத்தியானமாகிய விபாசனாவினால் கிடைக்கும் ஆனந்தம், துன்பங்களிலிருந்தான விடுதலை என்பன நிரந்தரமான "நிப்பான" எனப்படும் நிலையாகும்.
No comments:
Post a Comment